Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

39. மதிமுகம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மதுமதிக்கு இத்தனை நாளும் அவளுடன் அமர்ந்து அவளுடைய பிரச்சினை என்ன என்று கேட்டறிய யாருமே முயற்சி செய்யாத நிலையில், இந்த மோகன் ஒரு சகோதரனாக அவள் பக்கமும் நியாயம் இருக்கும் என்று அவளிடம் கேட்க வந்ததில் வெகுகாலமாய் அவளுக்குள் கனன்று கொண்டிருந்த ஏதோ ஒன்று குளிர்ந்தது போல் ஒரு பிரம்மை உண்டாயிற்று. மோகன் கேட்ட கேள்விகள் அவளை சுயபரிசோதனை செய்ய வைத்தது. அப்போது தான் அவள் செய்து வந்தது தவறுகள் அறிய நேர்ந்ததில்.. அவள் அதிர்ந்து போய் அவனுக்கு பதிலே சொல்லாததால், மோகன் மீண்டும் அந்த கேள்வியை கேட்டான்.

"மகதியை நீ ஏன் வெறுக்கிறாய்? அவள் அப்படி என்ன தவறு செய்தாள்? என்று விஷயத்தை அவள் உள் வாங்கும் விதமாக நிதானமாக சொன்னான்.

அந்த கேள்வியில் மதுமதி உடைந்தாள்..."தப்பு, தப்பு பண்ணிவிட்டேன் அண்ணா, மகதியை நான் ரொம்ப கஷ்டபடுத்திவிட்டேன். இல்லை, அந்த வார்த்தை ரொம்ப சாதாரணம், அவளை கொடுமை படுத்திவிட்டேன் அண்ணா.... ப்ளீஸ் என்னை இப்போதே கைது பண்ணுங்கள். அதுதான் எனக்கு சரியான தண்டனை" என்று கதறியவள் சட்டென்று முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள் மதுமதி.

"ஷ் ஷ்... மது.. இது பப்ளிக் ப்ளேஸ் மா. ப்ளீஸ் கன்ட்ரோல் யுவர் செலஃப்"என்று அவளது தோளில் தட்டிகொடுத்துவிட்டு அவள் சற்று நேரம் அழட்டும் என்று எழுந்து நின்றான்.

சிறிதுநேரம் அழுதவள், மெல்ல மெல்ல அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, "நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் அண்ணா. என்னை நீங்கள் இப்போதே கைது செய்யுங்கள்..." என்றாள்.

"உன்னை குற்றவாளி ஆக்குவதற்காக உன்னிடம் நான் விசாரிக்க வரவில்லை மதுமதி. நீயும் உன் வெறுப்பை களைந்து ஒரு சந்தோஷமான பெண்ணாக வாழ வேண்டும் என்பதுதான் எங்கள் எல்லோருடைய ஆசை. முக்கியமாக உன் அன்பிற்காக ஒரு ஜீவன் பல வருஷமாக காத்திருக்கிறது. உண்மையில் நீ முற்றிலுமாக திருந்திவிட்டாய் என்றால் அதற்காக அதிகமாக சந்தோஷப்படப் போகிறவள் மகதிதான்"என்ற மோகன் அன்று மகதியை காப்பாற்றியதைப் பற்றி தெரிவித்து அப்போதும் அவள் யார் மீதும் சந்தேகமே இல்லை என்று சொன்னதை தெரிவித்தான்.

மோகன் அதை சொல்லு முன்பாகவே மதுமதிக்கு சகோதரியின் அன்பு புரிந்துவிட்டது. அவள் இடத்தில் யாராக இருந்தாலும் இத்தனை நடந்த பிறகு தண்டிக்காமல் விடமாட்டார்கள். ஆனால் இந்த மகதிக்கு அவள் மீதுதான் எவ்வளவு பாசம்? அதற்கு கைமாறாக அவள் என்ன செய்தாலும் போதாது தான், என்றாலும் அவள் ஒரு முடிவிற்கு வந்தவளாக மோகனிடம் ஒரு கோரிக்கையை வைத்தாள்.

மோகனுக்கு உண்மையில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று.. அதை ஏற்றுக்கொண்டு வாக்களித்தான்.

💜💜💜

சின்ன மகள் பதற்றமாக சென்றதும் மாலதி மோகனுக்கு போன் செய்து விவரம் சொன்னாள். மதுவை இன்னமும் அவனது ஆட்கள் கண்காணிப்பதால் கவலைப்பட தேவையில்லை என்றான். எதுவானாலும் அவன் திரும்ப அழைப்பதாக சொன்னான்.

ஆனால் சற்று நேரத்தில்..

மதனகோபால் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பச் சொன்னார். கிளம்பும் வரையில் அவனது அழைப்பு வரவில்லை. மங்களத்திடம் முன்னதாக வருவதாக தெரிவித்து விட்டதால் வேறு வழியின்றி பெரியவர்கள் நால்வருமாக மகேந்திரன் வீட்டிற்கு சென்றனர்.

மங்களம் முன்னதாக ஐயரிடம் கேட்டு முகூர்த்த தேதியை வாங்கி வைத்திருந்தார். அதை போனில் சொல்லி விட்டிருப்பார். ஆனால் சில விஷயங்களை மதனகோபால் அறிந்தாக வேண்டும் என்று எல்லோரும் நினைத்தனர். அது எளிதாக மறைத்துவிடக் கூடியது தான் என்றாலும் பெற்றவராக அவருக்கு மதுமதியை பற்றிய உண்மை தெரிந்திருக்க வேண்டும் தானே?? ஆகவே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தனர்.

இன்னும் இருபது நாளில் திருமணத்திற்கு ஐயர் தேதி குறித்து கொடுத்திருப்பதாக மங்களம் தெரிவிக்க

“அவ்வளவு சீக்கிரம் எல்லா ஏற்பாடுகளையும் எப்படி பார்க்க முடியும் தங்கச்சி? என்று கேட்டார் மதனகோபால்...

"எல்லாம் முடியும் அண்ணா, ஒன்றும் பிரச்சனை இல்லை. மலைக்கோவிலில் தான் கல்யாணம். நெருங்கிய சொந்த பந்தங்களை அழைத்துக்கொண்டால் போதும். அங்கேயே சாப்பாட்டுக்கும் ஏற்பாடு பண்ணிடலாம். அப்புறம் அவர்கள் தேன்நிலவு போய் வந்ததும் பெரிய ஹோட்டலில் வரவேற்பை ஜாம் ஜாம்னு நடத்திடலாம்".

"மலைக்கோவிலிலா? எப்படி தங்கச்சி? மாப்பிள்ளை எப்படி ஏறுவார்?? அதெல்லாம் யோசிக்க வேண்டாமா? மதனகோபால் கவலையுடன் கேட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிற்குள் இருந்து கூடத்திற்கு வந்தான் மகேந்திரன்.

"மாப்பிள்ளை"என்று ஆச்சரியத்துடன் எழுந்து விட்டார் மதனகோபால்.

மகேந்திரன் புன்னகையுடன் அவரை அமரச் செய்து அவனும் ஒரு இருக்கையில் அமர்ந்தான்.

"இதெல்லாம் எப்படி மாப்பிள்ளை? டாக்டர் தான் நடக்கவே முடியாதுனு சொன்னாரே? இவ்வளவு நேரம் உள்ளே தான் இருந்தீர்களா? வியப்புடன் கேட்கும்போதே, முன் தினம் மனைவி தன்னிடம் சொன்னது நினைவு வந்தது. இது சந்தோஷமான விஷயம் தானே இதை ஏன் மறைக்க வேண்டும் என்று எண்ணினார். மற்ற மூவரும் மகிழ்ச்சியோடு பார்த்து இருந்தனரே தவிர அவரைப் போல ஆச்சரியப்படவில்லை என்பது அவரது கருத்தில் பட்டது.

"நான் அலுவலகத்தில் இருந்து பின்வாசல் வழியாக வந்தேன் மாமா. எல்லாம் சொல்கிறேன். நீங்கள் பதற்றப்படாமல் இருக்க வேண்டும். உங்களுக்கு தெரியாமல் சிலது நடந்துவிட்டது மாமா. அதை எல்லாம் சம்பந்தப்பட்ட நானே சொல்வது தான் சரியாக இருக்கும். உங்களிடம் மறைக்க வேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் எங்க யாருக்கும் இல்லை. எல்லோருக்கும் உங்கள் உடல் நலனில் அக்கறை இருப்பதால் சொல்ல தைரியம் வரவில்லை. இப்போதும் கூட சொல்லாமல் மறைத்திருக்கலாம். ஆனால் நீங்க மகள்களின் தந்தை.. அவர்களை பற்றிய விவரம் உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.. அத்தோடு இந்த விபரம் உங்களுக்கு தெரிந்ததாக இருக்க வேண்டுமே தவிர காட்டிக்கொள்ள கூடாது.

மருமகன் பேச பேச மதனகோபாலுக்கு ஏதோ நடக்கக்கூடாத விஷயம் நடந்திருப்பதாக தோன்றியது.

மகதியை கொடைக்கானலில் சந்தித்தது முதல், மகேந்திரன், மதுமதி அவளை கடத்தியது, காப்பாற்றியது, அதன் பிறகு மதுமதியே அவனை வேண்டாம் என்று சொல்ல வைக்க விபத்து நடக்க இருந்தது.. அது உண்மையான விபத்தாகிவிட்டது. ஆயினும் அதில் பெரிதாக சேதம் இல்லை. ஆனால் அப்படி அவளை நம்ப வைத்ததும் அவளே மகதியை திருமணம் செய்து கொள்ள சொன்னது எல்லாம் சொல்லி முடித்தான்.

மதனகோபாலுக்கு திகில் படம் பார்த்தது போன்ற உணர்வில்..சற்று பதற்றம் உண்டாயிற்று. அதற்குள்ளாக மங்களம் அதிக சர்க்கரை போட்ட தேனீரை கொணர்ந்து அவருக்கு பருக கொடுத்தார். மற்றவர்களுக்கும் பழரசம் கொணர்ந்து கொடுத்தாள் பணிப்பெண்.

சற்று நேரம் அங்கே அமைதி நிலவிற்று.. .மதுமதியின் செயல்கள் அவரை மிகவும் பாதித்தது. "மதுமதி இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொள்வாள் என்று நான் எண்ணவே இல்லை. பதினைந்து வயதில் அவளுக்கு உலகம் தெரியாது. அதனால் ஏதோ தூண்டுதலில் அப்படி செய்து விட்டாள் என்று நாங்கள் அவளை பெரிதாக கண்டிக்கவில்லை. அதற்கு பிறகு அவள் ஏதும் செய்யாததால் திருந்திவிட்டதாக நினைத்தது தவறு என்று சிலகணங்கள் நிதானித்தவர் தொடர்ந்து, "இப்போது நீங்கள் சொல்வதை பார்த்தால் அவள் செய்த குற்றத்திற்கு ஆதாரம் இருப்பது போல் தெரிகிறது. அவளை கைது பண்ணியிருக்கலாமே மாப்பிள்ளை? தப்பு தெய்தால் தண்டனை அனுபவித்துதான் ஆகவேண்டும்" என்றார் கடுமையான குரலில்...

அவரது கையை பற்றி தட்டிக் கொடுத்து,"மாமா ரிலாக்ஸ்... தண்டனை கொடுத்தாலும் அவள் திருந்த வேண்டும் அல்லவா? இன்னும் மகதி மீது அதிகமாக வெறுப்பை வளர்த்துக்கொள்வாள். அதனால் தான் என்ன செய்து அவளை உணர வைப்பது என்று யோசித்து கொண்டு இருக்கிறோம்".

உங்கள் முயற்சி பலித்தால் சந்தோஷம் தான் மாப்பிள்ளை "என்றவர், ஏற்கனவே மாலதியும் சில விஷயங்களை சொன்னாள். அதனால் இன்றைக்கு மதுமதியை அழைத்து கண்டித்தேன். அத்தோடு அவளுக்கு இனி கேட்ட போதெல்லாம் பணம் கிடைக்காது என்று எச்சரித்து இருக்கிறேன். இனி அவளால் எந்த தொந்தரவும் இருக்காது என்று நினைக்கிறேன்" என்றதும் ஐவரும் கேள்வியாக அவரை பார்த்தனர்.

"என்ன எல்லோரும் அப்படி பார்க்கிறீர்கள்? அவளுக்கு பலமே இந்த பணம் தான். அது இல்லை என்றால் அவள் நினைத்தது போல் ஆடவும் முடியாது. நண்பர்கள் உதவக்கூடும் தான். ஆனால் எத்தனை நாட்களுக்கு. அத்தோடு இவளது நிலை அறிந்தால் அவர்கள் அவளை திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள் என்பது என் கணிப்பு, அது மட்டுமில்லை மகதி கல்யாணம் முடிஞ்சதும் அவளுக்கும் ஒரு கல்யாணத்தை பண்ணிடனும்னு நினைக்கிறேன்.".

மகேந்திரனுக்கு அது சரியான நடவடிக்கை என்று தோன்றிய போதும் மதுமதி அதற்கும் மகதியே காரணம் என்று இன்னும் வன்மத்தை வளர்த்துக் கொண்டு அதன் விளைவாக அவள் மகதிக்கு புதிதாக ஏதும் தொல்லையை தந்துவிடக் கூடாதே என்று அச்சமாக இருந்தது. அந்த கல்யாணம் செய்து வைக்கும் ஐடியாவும் சரியானதுதான் ஆனால் அதற்கு அவள் ஒத்து வரணுமே என்று நினைத்துக் கொண்டான்.

அதன்பிறகு சற்று நேரம் திருமண வேலைகள் குறித்து ஆலோசித்தனர். மாங்கல்யம் செய்வது, ஜவுளி எங்கே எடுப்பது, என்ன மாதிரியான விலையில், சாப்பாட்டு மெனுவில் புதிதாக எந்த ஐட்டம் சேர்ப்பது என்று எல்லாமும் பேசி தனித்தனியாக குறித்து வைத்துக் கொண்டனர். ஒருவாறு பேச்சு முடியவும், மங்களத்தின் வற்புறுத்தலின் பேரில் உணவருந்திவிட்டு நால்வரும் விடை பெற்றனர்.

💜💜💜

மதுமதி காலையில் பதற்றத்துடன் வெளியே போய்விட்டு வந்தபிறகு, மிகவும் அமைதியாக காணப்பட்டாள். மகதி கடத்தப்படுவதற்கு முன்பும் கூட அவள் அப்படித்தான் இருந்தாள். மோகனிடம் விசாரித்தால் அவளது நண்பர்கள் தான் அப்படி போன் செய்து அவளை கலாய்த்திருக்கிறார்கள். வேற ஒன்றும் இல்லை என்றுவிட்டான்.

மாலதிக்கு திருமணம் சம்பந்தமாக வெளி வேலைகள் நிறைய இருந்தது. அதுசமயம் மகதியை தனியாக விட்டு செல்ல நேரும், என்பதால் திருமணத் தேதியை முடிவு செய்ததும் அன்று இரவே மிருதுளாவை விட்டுவிட்டு, மணிவாசகம் எஸ்டேட்டிற்கு கிளம்பிச் சென்றுவிட்டார்.

அன்றைய இரவில் பல்வேறு எண்ணங்கள் மனதில் அலைமோதியது, எங்கே திரும்பவும் தன்னை ஏதும் செய்துவிட்டு மகேந்திரனை திருமணம் செய்து கொண்டு விடுவாளோ என்று அச்சத்துடன் கண்ணயர்ந்தாள் மகதி

💜💜💜

மணவறையில் மகேந்திரன் அமர்ந்திருக்க அவன் அருகில் மகதி, நாணப் புன்னகையுடன் அமர்ந்திருந்தாள். அவளை பார்க்க பார்க்க ஆத்திரத்தில் முகம் சிவக்க மதுமதி கையில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் மகேந்திரனை சுடுவதற்கு குறி பார்க்க... "ஐயோ வேண்டாம் மது... வேண்டாம்.. என்று மகதி அலறியவாறு கண்ணை விழித்தாள்.... சட்டென்று எழுந்து அமர்ந்தவளுக்கு வியர்வை ஆறாக பெருகியது.

"ச்சு..கனவு.. என்று ஆசாவாசம் உண்டாயிற்று. ஆனால் உடனே கண்ணீரும் வந்தது. மதுமதி ஏன்டி இப்படி சித்ரவதை செய்கிறாய்.. உன்னை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று தெரியுமா? சே.. இந்த பாழாய் போன காதல் வராமல் இருந்திருந்தால் அவரை உனக்கே விட்டுக்கொடுத்து இன்றைக்கு நான் நிம்மதியாக இருந்திருப்பேனே?? முடியலைடி.. இந்த பத்து நாளும் நான் செத்து செத்து தான் பிழைத்தாக வேண்டுமா? என்று அழுதபடியே மனம் குமுறினாள்.

அவளது அலறலில் எல்லோரும் விழித்து கொள்ள... மதனகோபால் மட்டும் தூக்க மாத்திரையின் உபயத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.

மதுமதியும் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறந்து வெளியே வர, மாலதியும், மிருதுளாவும் வேகமாக மாடிக்கு வருவதைப் பார்த்துவிட்டு சட்டென்று அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள். அவளை அவர்கள் பார்க்க நேர்ந்தால் மகதியை அவள்தான் ஏதோ செய்து விட்டதாக சந்தேகம் வரும். எதற்கு வம்பு என்று தோன்றியது. கூடவே மகதி ஏன் அப்படி அலறினாள் என்று யோசித்தாள். சற்று நேரத்தில் அவளது அறைக் கதவு தட்டும் ஓசை கேட்டு துணுக்குற்றாள். நிச்சயம் அம்மா தான்... கதவைத் திறந்தாள்.

"எல்லாம் உன்னால் தானடி, தினமும் நீ என்ன பண்ணி வைப்பியோ என்று நினைத்து நினைத்து இன்று ஏதோ பயங்கர கனவு வந்து நடுங்கிட்டு இருக்கிறாள்.. சே நீ ஏன்டி என் வயிற்றில் வந்து பிறந்தாய்... இன்னும் இருபது நாட்களில் கல்யாணம்.. என்று முடிவு பண்ணியாச்சு.. நான் வெளி வேலைகளை பார்க்க போறதா? இல்லை, அவளுக்கு காவல் இருக்கிறதா?? என்று படபடத்த மாலதி, "உனக்கு எவ்வளவு பணம் நகை வேண்டுமானாலும் வாங்கிக்கொள்... எங்காவது போய் தொலைடி, அவளை நிம்மதியா வாழ விடுடி.... ப்ளீஸ்... என்று குலுங்கி அழத் தொடங்கினாள் அன்னை. அதற்குள் மிருதுளா வந்து, "மாலதி, என்னம்மா நீ? அவள் கனவு கண்டதுக்கு இவளை திட்டி என்ன பயன்? மகதிகூட நான் படுத்துக்கொள்கிறேன். நீயும் போய் அமைதியாக தூங்கு, காலையில் உனக்கு நிறைய வேலைகள் இருக்கு" என்று அழைத்துப் போனார்.

மதுமதிக்கு தாய் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சவுக்கால் அடித்தது போல் இருந்தது. அன்று வரை எதற்குமே கலங்காதவள் முதல் முறையாக கண்ணீர் வழிய செய்வதறியாது பேச்சற்று நின்றிருந்தாள். முன் தினம் தான் மோகனிடம் அவள் பேசிவிட்டு வந்திருந்தாள். அவள் மனம் மாறிவிட்டாள் என்று சொன்னால் அதை நிச்சயமாக அம்மாவும் மகதியும் நம்பமாட்டார்கள். அவர்கள் நம்பவேண்டும் என்றால் ஏதேனும் செய்தாக வேண்டும்... ஆனால் என்ன செய்வது? ஒன்றும் புரியவில்லை. விடிய விடிய தூங்காமல் யோசித்தபடியே அமர்ந்திருந்தாள். அவளுக்கு இரண்டு யோசனைகள் தான் மனதிற்குள் வந்து வந்து போனது...!
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top