Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

34 & 35. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
27
Points
28
Location
India
*அத்தியாயம் – 34*


மலர்வதனி, மாலை வரையும் அத்தையுடன் பொழுதை இனிமையாக கழித்தாலும், மனதுக்குள் அத்தையிடம் அடுத்தடுத்து பொய் சொல்ல நேர்ந்துவிட்டதை எண்ணி ஒருபுறம் வருந்திய போதும், இன்னொரு புறம் அத்தையின் நல்லதற்காகத்தானே என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் அத்தை கோவிலுக்கு அழைத்தபோது எப்படி மறுப்பது என்று சற்று திணறினாள். அத்தானுக்கு துணை இருக்கப் போக வேண்டும். அதே சமயம் அத்தையை அந்த ஆன்ட்டியுடன் அனுப்பினால் எதையாவது பேசி அத்தையின் மனதை காயப்படுத்தி வைத்தால் அது அவளது உயிருக்கே ஆபத்தாகிவிடுமே என்று கலங்கினாள். அதனால் அவள் தீவிரமாக யோசித்துவிட்டு, நிரஞ்சனை கைப்பேசியில் அழைத்தாள்.

அதே நேரம் மருத்துவமனையில்...

சத்யமூர்த்தி, அவர்களது விருந்தினர் இல்லத்தில் ஜாஸ்மினுடைய தந்தையை தங்க வைக்கலாம் என்று யோசனை சொல்லவும் நிரஞ்சன் உடனே என்ன சொல்லி அதை மறுப்பது என்று தடுமாறிக் கொண்டிருக்கையில், அங்கே இருந்த ஜாஸ்மின், "உங்கள் யோசனையை மறுப்பதற்காக முதலில் என்னை மன்னிக்க வேண்டும் அங்கிள். நிரஞ்சன்கூட இதையே தான் அப்பாவிடம் சொன்னான். அதற்கு அப்பா, கல்யாண விஷயமாக பேச வருவதாக இருந்தால் அங்கே தங்குவது முறையாக இருக்கும். ஆனால் இப்போது என்னோட சொந்த விஷயமாக வருவதால் வேண்டாம் என்றுவிட்டார். அதற்கு பிறகுதான் வீடு பார்க்க இவனும் ஒப்புக் கொண்டான்" என்று பதில் அளிக்கவும்,

சத்தியமூர்த்திக்கு அவளது பதில் வேறு ஒரு விஷயத்தை உறுதி செய்தது. அது மகன் மலரிடம் காட்டியது வெறும் பாசம் தான் என்பதை அவருக்கு இப்போது தெளிவு படுத்தியது. சமீபகாலமாக அவள் மீது அவருக்கு, பரிவும் பிரியமும் கூடியிருந்தது. அதற்கு வேறு சில காரணங்கள் இருந்த போதும், நீண்ட நாட்களாக அவரது மனதுக்குள் அந்த பெண்ணிற்கு அன்னை செய்யும் பாவத்திற்கு அவரும் துணை போகும்படி ஆனதை எண்ணி வருந்திக் கொண்டிருந்தவருக்கு அவளிடம் முன்தினம் மனம் திறந்து பேசிய பின்னர், வெகுநாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்க முடிந்தது. குழந்தை முதலே மலர்வதனி எதையும் ஆசைப்பட்டு கேட்டு அடம்பிடித்தது இல்லை என்று வடிவுக்கரசி சொல்ல கேட்டிருக்கிறார். அவள் ஆசைப்படுவதை அறிந்துவிட்ட பிறகு, அவர் குடும்பத்திற்கு அவளைவிட சிறந்த மருமகள் கிடைக்க மாட்டாள் என்றும் ஆழமாக நம்பியிருந்தார். வடிவுக்கரசிக்கும் உள்ளூர அந்த ஆசை இருப்பதை அவர் அறிவார். இனி அது நிறைவேறாது என்று அறிந்தால் அவளும் துவண்டு விடுவாள் என்று எண்ணும் போதே அவருக்கும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கூடவே பாவம் அந்த சின்ன பெண். குழந்தை பருவத்திலும் சரியான பராமரிப்பும் பாசமும் கிடைக்காமலேயே வளர்ந்து விட்டாள். இனி வாழ்நாள் முழுதும் அத்தை மகன் மீது வைத்த காதலை மனதுக்குள் புதைத்துவிட்டு ஒரு போலி வாழ்க்கை வாழ போகிறாள் என்று நினைக்கையில், எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி ஆற்றாமை உண்டாக, மேற்கொண்டு அங்கே அமர்ந்திருக்க முடியவில்லை. அதனால் வீட்டிற்கு கிளம்ப முடிவு செய்தார்.

அப்போது நிரஞ்சனின் கைப்பேசியில் மலர்வதனியின் அழைப்பு வர, சட்டென்று அதை எடுத்து பேசினான்,

"சொல்லு வதனி, என்றான்.

"அத்தை, அந்த புதுசா வந்திருக்கிற ஆன்ட்டிகூட கோவிலுக்கு போறாங்க."

"அதனால் என்ன வதனி? போய்விட்டு வரட்டுமே?"

"காலையில் நான் உங்ககிட்ட அந்த ஆன்ட்டி பேசினதை பற்றி சொன்னதை மறந்து போயிட்டீங்களா?"

"மறக்கவில்லை வதனி, அதுதான் அப்பா கண்டித்துவிட்டாரே? அதனால் இனி அப்படி அவங்க பேசமாட்டார்கள். பேசினால் அம்மா அப்பாவிடம் சொல்லிவிடுவார்கள் என்று பயம் இருக்கும் தானே? இதற்காகவா அழைத்தாய்? என்றவனின் குரலில் நகைப்பு இருந்ததை உணர்ந்தவள்,

"நான் அதற்காக மட்டும் போன் பண்ணவில்லை. என்னையும் அத்தை கூட வரச் சொல்றாங்க. மாமா பாவம் காலை முதல் உங்களோடு இருக்கிறார். ராத்திரியும் அவர் தங்கினால் அத்தைக்கு பதில் சொல்லணும். அத்தோடு அவர் மருந்து, உணவு எல்லாம் நேரத்துக்கு எடுக்கணும். ஜாஸ்மினும் வீடு தேடப்போனவள், இன்னும் வீட்டிற்கு வரக்காணோம். இத்தனை நேரம் அலைந்ததற்கு அவளும் களைத்து போயிருப்பாள். இல்லாவிட்டால் அவளை உங்களுக்கு துணையாக இருக்க சொல்லலாம். இப்ப அத்தைக்கிட்டே முடியாதுன்னு சொன்னால் வருத்தப்படுவாங்க, என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்க? என்றாள் மலர்வதனி.

"ம்ம்... நீ சொல்வது சரிதான் வதனி. சரி கவலையை விடு. நான் அப்பாவையும், ஜாஸ்மினையும் உடனே அனுப்பி வைக்கிறேன். அவள் அம்மாவுடன் போய் வரட்டும், இன்றைக்கு ஒரு இரவு நான் சமாளித்து கொள்வேன் தான். ஆனால் அநேகமாக காலையில் டிஸ்சார்ஜ் பண்ணிவிடுவார்கள். அந்த பார்மாலிட்டீஸ் வேறு பார்த்தாக வேண்டும். அதனால் நீ கிளம்பி ஹாஸ்பிடலுக்கு வா வதனி" என்று முடித்துவிட்டு நிமிர்ந்தபோது, தந்தை ஏற்கனவே கிளம்பி நிற்பதைப் பார்த்துவிட்டு,"அப்பா நான் பேசியதைக் கேட்டீர்கள் தானே? நீங்கள் ஜாஸ்மினை அழைத்துக்கொண்டு கிளம்புங்கள். சாரகேஷ் உங்களை வீட்டில் விட்டுவிடுவான்" என்றதும்,

சத்யமூர்த்திக்கு மறுபடியும் மகனின் செயல் குழப்பத்தை உண்டு பண்ண, தீவிர யோசனையோடு மகனை நோக்கி விட்டு,"சரி ரஞ்சி நாங்கள் கிளம்புகிறோம். நீ உடம்பைப் பார்த்துக்கொள். நாளைக்கு என்னால் வரமுடியாது என்று நினைக்கிறேன். தோட்டத்திற்கு உரம் போட ஆட்களை வர சொல்லியிருக்கிறேன். அதனால நான் அங்கே இருந்தாகணும். நீயும், மலரும் வந்து விடுவீர்கள் தானே? என்றார்.

"பரவாயில்லை அப்பா, நீங்கள் வரவேண்டாம். டிஸ்சார்ஜ் செய்வதை வதனி பார்த்துக் கொள்வாள். அப்படியே வழக்கம் போல அவள் வீட்டிற்கு வந்துவிடுவாள். ஆனால் உடனடியாக நான் வீட்டிற்கு வந்தால், அம்மா பயந்து விடுவார்கள். நாளை கட்டைப் பிரித்து பிளாஸ்திரி போட்டு விடுவார்கள்.

அம்மாவிடம் பாறையில் இருந்து வழுக்கி விழுந்ததாக சொல்லி சமாளித்து விடலாம்.. காலையில் சாரகேஷ் என்னை கூட்டிப்போக வருவான். அவன் வீட்டுக்கு போய்விட்டு, மாலையில் தான் வரமுடியும், என்று சொல்ல,

"சரிதான் ரஞ்சி. எதற்கும் உடம்பை அதிகம் அலட்டிக்காதே, எதுவானாலும் சற்று யோசித்து செய் கண்ணா" என்றுவிட்டு அவர் வெளியேற, கூடவே மற்ற இருவரும் ஒரு தலையசைப்புடன் கிளம்பிச் சென்றனர்.

☆☆☆

வடிவுக்கரசிக்கு ஏனோ கோவிலுக்கு போக மனசே இல்லை. ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விடுமோ என்று கலக்கமாக இருந்தது. மகனும் எங்கே இருக்கிறான் என்று சரியாக தெரியவில்லை. கணவரும் போகும் இடத்தை சொல்லவில்லை. மதிய சாப்பாட்டை வெளியே பார்த்துக் கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன முக்கியமான வேலை? எப்போதும் அவளுக்கு ஆறுதலாக, அவளது கலக்கங்களை களைந்து உற்சாகமூட்டுகிற மலர்வதனியும் கூட அவளுக்கு தெரியாமல் எதையோ மறைக்கிறாள் என்று தோன்றியது. சொல்லப்போனால் அவள் அறியாமல் சுற்றிலும் ஏதோ நடப்பதை போன்ற பிரம்மை உண்டாயிற்று. இந்த குழப்பத்தில் கோவிலுக்கு போனால் அவளால் நிம்மதியாக எப்படி வழிபட முடியும்? ஒருவகையில் செந்திரு உடன் வருவது ஆறுதலான விஷயம் தான். இல்லாவிட்டால் இங்கே மாமியார் அவளோடு என்ன திட்டம் தீட்டுகிறாளோ என்று அதுவேறு கலங்க நேர்ந்திருக்கும். மனம் எண்ணங்களின் சுழலில் சிக்கி தவிக்க, இயந்திரமாய் உடையை மாற்றி கோவிலுக்கு போக தயாராகி மருமகள் அறைக்கு சென்றால், அவள் அப்போதுதான் பால்கனியில் அமர்ந்து நிரஞ்சனிடம் போனில் பேசிவிட்டு இணைப்பைத் துண்டித்தபடி நிமிர்ந்தாள்.

"ஏய் என்னடி இன்னமும் நீ கிளம்பவில்லையா? என்றவள்,ஆமா "போனில் யாரு? என்று வினவ,

மறுபடியும் பொய் சொல்ல நேர்ந்ததை எண்ணி தன்னயே நொந்தபடி, "என்னோட வேலை பார்க்கிறவங்க அத்தை, இன்றைக்கு லீவு கேட்டேன். ஏற்கெனவே இரண்டு நர்ஸ்கள் விடுமுறையில் போய்விட்டார்கள். அதனால் இன்றைக்கு கட்டாயம் வந்துவிடு, நாளைக்கு வேண்டுமானால் எடுத்துக்கொள் என்று விட்டார்கள். என்ன செய்யட்டும் அத்தை"என்றாள் மலர்வதனி.

"நீ என்னோடு வந்தால் எனக்கு தெம்பாக இருக்கும் என்று நினைத்தேன். கோவிலுக்கு தானே மலர், பரவாயில்லை இன்னொரு நாள் நாம் சேர்ந்து போனால் ஆயிற்று. ஆனால் வேலை முக்கியம். நீ போய்விட்டு வா, என்றவள், "உனக்கு ராத்திரிக்கு டிபன் செய்யச் சொல்லிவிட்டுப் போகிறேன். மறக்காமல் எடுத்துக்கொண்டு போகணும் சரியா? என்றாள்.

வடிவுக்கரசியை தோளோடு அரவணைத்தபடி,"அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் அத்தை. மாலை சிற்றுண்டி ரொம்ப சாப்பிட்டு விட்டேன். அதனால் நான் கேண்டினில் லைட்டாக ஏதாவது சாப்பிட்டுக் கொள்கிறேன். நீங்கள் தவறாமல் ராத்திரி மருந்து சாப்பிட வேண்டும், அத்தை" என்றாள் மலர்வதனி.

"உத்தரவு , என் மகாராணி," என்று சொல்லி சிரித்தவள்,அவளது தோள்மீது தலைசாய்த்தபடி சிலகணங்கள் நின்றாள். அதன்பிறகு,"மலர் எனக்கு மனசே சரியில்லையடி, என்றாள் வடிவுக்கரசி.

"ம்ம்... எதனால் என்று எனக்கு நன்றாக தெரியும் அத்தை. நாளைக்கு ஒருநாள் பொறுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளை வந்துவிடுவார். அப்புறம் மனது உடம்பு எல்லாமும் சரியாகிப் போகும், என்று புன்னகைத்தாள்.

"ம்ஹூம், நீ நினைக்கிறது போல் இல்லை மலர். எனக்கு அது என்னானு சொல்ல தெரியலை. எதற்கும் நீ ஜாக்கிரதையாக போய் வா மலர். எனக்கு ஆஸ்பத்திரிக்கு கிளம்பறதுக்கு முன்னாடியும், அப்புறமா போய் சேர்ந்ததும் ஃபோன் பண்ணிடுடி, என்றவள்,"இருடி உன் அத்தான்கிட்டயும் ஒரு வார்த்தை சொல்லி வச்சிடுறேன், என்று மகனை கைப்பேசியில் அழைத்து கடலுக்கு செல்லும்போது சற்று கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொண்ட பிறகு வடிவுக்கரசி சற்று ஆசுவாசமாக உணர்ந்தாள்.

மலர்வதனிக்கும் அத்தையை நினைத்து மிகவும் கவலையாக இருந்தது. நாளை உண்மை தெரிந்து போனால் அவள் மீது கோபப்பட்டு வெறுத்து விடுவாளோ என்று உள்ளூர அச்சம் உண்டாயிற்று. கடவுளே என் அத்தைக்காகத்தான் துணிந்து பொய் சொல்லி விட்டேன். அதற்காக என்னை அத்தையிடமிருந்து ஒருபோதும் பிரித்துவிடாதே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டாள் அந்த பேதை.

அடுத்த நொடி என்ன நடக்கும் என்பதை யார் தான் அறிவார்? அந்த இறைவன் ஒருவனை தவிர. ...



*அத்தியாயம் – 35*


வீடு திரும்பிக் கொண்டிருந்த சத்யமூர்த்திக்கு மகனது நடவடிக்கைகள் முன்னுக்கு பின் முரணாக தோன்ற ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழம்பிப் போனார். அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில், கடவுளிடம் பாரத்தை இறக்கி வைப்போம் என்று நினைத்தவர், மனைவியை தொடர்பு கொண்டு அவரும், ஜாஸ்மினும் கோவிலுக்கு வருவதாக தெரிவித்து சற்று காத்திருக்குமாறு சொன்னார்

அதன்படி அவர்கள் இருவரும் வீடு வந்ததும் சற்று நேரத்தில் மலர் மற்றும் காந்திமதியை தவிர்த்து, எல்லோருமாக கிளம்பிச் செல்ல வீடு நிசப்தமாக இருந்தது. காந்திமதி அவளது அறையில் மஞ்சுளாவிடம் ஒரு பெட்டியில் துணிகளை எடுத்து வைக்குமாறு உத்தரவிட்டுக் கொண்டிருந்தாள்.

"ஏன் பாட்டி எங்காணும் வெளியூர் கிளம்பறீங்களா? உங்க மக வீட்டுக்கா? என்றாள்.

"என் மக வீட்டுக்கு போகணும்னா சொல்லிட்டு போவேனேடி? நான் இப்ப நம்ம ஊருக்கு பக்கத்து ஊரில இருக்கிற மடத்துக்கு போறேன்டி" என்றாள்.

"மடத்துக்கா? அப்படின்னா என்ன பாட்டி? அங்கே போய் என்ன செய்வீங்க? இத்தனை துணிமணிகளை எடுத்து போறீங்களே? ரொம்ப நாள் தங்கப் போறீங்களா? எப்ப திரும்புவீங்க? மஞ்சுளா லொடலொட என்று கேள்விகளை கேட்டபடி காந்திமதி சொன்னவற்றை செய்து முடித்திருந்தாள்.

பெரும்பாலும் தன் வேலைக்கு சொக்கியைத் தான் காந்திமதி அழைப்பது வழக்கம். சொல்லப்போனால் அவளுக்கு யாரும் இப்படி வளவளப்பது பிடிக்காது. அப்படி பேசினால் கோபப்படுவாள். அப்படியிருக்க அன்றைக்கு மஞ்சுளாவை அழைத்தது ஒரு காரணமாகத் தான். அதை அறியாத அந்த பெண் அவளது வழக்கம் போல பேசிக் கொண்டே போனாள். அதற்கு ஆத்திரப்படாமல் முதியவளும் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

"நான் இங்கன இனி திரும்ப வரமாட்டேன்டி. நீ யார்கிட்டயும் இதப் பத்தி மூச்சு விடக்கூடாது. அப்படி சொன்னேனா தொலைச்சுடுவேன் ஜாக்கிரதை, என்று எச்சரித்து விட்டு தொடர்ந்து "பெட்டிகளை எடுத்துட்டுப் போய் வண்டியில் ஏத்தணும், நீ போய் சித்தையனை வரச் சொல்லு"என்றதும் மஞ்சுளாவுக்கு ஏதோ விபரீதம் என்று சற்று கலக்கம் உண்டாக, சட்டென்று மலர்வதனி இன்னமும் வேலைக்கு கிளம்பவில்லை என்பது நினைவுக்கு வர, மாடிக்கு விரைந்தோடினாள்.

அங்கே அவளது அறையில் பணிக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்த மலர்வதனியிடம் மஞ்சுளா மூச்சு வாங்க விவரம் சொல்ல, அதை கேட்டதும் ஒருகணம் அசைவற்று நின்றாள் மலர்வதனி.

"ஐயோ மலர், சீக்கிரம் கீழே வந்து ஏதாவது செய், இல்லைன்னா, பாட்டி கிளம்பிடப் போகுது "என்று மஞ்சுளா படபடக்க, ஒருவாறு சுதாரித்து கொண்டு வேகமாக கீழே ஓடினாள்.

"திடீரென்று என்னவாயிற்று இந்த பாட்டிக்கு? மடத்துக்கு என்றால் என்ன அர்த்தம்? எந்த மடத்துக்கு? அதுவும் வீட்டில் யாரும் இல்லாதபோது இப்படி ஏன் கிளம்பணும்? மனதுக்குள் எண்ணங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க,பாட்டியின் அறையை அடைந்திருந்தாள் மலர்வதனி.

"என்னாச்சு பாட்டி? இப்ப திடீரென்று எங்கே கிளம்பிட்டீங்க?"என்றாள்.

"ஏன்டி நான் எங்கே போனால் உனக்கு என்ன வந்துச்சு?"

"என்ன பாட்டி, ஆச்சு ? இப்போது எதுக்கு வீட்டை விட்டு போறீங்க? மலர்வதனி பதற்றத்தை மறைக்க முயன்றவாறு வினவ

"வேற என்னடி செய்ய சொல்லுறே? என் மகன், மருமகள், பேரன் எல்லாரையும் கைக்குள்ள போட்டுக்கிட்டு, நீ தான் நல்லா சட்டாம்பிள்ளையாட்டம் உள்ளே வந்து உட்கார்ந்துட்டியே? அப்புறம் எனக்கு இங்கே என்ன மரியாதை இருக்கு? அதோட நீ இருக்கிற இந்த வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன்டி. குலம் மாறி பிறந்தது எல்லாம் வீட்டுக்குள்ளே வந்துடுச்சுன்னா,நல்ல குலத்தில் பிறந்த நான் அனாதை ஆசிரமத்துக்கு தானேடி போகணும், சரி, சரி நீ நகரு, கோவிலுக்கு போனவங்க வர்றதுக்குள்ளே நான் கிளம்பணும். அவங்களோட நின்னு பஞ்சாயத்து பண்ணி போராட எனக்கு தெம்பு இல்லை" என்ற காந்திமதி கூடத்தை நோக்கி நடக்க,

அவளது பேச்சில் சிலகணங்கள் உறைந்து நின்றிருந்த மலர்வதனிக்கு, இதுவரை அத்தையிடம், காந்திமதி அவளை வெறுக்கும் காரணத்தை பலமுறை கேட்டும் தெரிந்து கொள்ள முடியாமல் போன கேள்விக்கான பதில் இதுதான் என்று தெளிவாக புரிந்து போயிற்று. ஆனால் இந்த காலத்தில் கூடவா குலம் கோத்திரம் எல்லாம் பார்த்துகொண்டு என்றுதோன்றியபோதும், இப்போது அதை எல்லாம் யோசிக்க நேரம் இல்லை, என்று சுதாரித்துக்

கொண்டு முதியவளிடம் ஓடினாள்,"ஐயோ நில்லுங்கள் பாட்டி". இப்ப உங்களுக்கு என்ன? நான் இந்த வீட்டில் இருக்கக்கூடாது அவ்வளவுதானே? என்றபோது அவளையும் அறியாமல் குரல் கரகரத்தது.

"அது மட்டுமில்லைடி, இந்த வீட்டில் மட்டும் இல்லை,தோட்டத்து வெளியிலே அந்த ஒத்தை அறையில் கூட நீ இனி இருக்கக் கூடாது. மொத்தத்துல இந்த வீட்டோட யாருகூடவும் சம்பந்தமே வச்சுக்க கூடாது,"என்றாள் காந்திமதி காரமாக!

"சரி சரி, நான் போய் விடுகிறேன் பாட்டி. ஆனா எனக்கு நாளைக்கு சாயந்தரம் வரைக்கும் டைம் கொடுங்க,"

"எதுக்குடி நாளைக்கு வரைக்கும்? என் பேரனும் வந்துவிடுவான், அவனிடம் நீ மாய்மாலம் பண்ணி என்னை போட்டு கொடுக்கலாம் என்று நினைக்கிறாயா?

"ஐயோ பாட்டி அப்படியெல்லாம் இல்லை. யாருக்கும் தெரியாமல் நான் போக வேண்டும் என்றால் நாளை வரை கொஞ்சம் பொறுத்து கொள்ளுங்கள். இன்றைக்கே நான் கிளம்பிப் போனால், நீங்கள் ஏதோ சொல்லி தான் நான் போனதாக தோன்றும்".

"காந்திமதி சிலகணங்கள் யோசித்தாள். அவள் சொல்வது போல செய்வது தான் சரி என்று தோன்றியது. அதனால் மறுநாள் மாலை வரை அவளுக்கு நேரம் கொடுப்பதாக ஒத்துக்கொண்டாள்.

"இங்க பாருடி என்னை ஏமாத்திடலாம்னு மட்டும் நினைச்சிடாதே, நாளைக்கு அப்புறம் இந்த பக்கம் நான் உன்னை பார்த்தேன்னா, நான் வீட்டை விட்டு போக மாட்டேன்டி, உலகத்தை விட்டு போயிடுவேன்"என்று மிரட்டலாக சொன்னால் காந்திமதி.

மலர்வதனி உண்மையில் அதிர்ந்தே போனாள். ஆனால் மேலும் அவள் மௌனமாக நின்றால், காந்திமதிக்கு ஆத்திரம் கூடிவிடும் என்று உடனே "அதெல்லாம் சொன்னது போல நான் கிளம்பி விடுவேன் பாட்டி. இப்ப நீங்க பேசாம உள்ளே போங்க. நான் வேலைக்கு கிளம்புறேன்," என்றுவிட்டு மலர் வேகமாக மாடிக்கு சென்றாள்.

அறைக்குள் சென்ற மலருக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. ஆனால் இப்போது அதற்கும் கூட சமயம் இல்லை என்பதால் வேகமாக முகத்தை கழுவிக்கொண்டாள், உடை மாற்றும் அறைக்குள் சென்று, அங்கே இருந்த 3 பருத்தி சேலைகளையும், மேலும் தேவையான சில அத்தியாவசிய பொருட்களையும் எடுத்து ஒரு கவரில் வைத்தாள். மனதுக்குள் என்னென்னவோ சிந்தனைகள் ஓட, உடையை மாற்றிவிட்டு, பின் பக்கத்து படிகள் வழியாக மருத்துவமனைக்கு கிளம்பினாள். அவ்வப்போது அவளது சீருடையை வீட்டிற்கு கொணர்ந்து துவைத்து இஸ்திரி போட்டு எடுத்துச் செல்வது வழக்கம் என்பதால் இப்போது அவள் கையில் இருக்கும் அந்த பையை யாரும் தவறாக எண்ணுவதற்கு வழி இல்லை.

ஆனால் நிரஞ்சன் என்னவென்று கேட்பானே? என்று தோன்ற, மருத்துவமனையை அடைந்ததும், அந்த தீவிர சிகிச்சைப் பிரிவு நர்ஸ் ரீமாவிடம் சென்று, அந்த பையை கொடுத்து அதனை நாளை சாயந்திரம் திரும்ப வாங்கிக் கொள்வதாக சொல்லி, பத்திரமாக வைத்திருக்கும்படி கேட்டுக் கொண்டாள். இரண்டு தினங்களாக பழகியதில் அவளுக்கு மலர்வதனியிடம் ஒரு பிரியம் உண்டாகியிருந்தது. அதனால் அவளும் மலரின் முகத்தை கூர்ந்து கவனித்து விட்டு, கேள்வி ஏதும் கேட்காமல் வாங்கி வைத்துக் கொண்டாள்.

நிரஞ்சனின் அறைக்குள் நுழைந்தாள் மதனிவதனி, அங்கு இருந்த சாரகேஷ் எழுந்து கொண்டு,"ஹலோ சிஸ்டர், என்றான்.

"ஹலோ",என்று புன்னகைக்க முயன்ற மலர்வதனி,"ஸாரி, அது பஸ்ஸிற்க்கு காத்திருந்ததில் கொஞ்சம் களைப்பாக இருக்கிறது. நான் போய் fresh up ஆகிட்டு வர்றேன்"என்றுவிட்டு டாய்லெட்டிற்குள் நுழைந்து கொண்டாள்.

குரலை வெகுவாக தணித்துக்கொண்டு, "சிஸ்டர் ஏதோ டிஸ்டர்ப்பா தெரியறாங்க, அது என்னவென்று கவனியுங்கள், என்றவன்,"ஓகே நிரஞ்சன் சார், நாளைக்கு காலையில் 9மணிக்கு வந்துவிடுகிறேன், என்று கிளம்பிச் சென்றான் சாரகேஷ்.

அவள் வந்ததும் நிரஞ்சனும் கவனிக்கத்தான் செய்தான். சாரகேஷ் கூட கவனித்திருக்கிறான் என்றால், அந்த அளவுக்கு அவளுக்கு ஏதோ பெரிய பிரச்சனை என்று தோன்றியது. ஆனால் இப்போது திடுமென என்ன பிரச்சனை? ஒரு வேளை பாட்டி தானோ? வரட்டும் கேட்கலாம் என்று காத்திருக்க,

சிலகணங்களில் வெளி வந்த மலர்வதனி,"என்ன அத்தான் தீவிர யோசனை? நாளைக்கு காலையில் வீட்டிற்கு போனால் எப்படி அத்தையை சமாளிப்பது என்றா? என்றபடி அங்கே போடப்பட்டிருந்த விருந்தினர் படுக்கையில் அமர்ந்தாள்.

சற்று முன் காணப்பட்ட கலக்கம் ஏதும் இன்றி முகம் இயல்பாக இருந்தது. ஒருவேளை அப்போது பார்த்தது உண்மையில் களைப்புதானோ என்று யோசனை ஓடியது. கூடவே அவள் கேள்விக்கு பதிலாக," காலையில் போனால் அம்மா கேள்வி மேல் கேள்வி கேட்பார்கள் என்று தெரியாதா வதனி? அதனால் நான் ஈவ்னிங் தான் வீட்டிற்கு வருவேன்"என்றதும், மலர்வதனிக்கு சற்று நிம்மதி உண்டானது.

ஆனால் நிரஞ்சன் தொடர்ந்து,"உனக்கு இந்த வாரம் பகல் வேலை தானே?என்னால் உன்னோட விடுமுறை வேறு பாழானது போதாது என்று மேற்கொண்டு எனக்காக விடுமுறை எடுக்கும்படி ஆகிவிட்டது வதனி. அதனால் நாளைக்கு காலையில் வீட்டிற்கு போனதும் சாப்பிட்டு, நல்லா ஓய்வு எடுத்துக்கொள். அப்போதுதான் நாளை மறுநாள் வேலைக்கு கிளம்பறப்போ அசதியாக இராது"என்றதும் திக்கென்றது.

மறுநாள் மாலை அவள் வீட்டை விட்டு கிளம்பியாக வேண்டுமே, வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி விடலாம் என்று தான் நாளை மாலை வரை அவகாசம் கேட்டிருந்தாள். ஆனால் இவன் வீட்டில் இருக்கும் சமயம் அவளால் எப்படி கிளம்ப முடியும்? நோண்டி நோண்டி கேள்வி கேட்பானே? "சே என்ன மடத்தனம் செய்து விட்டாள். பாட்டியிடம் கேட்டதுதான் கேட்டாள், நாளை மறுநாள் வரை நேரம் கேட்டிருக்கலாம். அத்தை மாமாவை சமாளித்து விடலாம். உள்ளூர அவள் நாளைக்கு வீட்டை விட்டு எப்படி கிளம்புவது என்று தவிப்போடு யோசிக்க,

"அவள் முகத்தையே பார்த்திருந்த நிரஞ்சன்,"என்ன வதனி? நான் அப்படி என்ன சொல்லி விட்டேன்? சரி என்று சொல்வதை விட்டுவிட்டு,இவ்வளவு சீரியஸ் ஆகிவிட்டாயே ஏன்?வீட்டில் ஏதாவது பிரச்சனையா?என்றான்.

"இதோ குடைய ஆரம்பித்து விட்டான்ல, என்று நினைத்துக்கொண்டு மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டவள்,அவசரமாக,"அதெல்லாம் ஒன்றும் இல்லை அத்தான். நாளைக்கு என்ன கிழமை என்று யோசித்தேனா. நாளை மறுநாள் காலையில் என்னுடன் வேலை பார்க்கிற பெண்ணிற்கு பாண்டிச்சேரியில் திருமணம் என்பது நினைவிற்கு வந்துவிட்டது. என்னை அவசியம் வரச் சொல்லி இருக்கிறாள். அதை யோசித்து கொண்டிருந்தேன்"

"கல்யாணம் தானே வதனி? போய் வருவதுதானே? அதில் யோசிக்க என்ன இருக்கிறது ?

"கல்யாணத்திற்கு அத்தை என்னை அனுப்ப மாட்டார்கள். என்னவோ நான் இன்னும் சின்ன பாப்பா என்று அவர்களுக்கு நினைப்பு"என்றவளின் முகம் அப்போது சிறுமியை போலவே தோன்ற, நிரஞ்சன் ரசனையுடன் பார்த்திருக்க, அவனது கைப்பேசி ஒலித்தது.

எடுத்துப் பார்த்துவிட்டு அவளை நோக்கினான், அதை ஓரப்பார்வையில் கவனித்த மலர்வதனி,"சரி அத்தான், மணி 8 ஆக போகுது. நான் போய் உங்களுக்கு இராத்திரி சாப்பிட டிபன் வாங்கிட்டு, நானும் சாப்பிட்டு வர்றேன்" என்று அவனது பதிலைக்கூட எதிர்பாராமல் அவசரமாக வெளியேறினாள். இவள் விவரமான பாப்பா தான் என்று புன்னகையோடு எண்ணியவாறு நிரஞ்சன் கைபேசியை உயிர்ப்பித்து பேசத் தொடங்கினான்.

"ஹலோ சொல்லுங்க மாமா என்ன இப்போ கால் பண்ணி இருக்கீங்க? நீங்கள் கிளம்பி விட்டீர்களா?என்று வினவினான்

எதிர்முனையில் மாமா,"ஆமா நிரஞ்சன் மிட் நைட்டு, ஃபிளைட்டில் கிளம்பி, நான் நாளை காலையில் அங்கே வந்து சேர்ந்துவிடுவேன். எனக்கு ஒரு கார் அனுப்ப வேண்டும். நீயே வர முடிந்தால் ரொம்பவும் நல்லது. அப்புறம் வீடு விஷயம் என்ன ஆயிற்று? பார்த்து விட்டாயா? அல்லது நான் ஹோட்டலில் தங்கிக் கொள்ளவா?"என்று கேட்கவும், ஒரு கணம் திகைத்தான். உடனே சுதாரித்துக் கொண்டு, "வீடு எல்லாம் பார்த்துவிட்டோம் மாமா. காலையில் வண்டி அனுப்புகிறேன், ஆனால் என்னால் வர முடியாது. சாரி மாமா, என்ற நிரஞ்சன் தனக்கு விபத்து நேர்ந்த விவரத்தை தெரிவித்தான்".

"அடடா என்னப்பா கவனமாக இருக்க கூடாதா"என்றவர்"சரி, நீ உடம்பை பார்த்துக் கொள். எனக்கு வீட்டோட அட்ரஸ் மெசேஜ் பண்ணி விடு. எப்போது உன்னால் முடிகிறதோ அப்போது வந்து என்னை பார். அப்படி வர்றப்போ என் மகளையும் அழைச்சிட்டு வா"என்று மாமா பேச்சை முடித்துக் கொண்டார்.

அவருக்கு கார் எப்படி அனுப்புவது என்று யோசித்தான் நிரஞ்சன். வீட்டில் இப்போது ஒரு கார் தான் இருக்கிறது. விபத்தில் சிக்கிய வாகனத்தை சரி பார்த்து நல்ல விலைக்கு விற்றுவிடச் சொல்லிவிட்டார் சத்யமூர்த்தி. வேறு வழியில்லை, சாரகேஷைத் தான் அனுப்பி வைக்க வேண்டும். மாமா வருவதும் நல்லதுதான் என்று தோன்றியது. நாளை ஒர்நாள் அவன் சாரகேஷ் வீட்டில் தங்குவதாக திட்டம் போட்டிருந்தார்கள். இப்போது மாமா வந்துவிட்டால் அந்த வீட்டில் போய் தங்கிக்கொள்ளலாம். துணையும் ஆயிற்று. மேற்கொண்டு செய்வது பற்றியும் பேசி முடிவு செய்யலாம், என்று தோன்ற, மலர்வதனியிடம் அதைப் பற்றி சொல்லலாம் என்று காத்திருந்தான்.

ஆனால் சற்று நேரத்தில் உணவுப் பையுடன் உள்ளே வந்த மலர்வதனி, "எனக்கு ரொம்ப பசி, ஆனால் அங்கே உட்கார்ந்து சாப்பிட்டால் நேரமாகிவிடும் என்று எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்துட்டேன். நீங்கள் இப்போது சாப்பிடுகிறீர்களா? அல்லது பிறகா? என்று வழக்கத்திற்கு மாறாக படபடக்க,

சொல்ல நினைத்ததை விடுத்து அவளை கூர்ந்து கவனித்த நிரஞ்சனுக்கு, அவள் எப்போதும் சற்று நிதானமாக இருக்கக் கூடியவள், ஆனால் இப்படி படபடப்பதற்கு காரணம் எதையோ மறைக்கவே என்று தோன்றியது. அது என்ன என்று யோசித்தான். சற்று முன்பு அவளோடு பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. அந்த பேச்சை அவன் தொடர்ந்து விடுவானோ என்று அவளே முந்திக்கொண்டு பேசுகிறாள். அப்படி என்றால் அந்த கல்யாண விஷயம் கூட அவனது கவனத்தை திசை திருப்பத்தானோ? ஆக வேறு ஏதோ ஒன்று அவள் மனதிற்குள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை அவன் அறிந்து விடக்கூடாது என்று நினைக்கிறாள், என்று புரிந்ததும்,

"வதனி, நீ என்னிடம் எதையோ மறைக்கப் பார்க்கிறாயா? என்று நிதானமாக கேட்க, மலர்வதனி சொல்வதறியாது விழித்தாள்.
 
Back
Top