Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

36 & 37. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
27
Points
28
Location
India
*அத்தியாயம் - 36*


மலர்வதனி திகைத்து நின்றது ஒருகணம்தான். உடனே நிகழ்வுக்கு திரும்பி,"அதெல்லாம் நான் எதையும் மறைக்க முயற்சி செய்யவில்லை அத்தான், ஏன் திடீரென்று இப்படி கேட்கிறீர்கள்? என்றாள் இயல்பான குரலில்.

அவள் பேச்சில் அத்தான் என்று குறிப்பிட்டதை கவனித்த நிரஞ்சன், நீ சரியான கில்லாடி தான்டி என் மாமன் மகளே, உனக்கு தேவைப்பட்டால் மட்டும் அத்தான் சரளமா வந்து விழுகிறது என்று நினைத்தவனுக்கு உள்ளுர சிரிப்பு வர, அதை கட்டுப்படுத்திக் கொண்டு,"நீ என்ன மறைத்தாலும் நான் கண்டுபிடித்து விடுவேன் வதனி. நீயாக சொல்லி விட்டால் நல்லது. நானாக கண்டுபிடித்தேன் என்று வை, அப்புறம் என்னோட கோபத்தை நீ பார்க்க நேரிடும்,என்றான் சற்று தீவிரமான குரலில்.

"மலர்வதனிக்கு உள்ளபடியே நெஞ்சு நடுங்கியது. நாளைப் பின்னால் அவள் காணாமல் போகும்போது இந்த அத்தான் நிச்சயமாக கோபப் படுவான் என்பதை அவள் மறந்தே போனாளே? அது அவள் மீது இருக்கும் பாசத்தால் இல்லை என்பதை அவள் நன்கு அறிவாள். அவனது அன்னையின் உடல்நலம் பேணுவதற்காக பாட்டியை எதிர்த்து அவளை வீட்டிற்குள் கொணர்ந்திருக்கிறானே? அப்படிப் பட்டவன் அதே மருமகளை காணாது அவனது தாய் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பானா? பணபலமும் ஆள் பலமும் இருக்கையில் அவள் எந்த மூலைக்கு போனாலும் கண்டுபிடித்து விடுவான்தானே?

அத்தை வருந்துவாள் என்பது அவளுக்கும் தெரியும் தான். ஆனால் அவளுக்கு வேறு வழியே தெரியவில்லையே. வீட்டை விட்டு போய்த்தான் ஆகணும், இல்லாவிட்டால் உலகை விட்டுத்தான் போகணும். முதலாவது என்றால் மகன் மற்றும் கண்வனின் ஆறுதலில் அத்தை அழுது கொண்டேனும் தாங்கிக் கொள்வாள். அடுத்தது என்றால் தானும் இல்லாமல் போய்விடுவாளே! நினைக்க நினைக்க அந்த குளிரூட்டப்பட்ட அறையிலும் மலர்வதனிக்கு வியர்க்க தொடங்கியது.

அவளையே வைத்த கண் விலக்காமல் கவனித்துக் கொண்டிருந்த நிரஞ்சனுக்கு அவளது முகபாவங்களில் வேதனையும் பயமும் அதிகமாக தெரிந்தது. ஏதோ ஒரு வகையில் அவள் தவிப்பதாக தோன்றியது.

"வதனி" என்று அழுத்தமான குரலில் அழைக்க, தனக்குள்ளாக போராடிக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனது விழிகளை சந்திக்க, இதயம் வேகமாக அடித்துக் கொள்வது அவளுக்கே கேட்க, உடனடியாக அவனிடமிருந்து பார்வையை விலக்கி கொள்ள முடியாது திணறிப் போனாள்.

கனிவான புன்னகையுடன் அவள் புறமாக இடது கையை நீட்ட, ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல் அவனை நோக்கி சென்றாள். அவனது கையில் சிறு நடுக்கத்துடன் தன் கையை வைத்தாள். அவன் மெதுவாக அழுந்தப் பற்றினான்."என்னாச்சுமா? யார் உன்னை என்ன சொன்னார்கள்? என்று மென்குரலில் வினவ, ஏனோ அவளுக்கு திடுமென தந்தையின் நினைவு வந்தது. அவரும் இப்படித்தான் அவள் அழும்போது மடியில் அமர வைத்தபடி கையை பிடித்து தடவிக்கொடுத்து கேட்பார். மந்திரம் போட்டார்போல அழுகை நின்று அவள் பேசுவாள், கண்முன்னே அந்த காட்சி விரிய,சுற்றுப்புறம் மறக்க, மலர்வதனியின் விழிளில் அவளையும் அறியாமல் கண்ணீர் வழிய,

நிரஞ்சன் பதறிப்போனவனாக, அவளை அருகில் இழுத்து,"வதனி என்னாயிற்று? ஏனம்மா அழுகிறாய்? என்னிடம் சொல்லுமா" என்று அவன் மென்மையாக கேட்கவும் தான் அவளுக்கு இருக்கும் நிலையும் சூழலும் கருத்தில் பட்டது. சட்டென்று அவனிடமிருந்து கையை பிரித்துக்கொண்டு விலகிப் போய் முகத்தை கழுவி துடைத்து வந்தவள் வேறு பேசாமல் சாப்பாடு அடங்கிய பையை எடுத்ததும்....

"இதோ பார் வதனி, என்ன விஷயம் என்று நீ சொல்லும் வரை நான் சாப்பிடப்போவதில்லை"என்றான் உறுதியான குரலில்.

மலர்வதனி பையை அப்படியே வைத்து விட்டாள். அவளுக்கு உண்மையில் சங்கடமாக இருந்தது. அவனிடம் சொன்னால் பாட்டிக்கும் பேரனுக்கும் கருத்து வேறுபாடு மட்டுமின்றி அவளும் அந்த வீட்டில் தொடர்ந்து தங்க நேரும். இப்போது அத்தைக்காகக்கூட, அங்கே தங்குவதில் கொஞ்சமும் நாட்டமில்லை. அவள் கையில் தொழில் இருக்கிறது. ஏனைய பெண்கள் போல அவளும் ஏதேனும் பெண்கள் விடுதியில் தங்கிக்கொண்டு அதை தொடரலாம். எதற்காக அவளால் ஒரு குடும்பத்திற்குள் பிரச்சனை உண்டாக வேண்டும்? இந்த அத்தானிடம் இப்போது என்ன சொல்வது என்று வேகமாகவும் தீவிரமாகவும் யோசித்து விட்டு,"சரி சொல்கிறேன் அத்தான். ஆனால் அதற்கு முன் எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்" என்றாள் தீவிரத்துடன்.

"அது என்ன மாதிரியான வாக்கு என்று தெரியாமல் எப்படி தருவது வதனி? என்றான் நிரஞ்சன்.

"உங்கள் சொத்தையோ,வேறு உரிமையையோ,கேட்டுவிட மாட்டேன். அதனால் பயப்படாமல் வாக்கு கொடுக்கலாம்" என்ற மலர்வதனி அவன் முகம் பார்த்து பேசினால் உறுதியை இழந்து விடுவாளோ என்று எண்ணி, அங்கே இருந்த பெரிய ஜன்னலின் ஓரமாக வெளியே பார்க்கும் பாவனையில் நின்று கொண்டாள்.

"என்னால் முடியாததை நீ கேட்டு விட்டால் நான் வாக்கு தவறியவனாக ஆகிவிடுவேனே? ஆனால் அந்த இரண்டையும் நீ கேட்காமலே நான் தருவேன் வதனி"என்று நிரஞ்சன் கனிந்த குரலில் கூறினான்.

உரிமையும் உடமையையும் தருவானாமே?என்று ஏளனமாக எண்ணமிடும் போதே மலர்வதனிக்கு இவன் என்ன உணர்ந்து தான் சொல்கிறானா? என்று வியப்பாக இருந்தது. கூடவே அந்த குரல் அவளை என்னவோ செய்ய..ம்ஹூம்,இவன் வார்த்தையால் மடக்கப் பார்க்கிறான். இதில் ஏமாறக்கூடாது என்று நினைத்தவள்,"உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இல்லை. ஆனால் எனக்கு அது இருக்கிறது. அதாவது கொடுத்த வாக்கை மீறமாட்டீர்கள் என்று .எனக்கு

உங்கள் வீட்டில் இருக்கப் பிடிக்கவில்லை. அதனால் நாளை யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு போகலாம் என்று முடிவு செய்துவிட்டேன், இன்றைக்கு தான் என்னை அந்த வீட்டிற்குள் ஏன் சேர்க்கவில்லை என்ற உண்மை எனக்கு தெரிய வந்தது. உங்களுக்கு கூட தெரிந்திருக்குமே? சரி, அதை விடுங்க, அத்தான்,"சாரி, அந்த வீட்டோடு எனக்கு எந்த பந்தமும் இல்லாதபோது உறவு மட்டும் எதற்கு? என்றவள் தொடர்ந்து, "என்னை நீங்கள் இனி அந்த வீட்டில் இருக்கச் சொல்லி வற்புறுத்த மாட்டீர்கள் என்று எனக்கு வாக்கு கொடுங்க என்ற அவளது குரலில் இருந்தது என்ன? கோபமா? ஆற்றாமையா? வேதனையா? பிரித்து அறிய முடியவில்லை.

அவளது பேச்சில் அதிர்ந்து, பாஷையே மறந்த நிலையில் அமர்ந்து இருந்தான் நிரஞ்சன். இத்தனை நாட்கள் இவளுக்கு தெரியாது இருந்தது போல் மேலும் தெரியாமலே போயிருக்கலாம். சொல்லப்போனால் அவனுக்கும் கூட மலர்வதனி சிறுமியாக இருந்தபோது பாட்டி சொன்ன நம் குலமில்லை என்றதற்கு அன்றைக்கு அர்த்தம் விளங்கவில்லை. இப்போது நினைத்து பார்த்தால் பெரியவர்கள் எடுத்த முடிவிற்கு ஒரு சின்ன குழந்தையை ஒதுக்கி வைக்க மனம் வருமா என்ன? அவனது பாட்டி இப்படி செய்ததை ஜீரணிக்க முடியவில்லை...அதை கேட்க எண்ணியிருந்தவன் சரியான சந்தர்ப்பம் அமையாமல் தள்ளி போட்டிருந்தான்.

ஆனால் இப்போது நிலைமை கைமீறிப் போகிறதே, அவள் கேட்ட வாக்கை அவனால் எப்படி தர இயலும்? அவன் போட்டு வந்த திட்டத்தில், எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. அவன் ஜாஸ்மினை மணமகளாக அறிவித்ததும் பாட்டி தீவிரமாக எதிர்ப்பாள் என்று நினைத்து வந்தான். ஆனால் வந்த அன்றைக்கு பிறகு பாட்டி பெரும்பாலும் அடக்கியே வாசிக்கிறாள். அம்மாவின் உடல் நலம் பாதிக்கப்பட்டதும் எதிர்பாராதது தான். ஆனால் அது அவனுக்கு சற்று சாதகமாக அமைந்தது என்பது உண்மை. இல்லாவிட்டால் இவளை வீட்டிற்குள் கொண்டு வர முடிந்திராது. அதுபோலவே இப்படி அடிபட்டதிலும் கூட நன்மை தான் விளைந்தது. ஆக எல்லாம் கூடி வருவதாக எண்ணி மகிழ்ந்தால் இவள் திடுமென இப்படி ஒரு குண்டைப் போட்டு அவனது எண்ணத்தில் மண்ணை அள்ளிக் கொட்டுகிறாளே? கடவுளே இதென்ன சோதனை? அவளில்லாமல் அவனது தாய் என்ன ஆவாள்? அவளுக்கு என்னவென்று பதில் சொல்வான்? நினைக்க நினைக்க அவனுக்கு இதயத்தில் பாரம் ஏறிப்போய் மூச்சுக்காற்றுக்கு தவிப்பவனைப் போல விழிகள் இலக்கற்று சுழல, இடது கை மலர்வதனியை நோக்கி தன்னிச்சையாக நீண்டது...

எதற்கும் பட்பட் என்று பதில் சொல்கிறவனின் மௌனம் மலர்வதனியை தாக்க, அவனை திரும்பிப் பார்த்த, மலர்வதனிக்கு, திகைப்பு உண்டாயிற்று. அவளது பேச்சு அவனுக்கு அத்தனை அதிர்ச்சியையா கொடுத்து விட்டது? சட்டென்று அருகில் சென்று, அவனது கையைப் பற்றியவள் அங்கு மேசை மீதிருந்த தண்ணீரை எடுத்து கொடுத்து குடிக்கச் செய்தாள்.

ஒருவாறு சுதாரித்தவன், பற்றியிருந்த அவளது கையை மறுகையால் அழுந்தப் பிடித்தபடி,"வதனி, உன் பக்கம் நியாயம் இருக்கிறது. நான் ஒத்துக் கொள்கிறேன். நானும் கூட ஒருவகையில் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக ஒரு காரணகர்த்தாவாக இருந்துவிட்டேன். அதற்காக நீ வீட்டைவிட்டு போவது சரியில்லை. உன் அத்தைக்கு தெரிந்தால் தாங்குவார்களா? பாட்டி பழங்காலம். அவர்கள் ஏதோ நினைத்து உன்னை விலக்கி வைத்ததற்காக அன்பு வைத்தவர்களை தண்டிப்பது என்ன நியாயம் சொல்லு? என்றவனின் பேச்சில் குறுக்கிட்டு,

"அன்பு வைத்தவர்களா? என்று ஒருமாதிரி குரலில் கேட்டவள் தொடர்ந்து,"மாமாவுக்கு ஆதரவற்ற பெண் என்ற இரக்கம். நீ. .. நீங்கள் மட்டுமென்ன, இத்தனை காலமாக நான் ஒருத்தி இருப்பதை நினைக்காதவர் தானே? இப்போது அத்தையின் நலன் கெட்டு விடக்கூடாதே என்று வேறு வழியில்லாமல் என்னை சகித்துக்கொள்ள முடிவு செய்து விட்டீர்கள். மற்றபடி உண்மையாக அன்பு வைத்தவர்கள் என்றால் அது உங்கள் அம்மா மட்டும் தான்" என்று படபடத்தாள்.

நிரஞ்சனுக்கு அவளது ஒதுக்கத்திற்கும் கோபத்திற்குமான காரணம் தெரிந்ததும் மனதில் வலித்தது. "அதெல்லாம் தான் நான் ஒத்துக் கொண்டேனே வதனி? ஆனால்... ஆனால் இப்போது, நீ என்னுடைய மாமன் மகள் என்ற உறவு முறையில் தான்,உன்னை நான் வீட்டுக்குள் அழைத்து வந்தேனே தவிர, நீ நினைப்பது போல இல்லை. அம்மாவுடைய உடல்நலம் ஒரு காரணமே தவிர அவர்களுக்காக மட்டும் இல்லை. எப்படி என் அத்தை சந்திராவின் மகள் நிகிதா அந்த வீட்டிற்குள் உரிமையோடு வந்து, போய் இருக்கிறாளோ, அதுபோல நீயும் அத்தை வீடு என்ற சகல உரிமைகளோடு இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான்" என்று விளக்கினான்.

ஆனால் அதை எல்லாம் ஏற்பதாக இல்லை என்பது போல அவள் மௌனம் சாதிக்க, நிரஞ்சன் அவளை தடுக்க இயலாது என்று உணர்ந்தான். அவளை இப்போது விட்டுவிட்டால் கிடைக்க மாட்டாளோ என்று பயம் உண்டாயிற்று. அதனால் அவளை தன் கண்பார்வையில் வைத்துக்கொள்வது எப்படி என்று தீவிரமாக யோசித்தான். சட்டென்று அவன் பார்த்து வைத்திருந்த வீடு நினைவுக்கு வந்தது. ஆனால் மலர்வதனி அவனது கருத்தை ஏற்கவேண்டுமே என்று சற்று தவிப்பாக இருந்தபோதும், முயற்சியை விடுவானேன் என்று எண்ணியவனாக,"வதனி உன் வாதம் சரியாக இருக்கலாம். நீ வீட்டை விட்டு போனபிறகு உன் அத்தைக்கு ஏதாவது ஆகிவிட்டால் உன்னால் அதை தாங்க முடியுமா சொல்லு?" என்றான்.

விழிகளில் நீர் திரையிட "தாங்கிக்கொள்ள முடியாது தான். ஆனால் இனியும் நான் அந்த வீட்டில் இருக்க முடியாது. உங்கள் அம்மாவிற்கு நான் எங்கோ நலமாக இருக்கிறேன் என்று தெரிந்தால் அமைதியாகி விடுவார்கள்" என்றவள் அவன் பிடியில் இருந்த கையை அப்போது தான் உணர்ந்தவளாய், விலக்கிக் கொள்ள முயன்றாள் மலர்வதனி. அவனும் விட்டுவிட்டு,

"ஓஹோ! அதற்கு சாட்சி கேட்பார்களே? எப்படி தருவது? அதைவிடு நீ வீட்டை விட்டு வெளியேறுகிறாயே? எங்கே போவதாக உத்தேசம்? என்றபோது நிரஞ்சன் குரலில் அழுத்தம் இருந்தது.

"அது என்னுடன் வேலை செய்யும் நர்ஸ் அவளோட அறையில் தங்கிக் கொள்ளச் சொல்லிருக்கிறாள். இதுவரை என் சம்பளப்பணத்தை அத்.. உங்கள் அம்மா என் வங்கிக் கணக்கில் தான் போட்டு வைத்திருக்கிறார்கள். அதனால் பணம், தங்கும் இடம் மற்றும் உணவுக்கு பிரச்சனை இல்லை" உணர்ச்சியற்ற குரலில் சொன்னவளின் விழிகள் கையில் இருந்த கடிகாரத்தில் பதிய, அவனுக்கு உணவுக்கான நேரம் கடந்து விட்டதை உணர்ந்தவளாக, உணவை எடுத்து வைக்கத் தொடங்கினாள் மலர்வதனி.

"ஆஹா! நீ இப்படி ஒரு விடுதியில் தங்கியிருப்பதை கேட்டால் என் அம்மா அப்படியே குளிர்ந்து போவார்கள் என்கிறாய்? என்ற நிரஞ்சனின் குரலில் கடுமை இருந்தது.

அது மனதை பாதித்த போதும், காட்டிக்கொள்ளாது,"அதைப் பற்றி அப்புறம் பேசலாம். முதலில் டிபன் சாப்பிடுங்கள். அதற்கு மேல் மாத்திரைகள் வேறு போடணும்,"என்று முயன்று இயல்பாகவே சொன்னாள்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம். நீதானே அப்போது பசிக்கிறது என்றாய், போய் சாப்பிடு" என்று கோபத்துடன் திரும்பிப் படுத்துக் கொண்டான்.

"நீங்கள் கொடுத்த வாக்கு மாறி பேசுறீங்களே? என்றாள் ஒரு மாதிரி குரலில்.


*அத்தியாயம் – 37*


அங்கே வீட்டில். .

மலர்வதனி கிளம்பிச் சென்றபிறகு, காந்திமதியும் துணிமணிகளோடு காரில் ஏறிச் சென்றாள். தான் போட்ட திட்டத்தில் மலர்வதனியை சிக்கவைத்து விட்டதை நினைத்து உள்ளூர சிரித்துக் கொண்டாள்.

காந்திமதியிடம் யாரும் எளிதில் கேள்வி கேட்டுவிட முடியாது. அப்படியே உரியவர்கள் கேட்டாலும் நேரடியாக பதிலளிக்க மாட்டாள். வேலைக்காரி மஞ்சுளாவை எத்தனை எச்சரிக்கை செய்தாலும்கேள்வி கேட்காமல் இருக்கமாட்டாள் என்பது எல்லோரும் அறிந்ததே. அதனாலேயே முதியவள் வேலைக்காரிகளில் இன்னொருத்தியான சொக்கியைத்தான் அழைப்பாள். அன்றைக்கு வெளியே சென்றவர்களோடு சொக்கியையும் அனுப்பி வைத்தாள்.

காந்திமதியின் திட்டம் இதுதான், பணிப்பெண் மஞ்சுளாவை அழைத்து பெட்டியில் பழைய துணிகளை அடுக்கச் செய்ததும்,அவளின் லொடலொட கேள்விகளுக்கு பதில் சொன்னதும், காரணமாகத்தான். எப்படியும் அவள் அதை மலரிடம் சொல்வாள் என்று எதிர்பார்த்தாள். அவள் எண்ணியது போலவே வேலைக்காரப் பெண் மஞ்சுளா சென்று மலரிடம் சொல்லி, அவளும் உடனடியாக வந்து விரித்த வலையில் சிக்கி விட்டாள்.

ஆனால் நாளை பின்னே மலர்வதனியை காணோம் என்றால் இதே வேலைக்காரப் பெண் அவளை மாட்டிவிட கூடாதே, அதனால் முன்னெச்சரிக்கையாக

மலர்வதனியிடம் அந்த வேலைக்காரி விவரம் கேட்டால் பாட்டி சும்மா அப்படி விளையாட்டுக்கு சொல்லியிருக்கிறாள், உண்மையில் பாட்டி பக்கத்தில் இருக்கும் அனாதை இல்லத்திற்கு பழைய துணிகளை கொடுக்க போகிறாள் என்று சொல்லும்படி உத்தரவிட்டிருந்தாள்.

ஒருவேளை மலர் வேலைக்காரியிடம் சொல்லாமல் விட்டுவிட்டாலும் சாட்சி வேண்டுமே என்று சொன்னதை மெய்யாக்குகிறவளாக, வீட்டில் இருந்த காரை கோவிலுக்கு எடுத்துப் போயிருந்ததால் வாடகைக்கு வண்டியை வரவழைத்து,துணைக்கு சித்தையனையும் அழைத்துக்கொண்டு இதோ கிளம்பி விட்டாள்.

காந்திமதி உண்மையில் செந்திருவை அழைத்த காரணம் என்னவோ பேரனுக்கு அந்த பெண் வனிதாவை கட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தில் தான். ஆனால் அந்தப் பெண்ணோ போனில் எவனிடமோ காதல் வசனம் பேசிக்கொண்டு இருப்பதை அவளே கேட்க நேர்ந்தது. அதனால் தான் அவள் எந்த வரனையும் பிடிக்கவில்லை என்றதன் காரணமும் விளங்கியது. அதனால் அவர்களை உண்மையை சொல்லி அனுப்பி விடவேண்டும். அடுத்து புதிதாக வந்தவளை நாளைக்குள் எப்படியும் துரத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். இப்போது நிகிதா ஒருத்தி தான் அவளது பேரனை கட்டிக்கொள்ள வேண்டியவள். அதற்கு முதலில் மருமகனை பார்த்து பேச வேண்டும். கல்யாணத்தை பண்ணிக்கிட்டு மேலே படிக்கட்டும் என்றால் அவர் சரி சொல்லிவிடப் போகிறார், மனதுக்குள் எல்லாமும் கூடி விடும் என்ற நம்பிக்கை உண்டாயிற்று. ஆனால் மறுநாள் மலர்வதனிக்காக அவளே பிரார்த்தனை செய்யப் போவதை அறியவில்லை.

☆☆☆

கோவிவிலுக்கு போய்விட்டு திரும்பி வந்த பிறகு இரவு உணவு வேலைகளை கவனிக்கவென்று வடிவுக்கரசி சமையல் அறைக்கு சென்றுவிட, செந்திரு, மகள் வனிதா மற்றும் ஜாஸ்மின் அவரவர் அறைக்குள் தஞ்சமாகிவிட, சத்யமூர்த்திக்கு கோவிலுக்கு சென்று வந்த பிறகும் மனது அமைதியடையவில்லை. அதனால் மனதை திசை திருப்ப என்று கூடத்திற்கு சென்று தொலைக்காட்சியை உயிர்பித்துவிட்டு பார்க்க அமர்ந்தாரே தவிர,அவருக்கு அதில் கவனம் செல்லவில்லை. மாறாக மகனின் திட்டம் என்னவென்று யோசனை ஓடியது ஒருபுறம். திருமணம் பேசுவதற்காக இல்லையென்றால் ஜாஸ்மினுடைய தந்தையின் திடீர் விஜயம் எதற்காக? என்று இன்னொரு புறம். அடுத்து ஜாஸ்மின், அந்த சாரகேஷிடம் நெருக்கம் காட்டும் அளவுக்கு மகனிடம் காட்டக் காணோம். இத்தனைக்கும் அவன் நிரஞ்சனிடம் சம்பளம் வாங்கும் தொழிலாளி வேறு. இந்தப் பக்கம் மலர்வதனி அத்தைக்கு துணையாக கோவிலுக்கு போவதை விட்டுவிட்டு அவளுடைய மகனுக்கு துணையிருக்க ஓடி வருகிறாள். அவளது மனது தெரிந்திருப்பதால் அதில் குற்றம் சொல்ல ஒன்றுமில்லை தான். ஆயுள் இல்லாத அந்த நேசத்தை வளரவிடுவதும் அவருக்கு சரியாக படவில்லை. நாளை மகன் வீட்டிற்கு வந்ததும் எல்லாமும் பேசி முடிவெடுத்துவிட வேண்டும். இதற்கு இடையில் இந்த அம்மா வேறு தங்கையையும் அவள் மகளையும் வரவழைத்து வைத்திருக்கிறாள். எதுவும் ராசாபாசம் ஆகிவிடாது அவளை வேறு திரும்ப அனுப்பி வைக்க வேண்டும்... அவர் யோசனையில் மூழ்கியிருக்க, வெளியே சென்றுவிட்டு அப்போது தான் காந்திமதி உள்ளே வந்தாள். மகன் திரையில் ஏதோ தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணியவள் பேசாமல் சாப்பாட்டு கூடத்திற்கு சென்று அமர்ந்தாள்.

சமையல் செய்தபடியே, கோவிலில் நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தாள் வடிவுக்கரசி. அங்கே ஜாஸ்மின் சராசரி இந்துப் பெண் போல சாமி கும்பிடுவதை பார்த்து அவளுக்கு ஒரே ஆச்சர்யமாகிப் போயிற்று. ஜாஸ்மின் என்ற பெயரைக் கொண்டு கிறிஸ்தவ பெண் என்று எண்ணியிருந்தாள். ஆனாலும் அவளுக்கு அந்த பெண்ணை மருமகளாக எண்ண முடியவில்லை. அவளது தம்பி மகளைத் தவிர வேறு யாரையுமே மகனுடைய மனைவியாக பார்க்க பிடிக்கவில்லை தான். ஆனால் மாமியார் கங்கணம் கட்டிக்கொண்டு அல்லவா காயை நகர்த்திக் கொண்டிருக்கிறாள். அன்றுவரை மாமியாரை எதிர்த்து பேசி பழக்கமில்லை. அதனால் அவளது திட்டத்தை எப்படி முறியடிப்பது என்று தெரியவில்லை. மகனிடம் பேசலாம் என்றால் அவன் சுற்றுலா போகிறேன் என்று அந்தர்த்தனம் ஆகிவிட்டான். அவனுக்கு என்னவோ ஏதோ என்று பெத்த மனது ஒரு புறம் கலங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் தான் செந்திருவுடன் செல்ல விருப்பமில்லாத போதும் மகனுக்காக வேண்டிக் கொள்ளவென்று கிளம்பினாள்.

வடிவுக்கரசி அன்று இரவின் தனிமையில் கணவனிடம் ஜாஸ்மின் பற்றி தெரிவித்தாள்.

அவரோ,"சரிதானே வடிவு, நம் வீட்டில் வாழப் போகிறவள். அப்படி இருப்பது தானே நல்லது? ஒரு வகையில் அம்மாவுக்குகூட பிடிச்சுப் போகுமில்லை? என்றார் விட்டேத்தியாக...

"என்னங்க ஆச்சு ஏன் ஒருமாதிரியா பேசுறீங்க? என்றவள் தொடர்ந்து, ஆமாம் நான் கேட்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன். காலையில் எங்கே அவசரமாக கிளம்பிப் போனீங்க? மதியானம் சாப்பாட்டுக்கு வரமுடியாத அளவுக்கு அப்படி என்னங்க தலைபோகிற அவசரம்? என்றதும்

சத்யமூர்த்தி அதுவரை இருந்த இலகுத்தன்மையை கைவிட்டு," ஆம்பளைக்கு வெளியில் ஆயிரத்தெட்டு ஜோலி இருக்கும்டி. அதை எல்லாம் பெண்டாட்டிக்கிட்டே உட்கார்ந்து ஒப்பிச்சிட்டு இருக்க முடியாது. முதலில் இந்த மாத்திரையை சாப்பிட்டு உன் உடம்பை ஒழுங்கா கவனிச்சுக்கிற வழியைப் பாரு"என்று மாத்திரையையும் தண்ணீரையும் கொடுக்க, வடிவுக்கரசி அடி வாங்கிய வலியுடன் இயந்திரமாக சொன்னதை செய்துவிட்டு படுத்துக் கொண்டாள்.

சத்யமூர்த்திக்கு தப்பு என்று தெரிந்தே செய்ததால் குற்றவுணர்வு உண்டாயிற்று. அவருக்கு வேறு வழி தெரியவில்லை. எதையும் மனது விட்டு கலந்து கொள்ளும் மனநிலையோ சூழ்நிலையோ இல்லாததால் அப்படி பேசும்படி ஆயிற்று.

ஆனாலும் மனதுக்கு கேட்கவில்லை. வடிவு... கொஞ்சம் வேலைப் பளு. மகன் வருவான். அவனிடம் பொறுப்பை ஒப்படைக்கலாம் என்று பார்த்தால் அவன் இன்னும் விளையாட்டு பிள்ளையாக இருக்கிறான். நானே எல்லாமும் பார்க்க வேணடியிருக்கிறதா அதுதான் அந்த கடுப்பில் கோபப்பட்டு விட்டேன்டி. மன்னிச்சிடுடி.

கணவனின் வார்த்தைகள் அவளை காயப்படுத்தியிருந்த போதும், அடுத்த கணமே விளக்கம் சொல்லி மன்னிப்பும் கேட்கவே, வடிவுக்கரசியின் மனது உருகிப் போயிற்று. உள்ளூர மனது சமாதானம் ஆகாதபோதும் அதை ஒதுக்கி,"அட என்னங்க இது?விடுங்க, என்கிட்ட போய் மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு, இன்னிக்கு வெளியில் போய் வந்து கொஞ்சம் நேரம் கூட நீங்கள் ஓய்வெடுக்க முடியாமல் கோவிலுக்கு வேறு வரும்படி ஆகிவிட்டது. மனசை போட்டு வருத்திக்காமல் பேசாமல் படுங்க" என்று சமாதானம் செய்தாள் அந்த மனைவி.

☆☆☆

மருத்துவமனையில்....

மலர்வதனி உணவை எடுத்து வந்து,"அப்போது நீங்கள் என்ன சொன்னீங்க? நான் விஷயத்தை சொல்லாவிட்டால் சாப்பிட மாட்டேன் என்றீர்கள். இப்போது நான் விவரத்தை சொன்னபிறகும் சாப்பிட மாட்டேன் என்கிறீர்கள்" அப்படி பார்த்தால் நீங்கள் வாக்கு மாறித்தானே பேசுறீங்க? என்று சொல்லவும்,

அப்போது இருந்த சூழ்நிலைக்கு மாறாக, நிரஞ்சனுக்கு சிரிப்பு வர, பெரும் பிரயத்தனத்துடன் அதை கட்டுப்படுத்தினான். சரியான விடாக்கண்டி,கறார் கண்ணாள் தான் இப்போதும் மடக்கி விட்டாளே? சாப்பிடாவிட்டால் ஊட்டியே விட்டுவிடுவாள் போல, என்று எண்ணியபோது,"மலர் ஒன்றை நினைத்து விட்டால் அதை முடிக்கும் வரை விடமாட்டாள்" என்று வந்த அன்றைக்கு அன்னை சொன்னது நினைவுக்கு வந்தது. அதே போல அன்று மருத்துவமனையிலும் அப்படித்தானே பிடிவாதமாக அவனை பிரட் சாப்பிட வைத்து வீட்டிற்கும் அனுப்பி வைத்ததும் நினைவு வந்தது. இந்த நிரஞ்சன் மட்டும் லேசுப்பட்டவனா என்ன? நினைத்த காரியத்தை முடிக்காமல் விட்டுவிடுவானா ? என்று மனதுக்குள் உறுதியோடு சொல்லிக் கொண்டு, மெதுவாக எழுந்து சாப்பிட அமர்ந்தான்.

"அவனது கையை கழுவி விட்டு உணவை அவனிடம் கொடுத்த மலர்வதனியிடம்,"நான் கேட்டதற்கு இன்னும் நீ பதில் சொல்லவேயில்லை வதனி" என்றான்.

"நினைவு இருக்கிறது. உங்கள் அம்மாவிற்கு வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் நான் வேறு என்ன செய்யட்டும் சொல்லுங்க? தனியாக அறை எடுத்து தங்கினால் அதில் எத்தனை பிரச்சனை எந்த ரூபத்தில் வருமோ? அத்தோடு உடன் தங்குகிறவர்கள் யார் என்ன மாதிரி என்று தெரியாது. அங்கே சமையல் மற்றும் இதர வேலைகளை பங்கிட்டு செய்தாலும் எல்லாரும் ஒத்துப் போவார்கள் என்று சொல்ல முடியாது. முக்கியமாக பாதுகாப்பு கிடையாது. விடுதியில் என்றால் ஒரு பாதுகாப்பாக இருக்கும். கூடவே ஒரு பெண் கண்காணிப்பாளர் இருப்பார்" என்று தன் காரணத்தை சொல்ல,

"மாமா மகள் ரொம்ப தெளிவாகத்தான் திட்டம் போட்டிருக்கிறாள், பார்க்கத்தான் ஒன்றும் தெரியாத அப்பாவி மாதிரி இருக்கிறாள். ஆனால் என்னவெல்லாம் யோசித்திருக்கிறாள்? அதனால் அவனது யோசனையை அவள் ஏற்பாளா என்று சந்தேகமும் எழுந்தது. பாவம் அந்த முடிவிற்கு வர அவள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பாள் என்று நினைக்கையில் உருகியபோதும், அதை ஒதுக்கி,"நான் ஒரு யோசனை சொன்னால் கேட்பாயா வதனி? என்றான்.

"ம்ம்.. உங்கள் வீட்டில் தங்குவதை தவிர எதுவானாலும் சரி கேட்கிறேன், என்றாள் மலர்வதனி.

"மாட்டினாயாடி என் மாமா பெத்த மரிக்கொழுந்தே என்று எண்ணியவன், "எதுவானாலுமா?என்றான் ஒருமாதிரி குரலில்.

"ம்ம்.. ஆமாம், ஆமாம்" என்றாள் அவசரமாக

"நான் எதுவும் ஏடாகூடமாக யோசனையை சொல்லி விட்டால், என்ன செய்வாயாம்?

"அப்படி என்னத்த சொல்லிடப் போறீங்களாம்? உங்களை கல்யாணம் பண்ணிக்கவா சொல்லப் போறீங்க? ஆனாலும் என்னோட நிபந்தனைக்கு அது ஒத்துவராது என்பதால் நீங்கள் அதை சொல்ல வழியில்லை. இதற்கு மேலே ஏடாகூடமாக சொல்ல என்ன இருக்கிறது? அத்தோடு ஏற்கனவே அதுக்குன்னு தான் ஒருத்தியை கூட்டிட்டு வந்திருக்கீங்களே? என்று துடுக்காக சொல்லியவாறு எழுந்து சென்று கையைக் கழுவிவிட்டு வந்தாள்.

அவள் சொன்னதை கேட்டு ஒருகணம் ஆச்சரியமும் திகைப்பும் ஒருங்கே உண்டாக, சட்டென சிரித்தான் நிரஞ்சன்.

அவன் சிரிப்பதைப் பார்த்து ஒருகணம் மலைத்து நின்றவள், உடனடியாக நடப்பிற்கு வந்து,"இப்போ சிரிக்கற அளவுக்கு நான் அப்படி என்ன சொல்லிவிட்டேன்? என்றாள் கடுப்புடன்.

"உன்னை போகவிடாமல் தடுப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன் வதனி. நீயே நல்ல யோசனையை சொல்லிவிட்டாய், நன்றி, என்றவன் உன்னோட பேச்சும் தோரணையும் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, என்று நிரஞ்சனின் முகமே பிரகாசமாக இருந்தது.

அவள் அப்படி என்ன சொல்லிவிட்டாள்? புரியாமல் விழித்தபடி நின்றாள் மலர்வதனி.
 
Back
Top