Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

29. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அன்று இரவு மதுமதி அறையில் உலாவிக் கொண்டிருந்தாள். அதிகம் சிரமம்படாமல் காரியம் கைகூடிவிட்டதை இன்னமும் அவளால் நம்பமுடியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தில் அவளது திட்டம் தோல்வியில் முடிந்திருந்தது. அவள் அந்த ஏமாற்றத்தில் இருந்த நிலையில் மகேந்திரன் அவளை எச்சரித்ததுதான் எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போல ரொம்பவே அடக்க முடியாத அளவிற்கு ஆத்திரத்தை உண்டு பண்ணியது. எந்த மகதிக்காக அவளை எச்சரித்தானோ அந்த மகதியை இழந்து அவன் கஷ்டப்பட வேண்டும்... அவன் மட்டுமல்ல அவளை எப்போதும் உயர்வாக பேசும் பெற்றோரும் படவேண்டும்..தீர்மானித்தாள்.

அதன் பிறகு அவள் மகதியை அப்புறப்படுத்துவது எப்படி என்று ஆழ்ந்து யோசிக்க தொடங்கினாள். அவளது தோழர்கள் மூலமாக சில கருவிகளை தருவித்தாள். அதை யாரும் அறியாமல் தனது அறைக்குள் கொணரத்தான் அந்த இரண்டு தினங்களும் மௌனமாக ஒதுங்கியிருந்தாள். ஏற்கெனவே மாஸ்டர் கீ யில் இருந்து மகதியின் அறை சாவிக்கு மாற்று சாவியை தயாரித்து வைத்திருந்தாள்.

மகதியின் நடவடிக்கைகளை கண்காணிக்க, அவள் அறைக்குள் நுழைந்து அவள் (தருவித்த) வரவழைத்த மைக்ரோ கேமரா ஒன்றை புத்தக அலமாரியின் நடுவே வைத்தாள். அதை தனது கைப்பேசியோடு இணைத்தாள். அது போலவே மகதி எங்கே போகிறாள் வருகிறாள் என்று அறிய கைப்பேசியில் location track ஐ ஆன் செய்து வைத்தாள்.

அடுத்த கட்டமாக அன்று அம்மாவிடம் பேசச் செல்லுமுன்பாக மகதி என்ன செய்கிறாள் என்று கைப்பேசி மூலம் பார்த்தாள். அப்போது மகதி மகேந்திரனிடம் போன் பேசிக்கொண்டு இருப்பது தெரிய கைப்பேசியில் ரிகார்ட் பட்டனை அழுத்திவிட்டு, கீழே சென்றாள். அன்னை அறையில் இருந்து பார்த்தால் மகதியின் அறை தெரியும். மகேந்திரனிடம் பேசிவிட்டு மகதி கீழே வருவதை ஓரக்கண்ணால் பார்த்திருந்துவிட்டு பேச்சை தொடங்கினாள்.

எப்படியும் மாலதி அவளது பேச்சில் கரைந்து சாதகமாக செயல்படுவாள் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தாள். அதுபோல மாலதி மகளுக்கு பதில் சொல்லத் தொடங்கவும் முதலில் மகிழ்ந்திருந்தாள். ஆனால் அன்னையின் பேச்சு முடியுமுன்பாக மகதி அவளது அறைக்கு திரும்பியதை கவனித்தாள்.

அன்னையின் முழு பேச்சையும் கேட்ட பின், தன் எண்ணம் நிறைவேறாது என்று புரிந்துவிட ஏமாற்றத்தை காட்டிக்கொள்ளாமல் அன்னையுடன் சுமூகமாக பேசிவிட்டு அறைக்கு சென்று பதிவாகிக்கொண்டிருந்ததை பார்த்தவளுக்கு உற்சாகமாகிவிட்டது. அதன்பிறகு அவள் வேலை சுலபமாகிவிட்டது. மகதி சாப்பிட கீழே சென்றபின் அவளது அறைக்குள் சென்று அந்த கடிதங்களை எடுத்து வைத்துக்கொண்டு அதன் பிறகு சாப்பிடச் சென்றாள்.

மகதி சாப்பிடாமல் யோசனை செய்து கொண்டிருக்க, மதுமதி அவசரமாக சாப்பிட்டு முன்கூட்டியே சென்று மகதியின் டிரஸ்ஸிங் அறைக்குள் பதுங்கிக் கொண்டாள். சற்று நேரத்தில் மகதி அறைக்குள் வந்து யோசித்தபடியே எதையோ தேட ஆரம்பித்தாள். அது அந்த கடிதங்கள் என்று மதுவுக்கு புரிந்தது. அவள் சோர்ந்து அமர்ந்த வேலையில் முகத்தில் மயக்க மருந்தை அழுத்தினாள். அவளை அப்படியே விட்டுவிட்டு வெளியேறி தன் அறையில் உடையை மாற்றிக்கொண்டு கீழே வந்தாள்.

அதன்பிறகு பின்புறமாக உள்ளே நுழைந்தாள். ஏற்கனவே அன்று மகதி உடுத்தியிருந்த உடையைப் போன்றிருந்த அவளது உடையை அந்த பழைய சாமான்கள் இருந்த அறையில் மாற்றிக் கொண்டு பின்வழியாக மாடிக்கு சென்றாள். அன்னையின் அறைக் கதவு பூட்டியிருப்பதை பார்த்துவிட்டு மகதியின் அறைக்குள் செல்ல அவளுடன் அந்த பணிப்பெண்ணும் சென்றாள். இருவருமாக அவளை தூக்கிச் சென்று கோடியில் வெகு நாட்களாக பூட்டியிருந்த விருந்தினர் அறையில் போட்டு பூட்டிவிட்டனர். மதுமதி வந்தவழியே பார்ட்டி உடையை மாற்றிக் கொண்டு கிளம்பிப் போய்விட்டாள்.

மகதியை காணோம் என்றால் மாலதி முதலில் அந்த சாமான்கள் அறையில் தான் தேடுவாள் என்பதால் இருட்டிய பிறகு அவளை அந்த பழைய சாமான்கள் அறைக்கு மாற்றுவதாக திட்டம். ஆனால் எதிர்பாராத விதமாக மாலதி மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. மகதியின் கைப்பேசியை மகேந்திரன் எடுத்துப் போனதால் அவர்கள் சென்ற மருத்துவமனைக்கு மதுமதி எளிதாக செல்ல முடிந்தது.

மங்களம் அவளை வீட்டிற்கு செல்லும்படி சொன்னதும் நல்லதாயிற்று என்று வீடு வந்து மகதியை அந்த பணிப்பெண் உதவியுடன் அந்த அறைக்கு கொணர்ந்து கட்டிப்போட்டுவிட்டு அவளது அறைக்குள் தஞ்சமாகிவிட்டாள் மதுமதி.

மகேந்திரன் மகதியின் கைப்பேசியை செயலிழக்கச் செய்ததால் அவர்கள் திரும்பி வந்தது அவளுக்கு தாமதமாகத்தான் தெரிய வந்தது. அதனால் அவள் கீழே செல்வதை தவிர்த்துவிட்டாள். தவிர மகதியை அகற்றிவிட்ட மகிழ்ச்சியில் இருந்த அவளுக்கு அப்போது போலியான வருத்தம் காட்டி நடிக்கும் மனநிலையும் இருக்கவில்லை. எல்லாவற்றையும் விட அவளை பெற்றவள் அந்த மகதியை காணோம் என்று மயக்கம் போட்டு விழுந்ததை அவளால் ஜீரணிக்க இயலவில்லை.

அவளது அன்னைக்கு பிறந்த முதல் மகள் அவள் தானே? அப்படியிருக்க இன்னொருத்தி எப்படி அந்த இடத்திற்கு சொந்தம் கொண்டாடலாம்?

அவளைப் பொறுத்தவரை அந்த வீட்டில் அவளே எதிலும் முதன்மையாக இருக்கும் வேண்டும். அதை ஒரு நாளும் அவள் விட்டுக்கொடுப்பதாக இல்லை,

மதுமதி ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக எண்ணி குதூகலமாக இருந்தாள். யாருக்கும் தெரியாமலே காரியம் முடிந்து விட்டதை எண்ணி அவளுக்கே ஆச்சர்யமாககூட இருந்தது. அவளுக்கு உதவிய அந்த பணிப்பெண்ணையும் ஒரு நகையை கொடுத்து இனி இந்த பக்கமே வரக்கூடாது என்று அனுப்பிவிட்டாள். அதனால் இப்போது சாட்சியும் இல்லாமல் செய்தாகிவிட்டது. சிலருக்கு கவலையில் உறக்கம் வராது. சிலருக்கு மகிழ்ச்சியில் உறக்கம் வராது. மதுமதி இரண்டாவது வகையில் இருந்தாள்.

முன்பு மாலதி மதுமதியின் தவறை கண்டுபித்தபோது சின்ன பிள்ளை, பெற்ற மகள் என்று போலீசிற்கு செல்லவில்லை. அடுத்து மகேந்திரனும் அவள் உறவாகப் போகிறவள் என்று இரக்கம் கொண்டு போலீசிற்கு போகவில்லை. முதல் இரண்டு முறையும் உடனடியாக அவளது திட்டம் கலைந்து போயிற்று. ஆனால் இந்த முறை அவள் செய்திருப்பதை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது என்று திடமாக நம்பினாள். ஆனால் கூடிய சீக்கிரமே சிக்கிக்கொள்ளப் போவதை அப்போது மதுமதி அறியவில்லை.

அன்று இரவு

கணவர் வந்து உணவருந்தி விட்டு படுக்கையறைக்கு சென்ற பிறகு, அவருக்கான மாத்திரையும் பாலும் கொண்டு கொடுத்துவிட்டு, மாலதி, மகதி கொடைக்கானல் கிளம்பி போயிருப்பதாக தெரிவிக்க, அவர் முகம் மாறியது.

"இதென்ன மாலு இப்போது எதற்காக அங்கே போனாள். அவள் போகிறேன் என்றால் நீயும் சரி என்றுவிடுவதா? ஏன் என்னை ஒரு வார்த்தை கேட்கவேண்டும் என்று உனக்கு தோன்றவில்லையா? அவளுக்கும் தான் அப்பாவிடம் கேட்கவேண்டும் என்ற நினைப்பில்லாமல் போய்விட்டது" மதன்கோபால் சற்று கோபமும் வருத்தமுமாக

மாலதி பதற்றத்துடன், "தப்புத்தான் மன்னிச்சிடுங்க. நீங்க வருத்தக்கடாதீர்கள். இனி உங்களை கேட்டுவிட்டே செய்ய சொல்கிறேன்" என்று சமாதானம் செய்ய முயன்றாள்.

"இதோ பார் மாலதி. இதுதான் கடைசி. இனி அங்கே பேவதானால் நாம் எல்லோரும் சேர்ந்து போய்விட்டு, உடனே திரும்பிவிட வேண்டும். இதுபோல அங்கே போய் தங்குவது எல்லாம் இனிமேல் கூடாது என்று திட்டவட்டமாக சொல்லிவிடு. வளர்ந்துவிட்டாலும் அவர்கள் நமக்கு குழந்தைகள் தான், என்றவர் "சரி நாளைக்கு மறுபடியும் பாண்டிச்சேரி போகவேண்டும் என் டிரஸ்ஸை பேக் பண்ணி வச்சிடுமா,"என்று படுக்கச் சென்றார். ஆனால் அவருக்கு மனோரமாவின் நினைவில் தூக்கம் எளிதாக வரவில்லை. மாலதி கவலைப்படுவாளே என்று கண்களை மூடி அவளுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டார்.

மாலதி, அவருக்கு வேண்டியதை எடுத்து வைத்தபடி மகளின் நினைவில் கண்ணீர் பெருகிற்று, கணவர் அதை அறிந்து விடாமல் இருக்க அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.



அங்கே மகேந்திரன் வீட்டில்...

மங்களத்திற்கு உடம்பில் களைப்பு தெரிந்தபோதும் மகனையும் மருமகளையும எண்ணி கவலைப்பட்டு உறங்க முடியாமல் புரண்டிருந்தார். அப்போது அங்கே வந்த மகனைப் பார்த்துவிட்டு பதறிப்போய் எழுந்து அமர்ந்தார். "என்னாச்சு மகேன்? ஏதேனும் கெட்ட சொப்பனம் கண்டாயா? என்றார்.

"என்னால் தூங்கவே முடியவில்லை அம்மா, மகதி எங்கே எப்படி இருக்கிறாளோ என்று நினைத்தாலே கண்ட கண்ட நினைவெல்லாம் வருகிறது, ரொம்ப பயமாக இருக்கிறது அம்மா. கொஞ்சம் நேரம் உங்கள் மடியில் தலைவைத்து கொள்ளட்டுமா,"என்ற மகேந்திரனின் குரல் கரகரத்தது.

மகனை மடியில் படுக்கவைத்துக் கொண்டவருக்கு கண்கள் கலங்கிற்று. இரவில் நீண்ட நேரம் கண்விழித்தால் கண்டிக்கும் மகன், இன்று அவனைக் கண்டதும் அந்த நேரத்தில் அன்னை எழுந்து அமர்ந்ததையோ விழித்திருப்பதையோ உணரவில்லை என்பது கருத்தில் பட்டது. தந்தை இறந்த போதுகூட தைரியமாக நின்று சரிந்துவிட்ட தொழிலை மீண்டும் வளர்ச்சி பாதையில் நடத்திக் காட்டி இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருக்கும் மகனு இன்று இப்படி கலங்கி தவிப்பதை காண அந்த தாய்க்கு மிகுந்த வேதனையாய் இருந்தது. அந்த இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தூக்கத்தை தொலைத்திருந்தார்கள்.

மறுநாள் காலையில்...

காவல் நிலையைத்திற்கு சற்று முன்னதாகவே வந்து விட்டான் மோகன். இளநிலை காவலாளி வந்து, அவன் முன்தினம் கேட்டிருந்த தகவல்களை கொடுத்தான். அதனை முழுவதுமாக பார்த்த விட்டு இரண்டு காவலர்களை அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தான்.

அன்று பிற்பகலில்..

மகேந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்திருந்தான்.நேராக விஷயத்திற்கு வந்தான் மோகன். " நான் உன் மாமியார் வீட்டினர் மற்றும் வீட்டு வேலைக்காரர்களை விசாரிக்க வேண்டும். அப்போது நீயும் கூட இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். நீ என்ன சொல்கிறாய்? ஏன் கேட்கிறேன் என்றால் புகார் பதிவு செய்யவில்லை. தனிப்பட்ட முறையில் இந்த கேஸை எடுத்திருக்கிறேன். அத்தோடு உன் மாமனாருக்கு இந்த விவரம் தெரியக்கூடாது என்று வேறு சொன்னாயே. ..

"போகலாம்டா, இரு நான் அத்தைக்கு ஃபோன் பண்ணி கேட்டுவிடுகிறேன் என்று மாலதியை தொடர்பு கொண்டு பேசினான். அதன் பிறகு, "மாமா பாண்டிச்சேரி போயிருக்காராம். அதனால் கவலையில்லை. இப்போதே கிளம்பலாம்தானே?"

"இது லீகல் விசாரணை இல்லைடா மகி, உன்னோட நண்பனாக அங்கே போறதுதான் சரி. அத்தோடு ஜீப்பில் போறதும் சரியில்லை. உன் வண்டியில் போவோம். அப்படியே, வழியில் வீட்டிற்கு போய் உடை மாற்றிக்கொண்டு போகலாம். எதற்கும் ஆன்ட்டியையும் கூட அழைத்துக்கொள்ளலாம்" என்று யோசனை சொல்லி மகேந்திரனுடன் அவனது காருக்கு அருகில் வந்தான் மோகன்.

"அது சரிதான். ஆனால் இந்த மாதிரி நேரத்தில் மாயாவை தொந்தரவு செய்யனுமாடா? அம்மாவை அழைக்க நம்ம வீட்டிற்கு போகிறோம்தானே,

அங்கேயே என்னோட உடைகளில் ஒன்றை உடுத்துக்கொள், செய்யலாம் தானே ஆஃபீசர்?? என்றான் கேலியாக...

"இதுவும் நல்ல யோசனைதான்" என்றபடியே காரில் ஏறி அமர்ந்தான் மோகன்.

காரில் போகும்போதே அன்னையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து தயாராக இருக்கும்படி சொன்னான் மகேந்திரன்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Last edited:
Back
Top