Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

38 & 39.அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
27
Points
28
Location
India
*அத்தியாயம் – 38*


அத்தை மகனின் மோகனச் சிரிப்பில் ஒருகணம் மயங்கினாலும், அவன் சொன்ன விளக்கம் அவளுக்கு பிடிபடவில்லை. வழக்கம்போல ஏதோ காதில் பூ சுற்றுகிறான் என்று புரிந்தபோதும், ஏற்கனவே வீட்டில் பாட்டி செய்த கலாட்டாவில் பதறிப் போய் இருந்தாள். அதன் பிறகு மறுநாள் கிளம்புவதற்காக மனதளவில் தன்னை தயார் படுத்தியபடி, மருத்துவமனைக்கு வந்தால், இங்கே இவனிடம் மாட்டிக்கொண்டு உண்மையை சொல்லும்படி ஆனது போதாது என்று வாக்குவாதம் செய்ததில் வெகுவாக களைத்து போய் விட்டாள். அத்தோடு அன்று காலையில் வீட்டில் அத்தை ஒத்தையில் கஷ்டப்படுவாள் என்று ஒத்தாசை செய்ததால் ஓய்வெடுக்க முடியாமல் போய்விட்டது. இப்போது அவளுக்கு தூக்கம் கண்ணைக் கட்டியது. ஆகவே அவள் அப்படி என்ன சொன்னாள் என்று ஆராய்ந்து பதில் சொல்ல பொறுமை கொஞ்சமும் இல்லை. அதனால் மேற்கொண்டு பேசாமல், அவனது சாப்பிட்ட கையை சுத்தம் செய்ய வைத்து, குடிக்க தண்ணீரும் கொடுத்து விட்டு மேலே கொடுக்கவேண்டிய மருந்துகளையும் எடுத்து கொடுத்து, "உடனே படுத்து விடாதீர்கள். சற்று நேரம் உட்கார்ந்து இருந்து அப்புறமாக படுங்க," என்று அவளுக்கான படுக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

நிரஞ்சனுக்கு அவளை சீண்டிப் பார்க்க தோன்றவே,"வதனி நீ சொன்ன யோசனை என்னவென்று புரிந்து விட்டதா?"

"எனக்கு தூக்கம் வருகிறது. எதுவானாலும் காலையில் பேசிக்கொள்ளலாம். குட்நைட்" என்றவாறு போர்வையை தலைக்கு மேலே போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள் மலர்வதனி.

"இப்படி சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்காதே, காலையில் நிச்சயமாக அதை நீ தெரிந்து கொள்ளத்தான் போகிறாய் குட் நைட்"என்ற நிரஞ்சனுக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்த உணர்வை வெகு சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொண்டான்.

மலருக்கு கண்களை மூடி படுத்தபின் மனது விழித்துக் கொண்டது. அப்படி அவள் என்ன சொல்லி இருக்கக்கூடும் என்று சிந்தனை ஒரு பக்கம் ஓடியது. விஷயம் விளங்கவும் திடுக்கிட்டு போனாள். சற்று நேரம் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. இதயம் படபடக்க, அப்படியே படுத்துக் கிடந்தவள்,"அத்தான் எந்த தைரியத்தில் அந்த யோசனையை ஏற்றுக் கொள்வதாக சொல்கிறான்? என்று சிந்தித்தவாறே தூக்கத்தில் ஆழ்ந்தாள்.

மறுநாள் காலையில்..

மலர்வதனி எழுந்தபோது, நிரஞ்சன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். இரவு பேச்சை கிளறும் முன்பாக வீட்டிற்கு கிளம்பி விட வேண்டும் என்று நினைத்தாள். அதனால் காலைக் கடன்களை வேகமாக முடித்து விட்டு, அவனுக்கு குடிப்பதற்காக டீ வாங்கிவர போனாள்.

அவள் எழுந்து நடமாடும் அரவத்தில்.. நிரஞ்சனுக்கு விழிப்பு வந்துவிட்ட போதும் கண்களை திறவாமல் படுத்துக் கிடந்தான். சற்று நேரத்தில் அவனது கைபேசி ஒலித்தது. மாமா தான் அழைத்திருந்தார். அவசரமாக எடுத்தவன், மலர்வதனி அறையில் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, பேசினான்.

"காலை வணக்கம் மாமா, சொல்லுங்க மாமா,விமானம் சரியான நேரத்திற்கு வந்து விட்டதா?"

"ஆமாம் நிரஞ்சன் இப்போது நான் சாருவுடன் போய்க் கொண்டிருக்கிறேன். உனக்கு தகவல் சொல்லலாம் என்று அழைத்தேன். இப்பொழுது உடல்நிலை எப்படி இருக்கிறது? வீட்டிற்கு போகுமுன் என்னை வந்து சந்தித்து விட்டு போகிறாயா?"

"நல்லது மாமா எனக்கு இப்போது பரவாயில்லை. இன்றைக்கு கட்டு பிரித்துவிடுவார்கள். அதன்பிறகு discharge செய்து விடுவார்கள். சாரகேஷ் உங்களை விட்டதும் என்னை அழைத்து போக வருவான். முதலில் அவனுடைய வீட்டில் தங்குவதாக ஏற்பாடு. இப்போது தான் இந்த வீடு இருக்கிறதே அதனால் நான் அங்கே தான் வருவேன். ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. அதை இப்பொழுது தொலைபேசியில் சொல்ல முடியாது. நேரில் தான் பேச வேண்டும். வீட்டிற்கு மதியம் தான் போவேன் மாமா. ஆனால் மாலையில் அவசியம் உங்கள் மகளை அழைத்து வருகிறேன்."

"அப்படியா ரொம்ப சந்தோஷம் நிரஞ்சன். நான் ஆவலோடு காத்திருக்கிறேன். பகலில் நான் கொஞ்சம் ஷாப்பிங் செய்ய போக வேண்டும். தரமான கடைகளை பற்றி என்னுடைய வாட்ஸ் அப்பிற்கு தகவல் அனுப்பி வைக்கிறாயா?

"நிச்சயமா மாமா இன்னும் சற்று நேரத்தில் உங்களுக்கு தகவல் அனுப்பி விடுகிறேன். உங்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் நேற்று வாங்கி வைத்து விட்டார்கள். நான் வரும் வரை வீட்டில் இருங்க மாமா. இன்று ஒரு நாள் மட்டும் உணவை அருகில் ஏதாவது ஒரு உணவகத்தில் முடித்துக் கொள்ளலாம். நாளையிலிருந்து உங்கள் நளபாகத்தை ஆரம்பிக்கலாம்"என்று சொல்லவும் மறுமுனையில் மாமா கலகலவென்று சிரித்தார்.

பதிலாக அவனது முகத்திலும் புன்னகை தவழ, பேச்சை முடித்துக்கொண்டு நிமிர்ந்தால், சரியாக அப்போது மலர்வதனி டீ யுடன் உள்ளே வந்தாள்.

அத்தான் எதற்காக சிரிக்கிறான் என்று புரியாத போதும் அவள் அதை பற்றி கேட்கவில்லை. ஆனால் நிரஞ்சனின் பார்வை தன்மீது தீவிரமாக படிந்திருந்ததை உணர்ந்தாள். டீயை மேசை மீது வைத்தாள். அவன் எழுந்து பல் துலக்க, டாய்லெட்டிற்குள் சென்றதும்

மலர்வதனி ஒரு காகிதத்தில் "நான் நர்ஸ் ரீமாக்கிட்டே கொஞ்சம் பேசிவிட்டு உடனே வந்துவிடுகிறேன்" என்று எழுதி, டீ கோப்பையின் கீழே வைத்துவிட்டு கைப்பையை எடுத்துக்கொண்டு, வெளியேறினாள்.

உண்மையில் அவள் தற்போது அந்த ரீமாவை சந்திக்க செல்லவில்லை. பாட்டியிடம் சொன்னதை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவள் முன்தினம் நிரஞ்சனிடம் சொன்னது போல் அதே ஊரில் தங்க முடியாது. அப்படி இருந்தால் அது அவள் பாட்டிக்கு கொடுத்த வாக்கை மீறியது போலாகிவிடும். அதனால் அவளுக்கு இப்போது உடனடியாக வெளியூரில் வேலையும் தங்குவதற்கு இடமும் தேவை. அதற்கு அவள் சற்று சிந்திக்க வேண்டும். அவள் வெளியூர்களில் விடுதியில் தான் படிப்பை முடித்தாள். அந்த வகையில் அவளுக்கு அங்கே இருந்த போது ஒன்றிரண்டு சிநேகிதிகள் கிடைத்தனர். அவர்களோடு இப்போதும் அவள் தொடர்பில் தான் இருக்கிறாள். மலர்வதனி நர்ஸ் படிப்பை தேர்வு செய்ததால், நான்கு ஆண்டுகளில் படிப்பை முடித்து இப்போது இங்கே பணியிலும் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. ஆனால் அவர்கள் டாக்டர் படிப்பு கடைசி ஆண்டு படித்து வருகிறார்கள். உதவி கேட்டால் அவர்களும் தான் என்ன செய்து விட முடியும் என்பது தெரியாவில்லை. ஆனால் சும்மா இருப்பதற்கு அவளுக்கு அவகாசம் இல்லை. வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக ஒரு முடிவை எடுத்தாக வேண்டும், என்று தீவிரமாக யோசித்துவிட்டு கைப்பேசியில் ஒரு தோழியை அழைத்து அவளது தேவையை சொன்னாள். அவள் விசாரித்து விட்டு அரைமணியில் சொல்வதாக சொன்னாள். அதுவரை இங்கே இருந்தால் நிரஞ்சன் சந்தேகப்பட்டு தேடி வந்து விடுவான் என்று அறைக்கு திரும்பினாள்.

அதற்குள்ளாக அங்கே நிரஞ்சன் கைப்பேசியில் முக்கியமான ஒருவரை அழைத்தான். அவரிடம் பேசியபிறகு அவனுக்கு சற்று நிம்மதி உண்டாயிற்று.

மலர்வதனி அத்தான் எந்த நேரத்தில் இரவு பேச்சை தொடர்வானோ என்று கலக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.

நிரஞ்சன உள்ளே வந்தவளை கூர்ந்து பார்த்துவிட்டு"பேச வேண்டியவர்களிடம் பேசியாயிற்றா?"என்றான் ஒருமாதிரி குரலில்.

அவளுக்கு திக்கென்று இருந்தது," "எ... என்ன கேட்கிறீர்கள் என்று புரியவில்லை" என்றாள் தடுமாற்றத்துடன்.

"அந்த நர்ஸிடம் பேசப் போவதாக எழுதியிருந்தாயே அதைத்தான் கேட்டேன்".

"ஓ அதுவா?? யெஸ் யெஸ் பேசிவிட்டேன்" என்றாள் நிம்மதியடைந்தவளாக..

"ஆனால் அவள் இங்கே உன்னை தேடி வந்தாளே? ஒருவேளை நீ சொன்ன பெயரில் இன்னொரு நர்ஸ் இருக்கிறாளோ"என்ற நிரஞ்சனின் குரலில் இருந்தது என்ன?

கிண்டலேதான்... என்று புரிய, சொல்வதறியாது ஒருகணம் திகைத்து விட்டு,"நான் அவளை தேடி போன போது இங்கே வந்திருப்பாள் போல, ஆனால் நான் இப்போது அவளை ஒருவழியாக கண்டுபிடித்து பேசிவிட்டுத்தான் வந்தேன்"என்றாள்.

"ம்ம்.. சரி அதைவிடு, இரவு நீ சொன்ன யோசனைப்படி செய்துவிடலாம் என்று நான் முடிவு செய்துவிட்டேன். நியாயமாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சம்மதத்தை கேட்க வேண்டும். ஆனால் நம்ம விஷயத்தில் இருவருக்குமாக சேர்த்து நானே அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு விட்டேன். அதனால்... என்றவனின் பேச்சில் குறுக்கிட்டு,

"நீங்கள் சொல்வது எதுவுமே எனக்கு புரியவில்லை. அது புரியவும் வேண்டாம். உங்கள் முடிவு எதுவானாலும் நான் ஏற்றுக்கொள்வதாக இல்லை. நான் செய்திருக்கும் முடிவுப்படி இன்றைக்கு வீட்டை விட்டு போகப் போறது உறுதி. இனி என்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது" என்று படபடத்தாள் மலர்வதனி.

அவள் புரிந்துகொண்டு விட்டாள். ஆனால் அந்த பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை, என்பதை உணர்ந்த நிரஞ்சன், அவளது போக்கில் சென்று தான் அவளை வழிக்கு கொண்டு வரமுடியும் என்று நினைத்து அதற்கு மேலே வாதம் செய்யாமல் ஜன்னல் பக்கமா பார்வையை திருப்பிக் கொண்டு மௌனமாகிவிட,

பெரிய விவாதத்தை எதிர் பார்த்திருந்த மலர்வதனிக்கு சற்று ஏமாற்றமும், கவலையும் உண்டாயிற்று. அவள் மீது கோபம் கொண்டு விட்டானோ என்று மனம் தவித்தது. ஆனால் அதுவே அவளது மனதை திடப்படுத்தவும் செய்தது.

அப்போது மருத்துவர்கள் குழுவாக உள்ளே வந்தனர். நிரஞ்சனை பரிசோதனை செய்துவிட்டு,"டிஸ்சார்ஜ் பண்ணுவதாக தெரிவித்து தொடர்ந்து மருந்து எடுத்துக் கொண்டு ஒருவாரம் கழித்து மீண்டும் வரச் சொல்லிவிட்டு சென்றனர். அவர்கள் பின்னோடு மலர்வதனியும் கிளம்பிச் சென்றாள்.

முன்தினம் சத்யமூர்த்தி தேவையான பணத்தை அவளிடம் கொடுத்து விட்டிருந்தார். பணம் கட்டும் இடத்திற்கு சென்று அன்றுவரை ஆன செலவுகளை கணக்கிட்டு வைக்கச் சொன்னாள். அவளது தோழியின் அழைப்பு வந்தது. தங்குவதற்கு இடம் இருக்கிறது. தற்சமயம் வேலை இல்லை. வந்து தங்கிக்கொண்டு தேடிக் கொள்ளலாம். தவிர தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்திருப்பதாகவும் தெரிவித்து கிளம்பி வரச் சொன்னாள். மலர்வதனிக்கு இன்பமும் துன்பமும் ஒருசேர உண்டாயிற்று. அத்தையை பிரியப் போவதை எண்ணி மனம் அழுதது. இன்னொரு புறம் போக்கிடம் என்று ஒன்று கிடைத்ததை நினைத்து ஆறுதலாக இருந்தது. அவசரமாக அவளிடமே பயணச்சீட்டை பதியச் சொன்னாள். மேலும் அவள் கேட்ட விவரங்களை கொடுத்தவள் சற்று தூரத்தில் சாரகேஷ் வருவதைப் கவனித்து வேகமாக கேண்டீன் பக்கம் நழுவினாள்.

ஏற்கனவே காரை ஓட்டிக்கொண்டு மருத்துவமனைக்குள் நுழையும் போதே மலர்வதனி கைப்பேசியில் பேசுவதை சாரகேஷ் கவனித்துவிட்டான். அப்போது அதை பெரிதாகவும் நினைக்கவில்லை. ஆனால் அவனை கண்டும் காணதவளாக வேறுபுறமாக செல்லவும் துணுக்குற்றான். அறைக்கு அவன் சென்றபோது அங்கே நிரஞ்சன் மட்டுமே இருந்தான். ஒரு வேளை காலை உணவு வாங்கத்தான் போயிருக்கிறாளோ? என்று யோசித்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்.

"என்னாச்சு வரும்போதே யோசனை? "மாமா எதுவும் சொன்னாரா?"என்றான் நிரஞ்சன்

"அதெல்லாம் ஒன்றும் இல்லை நிரஞ்சன். இது மலர் சிஸ்டர் பத்தின யோசனை. நான் வர்றதை பார்த்தும் பார்க்காதது போல போயிட்டாங்க"

"அவள் என் மேல் கோபமாக இருக்கிறாள். அதனால் என்னைச் சார்ந்தவர்களிடம் பேசப்பிடிக்காமல் அப்படி செய்திருப்பாள். அதை தவறாக நினைக்க வேண்டாம் சாரகேஷ். இன்னும் அவள் குழந்தை தான்"என்று சிரித்தான்.

"ஓஹோ! அப்ப சரி. டிஸ்சார்ஜ் பண்ணச் சொல்லிட்டாங்களா?"

"சொல்லிவிட்டார்கள். அம்மணி இப்போது அது விஷயமாகத்தான் போயிருக்கிறாள் என்று நினைக்கிறேன்" அவள் வந்ததும் நாம் கிளம்பலாம்.

"ஓகே ஓகே நிரஞ்சன்" அவங்க வந்துவிடட்டும் நாம் காத்திருக்கலாம்" என்று தொலைக்காட்சி பெட்டியை உயிர்பித்து பார்க்கத் தொடங்கினான் சாரகேஷ்.



*அத்தியாயம் – 39*



நிரஞ்சனை டிஸ்சார்ஜ் செய்து சாரகேஷுடன் அனுப்பிவிட்டு மலர்வதனி வீட்டிற்கு வந்தபோது, நல்ல வேளையாக அவள் உள்ளே வந்ததை யாரும் கவனிக்கவில்லை. முக்கியமாக அத்தை.

ஆனால் கூடத்தில் பேச்சு குரல் கேட்டது. வழக்கம்போல பாட்டிதான் உரக்க சொல்லிக் கொண்டிருந்தாள். அப்போது இருந்த மனநிலையில் அதை நின்று கேட்க பிடிக்கவில்லை. ஆனால் படிகளில் ஏறும்போது தவிர்க்க முடியாமல் காதில் விழுந்தது.. கூடவே நிரஞ்சன் பெயர் அடிபடவும் மேல் படிவரை சென்றவள் அப்படியே நின்றுவிட்டாள்.

"உன் மகளிடம் கேள் செந்திரு. அதன்பிறகு நான் ஏன் அப்படி சொன்னேன் என்று புரியும்"

"என் மகளைப் பற்றி எனக்கு தெரியாதா சித்தி? வீட்டோடு அடங்கி கிடக்கிறவள். எதிர்த்து ஒரு வார்த்தை பேசமாட்டாள். கஞ்சிக்கு வழியில்லாமல் வேலைக்கு போகிற தலை எழுத்து என் பொண்ணுக்கு இல்ல, அவளுக்கு நிரஞ்சனை கட்டிக்கொள்ளணும்னு தான் ஆசை. அதை கூட என்கிட்ட சொல்ல வெட்கப்பட்டுட்டு இருந்திருக்கிறாள் என்று நான் இங்கே கிளம்பச் சொன்னதும் மறுத்து பேசாமல் கூட வந்தப்போ தான் புரிஞ்சது. ஆனாலும் சித்தி நீங்கள் என்னை நம்ப வைத்து மோசம் செய்ய பார்க்கிறீர்கள்....என்று வராத கண்ணீருடன் அழுவது போல பேசினாள் செந்திரு.

"உன் பெண் இப்போது எங்கே போயிருக்கிறாள்? அதை சொல்லு செந்திரு"

"அவள் இங்கே பக்கத்தில் இருக்கிற லைப்ரரிக்கு போறேன்னு சொன்னாள். இப்ப வந்துருவா, அவளை எதுக்கு கேட்கிறீங்க?

"நீ நினைக்கிறாப்ல அவள் அங்கே புத்தகம் படிக்கப் போகலை... என்று காந்திமதி,"ஏய் மஞ்சு இங்கே வாடி" என்று அழைத்தாள்.

மஞ்சுளா வந்ததும்," இவ மகள் இப்ப எங்கே போயிருக்கிறாள்னு நீ பார்த்ததை இவகிட்டே சொல்லுடி" என்றாள் முதியவள்.

"அது.. அவங்க தெருக் கோடியில... குளத்தாங்கரைக்கு போகிற வழியில் ஒரு பழைய மண்டபம் இருக்கு. அங்கே யாரோ ஒரு பையன் கூட சிரிச்சு பேசிட்டுக்கிட்டு இருந்தாங்க..." என்றவள் காந்திமதி சைகை செய்யவும் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

"கேட்டியா செந்திரு. அவள் கிளம்பினதும் நான்தான் இவளை பின்னாடி அனுப்பி வச்சேன். ஏன்னா நான் வெறும் வாயால் சொன்னால் நீ நம்பமாட்டியே? இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை.. நீயே நேரில் போய் பாரு.."என்றாள்.

செந்திரு அப்போதும் ஏதோ மறுத்து பேச முயன்றாள் போல... "நீ இதுக்கு மேலே எதுவும் பேச வேண்டாம். மதியம் சாப்பிட்டு நீ ஊருக்கு கிளம்பற வழியை பாரு. உன்னோட போக்குவரத்து செலவு என் பொறுப்பு, என்றதோடு பேச்சு நின்று விட...

ஆக, பாட்டி தான் செந்திருவை வரவழைத்திருக்கிறாள். ஆனால் அந்தப் பெண் விஷயத்தில் பாட்டி செய்தது சரியே"என்று எண்ணியவாறு அவளது அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டு படுக்கையில் விழுந்தவளுக்கு ஆயாசமாக இருந்தது. கண்ணீர் அருவியாய் வழிந்தோடியது.. கட்டுப்படுத்த தோன்றாமல் அப்படியே படுத்துக் கிடந்தாள். அத்தையை பிரிய வேண்டும்.. அடி மனதில் பொத்தி வைத்திருந்த ஆசையும் நேசமும் குறுகிய காலமே என்றாலும் நிரஞ்சனோடு பழக நேர்ந்ததில் துளிர்க்க தொடங்கிவிட்டதை அவள் உணராமல் இல்லை. சொல்லப்போனால் அன்றைக்கு அவனுக்கு விபத்து என்றதும் அவள் தவித்த தவிப்பு, அவன் மீது அவள் வைத்திருந்த நேசத்தை புரிந்து கொண்டாள். ஆயுள் இல்லாத இந்த நேசத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்தாயிற்று. இனி கிளம்ப வேண்டும். அவளுக்கு சில நாட்களாக புகைப்படத்திலாவது பெற்றோரைக் காணும் ஆவல் உண்டாகியிருந்தது. அத்தையிடம் அவளது அன்னை நகை பணம் தவிர வேறு ஏதேனும் உடைமைகளோ படங்களோ கொடுத்து வைத்திருக்கிறாளா என்று அவளுக்கு தெரியாது. அப்படி ஏதேனும் படங்கள் இருப்பினும் அதை வாங்கிக்கொண்டு கிளம்பி விடலாம். மனதில் எதை எதையோ எண்ணியபடி அழுதவாறே கண்ணயர்ந்து விட்டாள். திடுமென அவளது கைப்பேசி ஒலிக்கவும் திடுக்கிட்டு விழித்தாள்.

அத்தைதான்.. அவசரமாக எடுத்து. .. "ஹலோ அத்தை" என்றாள்

"எத்தனை தரம் போன் போடுறேன், என்னடி பண்ணிக்கிட்டு இருக்கிறே? எங்கேடி இருக்கிறே, வேலை நேரம் எப்பவோ முடிஞ்சு போயிருக்குமே? என்றாள் வடிவுக்கரசி சற்று கடுமையான குரலில்..

"ஐயோ அத்தை ..நான் அப்போவே வந்துவிட்டேன் அத்தை. தலைவலியாக இருந்துச்சு அதான் அப்படியே வந்து படுத்துவிட்டேன்" என்றாள் சமாதானம் செய்யும் விதமாக...



"கொஞ்ச நேரத்தில் என் வயிற்றில் புளியை கரைத்துவிட்டாயேடி.... இப்பத்தான் நிம்மதி. சரி, சீக்கிரம் மேலுக்கு மட்டும் தண்ணியை ஊற்றிவிட்டு கீழே வா, சுக்கு காபி போட்டு வைக்கிறேன்" வடிவுக்கரசியின் குரலில் தெரிந்த இருவித உணர்வுகளையும் புரிந்துகொண்ட மலர்வதனிக்கு இன்னும் சில மணி நேரங்களில் அவள் ஒரேயடியாக அவளை பிரிந்த பிறகு இந்த அத்தை என்ன ஆவாளோ என்று மனதும் விழிகளும் கலங்கியது... ஒருவாறு அதை ஒதுக்கி குளியலை முடித்துவிட்டு கீழே சென்றபோது, காந்திமதி கூடத்தில் தான் இருந்தாள். அவளை பார்த்ததும், ஞாபகம் இருக்கிறதா என்று ஜாடையாக கேட்டாள்.

"மலர்வதனியும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு உள்ளே சென்றாள். வடிவுக்கரசி அவளது முகத்தைப் பார்த்துவிட்டு,"என்னடி ஆச்சு? அழுதியா என்ன? கண் எல்லாம் சிவந்திருக்கு. என்று பதறினாள்.



"அதெல்லாம் ஒன்றுமில்லை அத்தை. கொஞ்சம் தலைவலி. அதான் என்றவாறு சுக்கு காப்பியை அருந்தினாள்.

"அப்ப இன்னிக்கு நீ வேலைக்கு போக வேண்டாம்டி. நாளைக்கு போயிக்கோ" என்றாள்.

"ஐயோ அத்தை. சின்ன தலைவலி அதுக்கு போய் லீவு போட முடியுமா? வேணும்னா நாளைக்கு போடுகிறேன் சரிதானா? இப்போது என்ன வேலை செய்யட்டும் அதை சொல்லுங்க" என்று ஃப்ரிட்ஜை திறந்தாள்.

"நீ ஒரு பத்து நிமிஷம் அப்படி போய் டேபிள் முன்னாடி உட்கார். சூடாக இட்லியும் சாம்பாரும் கொண்டு வர்றேன் என்று வடிவுக்கரசி சொல்ல மறுக்காமல் சென்று அமர்ந்து விட்டாள்.

அப்போது சத்யமூர்த்தி வந்து அவளுக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து,"என்னம்மா மலர், டிஸ்சார்ஜ் பண்ணியாச்சா என்று தாழ்ந்த குரலில் கேட்டார்.

"ஆச்சு மாமா. அந்த சாரகேஷ் கூட்டிட்டு போனார்" என்றாள் அவளும் அதே குரலில்.

"வீட்டுக்கு எப்போது வர்றேன்னு எதுவும் சொன்னானாம்மா?

"முதலில் சாயங்காலம் வர்றேன்னார். அப்புறமா, மதியம் வர்றேன் சொன்னார். அவரே ஃபோன் பண்ணுவாராம்" என்று அவள் சொல்லும் போதே வடிவுக்கரசியின் கைப்பேசி ஒலித்தது.

ஃபோனை ஒரு கையிலும் உணவு தட்டை ஒரு கையிலுமாக எடுத்து வந்து மலரிடம் கொடுத்து சாப்பிடும்படி சைகை செய்துவிட்டு, "ரஞ்சி, எப்போடா வர்றே? என்றாள்.

"ராத்தியே வந்திருப்பேன் அம்மா. சின்ன விபத்து. அதான் வரமுடியலை"

"ஐயோ என்னடா சொல்றே? அடி ரொம்ப பலமா? ஆஸ்பத்திரிக்கு போனாயாடா?

"பயப்படறாப்ல ஏதுமில்லை அம்மா. காயம்கூட அதிகமில்லை மா. பிரண்ட்ஸ் கூட்டிட்டு போனாங்க"

"எனக்கு நீ கிளம்பி போனதுல இருந்து மனசே சரியில்லை ரஞ்சி. இதனால் தான் போல...பார்த்து காரை ஓட்டக்கூடாதாடா. சரி, பெரிசா எதுவும் ஆகாமல் கடவுள் காப்பாத்திட்டாரே. அதுவே போதும், சரி எப்போது வர்றே?

"கிளம்பிவிட்டேன். அதை சொல்லத்தான் கூப்பிட்டேன். மதியம் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துவிடுவேன் அம்மா"

"சரி!சரிடா.. அப்படியா நல்லது .. அங்கே ஹோட்டலில் சாப்பிட்டு போர் அடிச்சிருக்கும்,அதனால உனக்கு பிடிச்சது எல்லாம் செஞ்சிடுறேன்... சரி பத்திராமா வந்து சேருமா"என்று போனை வைத்தவள். அவர்கள் எதிரே அமர்ந்து,

"பாருங்க போன இடத்தில் விபத்து உண்டாகிட்டதாம். நல்ல வேளையாக பெரிசா அடி இல்லையாம்"

"ஐயோ, என்ன சொல்லறே வடிவு? என்று உரியவிதமாக அதிர்ச்சி காட்டிக் கேட்டார் சத்யமூர்த்தி.

"பெரிய அடி ஏதும் இல்லையாம்ப்பா. இன்னிக்கு மதியம் சாப்பாட்டுக்கு வந்துவிடுவானாம். நீங்க கொஞ்சம் மார்க்கெட் வரை போய் வந்திடுங்க"என்று தேவையானவற்றை சொன்னாள்.

"ம்ம்... பார்த்தியா மலர். நாமளும் இந்த வீட்டில் தானே இருக்கிறோம். நமக்கு இப்படி வகை தொகையா செய்து போட மனசு வருதா? மகன் வர்றான்னதும் உன் அத்தை சுறுசுறுப்பாக மாறிவிட்டாள்"என்று கிண்டல் அடிக்க,

"பின்னே செய்யமாட்டார்களா மாமா. ஒரே பிள்ளை. இத்தனை வருஷமா தூரமாக இருந்தவர், வழக்கமா உங்கக்கிட்டே தான் பேசுவார். இப்போது பாருங்க அம்மாவை அழைத்து பேசுறாரே, அத்தையை இனி கையில் பிடிக்க முடியாது மாமா"என்று அவரோடு சேர்ந்து கொள்ள.. வடிவுக்கரசி இருவரையும் வியந்து பார்த்து விட்டு,

"ஏய் என்னடி நீயும் அவரோட சேர்ந்து கிண்டல் பண்ணுறே? இத்தனை நாளும் இல்லாமல் புதுசா மாமா, மருமகள் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்களோ? எனாறாள் ஒரு மாதிரி குரலில். ..

"அதெல்லாம் இல்லை அத்தை. நாம் எல்லோரும் ஒரே அணிதான். என்ன மாமா நான் சொன்னது சரிதானே? என்றாள்.

"நீ சொன்னால் சரியாகத்தான் இருக்கும் மலர்"என்றவர்," சரி சரி நான் மார்க்கெட் கிளம்பறேன்" என்று எழுந்து போனார் சத்யமூர்த்தி.

வடிவுக்கரசிக்கு மருமகள் தன் கணவரிடம் இணக்கமாக பேசுவதை கண்டு உள்ளூர மகிழ்ந்தாலும்.. திடுமென எப்படி இருவரும் இத்தனை நெருக்கமானார்கள் என்று யோசனை ஓடியது.

☆☆☆

மலர்வதனியை போய் ஓய்வெடுத்துக் கொள்ள சொன்னாள் வடிவுக்கரசி. அவளோ மதிய சாப்பாட்டுக்கு அப்புறமாக சற்று படுத்துக் கொள்வதாக தெரிவித்து அத்தைக்கு உதவிக்கு நின்றாள். முக்கியமாக அன்றைக்கு விட்டால் அவள் கையால் நிரஞ்சனுக்கு சமைத்துப் போட வேறு வாய்ப்பு வாய்க்குமோ வாய்க்காதோ என்று நினைத்தாள். அதனால் அவனுக்கு பிடித்த வகைகளை அவளிடமே செய்யச்சொல்லி விட்டு வடிவுக்கரசி மேல் வேலைகளை செய்து கொடுத்தாள்.

மதிய உணவை முடித்துக்கொண்டு செந்திருவும் அவள் பெண்ணும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமானார்கள். அப்போது காந்திமதி,"சீக்கிரம் கல்யாண பத்திரிகை அனுப்பு செந்திரு"என்று அவளது மகளின் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து விடை கொடுத்தாள். சத்யமூர்த்தி அவர்களை ரயில் நிலையத்தில் கொண்டு விட சென்றார்.

மலர்வதனி சமையல் கட்டிற்குள் இருந்தவாறு எல்லாமும் கவனித்துக் கொண்டிருந்தாள். அடுத்தது அவள் முறை.. நினைக்கும் போதே கஷ்டமாக இருந்தது. நிரஞ்சன் இன்னமும் வரவில்லை. அவன் வருமுன்பாக தனது அறைக்கு சென்றுவிட வேண்டும் என்று எண்ணியவள்,"அத்தை எனக்கு ரொம்ப பசிக்கிறது, கொஞ்சம் நீங்களே ஊட்டி விடுகிறீர்களா?? என்ற மருமகளை வினோதமாக பார்த்தபோதும் உடனே ஒத்துக் கொண்டு சாப்பாடு ஊட்டி விட்டாள் வடிவுக்கரசி. ஆனால் மனதுக்குள்... அவசரமாக போக வேண்டிய நேரங்களில் ஊட்டிவிடுவதாக சொன்னால் கூட மறுப்பவள், இன்றைக்கு அதிசயமாக அவளாக கேட்டதும் கொஞ்சம் ஏனோ மனதை பிசைந்தது.

கூடவே முன்தினம் அந்த பெண் மஞ்சுளா சொன்னது மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. கோவிலில் இருந்து திரும்பிய போது வீட்டில் காந்திமதி இல்லை. மஞ்சுளாவிடம் கேட்டால் அவள் ஒரு நடந்ததை சொல்ல, வடிவுக்கரசி சற்று கலங்கித்தான் போனாள். ஆனால் எடுபிடியான சித்தையனை உடன் அழைத்து சென்றதாக தோட்டக்காரனும் இரவில் காவலுக்கு இருப்பவனும் விவரம் சொல்ல, அது போலவே மாமியார் சற்று நேரத்தில் திரும்பிவிட்டதை பார்த்து நிம்மதி உண்டான போதும் மலரிடம் மாமியார் என்ன பேசினாளோ என்று சற்று கவலையாகத் தான் இருந்தது. அவளாக கேட்டாலும் மலர்வதனி பதில் சொல்லப் போவதில்லை. இன்று மகன் வந்ததும் ஒரு முடிவு செய்து விடவேண்டும். அவளுடைய கடமையை முடிந்த அளவு விரைவில் முடித்தாக வேண்டும்" என்று தீர்மானித்தாள்.

மேலும் அவளது சந்தேகத்தை தூண்டும் விதமாக, மலர்வதனி சாப்பிட்டு முடித்ததும்,"அத்தை நான் எழுந்து வர்றவரை எழுப்ப வேண்டாம். நேற்று ராத்திரி தூங்கவே முடியாது போயிற்று" என்றுவிட்டு மாடிக்கு சென்ற சற்று நேரத்தில் நிரஞ்சன் வந்து சேர்ந்தான். அவனோடு காலையில் வெளியே சென்ற ஜாஸ்மின்னும் வந்தாள்.

மகனுடைய காயத்தை பார்த்து பதறிப்போன வடிவுக்கரசிக்கு, அவளைப்பற்றி கேட்க தோன்றவில்லை.

"என்னடா, ரஞ்சி இவ்வளவு பெரிய காயம் பட்டிருக்கிறது. நீ ஒன்றும் இல்லை என்றுவிட்டாயே? என்ற தாயை ஒருவாறு சமாதானம் செய்துவிட்டு, "அம்மா செம பசி, என்று பக்கவாட்டில் சென்று கைகால்களை கழுவிவிட்டு, வந்து"ஆமாம் நீங்கள் சாப்பிட்டீர்களா? பாட்டி, அப்பா? என்று வினவியபடியே சாப்பிட அமர்ந்தான் நிரஞ்சன்.

"நீ வருவேன்னு தான் காத்திருந்தேன் ரஞ்சி, பாட்டி சாப்பிட்டு படுக்கப் போய்விட்டார்கள். அப்பாவும் சாப்பிட்டு செந்திரு அத்தையை ரயில் ஏற்றிவிட போயிருக்கிறார், என்று விவரம் சொன்னவாறு பரிமாறினாள் வடிவுக்கரசி.

அதை கேட்டபடியே, உடை மாற்றிவிட்டு வந்த ஜாஸ்மின், "நீங்களும் எங்ககூட உட்கார்ந்து சாப்பிடுங்க ஆன்ட்டி."என்று ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

"ஆமாம் அம்மா. எல்லாம் தான் இருக்கிறதே உட்காருங்கள். ஆமாம் வதனி எங்கே காணோம்? அவள் சாப்பிட்டாளா இல்லையா? என்றான் நிரஞ்சன்.

"அவளுக்கு ஒரே தலைவலி. அதனால் சாப்பிட்டு போய் படுத்துவிட்டாள்" என்ற தாயின் குரலில் கவலையை உணர்ந்த
"சாதாரண தலைவலிதானே அம்மா. அதற்கு ஏன் கவலைப்படுகிறீர்கள்? கொஞ்சம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும்" என்றான்.

"அதில்லை ரஞ்சி, அவளுக்கு சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணிவிட்டால் என்ன என்று தோன்றுகிறது. நல்ல பையனாக பார்த்து கட்டிக் கொடுக்கணும்...என்ற தாயின் பேச்சில் குறுக்கிட்டான்.

"அவளை படிக்க வைக்கணும் என்றீர்களே? இரண்டு நாட்களில் அப்படி என்ன நடந்து விட்டது? என்றான் தீவிரமான குரலில்.

"எனக்கும் ஒன்றும் புரியவில்லை ரஞ்சி என்ற வடிவுக்கரசி, முன்தினம் நடந்ததை தெரிவித்தாள். ஆனால் மலர்வதனி பாட்டி சொன்னதாக ஒன்றும் சொல்லவில்லை. பொதுவாகவே அவள் எதையும் காட்டிக்கொள்ள மாட்டாள். இன்றைக்கு அவள் வீட்டிற்கு வர தாமதமாகிப் போனதும் நான் பயந்துட்டேன். அப்புறமாக தான் அவள் முன்னாடியே வந்து படுத்ததும் தூங்கிப் போனதாகவும் சொன்னாள். ஆனால் உன் அப்பாவை கண்டால் கொஞ்சம் பயந்து விலகியே இருப்பாள். ஆனால் இன்றைக்கு அவரோடு சேர்ந்துக்கிட்டு என்னை கிண்டலடித்துக் கொண்டிருந்தாள். இதுவும் எனக்கு புதுசுதான் ரஞ்சி. அவள் மனசுல என்ன ஓடுதுன்னு புரிஞ்சிக்க முடியவில்லை. அதனால் தான் கல்யாணம் பண்ணிவிடுவது என்று நினைத்தேன்"

நிரஞ்சனுக்கு விஷயம் உடனேயே விளங்கிவிட்டது. கூடவே அம்மாவைப் போலவே மலர்வதனியும் அதே குணத்தில் இருப்பதை உணர்ந்து வியந்தான். அம்மா இப்போது மிகவும் கலங்கிப் போயிருக்கிறாள், முதலில் அதை போக்க வேண்டும், அப்புறமாக அந்த மகாராணியை என்ன செய்வது என்று பார்க்க வேண்டும் என்று நினைத்தவன்," நீங்கள் பயப்படும்படி எதுவும் இருக்காது அம்மா. நான் தான் வதனி, இனி என் பொறுப்பு என்றுவிட்டேனே அப்புறம் எதற்கு உங்களுக்கு கவலை அம்மா? இன்னும் கொஞ்சம் சாதம் வைத்துக் கொள்ளுங்கள்"என்று பரிமாறவும் வடிவுக்கரசி நிம்மதியடைந்தவளாக சாப்பிட்டாள்.

ஆனால் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாரும் கணிக்க முடியாது
 
Back
Top