Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

35. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மகேந்திரனுடன் பேசிவிட்டு வந்த பிறகு அங்கே நடந்த உரையாடலை திரும்ப திரும்ப எண்ணி பார்த்தபடி அமர்ந்திருந்தாள் மதுமதி. அத்தோடு எங்கே அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டுவிடுவானோ என்று அவள் உண்மையில் கொஞ்சம் நடுங்கித்தான் போனாள். ஆனால் அவனோ அதுபற்றி கேட்கவே இல்லை. அது நிம்மதியையும் ஏமாற்றத்தையும் ஒருசேர அளித்தது என்பது நிஜம். ஏன்? அவன் கேட்டிருந்தால் அதன்பிறகு அவளை திருமணம் செய்தாக வேண்டுமே என்றுதான் கேட்கவில்லையோ? ச்சு... என்ன இது அசட்டுத்தனமான யோசனைகள்? என்று அவள் தன்னையே கடிந்து கொண்ட போதுதான் தந்தை அவளிடம் பேசினார்.

அப்போது அவளை தந்தை தவறாக எண்ணிவிடக்கூடாது என்று தான் அப்படி பதில் அளித்தது. ஆனால் எதிர்பாராத விதமாக அவரே அவளுக்கு ஆதரவாக பேசியது வியப்பாக இருந்தது. அதற்குள் அம்மா வழக்கம்போல இடைபுகுந்தது சற்று கடுப்பாகத்தான் இருந்தது. எப்போதும் அம்மாவின் பேச்சை ஒட்டிப் பேசும் அப்பா தெளிவாக பேசியது ஆச்சரியம் தான். ஆனால் எதையும் அப்படி எளிதாக விட்டு விடுகிறவாளா அம்மா? அவள் கேட்டதும் மறுக்க முடியாத ஒன்று.

"நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் அத்தான். ஆனால் இந்த விபத்து ஒருவேளை திருமணத்திற்கு பிறகு நேர்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? விவாகரத்து வாங்கிவிட்டு வேறு திருமணம் செய்து வைப்பீர்களா?? அல்லது இந்த விபத்து நம்ம பொண்ணுக்கு நேர்திருந்து அவர்கள் அவளை வேண்டாம் என்றுவிட்டால் உங்கள் மனசு என்ன பாடுபடும் அத்தான்??

தந்தையும் மகளும் பேச்சற்று அமர்ந்திருந்தனர். மதனகோபால் வாயடைத்துப் போனது சிலகணங்கள் தான். உடனே சுதாரித்து, "மாலதி இப்ப முன்னாடி இருக்கிற பிரச்சினைக்கு என்ன தீர்வு என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர இப்படி ஆகியிருந்தால் அப்படி ஆகியிருந்தால் என்று யோசித்து கொண்டிருப்பது முட்டாள்தனம்" என்றார் சற்று கோபத்துடன்.

"உங்க நியாயம் நல்லா இருக்கிறது அத்தான். நாளைக்கே எனக்கு இப்படி ஒரு நிலை வந்துவிட்டால் நீங்கள் என்னை விலக்கி விடுவீர்கள் அப்படித்தானே அத்தான்?"

"என்ன உளறல் இது மாலதி? இப்ப என்னை என்னதான் செய்யச் சொல்கிறாய்? மகேந்திரன் இனி நடக்க முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார். அப்புறமும் மதுவை அவருக்கு எப்படி கட்டிக்கொடுக்க முடியும்? சரி உன் வாதத்திற்கே வருகிறேன். நாமாக ஒரு முடிவை எடுப்பது தவறு. வாழப் போகிறவள் அவள்தானே? அவகிட்டயே கேட்டுவிட்டு முடிவு செய்வோம்" என்று மதனகோபால் சற்று இறங்கிய குரலில் சொன்னார். மதுமதி பற்றி அவருக்கும் தெரியும்தானே? பொறுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவள், அதனாலேயே தான் அவராக திருமணத்தை ரத்து செய்ய முன் வந்தார். இப்போது மகளிடமே பொறுப்பை ஒப்படைத்து ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் மாலதி மகளிடம் கேட்கவில்லை, "அட அவகிட்ட என்னத்தை கேட்கிறது அத்தான்? நீங்க எந்த காலத்தில் இருக்கிறீர்கள்? செயற்கை கால்கள் பொருத்திட்டு நடனமே ஆடுகிறார்கள். மாப்பிள்ளைக்கும் கூட செயற்கை கால்கள் பொருத்தலாம். அவரும் நம்மை போல நடமாட முடியும் அத்தான். இன்னிக்கு காலையில் மதுகூட அதை சொல்லித்தான் மாப்பிள்ளைக்கு தைரியம் சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். மதுவை ரொம்ப புகழ்ந்து பேசினார் மாப்பிள்ளை".

மதுமதியின் முகம் கருத்தது. விருட்டென்று எழுந்து அங்கிருந்து மாடிக்கு ஓடினாள்.

"மாலதி கணவனை அர்த்தமாக பார்க்க அவரது முகத்தில் முறுவல் அரும்பியது.

"மாலு நீ விவரம் சொன்னப்பிறகு தான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது. அவளே சரி என்று சொல்லிவிட்டால் எனக்கு கவலை இல்லை, என்றார்.

“ நம்ம பொண்ணுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சு இருக்கு அத்தான், அதனால்தான் அவர் எப்படி இருந்தாலும் கட்டிக்கொள்ள நினைக்கிறாள்” அதனால் சீக்கிரம் தேதியை குறிக்க சொல்லி நேரா கல்யாணத்தை முடித்துவிடலாம் அத்தான்” என்றதும்

“ரொம்ப சரி மாலதி, அப்படியே செய்துவிடலாம். நீ எதற்கும் தங்கச்சிக்கிட்டே பேசு. என்று விட்டு கிளம்பி சென்றார்.

மதுமதிக்கு மகேந்திரன் மீது கடும் ஆத்திரம் உண்டாயிற்று. அப்பா ஒருவழியாக அந்த மகேந்திரனை கழட்டி விட்டிருப்பார். இந்த அம்மா அவளது பேச்சை கொண்டே மடக்கிவிட்டாளே. அப்படி என்றால் மகேந்திரனை திருமணம் செய்து கொண்டாக வேண்டுமா??இப்போது என்ன செய்வது? கையை பிசைந்தவாறு சற்று நேரம் தவித்தாள். அதன்பிறகு, "திருமணம் என்ன நாளைக்கேவா நடக்கப்போகிறது? முதலில் மகேந்திரனின் காயங்கள் எல்லாம் ஆறவதற்கு எப்படியும் ஒரு வாரம் பத்து நாட்கள் ஆகலாம். அதற்குள்ளாக வேறு ஏதேனும் செய்து தப்பித்துக் கொள்ளலாம்" என்று சமாதானம் சொல்லிக்கொண்டாள்.

💜💜💜

அன்று மாலை...

மதுமதியை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றாள் மாலதி. அப்போது மருத்துவர் மாலை சுற்று வரும் நேரம் என்பதால் மங்களம் கிளம்பாமல் இருந்தார். மன வேதனையில் இருந்தபோதும் மதுமதியிடம் அவர் முகம் திருப்பவில்லை. சற்று நேரத்தில் அங்கே வந்த மருத்துவர், மதுமதியைப் பற்றி கேட்டதும், மகேந்திரனின் வருங்கால மனைவி என்று மாலதி அறிமுகம் செய்தாள். மதுமதிக்கு முகம் மாறாமல் காப்பது சிரமமாயிற்று.

மகேந்திரனும் புன்னகைத்தானே தவிர மறுத்து ஒன்றும் பேசவில்லை

மங்களத்திற்கு சற்று குழப்பம் தான் என்றாலும் அவரும் மௌனம் காத்தார்.

வியப்புடன் அவளை நோக்கிவிட்டு, "இந்த காலத்தில் இப்படி கூட பெண்கள் இருக்கிறார்களா? கேட்பதற்கே மிகவும் சந்தோஷமாக இருக்கிறது", என்ற மருத்துவர் தொடர்ந்து,"யூ ஆர் வெரி லக்கி மிஸ்டர் மகேந்திரன்" என்று தட்டி கொடுத்து விட்டு வெளியேறினான் அந்த இளம் மருத்துவன் மலையரசன்.

அடுத்து வந்த நாட்களில் மதுமதி போகாவிட்டால் அந்த டாக்டர் தவறாக எண்ணுவார் என்று மருத்துவமனைக்கு தன்னோடு அழைத்துப் போனாள் மாலதி. மதுமதிக்கு அங்கு போகப் பிடிக்காத போதும், அவள் இப்போது விரும்புவது போல மகதி ஜபம் பண்ணாமல், மாலதி அவளிடம் அன்பாக, அனுசரணையாக இருந்ததால் அவளது பேச்சை தட்டாமாட்டாமல் உடன் சென்று வந்தாள்.

மகேந்திரனும் உருகி வழியவில்லை என்றாலும் சுமூகமாக ஒரு புன்னகையுடன் வரவேற்பதும் அவளது உடையை பாராட்டுவதும், பொது விஷயங்களை பேசுவதுமாக இயல்பாக நடந்து கொண்டான்.ஆனால் மதுமதிக்குத்தான் எதுவும் ரசிக்கவில்லை. ஏனோ கொஞ்சம் கொஞ்சமாக சுழலுக்குள் சிக்குவது போன்ற பிரம்மை தான் உண்டாயிற்று.

பகலில் மங்களமும் இரவில் மாலதியும் மாறி மாறி கவனித்துக் கொண்டனர். இடையில் அவனது தங்கையும் கணவரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

ஐந்தாம் நாள் மகேந்திரன் டிஸ்சார்ஜ் செய்வதாக இருந்தது. அவனுக்கான அறையை தயார் செய்யவென்று மங்களம் வீட்டில் தங்கிவிட்டார். மாலதியும் மோகனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு அப்புறமாக மகேந்திரனின் வீட்டிற்கு வருவதாக கிளம்பிச்சென்றாள்.

அதன்படி மோகன் வந்து நண்பனை வீட்டிற்கு அழைத்து சென்றான்.

💜💜💜

வீட்டோடு மகேந்திரனுக்கு உதவிக்கு ஒரு நர்சை ஏற்பாடு செய்தான் மோகனின் நண்பனான மருத்துவன் மலையரசன். ஏற்கனவே மருத்துவமனையிலும் அவள்தான் அவனுக்கு பணிவிடை செய்து வந்தாள். அந்த நர்ஸோடு இன்னொரு இளம் பெண் இருந்தாள். அவள் தான் அவனுக்கு பெரும்பாலும் உதவிகரமாக இருந்தாள். அவர்களது அவுட் ஹவுஸில் அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார் மங்களம். அந்த இளம் வேறு யாருமல்ல மகதியே. கொடைக்கானலில் இருந்தாலும் அவளால் அவனை பிரிந்து இருக்க முடியவில்லை. மங்களத்திடம் பேசும்போது அவர் மகனது விபத்து பற்றி சொல்லவும் அவள் உடனடியாக கிளம்பி அவரது வீட்டுக்கு வந்துவிட்டாள். அது மாலதியும் அறிவாள். அவளுக்கு ஒருவகையில் பார்க்கும் தூரத்தில் மகள் இருப்பதே ஆறுதலாக இருந்தது.

மாலதி காலையில் அல்லது மாலையில் வந்து பார்த்துவிட்டு சென்றாள்.

மகேந்திரனின் காயங்கள் எல்லாம் ஆறிவிட்டிருந்தது. கட்டுகள் அகற்றப்பட்டு பழைய மாதிரி தோற்றமளித்தான். சக்கர நாற்காலியில் மட்டும் அமராவிட்டால் அவனுக்கு ஊனம் என்று யாராலும் சொல்ல முடியாது.

மதுமதி மாலதியுடன் அவ்வப்போது அவனை காண வந்து போனாள். பழைய தோற்றத்தை காணும் போது சற்று மனம் சஞ்சலப்பட்டாலும், அவனது ஊனத்தை முயன்று நினைவுக்கு கொணர்ந்து அந்த ஆசைக்கு அணை போட்டாள்.

ஒருநாள் மகேந்திரன் செக்கப்பிற்காக கிளம்பிக்கொண்டிருந்த போது மாலதி மகளுடன் வந்து சேர்ந்தாள்.

"வாங்க அத்தை என்று வரவேற்ற மகேந்திரன், "சரியான நேரத்தில் வந்தீர்கள். நானே உங்களுக்கு போன் செய்வதாக இருந்தேன்."

"என்ன விஷயம் மாப்பிள்ளை? அண்ணி எங்கே காணோம்? என்றாள் மாலதி.

"அம்மா இன்றைக்கு தோட்டத்திற்கு போயாக வேண்டிய நிர்பந்தம். அவர்கள் காலையிலேயே கிளம்பிப் போய்விட்டார்கள் அத்தை. இன்றைக்கு நான் செக்கப்பிற்கு போக வேண்டும் என்று கிளம்பியும் விட்டேன். மோகன் வருவதாக சொல்லி இருந்தான். ஆனால் அவன் வேலை பற்றிதான் உங்களுக்கு தெரியுமே. கடைசி நிமிடத்தில் ஏதோ கேஸ் வந்துவிட்டதால் அவனால் வரமுடியாததால் அவனோட ஸ்டாஃப்பை அனுப்புவதாக சொன்னான்.

ஆனால் இன்றைக்கு ஒரு முக்கியமான டெஸ்ட் ரிசல்ட் வருவதாக இருப்பதால் குடும்ப உறுப்பினர் யாரேனும் வரவேண்டும் என்று டாக்டர் சொன்னார். அதனால் உங்களுக்கு போன் பண்ணி நீங்களும் மதுவும் என்னுடன் வர முடியுமா? என்று கேட்க நினைச்சேன்.

"அட இவ்வளவு தானா மாப்பிள்ளை? உங்களுக்கு துணைக் கு மதுவும் நானும் வருகிறோம். வாருங்கள் போகலாம்". என்ற மாலதி அங்கே நின்ற பணியாளருக்கு சைகை செய்துவிட்டு காரை நோக்கி நடக்க், மகேந்திரனின் சக்கர நாற்காலியை பணியாள் தள்ளிக்கொண்டு நகர, வேறு வழியின்றி பின்னோடு நடந்தாள் மதுமதி.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top