Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

18. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
நிரஞ்சன் சொன்னதை கேட்டு மலர்வதனி சப்தநாடியும் அடங்கிப் போனவளாக சிலையாக நின்றது சிலகணங்கள் தான். உடனேயே சுதாரித்து கையில் எடுத்த தட்டுகளுடன் அந்த அறையில் இருந்து அவசரமாக வெளியேறினாள்.
வடிவுக்கரசிக்கும் மகன் சொன்னதை கேட்டதும் சட்டென்று பேச்சு வரவில்லை. ஆனால் அவளது முகம் காட்டிய பாவம் நிரஞ்சனுக்கு என்றும் மறக்காது. ஆச்சரியம், நிம்மதி, ஆறுதல், மகிழ்ச்சி என்று கலவையான உணர்வுகள் அதில் தெரிந்தது. ஆனால் உடனேயே அந்த முகத்தில் அச்சம் பரவி, கண்கள் கலங்கியது. சட்டென்று அன்னையை நெருங்கி, அரவணைத்து,"நீங்கள் எதற்காகவும் கவலைப் படாதீர்கள் அம்மா, நான் இருக்கிறேன். எனக்கு உங்கள் நிம்மதி சந்தோஷம் தான் முக்கியம். அதற்காக நான் எதுவும் செய்வேன்"என்றான் நிரஞ்சன்.
வடிவுக்கரசியின் மனம் மெல்ல குளிர்ந்தது. உள்ளூர இத்தனை நாளும் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் நீங்கியது போல உணர்ந்தாள். ஆனால் இத்தனை காலமாக இல்லாமல் மகன் காட்டும் பரிவு? ஏன் என்று அந்த தாயுள்ளம் ஆராயவும் முற்பட்டது. ஒரு வேளை அவளது ஆயுட்காலம் அதிக நாட்கள் இல்லையோ? எண்ணும் போதே அவளுக்கு மருமகளின் நினைவு வந்தது. அவளும்கூட மகன் சொன்னதற்கு மறுப்பு ஏதும் சொல்லவில்லையே? அவளது மகன் ஆண்பிள்ளை. அவனுடைய தேவையை எப்படியும் சாதித்துக் கொள்வான். தம்பி மகள் அப்படி இல்லை, அதனால் சீக்கிரம் அவளது கடமையை முடித்தாக வேண்டும். ஆனால் அதுவரை அவள் தன்னை பேணிக் கொள்ள வேண்டும்.
நிரஞ்சன்,"அம்மா", என்று உரக்க அழைக்கவும் நிகழ்வுக்கு திரும்பினாள் வடிவுக்கரசி.

"என்னாச்சு அம்மா? கூப்பிட கூப்பிட அப்படி என்னம்மா தீவிரமான யோசனை?"
"அம்மாவுக்கு வேறு என்ன யோசனை வரும்? எல்லாம் பிள்ளைகளை பற்றின நினைப்புதான், என்றவள் மணியை பார்த்துவிட்டு,"ரஞ்சி, நான் போய் சமையலை கவனிக்கிறேன்" என்று எழுந்தாள்.

"அம்மா இன்றைக்கு ஒரு நாள் வதனி சமையல் செய்யட்டும், என்றவன் "அவளுக்கு சமைக்கத் தெரியும் தானே? என்று சந்தேகமாக கேட்டான்.

வடிவுக்கரசி, சிரித்துவிட்டு," தெரியுமாவா? நல்லாவே சமைப்பாள். நேற்று அவள் செய்தது தானே அந்த பிரட் அல்வா. இந்த மூன்று வருஷமாக அவள்தான் எனக்கு உதவியாக இருந்தாள். அதனால் தான் நேற்று ஒன்று இரண்டு புது தினுசும் செய்தேன். ஆனால்? என்று தயக்கத்துடன் நிறுத்தினாள்.

"ஆனால்..கீனால் எதுவும் இல்லை அம்மா. நான் போய் வதனியை சமைக்க சொல்கிறேன். இன்றைக்கு அவள் சொக்கியை துணைக்கு வச்சுக்கிட்டு செய்யட்டும். ஒரு வாரத்தில் சமையலுக்கு வேண்டுமானால் ஆள் வச்சிக்கலாம் அம்மா" என்றான் மகன்.

"என்னடா நீ, விட்டால் என்னை நோயாளியாக படுக்க வைத்துவிடுவாய் போலிருக்கிறதே? எனக்கு தான் ஒன்றும் இல்லை என்று டாக்டர் சொன்னாரே, சமையலுக்கு ஆள் வைக்கிறானாம், அதுதான் இப்போது மலர் இருக்கிறாளே, அவள் என்னை ஒன்றும் செய்ய விடமாட்டாள். சும்மா அவளுக்கு மேல் வேலையை செய்து கொடுத்தால் போதும், இன்றைக்கு ஒரு நாள் மட்டும் உன் பேச்சுக்கு கட்டுப்பட்டு நான் கீழே போகவில்லை, சரிதானா?" என்றதும்

நிரஞ்சனுக்கு அதற்கு மேல் அன்னையை வற்புறுத்த மனம் வரவில்லை. அத்தோடு அறைக்குள் இருந்தால் கண்டதையும் எண்ணி குழப்பம் தான் உண்டாகும். அத்தையும் மருமகளும் சேர்ந்து இருந்தால் அம்மாவின் இதயம்கூட பலப்பட்டு விடலாம். நம்பிக்கையை விடுவானேன். இன்றைக்கு ஒருநாள் ஓய்வெடுப்பதே நல்லது. கீழே எப்படியும் ஒரு யுத்தம் தொடங்கப் போவது உறுதி.
☆☆☆
வடிவுக்கரசியின் அறையில் இருந்து மலர்வதனி வெளியே வந்தபோது அங்கே வந்த மஞ்சுளா,அவளிடம் இருந்த பாத்திரங்களை பெற்றுக்கொண்டு,"மலர் மதியம் அம்மாவுக்கு என்ன சமையல் செய்யனும் என்று பாட்டி கேட்டு வரச் சொன்னாங்க, என்றாள்,

"அதை நீ அத்தையிடம் கேட்டுக்கொள் மஞ்சு, இப்போது பாட்டி எங்கே இருக்கிறாங்க? "

"சரி மலர்"என்ற மஞ்சுளா,"பாட்டி அவங்க அறையில் தான் இருக்கிறாங்க, என்றதும்,

"அப்படின்னா நான் தோட்டத்திற்கு போகிறேன் மஞ்சு, அத்தை என்ன சொன்னாங்க என்று வந்து சொல்லி விட்டுப் போ"என்று கீழே வந்து கூடத்தில் சுற்றிலும் ஒரு பார்வையை ஓடவிட்டவள், அவசரமாக வெளியேறி தோட்டத்தை அடைந்து அங்கே இருந்த கிணற்றின் மீது அமர்ந்தாள்.

நிரஞ்சன் அவளது அறையை மாற்றி விட்டதாக கூறியபோது, அதைக் கேட்டுவிட்டு அவனிடம் மறுத்து பேசி வாதாடாமல் வெளியே வந்து விட்டாளே? அவன் அவளைப் பற்றி என்ன நினைப்பான்? வாய்ப்பை தேடிக் கொண்டிருந்திருக்கிறாள், அது கிடைத்ததும் சந்தோஷம் தாங்காமல் வெளியே ஓடுவதாக மட்டமாக நினைத்திருப்பான். அவளது மனம் நிலையில்லாமல் அலை மோதியது.
அவளது அறை மாறியதில் அவளுக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. அவள் மீது அக்கறை கொண்டு அதை அவன் செய்யவில்லை என்று புரியாதவளா? இத்தனை காலமாக அத்தையால் செய்ய முடியாததை வந்த இரண்டாம் நாளே செய்து விட்டான் என்றால் அவனது அன்னையின் மன நிம்மதிக்காக செய்கிறான். அதில் மகிழ பெரிதாக ஒன்றும் இல்லை. அத்தையின் சந்தோஷத்தை மதித்து மகன் செயல்படுகிறான் என்று ஆறுதல் பட்டுக் கொள்ளலாம் அவ்வளவுதான்.
மலர்வதனியின் பெரும்பாலான நேரங்கள் யாருமற்ற அனாதை போல பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் தான் கழிந்தது. போல என்ன? அவள் அனாதை தானே? துக்கம் தொண்டையை அடைத்தது. பைக்கில் வந்தது முதலே அவளது மனதில் நிழலாக அவளது பெற்றோரின் பிம்பங்கள் வந்து போக, விழிகளில் கரகரவென்று கண்ணீர் வழிந்தோடியது. அம்மா அவளை இங்கே கொணர்ந்து விடாமல் தன்னுடனே அழைத்துப் போயிருக்கலாம். இன்றைக்கு இந்த அவலம் நேராமல் போயிருக்கும் என்று தோன்ற முழங்கால்களில் முகம் புதைத்து அழுகையில் குலுங்கிக் கொண்டிருந்தாள்.

இலைகள் நொறுங்கும் ஓசை, யாரோ வருவதை உணர்த்தியது. சட்டென்று சுதாரித்து எழுந்து தொட்டியில் இருந்த நீரால் முகத்தை கழுவிவிட்டு, புடவை தலைப்பில் அழுந்த துடைத்து கொண்டு நிமிர்ந்தால், அவளை தீவிரமாக பார்த்தபடி நின்று கொண்டிருந்தான் நிரஞ்சன்.

"எ..என்ன விஷயம்? " அவளுக்கே அவளது குரல் கேட்கவில்லை.

"இப்ப என்னாச்சுனு நான் கேட்க வரவில்லை வதனி, உதவிக்கு வேலையாட்களை வைத்துக்கொண்டு இன்றைக்கு நீதான் சமைக்கணும், நாளையில் இருந்து அம்மா வந்து செய்து கொள்வார்கள். உன்னால் முடியும்தானே? இல்லாவிட்டால் சொல்லு, நானே சமைச்சிடுறேன். இப்போது தான் சமையல் கலையை சுலபமாக கற்றுக்கொள்ள நிறைய வழிகள் இருக்கிறதே, அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"நானே சமைக்கிறேன்" என்று வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினாள். லேசாக தோளை குலுக்கிவிட்டு அவளை தொடர்ந்த நிரஞ்சன் அப்போதுதான் அவளது விரித்து விடப்பட்ட கூந்தலை கவனித்தான். இடுப்பிற்கு கீழே வரை நீண்டிருந்த அடர்த்தியான கூந்தல் அவளது நடைக்கு ஏற்ப அசைந்தாடிய அழகை ரசித்தவன் சட்டென்று தன் கைப்பேசியை எடுத்து கேமராவை வீடியோ மோடில் உயிர்பித்தான். அவள் நடந்து செல்லும் அழகை படம்பிடித்தபடியே நடந்தபோது கண்ணில் அது பட்டது... கைப்பேசி நழுவி விழ, அவன் அதிர்ந்து நின்றான்.




















 

Attachments

  • IMG_20201009_182654_423.jpg
    IMG_20201009_182654_423.jpg
    116.8 KB · Views: 0
Back
Top