Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

25. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
50
Points
28
Location
India
மகதிக்கு மனது படபடத்தது. இத்தனை நாளும் மாலதி அவளுக்கு பக்கபலமாக நின்றாள். கலப்படமற்ற பாசத்தை காட்டினாள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. சொல்லப்போனால் வளர்த்த மகளுக்காக அவள் பெற்ற மகளையே பகைத்துக் கொண்டாள். அந்த நல்ல மனது எத்தனை பேருக்கு வரும். அவள் நினைத்திருந்தால் அழகும் கம்பீரமும் வளமும் நிறைந்த மகேந்திரனை பெற்ற மகளுக்கே ஓசைப்படாமல் கட்டிவைத்திருக்க முடியும். மகதியும்கூட அதை பெரிதாக எண்ணியிருக்க மாட்டாள்.

ஆனால் இப்போது பெற்ற மகள் கண்ணீருடன் நிற்கும் போது வளர்த்த மகளுக்கு நியாயம் செய்ய மனம் வருமா? எந்த ஒரு தாயும் தன் ரத்தத்திற்கு தான் முக்கியத்துவம் தருவாள். மாலதி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா? அதெல்லாம் சினிமாவிலும் கதைகளிலும் தான் நடக்ககூடும். நிஜ வாழ்க்கையில் சாத்தியமே இல்லை. அப்படி ஒருவேளை நியாயத்தின் பக்கமாக அன்னை நிற்க நேர்ந்தாலும் மதுமதி விட்டுக்கொடுக்க மாட்டாள். அதனால் உண்டாகப்போகும் பின் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்.

இத்தனை காலமும் இருந்தது போல இப்போதும் அவள் போய்விட எண்ணினாலும் அது முன்னைப் போல அத்தனை சுலபமில்லை என்று உணர்ந்தாள் மகதி. அந்த வயதிற்கே உண்டான சலனங்களையும் ஆசைகளையும் மனதுக்குள் புதைத்துவிட்டு அவள் பாட்டிற்கு பாடம், சமையல், எஸ்டேட் பிள்ளைகள் என்று சந்தோஷமாக இருந்தாள். ஆனால் இப்போது புதிதாக என்னென்னவோ கற்பனைகளும் ஆசைகளும் முளைவிட்டு வளர்ந்து மணம் பரப்பிக் கொணடிருக்கிறதே.. இதை எல்லாம் வாழும் காலம் வரையில் மறக்கவே முடியாதே... அதைவிடவும் மகேந்திரன் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை. ஆனால் இப்போது அவள் மகேந்திரனை விட்டு விலகுவதை தவிர வேறு வழியே இல்லை என்று எண்ணும்போதே இரண்டு தினங்களுக்கு முன் அவனுக்கு கொடுத்த வாக்கு அசந்தர்ப்பவசமாக நினைவுக்கு வர மனம் வலித்தது. இதோ இதோ என்று சிந்துவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது கண்ணுக்குள் நின்ற கண்ணீர்.

இருப்பினும் இன்னமும் மாலதி பதில் சொல்லிவில்லை. ஆசை கொண்ட மனது அடித்துக் கொண்டது.. ஐந்து நிமிடங்கள் தான் கடந்திருந்தது. ஆனாலும் ஏனோ மகதிக்கு வெகுநேரம் ஆகிவிட்டதை போல தோன்றியது.

மதுமதியின் கண்ணீர் மாலதியை நிலைகுலையச் செய்திருந்தது. அவளுக்கு சற்று நேரம் எந்த உறுப்பும் வேலை செய்யாதது போன்றதொரு உணர்வு.

இதே மகள் தப்பு செய்யும் போது கோபத்தை காட்டி கண்டிக்க முடிந்தது. கோபப்பட்டு பேசினால் மட்டம் தட்டி அடக்க முடிந்தது. ஆனால் இதுவரை அவள் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டதும் இல்லை. கண்ணீர் வடித்ததும் இல்லை. ஒரு தாயாக அவள் கேட்டதை வாங்கி கொடுத்திருக்கிறாள். அவள் கேளாமலே கூட எத்தனையோ வாங்கி கொடுத்திருக்கிறாள். ஆனால் இப்போது மகள் கேட்டிருப்பது?? அதை அவளால் எப்படி செய்யமுடியும்??

மாலதி தடுமாறியது சில நிமிடங்கள் தான். வழக்கத்திற்கு மாறான மகளின் செயலே அவளை நிமிர வைத்தது. ஆனாலும் அந்த நிலையில் கடுமையை காட்ட மனம் வரவில்லை. ஒருவாறு அவள் சுதாரித்து, மகளை எழுப்பி கட்டிலில் அமர வைத்தாள்.

"என்னம்மா இது எதுக்கு இப்ப அழறே? அம்மாவுக்கு உன் மேலே பாசமில்லாமலா உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு பார்த்து பார்த்து செய்கிறேன். தன் மகள் நல்ல இடத்தில் வாழ்க்கைப்பட்டு சந்தோஷமாக வாழனும் என்ற ஆசை எந்த அம்மாவுக்கு தான் இல்லாமல் போகும் சொல்லு? நீ கேட்டது போல அந்த மகேந்திரனை உனக்கு கட்டி வைக்க எனக்கும் ஆசை தான். சொல்லப்போனால் போனால் மங்களம் அண்ணி மாதிரி ஒரு மாமியார் கிடைக்க ஒவ்வொரு பொண்ணும் கொடுத்து வச்சிருக்கனும். அத்தனை நல்லவங்க... என்று வழக்கத்திற்கு மாறாக மாலதியின் நிதானமான பேச்சும், அதுவும் அவளது மகளுக்கு ஆதரவாக பேசவும், அன்னை என்ன சொல்ல வருகிறாள் என்று முழுவதுமாக கேட்காமலேயே, மேற்கொண்டு அங்கே நிற்க மனமில்லாமல், விழிகளில் கண்ணீர் வழிந்தோட அவளது அறையை நோக்கி சென்று விட்டாள் மகதி.

மாலதி தொடர்ந்து பேசினாள்," ஆனால் மகேந்திரன் பெண் பார்க்க வந்தது மகதியைத்தான். அவங்க இரண்டு பேரும் விரும்புறாங்க. அதனால் நீ கேட்ட இந்த விஷயத்திற்கு நான் ஆதரவாக இருக்க முடியாதுமா மது. உனக்கு மகேந்திரனை விடவும் வசதியான மாப்பிள்ளையை நான் பார்த்து வச்சிருக்கிறேன். மகியோட கல்யாணம் நல்லபடியாக முடியட்டும் என்று காத்திருக்கிறேன். அதுவரை நீ லைஃப்பை நல்லா என்ஜாய் பண்ணுடா. சரியா? ? அம்மா உனக்கு நல்லது தான் செய்வேன்டா. இதோட அவளோட விஷயத்தில் தலையிடறதை விட்டுவிடும்மா. மகளின் தலையை வருடி விட்டவாறு அன்னை பேச பேச மதுமதி இறுகிப் போய் இருந்தாள்.*

*ஒருவாறு தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட மதுமதி," சரி அம்மா. இனிமேல் நான் அவள் பக்கமே போகமாட்டேன். என்னை நம்பலாம். போன்ல ஏதோ விஷேசம் என்று பேசிக்கொண்டு இருந்தீர்களே அம்மா, என்ன அது? எனக்கு சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். கூடாது என்றால்...

"மாலதியின் முகம் மலர்ந்தது, அவசரமாக மகளின் பேச்சில் குறுக்கிட்டு,"அதெல்லாம் இல்லை மது, நம்ம வீட்டில் நடக்கப் போகிற முதல் விஷேசம் இது. அதில் நீயும் முழுமனதுடன் கலந்து கொண்டால் சந்தோஷப்படப் போற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன், என்றாள்.

"ம்ம் ஷ்யூர் அம்மா, ஆனால் இன்னும் அது என்ன விஷேசம் என்று சொல்லவில்லையே? என்று புன்னகைத்தாள் மதுமதி.

மகள் சிரிக்கும்போது எத்தனை அழகாக தெரிகிறாள் அப்படியே இன்னொரு மகதி தான் என்று உள்ளூர எண்ணிக்கொண்டு," நான் ஒருத்தி என்று தன் நெற்றியில் தட்டிவிட்டு, மகதிக்கும் மகேந்திரனுக்கும் அடுத்த மாசம் நிச்சயதார்த்தம் நடத்தறதா இருக்கிறோம். அதுதான் சம்பந்தியம்மா ஃபோன் செய்து எங்கே வைப்பது என்று கேட்டார்கள். நம்ம வீட்டைப் போல அவர்கள் வீடும் ரொம்ப பெரியதுதான். ஆனால் அவர்கள் வீட்டில் பக்கவாட்டில் பெரிய தோட்டம் இருக்கிறது. இதுபோன்ற வீட்டோடு நடக்கும் விழாக்களுக்கு என்று அமைத்திருக்கிறார்கள். அங்கே வைக்கலாமா என்று அபிப்ராயம் கேட்டிருந்தார்கள். அப்பாவும் அங்கேயே வைத்துக்கொள்ள சம்மதித்து விட்டார். அதைத்தான் அப்போது சொன்னேன். உனக்கு என்ன மாதிரி உடை வேணுமோ தேர்வு செய்து சொல்லு மது. ஆன்லைனில் வாங்கி விடலாம், என்று உற்சாகமாக சொன்னாள்.

"சரி, அம்மா நான் செலக்ட் பண்ணிட்டு சொல்கிறேன். அப்புறம் எனக்கு புது மாடல் ஃபோன் வேண்டும்" என்றாள்.

"வாங்கிடலாம்டா, அப்பா வரட்டும் குடிக்க ஏதாவது ஜூஸ் வேணுமா?" என்றவாறு சமையல் அறை நோக்கி மாலதி நடக்க,

உடன் நடந்தபடி, "வேணும் அம்மா, கொடுங்க, என்றுவிட்டு அப்புறம் அம்மா, பாக்கெட் மணி தீர்ந்துவிட்டது. இன்னிக்கு ஈவ்னிங் என்னோட தோழிக்கு பர்த்டே, ஒரு கிஃப்ட் வாங்கணும்." என்றதும்,

"ம்ம் இருபது நாளுக்குள் காலி பண்ணிவிட்டாயா?? சரி சரி, நீ கிளம்பறப்போ கேளு தர்றேன்" என்று அவள் கேட்டு பழச்சாறை எடுத்துச் கிளாசில் ஊற்றி கொடுத்து விட்டு, மாலதி, பணிப்பெண்ணிடம் திரும்பி பேச ஆரம்பிக்க, ஜூஸை குடித்துவிட்டு, அவளது அறை நோக்கி நடந்தாள் மதுமதி.

மகதி அவளது அறையின் கட்டிலில் விழுந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். மாலதி மாறிவிட்டாளே என்று எண்ணி எண்ணி, பொங்கியது அழுகை. இனியும் அவள் இங்கே இருப்பதில் அர்த்தம் இல்லை என்று எழுந்து அமர்ந்தவள். வேகமாக ஒரு காகிதத்தில் அவள் இந்த உலகை விட்டு போவதாகவும் , அவளை தேட வேண்டாம் என்றும், காரணங்கள் அவரவருக்கே தெரியும் என்பதால் அதை சொல்ல தேவையில்லை என்றும் எழுதி வைத்தாள். மகேந்திரன் அவளை பீச்சுக்கு வரச் சொன்னது நினைவு வர, அவன் அவளை காணாமல் ஏமாந்து நிற்பானே என்று அவசரமாக யோசித்தாள். உடனே ஃபோனில், அவளுக்கு வயிற்றில் திடீரென்று வலிப்பதாகவும் அன்று மாலையில் சந்திக்க வர முடியாது என்றும் தகவலை அனுப்பினாள்.

அடுத்த ஐந்தாம் நிமிடம் அவனிடமிருந்து அவளது கைப்பேசிக்கு அழைப்பு வந்தது. சிலகணங்கள் தாமதித்து எடுத்து பேசினாள். அத்தனை நேரம் அழுததால் குரலும் சரியாக இல்லாதது சமயத்தில் கைகொடுக்க, "ஹலோ "சொன்னாள்.

"என்னடா ஆச்சு, கொஞ்சம் முன்னாடி நல்லாதானே பேசிக்கொண்டு இருந்தாய்? இப்போது ஏன் இப்படி ஆயிற்று? "

அவனது குரலில் தெரிந்த பதற்றம் அவளுக்கு அழுகையை வரவழைக்க, கட்டுப்படுத்தியவாறு, "ஸாரி மனு, என்னால் முடியவில்லை. இன்னொரு நாள் கட்டாயம் போகலாம் என்ன? "

"ப்சு, அது ஒன்றும் முக்கியமில்லை மதி. உனக்கு இப்படி முடியாமல் போனதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது, என்றவன் "ஹே மதி, உண்மையை சொல்லுடா, நிஜமாகவே வயிற்று வலியா? அல்லது அந்த ராட்சசி ஏதும் உன்னை மிரட்டினாளா?"

மகதிக்கு"திக்"கென்றது. ஏதோ பிரச்சினை என்று கண்டுபித்துவிட்டானே, அவள் மீதுதான் அவனுக்கு எத்தனை பிரியம்? பெருமிதம் கொண்டவள், ஆனால் அந்த அன்பிற்கு அல்பாயுசு என்று எண்ணி உள்ளூர வருந்தினாள். தாமதமாக பதில் சொன்னால் சந்தேகிப்பானே என்று,"சே சே, அதெல்லாம் இல்லைப்பா. அவள் என் அறைப் பக்கம் கூட வர்றது இல்லை மனு, நீங்கள் வீணாக கவலைப்படாதீர்கள், என்னால் முடியவில்லை கொஞ்சம் ஓய்வு எடுக்கட்டுமா ? என்று வினவ,

அரைமனதாக,"சரிடா உடம்பை பார்த்துக்கொள். முடிந்தால் நானும் அம்மாவும் ஈவ்னிங் வருகிறோம். சரியா?"

மறுத்துப் பேசினால் அவன் எங்கே மறுபடியும் சந்தேகப்படுவதோடு நில்லாமல் நேரில் கிளம்பி வந்துவிடுவானோ என்று எண்ணி," ம்ம்.. சரி மனு. நீங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். மதியம் என்னை நினைத்து சாப்பிடாமல் இருக்காதீர்கள். பை" என்று பேச்சை ஒருவாறு முடித்தாள் மகதி.

மதியம் உணவை பேருக்கு உண்டு விட்டு, தலைவலிப்பதால், தூங்கப் போவதாகவும் அதனால் அவளாக எழுந்து வரும்வரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லி அவளது அறைக்கு சென்றாள் மகதி.

மாலதி ஓய்வுக்காக அவளது அறைக்குள் செல்ல, மதுமதி, பிறந்தநாள் கிஃப்ட் வாங்கிவிட்டு அப்படியே பார்ட்டிக்கு போகப்போவதாகவும் தெரிவித்து வெளியே சென்றாள்.

சற்று நேரம் கழித்து மகதி அவசரமாக பின்புறமாக இருந்த படிக்கட்டு வழியாக இறங்கினாள். சுற்றுமுற்றும் பார்வையை ஓடவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, தோட்டத்திற்குள் நுழைந்து பின்பக்கமாக கடலுக்கு செல்வதற்கு என்று அமைக்கப்பட்ட கதவை நோக்கி ஓடினாள்...
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top