Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

41. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மித்ரன் மதுமதியை அழைத்துச் சென்ற இடம் கடற்கரை. அவளை பார்க்குமுன் மகதிக்காக இந்த திருமணத்தை செய்து கொள்ளலாம், போகப்போக இருவரும் புரிந்து கொண்டு வாழலாம் என்று தான் நினைத்திருந்தான். ஆனால் இப்போது பார்த்த பிறகு, அவள்தான் என்று நிச்சயமாக தெரிந்துவிட்டதாக, தன் மனம் திறந்து சொல்லிவிட்டான். அது மட்டுமின்றி தன்னைப் பற்றியும், பிடித்தம் பிடிக்காதது என்று எல்லாமும் அவளுடன் பகிர்ந்து கொண்டான். அதே சமயம் அவளிடம்.. இப்போது உன்னை பற்றி சொல்ல வேண்டாம் மதி, நான் எந்த வகையிலும் உன்னை வற்புறுத்த மாட்டேன். திருமணம் இருவரும் மனதுக்கு பிடித்து செய்து கொண்டால் தான் அந்த வாழ்க்கை சந்தோஷமானதாக இருக்கும், மகதிக்காக என்று இந்த திருமணத்தை நீ செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. உன் மனதுக்கு என்னை பிடித்து, முழு சம்மதம் சொல்ல வேண்டும் மதி. நீ நிச்சயம் சொல்வாய் என்று என் மனதுக்கு தோன்றுகிறது. நான் காத்திருக்கிறேன்" என்றான்

கணவனாகப் போககறவன், அவள் உணர்வுக்கு மதிப்பளிக்கிறான் என்றால் அதை விட ஒரு பெண்ணிற்கு வேறு என்ன வேண்டும்? மதுமதிக்கு மனம் நிறைந்து விட்டது.. அவளுக்கு அந்த இரண்டு நாள் அவகாசம் எல்லாம் தேவை இருக்கவில்லை. அவனை பார்த்த கணத்தில் இருந்தே அவள் மனது மித்ரன் பால் ஈர்க்கப்பட்டுவிட்டது. அதிலும் எந்தவித பந்தாவும் இல்லாமல் தன் மனதை திறந்து தெரிவித்த பிறகு, வாழ்ந்தால் அவனோடு தான் என்று முடிவே செய்துவிட்டாள்.. அன்று வீடு திரும்பிய பின், இரவெல்லாம் அவன் நினைவாகவே தூங்காமல் புரண்டிருந்தாள்.

மறுநாள் மகேந்திரனை சந்திக்க மதுமதியை அழைத்து சென்றான்..மித்ரன். முன் தினம் போல அன்று மாலதியிடம் அனுமதி கேட்டு நிற்கவில்லை. உணவருந்தும் போது,"மது, நீ சீக்கிரம் தயாராகி வா, நான் காரில் வெயிட் பண்றேன்"என்று சொன்னான்.. அங்கே இருந்தவர்களுக்கு, அவர்கள் வெளியே போகிறார்கள் என்று மறைமுக தகவலாக பகிரப்பட்டது.. ஆனால் மதுமதி, கடந்த மூன்று தினங்களின் வழக்கப்படி, கைப்பேசியை தாயிடம் தந்துவிட்டு, போகும் இடத்தையும் தெரிவித்துவிட்டே கிளம்பிச் சென்றாள்.


மாலதிக்கு சின்ன மகள் மாறிவிட்டாள் என்று கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்தது.. ஆனால் அதை மகதியிடம் அவளால் பகிர முடியவில்லை. வீணாக நம்பிக்கை கொடுத்து அவள் ஏமாறும் நிலை உண்டானால் ,அவளால் தாங்க இயலாது என்று நினைத்தாள்.

மகேந்திரன் அலுவலகத்தில் ஆண்கள் இருவரும் தொழில் பேச்சு பேசிக்கொண்டிருந்தனர். மதுமதியும் கட்டிடம் சார்ந்த படிப்பே படித்திருக்கிறாள் என்று அறிந்திருந்த மித்ரன் அவளிடம் அந்தப் பொறுப்பை கொடுத்துவிடுமாறு சொன்னான்..

"அட மது.. நீ இன்டீரியர் டெகரேஷன் கோர்ஸ் முடிச்சிருக்கிறாயா? எனக்கு இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே.. சரி, இந்த அசைன்மெண்ட் உனக்கு தான்" தொடர்ந்து நீ இந்த ஃபீல்டில் வேலை செய்யணும்..உன் படிப்பு வீணாகப் போயிடக்கூடாது..நான் சொல்றது சரிதானே மித்ரன்"

"ரொம்ப சரி மகேந்திரன். நானும் அதான் சொன்னேன். முதலில் சொந்த ரிசார்ட்ல பண்ணட்டும்.. " என்றபோது மதுவின் பார்வை மித்ரனின் விழியோடு பொருந்தி நின்றது.. இருவருமே தங்களை மறந்த நிலை சிலகணங்கள் நீடிக்க,

"க்கும்.. நான் ஒருத்தன் இருக்கிறேன்.. மக்கா.. இது என்னோட அலுவலக அறை .. அதாவது ஞாபகம் இருக்கா? என்றான் கேலியாக..

"வா வா மதி, இது அவர் ஆபீஸாம்.. நாம் வேற எங்கேனும் போகலாம் "என்று மித்ரன் அவள் கைபிடித்து எழுப்பி அழைத்துப் போக, மதுமதியின் முகம் சிவந்துவிட, "ஐயோ மிதுன் மானம் போகுது, கையை விடுங்க நான் வர்றேன்" என்று முனுமுனுத்தபடி அவனோடு செல்ல...

மதுமதியின் மிதுன் என்ற அழைப்பும், அவளது முகச்சிவப்பும், மகேந்திரனுக்கு, அவர்கள் மனதை தெளிவாக விளக்க, "பார்ரா.. இரண்டு பேரும் போகிற வேகத்தை பார்த்தால், நாளைக்கே கல்யாணம் பண்ணி வைக்க சொல்வீங்க போலிருக்கே.. என்று கேலி செய்ய, "போங்க அத்தான்" என்றுவிட்டு மித்ரனை முந்திக் கொண்டு ஓடிப் போனாள் அவனது மைத்துனி.

மகேந்திரன் வெகுநாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரித்தான்.. உடனே மோகனை அழைத்து விவரம் பகிர்ந்து கொண்டான்.

மாலதி மதிய உணவுக்காக அழைத்துவிட்டிருந்தாள்.. மகேந்திரன் அலுவலகத்தில் இருந்து கிளம்பியவர்கள் நேராக மால் ஒன்றில் நுழைந்தனர். மதியம் வரை அங்கே சுற்றிவிட்டு வீடு திரும்புகையில் இருவரிடமும் பலத்த அமைதி நிலவியது. காரை ஒரு ஆளரவமற்ற இடத்தில் வண்டியை நிறுத்தினான் மித்ரன். அவனை நிமிர்ந்து பார்த்தாள் மதுமதி. "என்னாச்சு மது? ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?

மதுமதியின் விழிகள் அவன் விழிகளை கவ்வி நிற்க, "எனக்கு இதெல்லாம் நிஜமா என்று நம்பவே முடியவில்லை மிதுன். நான் மகதிக்கு செய்த கொடுமைக்கு ஒரு நல்ல வாழ்க்கை வாழ எனக்கு கொஞ்சம்கூட அருகதையே இல்லை.. என்றவளின் குரல் கரகரத்தது.. கண்ணில் நீர் பொல பொலவென்று வழிந்தது.

மித்ரனுக்கு அவளது மனநிலை புரிந்தது.. சட்டென்று அவளை இழுத்து அணைத்துக் கொண்டு, "ஷ்..ஷ்.. மதி இப்படி எல்லாம் உன்னை வருத்திக்காதே.. அதெல்லாம் நடக்க வேண்டும் என்று விதி.. அறியாத வயதில் மனதில் அழுத்தமாக விழுந்த தவறான எண்ணத்தின் விளைவு அது.. அதை புரிய வைக்க, உன் பக்கத்தை கேட்க ஒரு ஆள் தேவைப்பட்டது. அதை மோகன் உனக்கு விளங்க வைத்தான். அந்த கணமே சுய அலசலில் ஈடுபட்டு நீ உன் தவறை உணர்ந்து விட்டாய்.. அத்தோடு அந்த அத்தியாயம் முடிந்து போயிற்று.. இனி திரும்பி பார்க்கவோ அதைப் பற்றி பேசவோ தேவையில்லை.. என்னைக் கேட்டால் இப்போது தான் நீ புதிதாக பிறந்து இருப்பதாக எண்ணிக் கொள்.. இத்தனை காலம் வாழாத வாழ்க்கையை நீ வாழ வேண்டும்.. புரிந்ததா? என்றான் அவளது முதுகை ஆறுதலாக வருடினான்.


"என்னைப் புரிஞ்சுக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி மிதுன்.. இந்த அன்பும் அரவணைப்பும் எனக்கு வாழ்நாள் முழுக்க வேண்டும்.. தருவீர்களா மிதுன்? என்று அவன் காதோரம் முனுமுனுத்தாள் மதுமதி..

"இது போல யாரும் காதலை அழகாக சொல்லியிருக்க மாட்டார்கள் பேபி. ஐ லவ்யூ பேபி" என்று அவள் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, தன்னோடு அனைத்துக் கொண்டான் மித்ரன்.

அன்று மாலையில் அவன் தங்கியிருந்த அறையின் கதவை தட்டினாள் மதுமதி..


கதவு திறந்துதான் இருக்கிறது மதி,.. என்றதும், உள்ளே சென்றாள். அவன் பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.

அவனை பார்த்து இரண்டு முழு நாட்கள் கூட ஆகவில்லை என்பதை அவளால் நம்பவே முடியவில்லை.. கண்ணோரம் கரித்துக் கொண்டு வந்தது.. திரும்பி அவளை பார்த்தவன், செய்து கொண்டிருந்த வேலையை விடுத்து, ஒரே எட்டில் அவளை அனுகி, அணைத்துக் கொண்டான்.. எவ்வளவோ கட்டுப்படுத்தியும் விசும்பல் வெளிப்பட்டுவிட, அவன் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுகையில் குலுங்கினாள் மது.


அவனுக்கும் கூட அவளை பிரிய மனமே இல்லை தான். ஆனால் இப்போது போனால் தான், அவன் பெற்றோரிடம் பேசி, திருமணத்திற்கான ஏற்பாடுகளை முறையாக செய்ய முடியும்.. அத்தோடு இந்த சின்ன பிரிவு இருவரின் அன்பின் ஆழத்தை இன்னும் அதிகரிக்க உதவும் என்பதும் அவன் கணிப்பு..

"போதும்டா மதி.. இப்படி அழுதால் என்னால் எப்படி நிம்மதியாக பயணம் செய்ய முடியும் சொல்.. இது தற்காலிகம்தானே? எனக்கும் உன்னை பிரிந்து செல்ல மனசே இல்லை. ஆனால் நான் போய் உன் மாமியார் மாமனாரிடம் சொல்லி முறையாக உன்னை என் மனைவியாக்கிக் கொள்ள முடியும் கண்ணம்மா. சீக்கிரம் அவங்களோடு வருவேன்.. சரியா" என்று அவள் நெற்றியில் முத்தமிட்டு, சரி, போய் முகத்தை கழுவிட்டு வா.. என்று அனுப்பி வைக்க..

மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்த மாலதி, சின்ன மகள் கண்களை துடைத்தபடி அவளது அறைக்குள் செல்வதை பார்த்து துணுக்குற்றாள்.. என்னாயிற்று இவளுக்கு? எப்பவும் இவள் தானே மத்தவங்களை அழ வைப்பாள். இன்றைக்கு இவளே அழறாளே? கேட்டாலும் சொல்வாள் போல தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் வரும்போது பார்த்துக்கலாம் என்று நினைத்தவாறு, தைத்து வந்த சில பிளவுஸ்களை கொடுப்பதற்காக அவள் மகதியின் அறைக்கு சென்றாள்.


சற்று நேரத்தில் எல்லோரிடமும் விடை பெற்று கிளம்பினான் மித்ரன்.. மகேந்திரன் அவனை ரயில் நிலையத்திற்கு அழைத்துப் போக வந்திருந்தான். மதுமதிக்கும் உடன் செல்ல ஆவலாக இருந்தது.. ஆனால் அதை சொல்ல முடியாமல் தவித்தாள்.

"மது, நீயும் எங்களோடு வாயேன்.. அந்த டெகரேஷன் விஷயமாக இன்னொரு தடவை பேசிவிடலாம் என்று தோன்றுகிறது.. மித்ரன் முன்னாடி பேசிவிட்டால் பின்னாடி பிரச்சினை வராது பார் என்றதும், முன்பு என்றால் மதுமதி யார் அனுமதியையும் கேட்டிருக்க மாட்டாள்.. இப்போது அவள் தாயின் முகத்தை பார்க்க.. மாலதிக்கு உள்ளூர புரிந்தும் புரியாமலும் ஏதோ விஷயம் என்று தோன்ற, "போய்ட்டு வா, என்றவள் அவளது கைப்பேசியை அவளிடம் தந்தாள். மதுமதி சட்டென்று தாயை அனைத்து கன்னத்தில் முத்தமிட்டு ஓடிப் போனாள்.

நடந்ததை பார்த்திருந்த மகதி வேதனையுடன் மாடிக்கு ஓடிச் சென்றாள். அவள் செல்வதைப் இரு பெண்மணிகளும் பார்த்திருந்தனர்.

"அக்கா எனக்கு மகதியை நினைச்சி ரொம்ப கவலையா இருக்கிறது அக்கா.. இந்த மாப்பிள்ளை ஏன் இப்படி செய்கிறார்? மது எப்படி என்று கண் முன்னாடி பார்த்திருக்கிறார். அப்படியும் மகதி அறிய அவளை கூட்டிட்டு போகிறார். கூட மித்ரன் இருந்தாலும்கூட அவர் ரயில் ஏறியதும் அவங்க இரண்டு பேரும் சேர்ந்து தானே திரும்பி வரணும்? அப்போ அந்த ராட்சசி என்ன மாய்மாலம் பண்ணிடுவாளோ என்று எனக்கே பதறுதுன்னா, மகி நிலையை யோசிச்சு பாருங்க " என்று ஆதங்கப்பட்டாள் மாலதி.

"மாலதி ஒரு விஷயம், சொல்றேன், என்னை நீ தப்பா நினைக்கக் கூடாது என்றுவிட்டு, மிருதுளா, "மித்ரனுக்கும் மதுவுக்கும் ஜோடி பொருத்தம் நல்லா இருக்கில்லே மாலதி" என்றார்.

"அக்கா" என்றாள் மாலதி ஆச்சர்யமும் அதிர்ச்சியுமாக..

"நான் நேற்று அவங்க இரண்டு பேரும், வெளியே கிளம்பி போனப்போ பார்த்தேன். அப்பவே என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்தது.. காலையில் மித்ரன் மதுவுடன் வெளியே போக காட்டின ஆர்வத்தையும் கவனித்தேன். இப்போ அதே ஆர்வத்தை மது முகத்தில் பார்த்தேன்.. நாலு நாளா அவளும் எந்த வம்பும் பண்ணாமல் அவள் உண்டு அவள் வேலை உண்டுனு இருக்கிறாள்.. எல்லாத்துக்கும் மேலே.. இப்ப வெளியே போக உன்கிட்டே அனுமதி கேட்டாள் பார், அதனால தான் இவங்க இரண்டு பேரும் சேர்ந்தால் சரியா வரும்னு தோனுச்சு.. என்றவர்,"நான் சொன்னது போல நடந்தால் நமக்கு சந்தோஷம் தானே? என்றார்..

"என்னக்கா இப்படி கேட்கிறீங்க? இது மட்டும் நடந்தால் குடும்பத்தோடு போய் குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைக்கிறேன் அக்கா.. இருங்க, இனிப்பான விஷயம் சொல்றீங்க,
உங்க வாயில் சர்க்கரையை போடணும் என்றவள், உள்ளே ஓடிச் சென்று வீட்டில் இருந்த லட்டை எடுத்து வந்து அதை பிட்டு அவர் வாயில் திணித்தாள்.

"மித்ரன் இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை மாமி, முதலில் நான் இங்கே செட்டால் ஆகணும்.. அப்புறமா தான் மற்றது என்று சொன்னவன், எண்ணம் இப்ப மாறியிருக்கு.. எனக்கென்னவோ உன் மாப்பிள்ளை மேல் சந்தேகம் வருது.. என்றார் மிருதுளா யோசனையாக.

"என்ன அக்கா சொல்றீங்க, அவர் என்ன செய்தார்? என்று மாலதி.


"ஒரு யூகம் இருக்கு, அது உண்மையா என்று தெளிவாக தெரியவில்லை மாலதி. ஆனால், மதுவை இன்னிக்கு மருமகன் ரொம்ப இயல்பாக தங்களோடு வருமாறு அழைத்தார் பார்த்தாயா? நேற்று இரண்டு பேரும் மருமகன் ஆபீஸ் போய் வந்தது நமக்கு தெரியும். ஆனால் ரிசார்ட் விஷயத்தில் மது ஐடியா கொடுத்து அதை அவர் ஏற்றுக் கொள்கிறார் என்றால்..? மித்ரனும் அதற்கு சம்மதித்து இருக்கிறான் என்று தானே அர்த்தம்? மதுவைப் பற்றி நல்ல தெரிந்து இருக்கிற மாப்பிள்ளை,மித்ரனை எச்சரிக்கை செய்யாமல் அவனோடு உடன்படுகிறான் என்றால், உனக்கு நான் சொல்ல வருவது புரிகிறதா மாலதி?? அவன் இங்கே வந்தது தொழில் விஷயமாக அல்ல..அதையும் தாண்டி இன்னொரு விஷயம் அவங்களுக்குள்ளே ஓடுது.. எனக்கு என்னவோ இதில் மோகனும் கூட்டு என்றுதான் தோன்றுகிறது.. பொறுத்து தான் பார்க்க வேண்டும்.. எப்படியும் கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்து தானே தீரும்.." என்றார்.

"ஆமாம் அக்கா, நீங்க இப்ப சொல்லும்போது தான் எனக்கும் கொஞ்சம் புரியுது, நான் திட்டினால் வழக்கமாக, மது என்னை முறைப்பாள்..இல்லை என்றால் பதிலுக்கு கத்துவாள்.. ஆனால் நான் அன்னிக்கு ராத்திரி கோபமா திட்டினப்போ, அவள் பதிலும் பேசலை, என்னை நிமிர்ந்து கூட பார்க்கலை, தலை குனிந்து குற்றவாளி மாதிரி நின்னுட்டு இருந்தாள்.. இந்த நாலு நாட்களும் அவள் போனை என்கிட்டே கொடுத்துவிட்டு போகிறாள்.. அத்தோடு இன்னொரு விஷயம் நான் உங்ககிட்டே சொல்லவில்லை அக்கா"


"என்ன விஷயம் மாலதி?

"மாப்பிள்ளையும் சரி,மோகனும் சரி, மதுவை ஆதரித்து பேசினாங்க,மோகன் ஒருபடி மேலே போய்.. அன்னிக்கு நீங்க சொன்ன மாதிரி, அவள் திருந்தணும் என்று நாம் நினைச்சா மட்டும் போதாது, அவளுக்கு அதற்கான சந்தர்ப்பத்தையும் தரணும் ஆன்ட்டி என்று சொன்னார் அக்கா.. ஆக இவங்கதான் ஏதோ பிளான் பண்றாங்க அக்கா.. அத்தோடு சாயங்காலம் மது கண்ணை துடைச்சிட்டே அவள் ரூம்க்கு போறதை நான் பார்த்தேன்.. என்றாள்.


ஓஹோ! அப்ப என்னோட யூகம் சரிதான். மித்ரனை பிரியணும்னு தான் அழுதிருப்பாள். மற்றபடி மது சாதாரணமாக அழறவள் இல்லை. நான் எதுக்கும் என் நாத்தனார்கிட்டே அவளை பத்தி சொல்லி வைக்கிறேன்.. நாமளும் ஒரு சின்ன விளையாட்டு காட்டலாம்" என்று கண்ணடித்தார் மிருதுளா.

"எனக்கு மகதி கல்யாணம் நல்லபடியாக நடக்கணும்.. மது திருந்தி நல்லா இருக்கணும் அவ்வளவுதான் அக்கா. அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் செய்றேன்" என்ற மாலதி, உள்ளே வேலை இருப்பதாக சென்றாள்.

மிருதுளா புன்னகையுடன் எழுந்து அவரது அறைக்கு சென்றார்.

மகதிக்கு மட்டும் தங்கை மீது முழு நம்பிக்கை ஏற்பட மறுத்தது.. அதிலும் இப்போது மகேந்திரன் அவளையும் அழைத்து சென்றதில் அவளுக்கு மனம் கலங்க ஆரம்பித்து இருந்தது. இத்தனைக்கும் மதுமதி வீட்டில் இருப்பதில்லை.. தினமும் மோகன் வீட்டிறகு சென்று இரவு தான் திரும்பி வருகிறாள்.. அது மட்டுமின்றி திருமணத்தை பற்றியோ அது சார்ந்த விஷயத்தையோ அவள் பேசவே இல்லை.. சொல்லப்போனால் அவள் யாரிடமும் தேவைக்கு மேல் பேசுவதில்லை. தினமும், ஆட்டோவில் சென்று ஆட்டோவில் தான் வந்தாள்.. மதனகோபால் கொடுக்கும் பணத்திற்கு சரியாக கணக்கு கொடுத்தாள். வீட்டில் மகதி தவிர்த்து அனைவருக்கும் அவளது மாற்றம் நன்றாகவே புலப்பட்டது.

திருமணத்திற்கு மிகவும் குறைவான நாட்கள் தான் இருந்தது. மோகனும் மகேந்திரனும் கூட தங்கள் வேலைகளுக்கு இடையே திருமண வேலைகளையும் எடுத்து செய்து கொண்டிருந்தனர்.

மித்ரன் ஊர் போய் சேர்ந்து போன் செய்தபோது, மாயாவின் எண்ணில் தொடர்பு கொண்டான். இருவருமே "மிஸ் யூ"என்ற ஒரே வார்த்தையைத் தான் சொன்னார்கள்.. அவன் வெளிநாடு சொல்லி, அங்கே சென்றபின் அழைப்பதாக தெரிவித்தான். ஆனால் அதன்பின் மித்ரனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதை யாரிடமும் சொல்லாமல் உள்ளூர கலங்கிக் கொண்டு இருந்தாள் மதுமதி.

ஆனால், மித்ரன் வெளிநாடு சென்ற மூன்றாம் நாள், மாயா அவளது தவிப்பை கண்டுகொண்டு கணவனிடம் சொல்ல, அடுத்த நாள் வந்த மதுவிடம் விசாரித்தான். அவள் முதலில் தயங்கினாள், அவன் அழுத்தி கேட்டதும் சொல்லிவிட்டு முகத்தை மூடிக் கொண்டு அழுதாள்.


"ஷ், ஷ்... மது நீ நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது. அவன் வெளிநாடு போறதா சொன்னான்லே அங்கே சூழ்நிலை எப்படியோ என்னவோ.. அவங்க வீட்டில் என்ன சொல்றாங்களோ? அவங்களை சமாளிக்கிறதால் உன்கிட்டே பேச முடிஞ்சிருக்காதுமா. கவலைப்படாதே.. நான் உன் அண்ணன் என்று வாய் வார்த்தையாக சொல்லவில்லை மது, உண்மையில் நான் உன்னை அப்படித்தான் நினைக்கிறேன். அவனே கூப்பிடுவான்மா.. இல்லை என்றால் நான் பேச வைக்கிறேன் மா.. நீ அழாதே.. சந்தோஷமாக இரு சரியா? போய் ஒழுங்கா சாப்பிடு.. என்று அனுப்பினான்.

அவன் மனதிலும் சஞ்சலம் தான். மித்ரன் நிச்சயம் தவறானவன் இல்லை. ஆனால் அவன் பெற்றோர்? அவர்களை மீறி அவன் வருவானா? அப்படி வந்தாலும் சரியில்லை.. மோகன், யோசனையுடன் நண்பனை அழைத்தான்.

இருவருமே சற்று குழம்பினர். மேலும் இரண்டு தினங்கள் செல்ல..மதுமதி ஆளே உரு மாறியிருந்தாள்.. எப்போதும் பளிச்சென்று உடுத்துகிறவள், தன்னை அலங்கரித்துக் கொள்கிறவள்.. ஏனோ தானோ என்று இருந்தாள். மாலதிக்கும் மகளின் தவிப்பு புரிந்துவிட்டது..
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top