*அத்தியாயம் – 44*
தம்பி இத்தனை காலமாக வராமல் இருந்ததற்கு மகன் சொன்ன காரணங்கள் நியாயமாகவே இருந்தாலும்.. வடிவுக்கரசி்க்கு மனம் சமாதானம் ஆகாததோடு,
உள்ளூர சிறு வருத்தமும், ஒருவித ஏமாற்றமும் உண்டானதை தவிர்க்க முடியவில்லை. மகள் இருக்கிறாள் என்று அறிந்தவுடன் பார்க்க வேண்டும் என்று கிளம்பி வந்து விட்டான்.. இப்போதும் அந்த காரணங்கள் அப்படியே தானிருக்கிறது... ஆனால் இந்த அக்கா ஒருத்தி இருக்கிறாள்.. அவளை பார்க்க வராவிட்டாலும், குறைந்த பட்சமாக அவன் உயிரோடு இருப்பதை தெரிவித்து இருக்கலாமே? அவளுக்கு மட்டும் தம்பி மீது பாசமில்லையா? தன் கவலை வேதனை எல்லாமும் பகிரக்கூட ஆளில்லாமல்.. எத்தனை நாட்கள் தவித்திருக்கிறாள்.. இப்போதும் நினைக்கையில்.. வலித்தது..
அன்னையின் முகத்தையே பார்த்திருந்த நிரஞ்சன் அதில் தெரிந்த பாவனையை தவறாக யூகித்து,"என்ன யோசனை அம்மா? வதனி சொல்லாமல் போனதற்காக கோபப்படாதீர்கள் ப்ளீஸ்.. அம்மா, பாட்டியிடம் வாக்கு கொடுத்துவிட்ட காரணமாகத்தான் அவள் கிளம்பினாள்.. என்று சம்பந்தமே இல்லாமல் பேசவும் வடிவுக்கரசி ஒருகணம் புரியாமல் விழித்தாள்.. அதன் பிறகே மகன் பேசியதன் பொருள் விளங்கியது..
நியாயமாக பார்த்தால் அவனது அம்மாவை தவிக்க விட்டு போனாளே என்று அவன் தான் மலர்வதனியின் மீது கோபப்பட வேண்டும்.. ஆனால் அதற்கு மாறாக மாமன் மகளுக்காக வக்காலத்து வாங்குகிறானே? என்று நினைக்கும்போதே மனம் பரபரத்தது.. ஆனால் அது நேசம் தான் என்று எப்படி அறிந்து கொள்வது?? என்று சிலகணங்கள் தீவிரமாக யோசித்த வடிவுக்கரசி, "ரஞ்சி, நான் கீழே போகிறேன். ராத்திரி சமையலை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை.. என்று எழுந்தாள்..
அவனுக்கு பதில் சொல்லாமல் அம்மா சாப்பாடு பற்றி பேசவும்,"ராத்திரி நேரம் தானே அம்மா, இலகுவாக இட்லி அல்லது தோசை செய்து கொள்ளலாம்... நானே செய்துவிடுவேன்.. நீங்கள் முதலில் வதனி மீது கோபம் இல்லை என்று சொல்லுங்க," என்றான் பிடிவாதக் குரலில்...
"டேய் உன்னைவிட அவளை எனக்கு நல்லா தெரியும்.. அவளுக்காக நீ ஒன்றும் சிபாரிசு செய்ய வேண்டாம், புரிகிறதா? அவள் வரட்டும் ஒரு நல்ல மாப்பிள்ளை பார் என்று விஸ்வத்துக்கிட்டே சொல்லணும்.. என்றாள்..
"நிரஞ்சன் அதிர்ச்சியுடன்,"என்னம்மா சொல்றீங்க? அவளை டாக்டருக்கு படிக்கத் வைக்கணும்னு சொல்லிவிட்டு.. இப்போது போய் கல்யாணம் செய்யணும்னு சொல்றீங்களே?? என்றான்
"ஆமாம்டா சொன்னேன் தான், ஆனால் கல்யாணத்தை முடிச்சப்புறமா படிக்கட்டும்.. அதுதான் சரி" என்று முடித்துவிட்டு அறையில் இருந்து வெளியேறிவிட,
சிலகணங்கள் திகைத்து நின்றவன், எங்கோ ஆட்டோவின் ஹாரன் ஒலிக்க, நிகழ்வுக்கு திரும்பியவன், அம்மா வேண்டும் என்று அவனை ஆழம் பான்க்கிறாள் என்று தோன்ற தனக்குள் சிரித்துக் கொண்டான். அன்று காலையில் இருந்து அதிகப்படியான அலைச்சல், காரணமாக அவனுக்கு அசதியாக இருந்தது.. அதனால் அவனது அறைக்கு சென்று சிட்டவுட்டில் கிடந்த சோபாவில் சாய்ந்தான்..
மலர்வதனியை எப்படி வழிக்கு கொணர்வது என்று சற்று நேரம் தீவிரமான யோசனையில் ஆழ்ந்தான். பின்னர் சாரகேஷை கைப்பேசியில் விளித்து,"அவனது திட்டத்தை விளக்கிவிட்டு காலையில் வந்து பேசுவதாக தெரிவித்து பேச்சை முடித்தவன், தொடர்ந்து, உள்ளிடப் பேசியில் மல்லிகாவை அழைத்து, "பாட்டி மற்றும் அம்மாவிடம் பேசிவிட்டதை சுருக்கமாக தெரிவித்துவிட்டு,"இன்னும் கொஞ்சம் நேரத்தில் மாமா, வதனியை அழைத்து வந்துவிடுவார், நீ பார்த்துக்கொள், நான் கொஞ்சம் நேரம் ஓய்வெடுக்கப் போறேன்.. இரவு உணவிற்கு எழுப்பினால் போதும் என்று அம்மாவிடம் சொல்லு மல்லி.. என்று விட்டு கண்களை மூடிக்கொள்ள, இதமான காற்று வீச... இனிய கனவுகளில் சஞ்சரித்தபடி கண்ணயர்ந்தான்.. நிரஞ்சன்.
☆☆☆
அதே சமயம்... வீட்டு வாயிலில் வந்து நின்ற ஆட்டோவில் இருந்து அவசரமாக இறங்கிய மலர்வதனி, போர்டிகோ வரை வேகமாக வந்துவிட்டு அப்படியே நின்றுவிட்டாள். திடுமென அவளுக்கு அன்றைக்கு குலம் கோத்திரம் என்று காந்திமதி பேசியது நினைவுக்கு வந்தது... இப்போது தந்தையை அவள் ஏதேனும் பேசி நோகடித்து விடுவாளோ என்று மிகுந்த கவலை உண்டாயிற்று...
பின்னோடு வந்த விஸ்வநாதன், மகள் நின்றுவிட்டதைப் பார்த்துவிட்டு, "என்னம்மா வதனி? உன் அத்தையை பார்க்கணும்னு ஓடி வந்தாயே?ஏன் இங்கேயே நின்னுட்டே? என்றதும் சுதாரித்து, "அது வந்து அப்பா, நீங்கள் உள்ளே. .. என்று தடுமாறினாள்.
"ம்ம்... புரிகிறது மா, என்னை பாட்டி ஏதாவது வாய்க்கு வந்தபடி பேசிவிடுவார்களோ என்று பயப்படுகிறாயா? அவர்கள் என்ன சொன்னாலும் என் அக்காவிற்காக நான் பொறுத்துக் கொள்வேன் வதனி, அதனால் நீ கவலைப்படாமல் வாம்மா" என்று மகளின் கையைப் பற்றி படிகளில் ஏறினார் விஸ்வநாதன்...
கூடத்தில் சற்று நேரம் மகனுடன் பேசியிருந்து விட்டு காந்திமதி, எழுந்து அவளது அறைக்கு சென்றுவிட.. தொலைக்காட்சியை சத்தம் குறைவாக வைத்து செய்திகளை பார்த்திருந்த சத்யமூர்த்தி, பேச்சுக் குரல் கேட்டு வெளியே சென்றால்.. அங்கே மைத்துனரையும் அவரது மகளையும் ஒரு சேரப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒருங்கே உண்டாக, சட்டென்று அவருக்கு பேச்சு வரவில்லை. ஆனந்தத்தில் கண்கள் நனைய, "மச்சான், நா... நான்... பார்க்கிறது நிஜம்தானா? என்று திணறியபடியே கேட்டவரை, வேகமாக முன்னேறிச் சென்று கட்டித் தழுவிக் கொண்டார் விஸ்வநாதன்.
பல வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் இருவரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலகணங்கள் கழிய, ஒருவாறு முதலில் சுதாரித்த விஸ்வநாதன், "அத்தான் எப்படி இருக்கிறீர்கள்? அக்கா, அத்தை எப்படி இருக்கிறார்கள்? என்று விசாரிக்க ஆரம்பித்தார்...
"நாங்க நல்லா இருக்கிறோம் மச்சான். ஆமாம் நீ எப்படிப்பா இங்கே? எப்ப நம்ம ஊருக்கு வந்தே? மலர் எப்படி உன்கூட? ஏன்மா மலர் அப்பா வந்த விஷயத்தை நீ ஏன் சொல்லவில்லை? என்று பரபரத்தார். மலர்வதனி குற்றவுணர்வுடன் தலையை குனிந்து நின்றாள்.
"அத்தான், நான் காலையில் தான் வந்தேன். மலரை பார்க்க ஆசைப்பட்டதால் சாயந்திரம் ரஞ்சன் கொணர்ந்து விட்டான். இன்னும் சில விஷயங்கள் இருக்கிறது. உங்களுக்கு முதலில் இருந்து சொல்ல வேண்டும், அதை எல்லாம் நிதானமாக ரஞ்சன் சொல்வான் அத்தான்" என்ற விஸ்வநாதன்,"ஆமாம் அவன் எங்கே காணோம்?
ஆக, மகனுடைய திருவிளையாடல்கள் எல்லாவற்றிற்கும் காரணம் இதுதானா? அன்று வரை எழுந்த சில கேள்விகளுக்கு விடை கிடைத்தாற் போலிருந்தது. ஆனால் இடையில் அந்தப் பெண் ஜாஸ்மின்? அவளுக்கு இதில் என்ன பங்கு? என்று ஒரு புறம் யோசனை ஓட..சத்யமூர்த்தி,"அவன் வடிவுகூட பேசிட்டு இருக்கிறான்" என்றவர்"என்ன மச்சான் மர்ம கதை ரேஞ்சுக்கு புதிர் போடுறே?சரி அது எதுவானாலும் அப்புறமாக கேட்டுக் கொள்கிறேன், உன்னை திரும்ப பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறதுப்பா. சரி சரி, இரண்டு பேரும் வாங்க உள்ளே போகலாம் "என்று உள்ளே சென்ற போது..
வடிவுக்கரசி அப்போதுதான் மகனுடன் பேசிவிட்டு கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள்..
அவளைப் பார்த்ததும் மலர்வதனி, ஓடிச்சென்று கட்டிக்கொண்டு,"என்னை மன்னிச்சிருங்க அத்தை.. என்று விசும்பினாள்..
தன்னிச்சையாக கைகள் மருமகளை தழுவிக்கொள்ள, "உன்னை எனக்கு தெரியாதாடி? நீ என் ராஜாத்தியடி... என்ற வடிவுக்கரசி, அவளது நெற்றியில் முத்தமிட்டாள்...
அத்தையும் மருமகளும் பாசமாக அணைத்துக் கொண்டிருந்த காட்சியை பார்த்துவிட்டு, அவர்களை நோக்கி சென்ற விஸ்வநாதன்"அக்கா எப்படி இருக்கிறீங்க? என்று ஆவலோடு கேட்க...
"ஆமாம் ரொம்பத்தான் அக்கா மேலே அக்கறை...நான் எப்படி இருந்தால் உனக்கென்னடா ? என்றாள் வடிவுக்கரசி ஆற்றாமையுடன்..
"எ..என்னக்கா உன்னை பார்க்கத்தானே ஆசையாக வந்திருக்கிறேன்.."என்றார் விஸ்வநாதன் தொண்டை அடைக்க..
"ம்க்கும்... பொய் சொல்லாதேடா, இத்தனை வருஷமா, இந்த அக்கா இருக்காளா? செத்தாளானு எட்டிக்கூட பார்க்காதவன்,மகள் இங்கே இருக்கிறாள் என்றதும் ஓடி வந்திருக்கிறாயேடா"என்றவளின் குரல் உடைந்தது..
"வடிவு, என்னம்மா இது? எவ்வளவு காலம் கழிச்சு வந்திருக்கிறான், எல்லாம் தெரிஞ்சவள், நீயே இப்படி பேசினால் எப்படி மா? என்று சமாதானம் செய்ய முனைந்தார் சத்யமூர்த்தி..
"அக்கா பேசட்டும் அத்தான். அவங்க கோபமும் நியாயம் தான். குறைந்த பட்சமாக நான் உயிர் பிழைத்து வந்ததையாவது சொல்லியிருக்கணும்.. ஆனால் அதனால் யாருக்கு என்ன லாபம் என்று நினைத்தேன்.. அத்தோடு இங்கே நான் தொடர்பு கொள்வதால்.. அக்காவிற்கு சங்கடம் உண்டாகும் என்று தான் அப்படியே ஒதுங்கிவிட்டேன்... இத்தனை காலம் கழித்து என் மகள் இங்கே இருப்பதை அறிந்ததும், எல்லாவற்றையும் மீறி பெற்ற பாசம் ஜெயித்து விட்டது.. என்னால் வராமல் இருக்க முடியவில்லை... என்று தழுதழுக்க.. கூறவும்... வடிவுக்கரசியின் மனம் கரைய அதற்கு மேலே கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை... தம்பியின் தலையை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தவள்.. விழிகளும் கலங்கியது.. சட்டென்று கண்ணீரை துடைத்து கொண்டு, "உட்கார் விஸ்வம், நீ அத்தான் கூட பேசிக்கொண்டு இரு, நானும் மலரும் போய் ராத்திரி சமையலை கவனிக்கிறோம்.. என்று மருமகளோடு உள்ளே செல்ல..
"அத்தை எங்கே அத்தான்? என்று விஸ்வம் விசாரிக்க..
"இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தாங்க, ஓய்வெடுக்கிறேன்" என்று கொஞ்சம் முன்னால் தான் உள்ளே போனாங்க.. சாப்பிட வர்றப்போ பார்த்துக்கலாம் விஸ்வம், நீயும் வேண்டுமானால் கொஞ்சம் நேரம் மாடியில் ஓய்வெடுத்துக்கிறியா? என்று வினவ,
"இல்லை அத்தான், முதலில் ரஞ்சனை பார்க்கணும்.. சில முக்கியமான விஷயங்களை அவன்தான் தெளிவு படுத்த முடியும்" என்றார் மைத்துனர்.
"எல்லோரும் இரவு சாப்பாட்டில் எப்படியும் கூடுவார்கள்,மச்சான். அப்போது என்ன பேச வேண்டுமோ பேசிக்கொள்.. மதியம் வந்தவன் ஓய்வெடுக்கக்கூட இல்லை... என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கையில்..
அங்கே வந்த மல்லிகா,"ஹாய் டாட், வந்து ரொம்ப நேரமாச்சுதா? என்றவாறு விஸ்வநாதனின் அருகில் அமர்ந்தாள்..
"இல்லைம்மா இப்போது தான் வந்தோம்"என்று விஸ்வம் பதிலளிக்க..
"டாட் இப்போது தான் சாருகிட்டே பேசினேன். நாளைக்கு சாரு வீட்டுக்கு எல்லோரும் போக பிளான் பண்ணியிருக்கார் உங்கள் மாப்பிள்ளை.. நைட் உங்ககிட்டே அது பற்றி டிஸ்கஸ் பண்ணுவார்னு நினைக்கிறேன்.. என்று மல்லிகா பேசிக்கொண்டு இருக்க..
சத்யமூர்த்திக்கு அது எதுவும் கருத்தில் படவில்லை... மாறாக..அட இதென்ன புதுக் குழப்பம்? ஆக மாமனார் என்று ரஞ்சி சொன்னது விஸவத்தைத்தானா? வாடகைக்கு வீடு தேடச் சொன்னதும் அவனுக்காத்தான் போலும்? ஏன்? ஒருவேளை மாமா மறுகல்யாணம் பண்ணிக்கிட்டார் என்பதை எப்படி சொல்வது என்று தயங்கினானோ? விஸ்வம் உயிர் பிழைத்து இத்தனை ஆண்டுகளாகியும் இந்தப் பக்கம் வராததற்கு இதுதான் முக்கியமான காரணமா? அவருக்கு மீண்டும் மனது குழம்பிப் போயிற்று...
*அத்தியாயம் – 45*
இரவு சமையல் வேலை முடிந்ததும் "அத்தை எனக்கு உடம்பு கழுவிட்டு, உடை மாற்ற வேண்டும்.. அப்பா வீட்டில் டிபன் சாப்பிட்டதில் இப்போது எனக்கு பசியில்லை... கொஞ்சம் பால் மட்டும் அப்புறமாக வந்து குடித்துக் கொள்கிறேன் " என்றாள் மலர்வதனி..
மருமகளை கூர்ந்து கவனித்து விட்டு, "ராத்திரி நேரம் தலைக்கு தண்ணீரை ஊத்தி வைக்காதேடி..என்று எச்சரித்துவிட்டு,"சரி நீ போ..படுக்க வர்றப்போ நானே பால் எடுத்துட்டு வர்றேன்.. என்று வடிவுக்கரசி அனுப்பி வைக்க.. தப்பித்தோம் பிழைத்தோம் என்று அவளது அறைக்கு வந்து விட்டாள்..
அவளுக்கு நிரஞ்சனை நேராகப் பார்க்க தைரியம் இல்லை... அவன் அழுது, அத்தனை கெஞ்சிய பிறகும் அவள் பிடிவாதமாக வீட்டிற்கு வர மறுத்துவிட்டு.. இப்போது எந்த முகத்தோடு வந்தாய் என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? அதற்காக இப்படியே ஓடி ஒழிந்து கொண்டிருக்க முடியாது என்பதும் புரியாமல் இல்லை.. என்னதான் அத்தை மாலையில் காந்திமதியின் நடவடிக்கை பற்றி கூறியிருந்த போதும்,இப்போதைக்கு பாட்டி முன்பும் போவதற்கு அவளுக்கு சற்று தயக்கமாகத் தான் இருந்தது.. தந்தையை கண்டுவிட்டு என்னவெல்லாம் பேசுவாளோ? அதை எல்லாம் அவளால் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க முடியாமல் வாயை விட்டுவிட்டால் அது வேறு ராசாபாசம் ஆகிவிடும்.. எப்படியும் அத்தானும் மல்லிகாவும் பாட்டியை சமாளித்து விடுவார்கள் என்ற நம்பிக்கையும் இருந்தது.. இருக்கட்டும் எல்லா சலசலப்புகளும் சற்று அடங்கும் வரை ஒதுங்கி இருப்பதுதான் அவளுக்கு நல்லது.. என்ற முடிவோடு குளியலறைக்குள் நுழைந்தாள்..
☆☆☆
இரவு... உணவிற்காக சத்யமூர்த்தி, விஸ்வநாதன் மற்றும் மல்லிகா வந்து அமர்ந்திருந்தனர்.. சொக்கி பதார்த்தங்களை கொணர்ந்து வைத்துவிட்டு போய்விட, சற்று நேரத்தில் அங்கு வந்த காந்திமதி, விஸ்வநாதனை கூர்ந்து பார்த்தபடியே எதிர் இருக்கையில் அமர்ந்தாள்..
மாமியார் என்ன பேசி தம்பியை நோகடிப்பாளோ, என்று நினைத்து வடிவுக்கரசி இறுகிப்போய் நின்றிருந்தாள்.. அவளை கண்களால் அமைதிபடுத்திவிட்டு,
விஸ்வநாதனே முந்திக்கொண்டு, "வணக்கம் அத்தை, என்னை அடையாளம் தெரியவில்லையா ? என்று வினவினார்..
"ம்ம்... தெரியாமல் என்ன விஸ்வம். நல்லா இருக்கிறாயா? இத்தனை வருஷமா இந்த பக்கமே வரலையேப்பா? ஒருவேளை இந்த கிழவி ஏதாவது பேசி கஷ்டப்படுத்துவாள்னு நினைச்சு ஒதுங்கியிருந்துட்டியோ? ஹூம்.. எனக்கு அப்போது புத்தி மழுங்கித்தான் போச்சு.. விஸ்வம் என்று வருத்தமாக சொல்ல .. முதியவளின் கோபக்குரலை எதிர்பார்த்து இருந்த அனைவருக்கும் திகைப்புதான்.. முக்கியமாக வடிவுக்கரசிக்கு நம்பவே முடியவில்லை...
"நான் நல்லா இருக்கிறேன் அத்தை என்ற விஸ்வநாதன், "கொஞ்சம் அதுவும் ஒரு காரணம் தான் அத்தை.. தேவையில்லாமல் இங்கே என்னால் எதற்கு பிரச்சனை என்று நினைச்சேன்.. ஆனால்..."நான் உங்களுக்கு ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் அத்தை.. நீங்கள் மட்டும் அன்றைக்கு என் மகளை இங்கே தங்க வைக்க மறுத்திருந்தால் அவள் கதி என்னவாகியிருக்கும் என்று என்னால் நினைக்ககூடமுடியவில்லை...என்றார்.
"விஸ்வம் உண்மையை ஒத்துக்கொள்கிறாய் பார், உன்கிட்டே இதுதான் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம்... உன் மகள் விஷயத்தில் நான் செய்ததெல்லாம் உனக்கு தெரியுமோ தெரியாதோ, ஆனால் விஸ்வம், நீ நன்றி சொல்ல வேண்டியது என் மருமகளுக்குத் தான்.. அவள்தான் மலரை மகளைப் போல வளர்த்து ஆளாக்கியவள்.. நான் வயதில் தான் பெரியவள்... மற்றபடி... என்று சிறு குன்றலோடு சொல்லிக் கொண்டிருக்கையில்.. ,
"என்னைப் பொறுத்தவரை என் மகள் உயிரோடு இருக்கிறாள் என்பதே பெரிய விஷயம் அத்தை... மற்றபடி அவளை நீங்கள் எப்படி வைத்திருந்தீர்கள் என்பதெல்லாம் முடிந்துவிட்ட கதை.. எனக்கு என் மகளை நல்லபடியாக திருப்பி கொடுத்திருக்கிறீர்கள் அதுவே போதும் "என்று முடித்துவிட்டார் விஸ்வம்...
காந்திமதிக்கு விஸ்வநாதனின் பேச்சு பெரும் ஆறுதலை தர.. அதுவரை இருந்த கலக்கம் பெருமளவு குறைய,"வடிவு எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து பரிமாறுமா.. என்றாள்..
உண்மையில் வடிவுக்கரசிக்கு அவளது கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை.. மனது இலேகிவிட, பரிமாற ஆரம்பித்தாள்.
"சத்யம், ராஜாப் பையன் எங்கே காணோம்?"என்று விசாரித்தாள்..
"நானும் அவனைத்தான் அத்தை எதிர்பாத்துக்கிட்டு இருக்கிறேன். நாங்க வரறதா அவனுக்கு போன் பண்ணி சொல்லியிருந்தேன்.. என்று விஸ்வநாதன் சொல்லும்போதே
அங்கே வந்த நிரஞ்சன்.. பாட்டியின் அருகே சென்று அமர்ந்து.,"ஸாரி மாமா கொஞ்சம் அசதியாக இருந்துச்சு. அதான் உங்களை ரிசீவ் பண்ணமுடியலை.. என்றான்..
"அதனால் என்னப்பா, இது எனக்கு அக்கா வீடு, யாரும் வரவேற்று ஆகணும்னு கட்டாயம் இல்லை... என்றவர், நான் உன்னை தேடினதுக்கு காரணம்...
"எனக்கே தெரியும் மாமா. முதலில் சாப்பிடுவோம்.. அப்புறமாக ஆற அமர எல்லாம் பேசலாம் சரிதானே மாமா? என்றான் நேர்பார்வை பார்த்து..
"அதுவும் சரிதான் மாப்பிள்ளை.. எத்தனை வருஷம் ஆகிவிட்டது அக்கா கையால் சாப்பிட்டு? அங்கே சமையல் ஆட்கள் நன்றாக செய்தாலும்... இங்கே போல வீட்டு பெண்களின் கைமணம் வருவதில்லை...
"எஸ்.. டாட் ஐ அக்ரி வித் யூ... ஆன்ட்டி சமையல் சூப்பர்... மலர் கூட அருமையாக சமைக்கிறாள்.. ஆனால் எனக்கு தான் வரமாட்டேங்குது... என்றாள் மல்லிகா வருத்தமாக..
"உனக்கு நல்லா சாப்பிட வருகிறதே, மல்லி? நீ அந்த வேலையை மட்டும் செய் போதும்.. மற்றபடி மாமாகூட பிஸினஸை யார் பார்க்கிறது? என்றான் நிரஞ்சன்..
மருமகள் இயல்பாக இருப்பதைப் பார்த்தால் மலருக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று தோன்றியது. அவள் வந்துவிடுவாள் என்றான் பேரன். ஆனால் அவளை பெற்றவன் வந்து நிற்கிறான், இந்த பெண் வேறு அவனை அப்பா என்கிறாள்.. ஆக, அவளுக்கு தெரியாத மர்மங்கள் இன்னும் இருப்பதாக தோன்றியது. அது என்னவாக இருந்தாலும் பரவாயில்லை. அவளைப் பொறுத்தவரை குடும்பம் அமைதியாக நடந்தால் போதும்.. அத்தோடு இவை எல்லாம் பேரனின் திருவிளையாடல் என்று காந்திமதிக்கு தெளிவாக புரிந்தது..
☆☆☆
சாப்பாட்டிற்கு பிறகு எல்லோருமாக கூடத்தில் கூடியிருந்தனர். அன்றைய தினம் எல்லோரும் ஒவ்வொரு விதமாக களைத்து தான் இருந்தனர். ஆனாலும் இனியும் விஷயத்தை தள்ளிப் போடக்கூடாது என்று நிரஞ்சன் நினைத்தான். அதுமட்டுமன்றி மறுநாள் சாரகேஷ் வீட்டிற்கு வேறு சென்று பேச வேண்டியிருந்ததும் ஒரு காரணம்.
ஏற்கெனவே எல்லாமும் மகன் மூலமாக அறிந்திருந்த காரணமாக வடிவுக்கரசி, "எனக்கும் தூக்கம் வருகிறது ரஞ்சிமா, எனக்கு காலையில் விவரம் சொன்னால் போதும்.. நீங்கள் பேசுங்கள்.. என்றவள் கையில் பால் எடுத்துக்கொண்டு நகர்ந்துவிட..
மல்லிகாவும் காலையில் சீக்கிரம் எழவேண்டும் என்று காரணம் சொல்லி கழண்டு கொண்டாள்..
விவரம் அறிய வேண்டியவர்கள் தாயும் மகனும் தான் என்றாலும் காந்திமதி முதியவள், அவளுக்கு மரியாதை தரும் விதமாகவும், மருமகனுடன் சற்று பேச வேண்டியிருந்ததாலும் விஸ்வநாதன் அங்கே இருந்தார்...
"பாட்டி அப்போது எனக்கு கொடுத்த வாக்கை நிச்சயம் நிறைவேற்றுவீர்கள் தானே? என்று நிரஞ்சன் வினவினான்.
"நிச்சயம் ராஜா. அதில் ஒரு மாற்றமும் இல்லை... உனக்கு இன்னும் சந்தேகம் தீராவிட்டால் சொல்லு, எழுதியே தருகிறேன் " என்று காந்திமதி கூறவும்..
"ஓகே பாட்டி நான் நம்புகிறேன். நான் இப்போது சொல்லப் போவது உங்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும்... என்றவன் தொடர்ந்து மல்லிகாவின் காதல்.. அதன் காரணமாக மாமாவை சந்திக்க நேர்ந்தது.. அதன்பிறகு மலர்வதனிக்கு வீட்டில் உரிமையை தந்து பிராயசித்தம் செய்ய நினைத்ததால் மல்லிகாவை பெயர் மாற்றம் செய்து அழைத்து வந்தது.. எல்லாம் சுருக்கமாக சொல்லி முடித்தான்.. நிரஞ்சன்.
கேட்டிருந்த இருவரும் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை.
மச்சானின் வருகையை கொண்டு, காந்திமதி ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினால் அதை எப்படி சமாளிப்பது என்று உள்ளூர, பதைபதைத்துக் கொண்டிருந்த சத்யமூர்த்திக்கு அன்னையின் திடீர் மாற்றம் மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.. மகனுடைய கைங்கர்யம் தான் அதற்கும் காரணம் என்று தோன்றியது.. அடுத்து இப்போது மகன் கொடுத்த விளக்கம்.. உண்மையில் சற்று அதிர்ச்சி தான்... என்றாலும் அவன் சொன்னதுபோல் அந்தப் பெண் அவன் வருங்கால மனைவி இல்லை என்றதில் அவருக்கு மகிழ்ச்சி தான்.. ஆனால்.. மலர்வதனியிடம் மகனுக்கு இருப்பது அனுதாபம் தானமே? அது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தபோதும், அவனது அபிப்ராயம் இனி மாறக்கூடியது என்பதால் சிறு நம்பிக்கையும் உண்டாயிற்று...
பேரன் கொடுத்த விளக்கம் காந்திமதிக்கு அப்படி ஒன்றும் அதிர்ச்சி அளிக்கவில்லை. மாறாக ஒருவகையான நிம்மதிதான் உண்டாயிற்று .. அவளது ஆயுட்காலம் இன்னும் எத்தனை காலமோ தெரியாது... அத்தோடு, குலம் கோத்திரம் எல்லாம் அவளது ரத்தத்தில் ஊறிப்போன ஒன்று.. அதில் இருந்து சட்டென்று மீள்வது கடினம் என்று உணர்ந்திருந்தாலும்.. அதை ஒதுக்கி பேரனின் சந்தோஷத்திற்காக கொடுத்த வாக்கை நிறைவேற்ற முன் வந்திருந்தாள்.. இப்போது அந்த மனசஞ்சலம் நீங்கிவிட்டது... என்பதால் மகிழ்ச்சியுடனே,"அப்படி என்றால் உனக்கு பொருத்தமான பெண்ணை பார்க்கச் சொல்லவா?.. எனக்கும் என் பேரனோட பிள்ளையை பார்க்கணும்னு ஆசை இருக்காதா கண்ணா? என்றாள்..
"அவசரப்படாதீங்க பாட்டி, நான் இன்னும் முடிக்கவில்லை..." என்றான் பேரன்..
"என்ன மாப்பிள்ளை இன்னும் எதற்கு சஸ்பென்ஸ் எல்லாம்? என்ற வில்வநாதனிடம்...
"பொறுங்கள் மாமா.. என்று மாமனை கையமர்த்திவிட்டு, என் மனதில் ஒரு பெண் இருக்கிறாள். அவளைத்தான் நான் திருமணம் செய்வதாக இருக்கிறேன்.. நாளை காலையில் அவள் யார் என்னவென்று சொல்கிறேன். அப்புறமாக நான் கேட்ட வாக்கை நிறைவேற்ற தயாராக இருங்கள் சரிதானா? என்று மறுபடியும் ஒருபுறம் காந்திமதியின் வயிற்றில் புளியை கரைத்தான் பேரன். மறுபுறம் தந்தையின் நம்பிக்கையை அழித்தான்..
ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளாது,"சரி கண்ணா, உன் சந்தோஷம் எனக்கு முக்கியம். அதனால் நீ யாரை விரும்புகிறாயோ அவளையே கட்டி வைக்கிறேன். இப்போது நானும் போய் படுக்கிறேன்.. என்று விட்டு காந்திமதி எழுந்து செல்ல...
"அப்பா, நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே? என்றான்
"நான் சொல்வதற்கு பெரிதாக ஏதுமில்லை ரஞ்சி.. புரியாமல் இருந்த சில விஷயங்கள் புரிந்துவிட்டது .. உன்னை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்று எங்கள் எல்லோருக்கும் ஆசை.. அது சீக்கிரமே நிறைவேறும் என்று பார்த்தால்.. நீ இன்னும் நாளையும் நேரத்தையும் கடத்துகிறாயே என்று சற்று வருத்தமாக இருந்தது.. சரி நீயே பெண்ணை முடிவு செய்துவிட்டது கொஞ்சம் ஆறுதல் தான்.. பாட்டி சொன்னது போல,நீ யாரை விரும்பினாலும் அது எங்களுக்கு நல்ல செய்திதானப்பா.. என்றவாறு எழுந்தார்.
மாமனும் மருமகனும் ஒருவரை ஒருவர் பார்த்து மர்மமாக புன்னகைத்தவாறு மாடிக்கு சென்றனர்.. அங்கே இருவருமாக மறுநாள் நடத்த வேண்டிய திட்டத்தை எப்போது எப்படி செயலாற்றுவது என்பது பற்றி தீவிரமாக ஆலோசனை செய்த பிறகு படுக்கச் சென்றனர்.
☆☆☆
அதே சமயத்தில்.. அத்தை கொடுத்த பாலை பருகிவிட்டு, உடனே படுக்கக்கூடாது என்று மலர்வதனி... அன்றைய நிகழ்வுகளை அசைப்போட்டபடி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்..
ஆனால் அவற்றை எல்லாமும் பின்னுக்கு தள்ளியது நிரஞ்சனைப் பற்றிய நினைவுகள் தான். அவன் வந்தது முதலாக, நடந்தவை அவள் மனதில் சித்திரமாக ஓடியது.. மருத்துவமனையில், தோட்டத்தில் கட்டியணைத்தது, கட்டிலில் தூக்கிக் கிடத்தியது, அடிபட்டபோதும் அவளது எண்ணை நினைவில் வைத்திருந்தது.. என்று அவன் காட்டிய நெருக்கத்திற்கு எல்லாம் காரணமாக கிடைத்த விடையில் பூரிப்பு உண்டான போதும்,இன்னோரன்ன வார்த்தையில் அத்தான் அதை தெரிவிக்கவில்லையே என்று சிறு சஞ்சலமும் இருந்தாலும் அவளுக்குள் எழுந்த இனிமையான உணர்வுகளை அவளால் தடுக்க முடியவில்லை... நிச்சயம் அத்தான் அவளிடம் சொல்லும் நாள் தூரத்தில் இல்லை என்று தோன்ற, சற்று நேரம் ஏதேதோ இனிய கற்பனைகளுடன் புரண்டுவிட்டு, மறுநாள் நடக்கப்பவதை அறியாமல்.. அப்படியே தூங்கிப் போனாள்...