Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

40. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
திருமணம் மங்களம் சொன்னது போல் அந்த மலைக்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
அந்த சுபயோக சுபதினமும் வந்தது..

மணவறையில்...

மகேந்திரன் முன்னதாக வந்து மணவறையில் அமர்ந்திருந்தான்.

ஐயர் ஹோமம் வளர்த்து மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தார்.

மதுமதி அழகே உருவாக வந்தமர்ந்தாள். அருகில் அமர்ந்திருந்தவனை நாணத்துடன் நோக்கியவளுக்கு, மனதிற்கு பிடித்தவனையே கை பிடிக்கப் போவதை நினைத்து உள்ளம் பூரித்தாள். அவளுக்கு இத்தனை விரைவாக திருமணம் நடக்கப்போவதை எண்ணி வியப்புதான்... இதெல்லாம் கனவில்லை என்று ஹோமத்தின் புகையும் அய்யரின் மந்திரமும் உணர்த்தியது.

இருபது நாட்களுக்கு முன் நடந்தவை யாவும் அவளது நினைவலைகளில் காட்சிகளாக விரிந்தது...

மகதி கனவு கண்டு அழுத அன்றைக்கு.. மறுநாள்..

மதுமதிக்கு சகோதரியின் வாழ்க்கை சீராக வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு சிந்தனை எழவில்லை. அதுமட்டுமின்றி மகதி திருமணத்திறக்கு பிறகும் எந்தவித தவிப்பும் இல்லாமல் வாழ்வதற்கும் ஒரு வழியை அவள் உடனடியாக எடுத்தே ஆக வேண்டும்.. ஆகவே அவள் நேராக மோகனை சந்திக்க கிளம்பிச் சென்றாள்.

மோகனின் மனைவி மாயா அவளை வரவேற்று அமர வைத்தாள். சற்று நேரத்தில் மோகன் வந்து அமர்ந்து, மனைவியிடம் காபி கொணரச் சொன்னான்.

"அண்ணா, நான் போடுறேன். அண்ணியை எதுக்கு தொந்தரவு செய்றீங்க, என்று மதுமதி எழவும் உண்மையில் மோகன் திகைத்துப் போனான்.

"நிஜமா உனக்கு காபி போடத் தெரியுமா மது? என்றான் சந்ததேகமாக..

"நிஜம் அண்ணா. நான் நல்லா சமைப்பேன். வேணும்னா அம்மாவை கேட்டு பாருங்க.. என்றவள். அண்ணி நீங்க இப்படி உட்காருங்க, என்றுவிட்டு, உள்ளே சென்றாள்.

இந்த பெண் மார்டனாக இருக்கிறாள், வெட்டியாக ஆண் நண்பர்களோடு ஊர் சுற்றுகிறாள்.. வீட்டிற்கு அடங்காதவள் என்று எண்ணியிருக்க,.. அவள் போட்டு கொணர்ந்த காபியை குடித்த மோகன் அசந்துதான் போனான்.

"சூப்பர் மது.. எங்கே கத்துக்கிட்டே? என்றாள் மாயா.


"நன்றி அண்ணி. என் அம்மா நல்லா சமைப்பாங்க.. எனக்கு அவங்க தான் ட்ரெயினிங். எங்கப்பா ரெஸ்ட்டாரண்ட் நடத்துறாங்களே.. அவர் பொண்ணுக்கு சமைக்க தெரியலைன்னா வெளியே சொன்னால் கேவலம் என்று அம்மா லீவில் ட்ரில் வாங்கிடுவாங்க.. என்று சிரித்தாள்.

மோகனுக்கு அப்படியே இன்னொரு மகதியை பார்ப்பது போல இருந்தது. இருவருக்கும் அடிப்படையில் நல்ல குணம் தான். நஞ்சை கலந்து விட்டு போன அந்த கிழவியின் மீதும் மாலதியின் மீதும் ஆத்திரம் உண்டாயிற்று. மாலதி மட்டும் இரண்டு பெண்களுக்கும் பாரபட்சம் பாராது இருந்திருந்தால் இன்று மதுமதி இப்படி இருந்திருக்க மாட்டாள். மகதியை தாயில்லா பெண் என்று அதிகம் தாங்கியதால் வந்த வினை இது என்று புரிந்தது.

"இன்னும் என்ன தெரியும் உனக்கு என்றான் மோகன்?

"எனக்கு டான்ஸ் ஆடுவேன். பெயிண்டிங் பண்ணுவேன்.. வீட்டை அலங்காரம் பண்றது.. பார்ட்டிக்கு டெகரேஷன் பண்ண பிடிக்கும்.. என்றாள்.


"நீ என்ன படிச்சிருக்கே? அது சம்பந்தமாக ஏதாவது ஜாப் போய் இருக்கலாமே? என்றான். அப்படி போய் இருந்தால் அவளுக்கு உலகத்தை புரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும்.. மகதியை பற்றி யோசிக்க கூட தோன்றியிருக்காதே என்று நினைத்தான் அவன்.

"நான் நான் இன்டீரியர் டெகரேஷன் கோர்ஸ் படிச்சிருக்கிறேன் அண்ணா.. எனக்கு வேலைக்கு போக ரொம்ப ஆசை. நான் அப்ளை கூட பண்ணினேன். இண்டர்வியூ போக அப்பாக்கிட்டே கேட்டால், அதெல்லாம் அவசியம் இல்லை. கல்யாணமாகி, புருஷன் அனுப்பினால் போய் கொள்" என்றுவிட்டார்..

"சரி, இப்ப சொல் ராத்திரி என்னாச்சு. உடனே என்னை பார்க்கணும்னு ஏன் சொன்னே?


மதுமதி நடந்ததை சொல்லிவிட்டு,"அண்ணா, அம்மா பேசுனப்போ எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. மகதியை நினைச்சு ரொம்பவே கவலையாகிட்டது.. அவள் இப்படியே இருந்தால்.. மனநலம் பாதிக்கப்பட்டுருவா அண்ணா.. அதனால சீக்கிரம் ஏதாவது செய்ங்க.. எனக்கு தெரிஞ்சு இரண்டு வழி தான். ஒன்று நான் ஊரைவிட்டு போகணும் இல்லைன்னா உலகத்தை விட்டு போகணும்.. இரண்டுமே எனக்கு சம்மதம் தான்.. என்றாள் உணர்ச்சி துடைத்த குரலில் உரைக்க..

"உஷ்.. மது என்ன இது அபத்தமாக உளறிட்டு இருக்கிறே?

"நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா? என்றாள் மாயா..

"சொல் மாயா.."

"சொல்லுங்க அண்ணி"

"மதுவுக்கு திருமணம் நடந்தால் ஒழிய இந்த பிரச்சினையை தீர்க்க முடியாது.."

"என்னது? இருவரும் அதிர்ந்தனர்.

"ஆமாங்க, நீங்களே யோசித்து பாருங்க, மகதியோட பயம் என்ன? அவளை இல்லாமல் பண்ணிட்டு மது, மகி அண்ணாவை சொந்தமாக்கிக்க கொள்வாள் என்பது தானே? அப்படி என்றால் அந்த பயம் எப்போ விலகும் சொல்லுங்க? மது இன்னொருத்தருக்கு சொந்தம்னு ஆகும் போது தானே? இதை தவிர்த்து அவள் மாறிட்டதா சொல்றதாலேயோ, அல்லது அவள் வெளிநாட்டுக்கு போறதாலேயோ.. அவளோட பயம் எப்படி விலகும்?

மோகனுக்கு மாயாவின் கேள்வி சரி என்றே தோன்றியது. ஆனால் திடீரென்று மாப்பிள்ளைக்கு எங்கே போவது? என்று யோசனையில் ஆழ்ந்தான்.

அதே நேரம் மதனகோபாலின் வீட்டில்..

காலை உணவுக்காக மிருதுளா, மாலதி, மகதி, மதனகோபால் ஆகியோர் சாப்பிட அமர்ந்திருந்தனர்..

"மாலதி இன்றைக்கு ஷாப்பிங் போகணும் சொன்னியே, இந்த கார்ட் வச்சுக்கோ, அண்ணியையும் சம்பந்தியம்மாவையும் கலந்துக்கோ, மாப்பிளையும் கூட வருவார்தானே?


"அவர் வராமலா? நீங்க என்ன அத்தான் கார்டை கொடுக்கிறீங்க? நீங்க வரலையா?

"இன்னிக்கு பாண்டிச்சேரி போகணும்மா, அப்புறம் மகதி கல்யாணம் முடியறவரை எங்கேயும் போறதா இல்லை.. என்றார்.


"ஏன் மதன், உங்களுக்கே உடம்புக்கு முடியலை.. இப்போ ஓரளவுக்கு பிஸினஸ் நல்லா தானே போகுது?அப்புறம் எதுக்கு புதுசா இன்னொரு கிளை? என்றார் மிருதுளா.

"நல்லா சொல்லுங்க அக்கா, இவர் போய் வர்ற வரைக்கும் எனக்குதான் தவிப்பா இருக்கிறது. என்றாள் மாலதியும்..


"இன்னொரு பெண் இருக்கிறாளே அண்ணி, இரண்டு பேருக்கும் ஒரளவுக்கு சமமாக தான் சேர்த்திருக்கிறேன்.. என் கை கால்கள் திடமாக இருக்கும் போதே சம்பாதிச்சுடணும் அண்ணி. பக்கத்து மாநிலம் என்பதால் தான் நான் அந்த பழைய ரெஸ்ட்டாரண்ட்டை டேக் ஓவர் செய்து நடத்தவே ஒத்துக்கிட்டேன். கிட்டத்தட்ட எல்லா பேப்பர் வொர்க்கும் முடிந்துவிட்டது.. ரெனோவேஷன் பண்ண காண்ட்ராக்ட்டரை வர சொல்லியிருக்கிறேன். அதனால போய்த்தான் ஆகணும் அண்ணி"என்றார்.

"ஓ! அவ்வளவு வேலைகள் முடிந்துவிட்டது என்றால், மேற்படி வேலைகளை கவனித்து தான் ஆகணும் மதன். அதுவும் போட்டி நிறைந்த சவாலான தொழில் இது.. நம்ம மகதியை மாப்பிளை வீட்டில் இப்பவே தங்கமா பார்த்துக்கிறாங்க, அதனால அவளைப் பற்றி கவலை இல்லை. புதுசா தொழில் தொடங்கினா, நீங்க பாதி நாள் அங்கே தங்க வேண்டியதாக இருக்கும்.. அதனால, மதுமதிக்கும் சீக்கிரம் ஒரு வரன் பார்த்துக் , கல்யாணத்தை முடிக்க பாருங்க.. அப்புறமா ஆச்சியும் ஐயருமா அங்கேயும் இங்கேயும் இருந்துக்கலாம்.. "

"மதுவைப் பத்தி தான் ரொம்ப கவலையா இருக்கு அண்ணி. நீங்க சொல்றாப்ல அவளுக்கும் ஒரு நல்ல பையனாக பார்த்து அவள் கல்யாணத்தை முடிச்சிட்டா நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேன் அண்ணி,என்றவர் நினைவு வந்தவராக,"ஆமா மது எங்கே?என்றார் மதனகோபால்.


"அந்த மகாராணிக்கு இன்னும் விடிஞ்சிருக்காது அத்தான். எப்ப எழுந்துக்கிறாளோ எழட்டும்.. நாம் கிளம்புவோம்.. அவளையும் கூட கூட்டிட்டு போனால் பூனையை மடியில் கட்டிட்டு சகுனம் பார்த்த கையாக போய்விடும்.. என் வயிற்றில் வந்து பிறந்த பாவத்துக்காக தான் எல்லோரும் அவள் தப்பை மன்னிச்சுடுறாங்க.. அவள் தூங்கிறப்போ தான் நாம கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடியுது.. அவள் முழிச்சிருந்தால் என்ன சதி பண்றாளோனு மனசு பதைச்சுட்டே இருக்க வேண்டியிருக்கு, என்றாள் மாலதி வெறுப்பும் ஆத்திரமுமாக..

"மாலதி, நல்ல விஷயம் பேசுறப்போ ஏன் இந்த பேச்சு.. முதலில் நீ இப்படி அவளை பேசுறதை நிறுத்து.. அவள் இப்படி மாறுனதுக்கு ஒரு வகையில் நாமும் தான் காரணம்.. மகதி மேல் உனக்கு தனி பிரியம் என்று எனக்கு தெரியும்.. ஆனால் அதுக்காக மதுவை நீ அவகூட ஒப்பிட்டு ஒப்பிட்டு தான் அவள் நம்மளை விட்டு விலகிட்டே போறாள்.. அதனால இந்த கல்யாணம் முடிகிற வரைக்குமாவது நீ அவகிட்டே கடிஞ்சுக்காமல் இரு.. என்றார் மிருதுளா.

"என்ன அக்கா இப்படி சொல்லிட்டீங்க? நான் அவளை பெற்றவள். எனக்கு அவள் மேல் பாசமில்லையா, அக்கறை இல்லையா ? என்றாள் வருத்தமாக

"ப்ளீஸ் அம்மா, பெரியம்மா சொல்றதும் சரிதான்.. அவகிட்டே நாம் கொஞ்சம் கடுமை காட்டாமல் நடந்துப்போமே.. மேலும் மேலும் அவளை கோபப்படுத்தினால் அவள் வீம்புக்கு எதையாவது பண்ணுவாள் அம்மா.. என்றாள் மகதி..


சிலகணங்கள் மௌனமாக சிந்தனையில் ஆழ்ந்தவள்.."என்னவோ இரண்டு பேரும் சொல்றீங்க, ஆனால் அவள் திருந்துவாள் என்று எனக்கு நம்பிக்கையே இல்லை.. சரி சரி உங்க ஆசையை ஏன் கெடுப்பானேன், இனிமே நான் அவள்கிட்டே கடுமை காட்டாமல் இருக்கிறேன். சரி இப்ப எல்லோரும் போய் கிளம்புங்க.. என்று தன் அறைக்கு சென்றாள் மாலதி.

மிருதுளா சொன்னதை கேட்டிருந்த மதனகோபாலுக்கும் அவரது கூற்று சரி என்று தோன்றியது. அன்பாக சொல்லி திருத்த முயற்சி செய்யாமல் விட்டதால் தான் சின்ன மகள் புத்தி மாறிப் போனாளோ என்று வருந்தினார்.


மோகன் வீட்டில்..

மதுமதிக்கு திருமணம் செய்வது என்றால் திடுமென மாப்பிள்ளை எப்படி கிடைப்பான்? அப்படியே தேடிப் பிடித்தாலும் அவன் யார் என்ன குணம் என்று ஆராய்வதற்கே நாட்கள் பத்தாதே.. என்று மோகன் சிந்தித்து கொண்டிருக்கும் போது

"ஹாய்டா, என்ன ரொம்ப தீவிரமான யோசனை? ஏதாவது கேஸ் விஷயமா யோசிக்கிறியா? என்றவாறு மகேந்திரன் வந்து நின்றான்.

"வாடா மகி, உட்கார்" என்று மோகன் வரவேற்க,

"வாங்க அண்ணா? காபி கொண்டு வரவா? என்றாள் மாயா.


"இப்ப வேண்டாம்மா. கொஞ்சம் நேரம் போகட்டும்..
"ஹாய் மது என்ன அப்படியே திகைச்சு போய் நின்னுட்டே? என்னடா, நடக்க முடியாதவன் எப்படி நடந்து வர்றான் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? என்றான் மகேந்திரன்.

"ஆமா அத்தான், ஆனால் உங்களை மறுபடியும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. என்று உளமாற சொன்னவளை வியப்புடன் பார்த்த மகேந்திரன்.

"நானும் உன்னிடம் இப்படி ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை மது.. எனக்கும் உன்னை இப்படி பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.. ஏன் நிற்கிறே உட்கார்" என்றவாறு ஒரு இருக்கையில் அமர்ந்தான்.


"மகி, உன் தங்கச்சி ஒரு ஐடியா சொன்னா, ஆனால் அதை எப்படி நடத்தறதுன்னு தான், எனக்கு புரியவில்லை " என்ற மோகன், அதைப் பற்றி சொன்னான்.

"எனக்கும் மாயாவோட ஐடியா தான் பெஸ்ட் என்று தோன்றுகிறது மோகன். மாப்பிள்ளைக்கு தான் என்ன செய்யறது? என்றான் மகேந்திரன் யோசனையுடன்..

"மது, நீ எதுவும் சொல்வில்லையே? உனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிறதுல சம்மதம் தானே? நாங்க சொல்றோம் என்று நீ இதற்கு சம்மதிக்காதே சரியா? என்றாள் மாயா..

"அண்ணி, நானும் ஒரு நாள் திருமணம் செய்துக்கணும் தானே? அதை இப்ப பண்ணிக்கிறேன் அவ்வளவுதான். அதுவும் என்னால் ரொம்ப மனசு நொந்து போயிருக்கிற மகதி, சந்தோஷமா நிம்மதியாக இருக்கிறதுக்கு, என் கல்யாணம் தான் தீர்வு என்றால் நான் சந்தோஷமாவே சம்மதிக்கிறேன். எனக்கு இப்ப அவளோட நிம்மதி தான் எல்லாத்தையும்விட முக்கியம்.."

மகேந்திரனுக்கு உள்ளபடியே மனதில் ஒருவித அமைதி உண்டாயிற்று. அன்று வரை மதுமதியால் தனது வருங்கால மனையாளுக்கு எந்த நேரத்தில் என்ன ஆபத்து நேருமோ என்ற பதற்றமும் பயமும் இருந்து கொண்டே இருந்தது..

அன்று அதிகாலையில் மோகன் அவனை கைப்பேசியில் அழைத்து உரையாடியது நினைவு வந்தது.

மோகன் அவனை அழைத்த போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.


"டேய் நிம்மதியா ஒரு கனவு காணக்கூட விடமாட்டியாடா? என்று சலித்தபடிதான் கைப்பேசியில் பேச ஆரம்பித்தான் மகேந்திரன்.

"ஆமாடா, உன்னை கனவு காண விடக்கூடாது என்று எனக்கு வேண்டுதல் பாரு, என்று கடிந்தான். உடனே,"நான் அவசியம் இல்லாமல் கூப்பிடுவேனா? இது முக்கியமான விஷயம்டா. நீ உடனே கிளம்பி வா, மதுமதி என்கிட்டே பேசணும்னு தகவல் அனுப்பியிருக்கிறாள்..


"மதுமதியின் பெயரைக் கேட்டதும் அவனது தூக்கம் முழுமையாக விலகிவிட, எழுந்து அமர்ந்தான். "மதுவா? என்னடா சொல்றே? அவள் எதுக்கு உன்னை பார்க்க வர்றா? என்னடா நடக்குது?என்று படபடத்தான்.

மோகன் முன் தினம் அவன் மதுமதியை சந்தித்து பேசிய விவரத்தை தெரிவித்துவிட்டு, தொடர்ந்து, "எனக்கும் என்ன விஷயம் என்று தெரியவில்லை மகி. மகதி விஷயமாக சந்திக்கணும் எங்கே வரட்டும்னு கேட்டிருந்தாள். அதனால் அவளை அவங்க ஏரியா பக்கம் ரிசார்ட் இருக்கிறதே அங்கே வரச் சொல்லியிருக்கிறேன். நீயும் அங்கே வந்து விடுடா.. என்றான்.

"டேய் நீ லூசாடா? உன்னை எல்லாம் எப்படிடா போலீஸ் வேலைக்கு எடுத்தார்கள்? என்று மகேந்திரன் கோபத்தில் படபடத்தான்.

"டேய்... இப்ப எதுக்குடா என் உத்தியோகத்தை பற்றி பேசுறே? மதுவை சந்திக்கிறதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்? என்றான் மோகன் எரிச்சலுடன்.

"பின்னே என்னடா அவளே சரியான கிரிமினல். அவளைப் பற்றி தெரிஞ்சும் அவள் பேச்சை நம்பி நீ அவள் கூப்பிட்டள் என்று போகணும்னு என்னையும் கூப்பிடறியே? இது கூட அவளோட புது பிளானாக இருக்காது என்று என்னடா உத்தரவாதம்?

"மகி, நான் போலீஸ்காரன்டா, யார் பொய் சொல்றாங்க? யார் நடிக்கிறாங்க? யார் உண்மை பேசுறாங்க என்று என்னால் கண்டுபிடிக்க முடியும்டா.. அதிலும் மதுமதி ஒன்றும் தொழில் முறை கிரிமினல் கிடையாது.. அவளுக்கு மகதி மேல் இருந்தது ஒருவிதமான வெறுப்பு, அதுவும் அது சரியா தப்பா என்றுகூட தெரியாத அளவுக்கு கண்மூடித்தனமாக மனதில் வளர்த்துக் கொண்டது.. நேற்று அவள் அதில் இருந்து தெளிந்து விட்டாள்.. அது மட்டுமில்லை. மகதியை கடத்தியதை கூட அவள் ஒத்துக் கொண்டாள். தன்னை உடனேயே கைதும் செய்யச் சொன்னாள். அத்தோடு இன்னும் எங்க கண்காணிப்பும், அவளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எனக்கும் நூல் அளவுக்கு சந்தேகம் இருக்கு. அதை தெளிவு படுத்திக்கத்தான், உன்னையும் இப்ப வர சொல்றேன்.. உன் காலுக்கு ஒன்றும் ஆகவில்லை என்று தெரியும் போது அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்று பார்க்க வேண்டும்... உன் நண்பன் ஒன்றும் சும்மா, மந்திரத்தில் இந்த நிலைக்கு உயரவில்லை மாப்பிள்ளை.. என்றதும்..


"மன்னிச்சிடுடா.. உன்னை காயப்படுத்த சொல்லவில்லை. நான் நேரடியாக அவளது நாடகத்தை பார்த்தவன் அதனால் தான் கொஞ்சம் உணர்ச்சிவசப் பட்டுட்டேன்.. சரிடா அவளை நாம வெளியே ஏன் சந்திக்கணும்? உன் வீட்டுக்கு அவளை வரச் சொல்.. அவள் வர்றதா ஒத்துக்கிட்டா, நானும் நம்பறேன்.. என்ன சொல்றே?"

"அப்படியே இருடா நான் concall பண்றேன்.. நீயே கேள்" என்று அவளை அழைத்து விவரம் சொன்னான்..

மதுமதி ஒருகணம் கூட யோசிக்கவில்லை."சரி அண்ணா, அட்ரஸ் & லொகேஷன் அனுப்புங்க, வந்துடுறேன்.. நானும் அண்ணியை பார்த்த மாதிரி இருக்கும்.. "என்றாள்

"மகேந்திரனுக்கு அப்போதே சற்று நம்பிக்கை தான்.. ஆனாலும் நேரில் அவனை பார்த்த பின் அவளது பாவனை எப்படி இருக்கும் என்று அறிய விளைந்து கிளம்பி வந்திருந்தான். இப்போது பார்த்தும்விட்டான்.. முழுமையாக நம்பவும் செய்தான்.

"நான் ஒன்று கேட்டால் தவறாக நினைக்க கூடாது மது" என்றான் மகேந்திரன்.

"கேளுங்க அத்தான்"


உன்கூட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் தானே அவர்களில் யாரையேனும் நீ விரும்புகிறாயா?"

"இல்லை அத்தான், எல்லோரும் எனக்கு உண்மையான நண்பர்கள் அவ்வளவுதான் தான். அவர்களும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் நிச்சயம் சொல்லியிருப்பார்கள்.. "

"ஹூம்.. ஓகே மது" என்ற மகேந்திரன் யோசனையில் ஆழ்ந்தான்..

மற்ற இருவரும் கூட தீவிர யோசனையில் தான் இருந்தனர்.

திடீரென்று,"ஹே.. ஒரு மாப்பிள்ளை இருக்கிறான். அவனுக்கு மதுவை பற்றி எல்லாம் ஓரளவுக்கு தெரியும்.. "என்றான் மகேந்திரன்.


"அது யாரு? அத்தான் எனக்கு தெரியாமல் என்னை அறிந்தவர்? என்றாள் மதுமதி.

கொடைக்கானலில் எஸ்டேட் வாங்க வந்தவனாடா?"

"ஆமாடா, மித்ரன் தான், மிருதுளா அத்தையோட நாத்தனார் மகன். நேற்று மணிவாசகம் மாமாகூட ரிசார்ட் கட்டணும்கிறான், அது பற்றி உங்களுக்கு தான் நல்லா தெரியும் மாப்பிள்ளை. அதனால நீங்க ஒரு முறை வந்து இடத்தை பாருங்கள் என்று சொல்லிட்டு இருந்தார். மகதி கூட அவனை பற்றி நல்லவிதமாக சொன்னாள்.. எஸ்டேட் வாங்கணும், பிஸினஸ் பண்ணனும்.. இந்தியாவில் செட்டில் ஆகணும் என்பது அவனது விருப்பம். அவங்க அம்மாகூட அவனுக்கு தீவிரமாக பெண் பார்ப்பதாக மகதி சொன்னாள். ஆக, அவன்கிட்டே பேசிப் பார்க்கலாம்.. இரண்டு நாள் அவகாசம் கொடுங்க மக்கா, நான் நாளைக்கு நேரடியாக போய், அவன்கிட்டே பேசிட்டு வந்து சொல்றேன்.. என்ற மகேந்திரனின் குரலில் நம்பிக்கை தெரிந்தது..


"ஓகேடா, செய், மறுபடியும் நாம் எப்ப மீட் பண்ணலாம் என்று போன் பண்ணு... என்ற மோகன், "மது, நீ தினமும் இங்கே வந்து மாயாகூட இருக்கிறியா? நான் ஆன்ட்டிகிட்டே அனுமதி வாங்கிக்கிறேன்.. உனக்கு சிரமம் ஒன்றும் இல்லையே.. அப்புறம் ஒரு சின்ன விஷயம்.. உன்னோட போனை ஆஃப் பண்ணி ஆன்ட்டிகிட்டே கொடுத்துவிட்டு வர முடியுமா? இது கட்டாயமில்லை.. ஆனால் ஆன்ட்டிக்கு உன் மேல் நம்பிக்கை வர்றதுக்காக.. "

அவனது பேச்சில் குறுக்கிட்டு," நீங்க என்ன சொன்னாலும் அது என்னோட நல்லதுக்குதான் என்று எனக்கு தெரியும் அண்ணா. அப்படியே செய்கிறேன்.. அங்கே இருந்தாலும் மகதி பயந்துட்டே இருப்பாள். அதுவே நான் இங்கே உங்க கண்காணிப்பில் இருக்கிறேன் என்றால் கொஞ்சம் நிம்மதியா இருப்பாள்.. என்றாள் மதுமதி.

"சரி, நீ எதுல வந்தே மது? என்று எழுந்தான் மகேந்திரன்

"ஆட்டோவில் அத்தான், என்று அவளும் எழுந்து,"சரி அண்ணா, அண்ணி நான் போயிட்டு வர்றேன்.. என விடைபெற,


"வா நான் உன்னை ட்ராப் பண்ணிடுறேன் மது.. அப்படியே இன்னிக்கு எங்கே பர்சேஸ் போறதுன்னு அத்தைக்கிட்டேயும் கேட்டுவிடுவேன்.."

"ஹா ஹா.. நீங்க எதுக்கு வர்றீங்கனு நான் கேட்கவே இல்லையே அத்தான்.. அப்புறம் விளக்கம் ஏன் கொடுக்கிறீங்க.. உங்க உட்பியை பார்க்கணும்னா வாங்களேன் யார் வேணாம்னாங்க, என்று மது கேலியில் இறங்கவும்..

"மகேந்திரன் சற்றே அசடு வழிய, மற்ற மூவரும் கேலியாய் சிரித்தனர்..

மதுமதி, மகேந்திரனுடன் வீடு சென்ற போது, மாலதி மட்டுமே கூடத்தில் இருந்தாள்.

இருவரையும் கேள்வியாக நோக்கியவளின் கண்களில் கலவரம் தெரிந்தபோதும், மருமகனை வரவேற்று, அமரச் சொன்னாள். மதுமதி நேராக மாடிக்கு சென்றுவிட,


"காபி வேண்டாம். இப்பதான் குடிச்சேன்.. என்றவன், ஒரு விஷயம் கவனிச்சீங்களா அத்தை? என்றான்.

"என்ன விஷயம் மாப்பிள்ளை? மது எப்படி உங்ககூட வந்தாள்? என்றாள் மாலதி கலவரமாக
கலவரமாக..


"மது நிறைய மாறிட்டா அத்தை.. எப்படினு கேளுங்க, எனக்கு கால் வராதுன்னு சொல்லி வச்சிருந்தோம் இல்லையா? இப்ப என்னை இப்படி பார்த்தால் பழைய மதுவா இருந்தால் கத்தி, கூச்சல் போட்டு சண்டைக்கு நின்றிருப்பாள்... ஆனால் இப்ப என்னை பார்த்ததும் அவள் சந்தோஷப்பட்டாள். நானும், "இவ்வளவு காலையில் எங்கே போய்விட்டு வர்றேன்னு கேட்டேனா.."பிளட் டோனேட் பண்ண போனேன் அத்தான். ஆனால் நான் போறதுக்குள்ளே அவங்களுக்கு வேற யாரோ வந்துட்டாகளாம்.. அதான் நான் திரும்பி வந்துட்டு இருக்கிறேன் " என்றாள். அத்தான்னு அவள் கூப்பிட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியம் அத்தை.."

"மாப்பிள்ளை நீங்க சொல்றதை கேட்கிறப்போ நம்பவும் முடியலை,நம்பாமல் இருக்கவும் முடியலை.. எனக்கும் அவள் மாறணும் என்று தான் ஆசை மாப்பிள்ளை.. ஆனால் ஏற்கனவே அவள் நடந்து கொண்டதை வச்சு பார்க்கும் போது உள்ளூர பயம் தான் உண்டாகுது மாப்பிள்ளை. எதுக்கும் நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க" என்றாள்.

"ஹூம், உங்க பயமும் நியாயம் தான் அத்தை. அனுபவிச்ச உங்களுக்கு தான் அதோட வலி தெரியும் என்று அவளை ஒத்தே பேசியவன், மேற்கொண்டு ஷாப்பிங் பற்றி பேசியிருந்து விட்டு,மகதி எழுவதற்கு தாமதமானதால் சற்று நேரத்தில் கிளம்பிவிட்டான் மகேந்திரன்.

மோகன் சொன்னபடி மதுமதியை தன் வீட்டிற்கு அழைத்துப் போக வந்தான். அப்போதுதான் பெண்கள் மூவரும் கடைக்கு கிளம்ப தாயாராகி கால் டாக்ஸியின் வருகைக்காக கூடத்தில் காத்திருந்தவர்கள் அவனை யோசனையாக பார்த்தனர். சரியாக, அப்போது கால் டாக்ஸியும் வந்துவிட,"நான் தம்பிக்கிட்ட என்னானு கேட்டுட்டு வர்றேன்,நீங்க போய் காரில் உட்காருங்கள் என்றாள் மாலதி..

மோகன், மாலதியிடம் விஷயத்தை சொன்னதோடு,"மது ,கொஞ்சம் கீழே வா, என்று அழைத்து," நீ இங்கே தனியா போர் அடிச்சுட்டு ஏன் இருக்கணும். பேசாமல் உன் அண்ணிக்கு கம்பெனி கொடுக்கிறாயா? என்றான்.


"ஷ்யூர் அண்ணா,நான் இப்பவே ரெடியா தான் இருக்கிறேன்.." என்றுவிட்டு தன் கைப்பேசியை அனைத்து தாயிடம் கொடுத்துவிட்டு,"போகலாம் அண்ணா" என்றாள் மதுமதி.

"சரி, நீ போய் ஜீப்பில் உட்கார், நான் பின்னாடியே வர்றேன்.. என்று அவளை அனுப்பிவிட்டு,"ஏதோ சொல்ல வந்தீங்களே சொல்லுங்க ஆன்ட்டி " என்றான்.

மாலதி அவனிடம்,"தம்பி, நீங்க எனக்கு பிள்ளை போல, உங்க மேலே இருக்கிற அக்கறையில் சொல்றேன்.. அவளை கூட்டிட்டு போய், அப்புறம் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆகிடப் போகுது தம்பி.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை தம்பி, என்றாள் கவலையும் பயமுமாக..


"என்னை உங்க பிள்ளையா நினைக்கிறதுக்கு ரொம்ப நன்றி ஆன்ட்டி.. நானும் மதுவை என் தங்கையாக தான் பார்க்கிறேன். அவள் தப்பு செய்தால் திருத்துவதும் என் கடமைதானே..? நீங்க சொன்னது போல இது விஷப்பரீட்சை போலத்தான். மதுமதி மாறணும்னு நாம் சும்மா நினைச்சா போதாது ஆன்ட்டி. அதற்கான சந்தர்ப்பத்தையும் கொடுக்கணும்.. நான் கூப்பிட்டதும், அவள் சந்தோஷமாக கிளம்பி போகலாம் அண்ணா என்று வண்டியில் ஏறிவிட்டாள் பாருங்க.. நான் சொன்னதுக்காக, அவள் போனை உங்ககிட்டே கொடுத்துட்டாள்.. இதுக்கு அப்புறமும் நீங்க அவளை சந்தேகப்படறது சரி இல்லை ஆன்ட்டி.. நீங்க ஒரு நாள் சொன்னது போல அவள் அடிப்படையில் கெட்டவள் இல்லை. அவள் மனதில் விஷமாக விழுந்த நினைப்பு தான் மகதி மேல் பகையா மாறிடுச்சு, இப்போது கூட மகதியோட நிம்மதிக்காகத் தான் அவளை அழைத்து போகிறேன்.. மற்றபடி வீட்டு வேலை செய்ய ஆள் வருவாங்க..இது தவிர வெளியே சென்ட்ரி போலீஸ் இருக்காங்க.. நானும் முடிஞ்ச அளவுக்கு, வீடியோ கால் பண்ணி பேசிடுவேன்.. அதனால் பயமே வேண்டாம் ஆன்ட்டி.. நீங்க நிம்மதியாக இருங்க, என்றுவிட்டுப் போனான் மோகன்.

மாலதிக்கு, முன்னதாக மருமகன் பேசியதும், இப்போது மோகன் போசியதும் கேட்டு, சின்ன மகள் மாறி இருப்பதாகத் தான் தோன்றியது. இல்லை என்றால் உடம்பில் ஒரு உறுப்பாக மாறிப்போன செல்ஃபோனை தன்னிடம் கொடுத்துவிட்டு அவள் போயிருப்பாளா? ஆகவே ஜவுளி எடுக்க சென்ற இடத்தில் புடவைகள் தேர்வு செய்தபோது, சின்ன மகளுக்கும் சேலை எடுக்க நினைத்தாள்.. பெற்ற மனம் ஆயிற்றே.. மங்களத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைத்தாள். இரவு ஏழு மணிக்கு அவர்கள் வீடு திரும்பினர்.


மிருதுளாவும், மதனகோபாலும் அசதியாக இருப்பதாக சொல்லி அவரவர் அறைகளுக்கு சென்றுவிட தாயும் மகளும் கூடத்தில் வாங்கி வந்ததை சரி பார்க்க அமர்ந்தனர்..

அரைமணி நேரம் கழித்து ஆட்டோவில் வந்து இறங்கிய,மதுமதி செருப்புகளை கழற்றி விட்டு, வீட்டுக்குள் அணியும் செருப்பை போட்டுக் கொண்டு, கூடத்தில் ஓசை எழுப்பாமல் பிரவேசித்தாள். அங்கே மாலதியும், மகதியும் மட்டுமாக வாங்கி வந்த பொருட்களை கடை பரப்பிக் கொண்டிருந்தனர். அதனால் அவள் வந்ததை கவனித்தது போல் தெரியவில்லை.

"மகதி, இந்த இரண்டு சேலைகள் ரொம்ப அழகா இருக்கு, நீ வாங்கினியாடா? அல்லது தெரியாமல் நம் புடவைகளோடு வந்து விட்டதா" புடவைகளை வருடியபடி மாலதி கேட்டாள்.


"இல்லை அம்மா, உங்களிடம் சொன்னால் கோபித்து கொள்வீர்கள் என்று உங்களுக்கு தெரியாமல் இந்த இரண்டு சேலைகளை நான் மதுவுக்காக வாங்கினேன்.. தயங்கியவாறு சொனானாள் மகதி.

அதை கேட்ட மதுமதி, அப்படியே கண்கள் பனிக்க.. வாசல்புறமாக இருந்த ஒரு தூணின் பின் மறைவாக நின்று விட்டாள்.. மகதியின் குணத்தை பற்றி மோகன், மற்றும் மகேந்திரன் சொன்ன போது அவளுக்கு நம்பக் கொஞ்சம் கடினமாக இருந்தது. சொல்லப்போனால் மகதி இடத்தில் தான் இருந்தாலும் வெறுப்பதுதான் இயல்பு.. அப்படி இருக்க அவள் மட்டும் எப்படி மாறுபட முடியும் என்று நினைத்தாள்.. ஆனால் இதோ நேரடியாக அவள் பார்த்துவிட்டாள். அவளை கொல்ல துணிந்தவள் என்று அறிந்தும் மறக்காமல் அவளுக்கு உடை எடுப்பது என்றால் அது என்ன மாதிரியான பாசம்.. பிளஸ் டூ சமயத்தில் அந்த சம்பவம் நடக்கும் வரை, தங்கையை வாடா போடா என்று தன்னை மகதி விளித்தது நினைவு வந்தது. அப்போதும் நடிப்பதாகத்தான் எண்ணியிருந்தாள்..அங்கே தொடர்ந்து மாலதி பேசுவது கேட்க, அதில் கவனமானாள்..

"அப்படியாடா,சந்தோஷம் அவளுக்கு நானும் இரண்டு புடவை எடுத்துவிட்டேன்.. என்று மாலதி எடுத்து காட்டினாள்.. கூடவே, என்ன இருந்தாலும் இது நம்ம வீட்டில் வெகு காலத்துக்கு பிறகு நடக்கிற முதல் விசேஷம்... அவளுக்கு வாங்காமல் விட மனசு வரலைடா.."

"அட அம்மா, என்கிட்டே போய் எதுக்கு இந்த விளக்கம் எல்லாம் கொடுக்கிறீங்க? நீங்க அவள் மேலே கோபமா இருப்பீங்களேனு தான் நான் வாங்கினேன்.. ஆனால் நீங்க ஒரு நல்ல அம்மா என்று இப்பவும் காட்டிவிட்டிங்க.. அந்த மடச்சிக்கு எப்பத்தான் நம் பாசம் புரியுமோ தெரியவில்லை. நேரமாகுதே அம்மா இன்னும் அவளை காணோமே? என்றவள் குரலில் வருத்தம் கவலை தெரிந்தது..

"மேகலா,மது வந்துட்டாளா? என்று பணிப்பெண்ணிடம் விசாரித்தாள் மாலதி..

"இன்னும் வரலை போல.. நான் கவனிக்கவில்லை அம்மா" என்றாள்..


"போய் அவள் அறையில் இருக்கிறாளா? இல்லை, அறை பூட்டியிருக்கிறாளா என்று பார்த்து வா.. என்று விரட்டினாள்.. பணிப்பெண் பார்த்து வந்து,

"அறை திறந்துதான் இருக்கு, ஆனால் பாப்பா அங்கே இல்லைங்கம்மா" என்றாள்..

"அம்மா நான் காலையில் பார்த்தப்போ கூட திறந்து தான் இருந்தது. பூட்ட மறந்துட்டாள்னு நினைச்சேன்மா.. அண்ணாவுக்கு போன் பண்ணி கேளுங்கம்மா"

இனியும் அங்கே நிற்க கூடாது என்று அப்போது தான் வருவது போல அவர்கள் இருந்த பக்கமாக மெல்ல நடந்து வந்தாள்.. மதுமதி.

"சாப்பிட்டியா மது?"என்றாள் மாலதி.

"இல்லை அம்மா, சாயந்திரம் அண்ணா வீட்டுல எண்ணெய் பலகாரம் சாப்பிட்டேன்.. அதனால டிபன் வேண்டாம், கொஞ்சம் பொறுத்து பால் மட்டும் குடிச்சுக்கிறேன்.." என்றவள் நில்லாது மாடிக்கு விரைந்து விட்டாள்.


"மோகன் இவளை ரொம்ப நம்புறான் மகி.. எனக்கு இவள் அவன் வாழ்க்கையில் ஏதும் விளையாடிட கூடாதே என்று பயமா இருக்கு என்று குரலை தழைத்து சொன்னாள்...

"மாயா அண்ணி இப்ப இருக்கிற நிலையில் அப்படி ஒன்றும் செய்ய மாட்டாள்.. தவிர அவளுக்கு நான் மட்டும் தான் விரோதி அம்மா.. அதனால நீங்க அனாவசியமா பயப்படாதீங்க.. என்றவாறு துணி பைகளை எடுத்துக் கொண்டு அன்னையின் அறையில் வைக்க எழுந்து சென்றாள் மகதி.

"மோகனும் இதைத்தான் சொன்னான்.. என்று மாலதி நினைத்தாள்.

அடுத்த நாளும் மதுமதி மோகனின் வீட்டிற்கு சென்றுவிட, குடும்பத்தினர் சென்று நகை, இதர ஷாப்பிங் செய்தனர். மகேந்திரன் தொழில் முறை பயணம் என்று சொல்லிவிட்டு கொடைக்கானல் கிளம்பிச் சென்றான்.

மூன்றாம் நாள் காலையில், மதுமதி மற்றும் மகேந்திரன் மோகனின் வீட்டில் குழுமியிருந்தனர்.


"என்னடா மாப்பிள்ளை? போன காரியம் காயா பழமா? என்றான் மோகன் காபியை அவனிடம் கொடுத்தபடி..


"எல்லாம் ஒரு வகையில் பழம்தான் மாப்பிள்ளை.. மித்ரனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா.. என்றான்.

"டேய் உனக்கு பிடிச்சிருந்தா போதுமா? மதுவுக்கு பிடிக்க வேண்டாமா? முதலில் அவன் போட்டோவை காட்டு.. அவள் முடிவு செய்யட்டும்.. அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் சொல்லு, அதெனன்னடா ஓரளவுக்கு பழம்னு சொல்றே?

"போலீஸ்காரன் இல்லே அதான் கரெக்ட்டா பாயிண்ட்டை பிடிச்சிட்டே" என்றவன்..

"என்னைப் புகழ்ந்தது போதும்டா,நீ என்ன விஷயம்னு சொல்லு? அவங்க பெற்றொர் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?என்றான் மோகன் சற்று படபடப்புடன்..


அது மதுவுக்கு அவனை கல்யாணம் செய்துக்க சம்மதம் என்றால்,அவனோட பெற்றோர்கிட்டே பேசுறதா சொன்னான்"

"அதுவும் சரிதான்..ஆனால் அவங்க சம்மதிக்கலைன்னா என்ன பண்றது?

"அதெல்லாம் மித்ரன் பொறுப்பு.. அவன் கன்வின்ஸ் பண்ணிடுவான். இப்ப மதுவுக்கு அவனை பிடிக்கணும்.. அதுதான் முக்கியம்டா"


"என்னைப் பற்றி தெரிந்தும் எப்படி அத்தான் அவர் கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டார்? என்றாள் மதுமதி..

"நான் சொன்னதில் மித்ரனுக்கு சுத்தமா நம்பிக்கையே இல்லை. அவன் உன் மேல் ரொம்ப கோபத்தில் இருந்தான். அதனால் நான் தடாலடியா ஒரு யோசனை சொன்னேன்.. அது நம்ம லிஸ்ட்ல இல்லாததுதான்.. ஆனால் எனக்கு வேற வழி தெரியலை..

"டேய் உன்னோட இது ஒரு இம்சைடா.. ஒரு விஷயத்தை பட்னு சொல்லாமல் ஏதோ மர்மக்கதை ரேஞ்சுக்கு எடுத்துவிடுவே.. ஒழுங்கா விஷயத்தை சொல்லுடா" என்று அலுத்துக் கொண்டான் மோகன்.

"எனக்கு வேற வழி தெரியலைடா மோகன், அதுதான், பொய்யா ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு, எங்க கல்யாணம் முடியறவரைக்கும் மதுமதிக்கு கணவனா நடிக்க முடியுமானு கேட்டேன்.."


"ஐயோ அத்தான்"

"அச்சச்சோ அண்ணா"

பெண்கள் இருவருமே அதிர்ந்து போய் விட்டனர்.

"டேய் என்னச்சுடா உனக்கு?"என்ன காரியம்டா செஞ்சுட்டு வந்திருக்கிறே? உனக்கு ஏன் இப்படி புத்தி போகுது? அதுக்கு நான் எப்படி ஒத்துப்பேன்னு நீ நினைச்சே" மோகன் கோபத்துடன் கேட்க,

"நீங்க என்ன அண்ணா? நானே அதுக்கு ஒத்துக்க மாட்டேன் தான்.. என்றவள்,"என்ன அத்தான் இப்படி பண்ணிட்டிங்க? தப்பு செஞ்சது நான்.. அவருக்கு ஏன் தண்டனை கொடுக்கணும் அத்தான்? விட்டுவிடுங்கள்.. மகதியோட நிம்மதி எனக்கு முக்கியம் அத்தான். அதனால நான் உங்க கல்யாணத்துக்கும் வரவில்லை.. என்று மதுமதி உணர்ச்சியற்ற குரலில் உரைத்தாள்.. தொடர்ந்து,"அண்ணா, ப்ளீஸ் இதுக்கு இன்னொரு தீர்வு நான் வெளிநாடு போறதுதான்.. என்னோட படிச்சவள் அங்கே இருக்கிறாள்.. எனக்கு விசாவுக்கு மட்டும் ஏற்பாடு செய்ங்க, எனக்கு மனசு சரியில்லை அண்ணா. சாரி நான் வீட்டுக்கு கிளம்புறேன்.. என்று வாசலுக்கு விரைய,.. மகேந்திரன் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக் கொண்டு அவள் போவதையே பார்த்திருக்க.. மோகனும் மாயாவும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு செய்வதறியாது நின்றனர்..

மதுமதி வாசலுக்கு வந்தபோது, நிலைப்படியில் சாய்ந்தவாறு ஒரு அழகான வாலிபன் உயரமாக நின்றிருந்தான். அவன் முகம் மிகவும் வசீகரமாக இருந்தது. யார் இவன் ஏன் இங்கே நிற்கிறான் என்று யோசனை ஓட, இருவரின் பார்வையும் ஒருங்கே சந்தித்துக் கொள்ள, மேலும் விழிகள் விரிய திகைப்புடன் நின்றான்.. ஒருவாறு சுதாரித்துக் கொண்டு, சட்டென்று பார்வையை விலக்கி,"மன்னிக்கவும், கொஞ்சம் வழியை விடுறீங்களா நான் போகணும்" என்றதும்..

"எங்கே மேடம் போறீங்க? வாங்க, உங்ககிட்டே முக்கியமான விஷயம் பேசணும்" என்று எதிர்பாராத விதமாக அவளது கையைப் பற்றி உள்ளே இழுக்க, திடுக்கிட்டு.. நிமிர்ந்தவள், "ஏ.. மிஸ்டர்.. எங்கே வந்து என்ன பண்றீங்க? இது யார் வீடு தெரியுமா? என்று கோபமாக அவள் படபடக்க..

அதற்குள்ளாக சத்தம் கேட்டு உள்ளிருந்தவர்கள் வந்தனர்..

"மிஸ்டர் யார் நீங்க? அவள் கையை முதலில் விடுங்க" என்று கடிந்தவாறு போலீஸ் உடையுடன் மோகன் வந்து நிற்க..


"ஹலோ மச்சான், நான் உங்களை பார்க்கத்தான் வந்தேன்.. நாம உள்ளே போய் பேசுவோமா? என்று உல்லாச குரலில் சொன்னான்.. அவன் மித்ரன்.

மகேந்திரன் நமட்டு சிரிப்புடன் நிற்க, அதை கவனித்துவிட்ட மோகனுக்கு உடனே விஷயம் விளங்கிவிட்டது.."அப்படியா, வாங்க, உள்ளே வாங்க , என்றவன் மனைவிக்கு ஜாடை செய்தபடி உள்ளே சென்றுவிட, மகேந்திரனும் மித்ரனுக்கு சைகை செய்துவிட்டு நகர்ந்தான்..

மதுமதிக்கு அவனது அருகாமையில் இது எதையும் கவனிக்க முடியவில்லை என்றால், காதில் விழுந்த மோகனின் பேச்சில் மேலும் திகைத்தவளாக,"என்னாச்சு இந்த அண்ணனுக்கு? முதலில் கோபப்பட்டாங்க, இவன் ஐஸ் வைத்து பேசவும் அவரும் நம்பிட்டாரே..ஏன்? என்று யோசனை ஓட..

"பேபி, நான் உன்னிடமும் பேச வேண்டும் என்றேனே? உள்ளே போகலாம் வா.. என்று அவளை இழுக்காத குறையாக அழைத்து செல்ல முற்பட,

அவள் கை இன்னும் அவனிடம் இருப்பதை அப்போதுதான் உணர்ந்து, சட்டென்று உருவ முயன்று தோற்று, "ஹலோ மிஸ்டர், முதலில் என் கையை விடுங்க" குரலை தணித்து ஆத்திரமா சொல்ல..


அதற்குள்ளாக மோகன் ,"மது சூடா ஒரு கப் காபி போடும்மா" என்றான்.

"பேபி, எனக்கு ஸ்ட்ராங்கா, சர்க்கரை கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்.. என்றவாறு அவளது கையை விட்டான்.. மித்ரன்.

"என்னடா நடக்குது இங்கே? என்று மனதுக்குள் நினைத்தாலும்,"நல்ல காரமா போட்டு அனுப்புறேன்" என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி உரைத்துவிட்டு,"இதோ அண்ணா”என்று மோகன் சொன்னதை செய்ய உள்ளே விரைந்தாள் மதுமதி, மாயா மற்றும் ஆண்கள் மூவரும் கூடத்தில் அமர்ந்தனர்.

"மித்ரன்? என்று கையை நீட்டினான் மோகன். பதிலுக்கு, மித்ரன் கைகொடுக்க..

"மச்சான் நீ கிரேட் தான்டா..எப்படி டா? என்று வியப்போடு வினவினான்.. மகேந்திரன்.

"ஒருத்தன் என்னோட வீடு வாரைக்கும் வந்து, என் தங்கச்சி கையை பிடிக்கிறான்னா அதுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்? அதோட மச்சான்னு வேற கூப்பிட்டாரா? நீ வேற கல்லுளி மங்கன் மாதிரி நின்னுட்டு இருக்கே.. உடனே புரிஞ்சிருச்சு.. மோகன் சொல்ல,

"மரியாதை எல்லாம் எதுக்கு சர், என்னை கேட்டால் நாம் உறவுகளை தாண்டி, நல்ல நண்பர்களாக இருக்கணும் என்று நினைக்கிறேன்"என்றான் மித்ரன்.

"நல்ல விஷயம் தான் மித்ரன். உறவாக இருப்பதை விட நட்பாக இருக்கிறது முக்கியம்" என்றான் மோகன்.

"காபியுடன் வந்து கொண்டிருந்த மதுமதியின் செவிகளில் மோகனின் பேச்சு விழ, அப்படியே நின்றுவிட்டாள்.. வந்தவன் மித்ரனா? ஏனோ அன்றுவரை அவள் அறியாத ஒருவித இனம் புரியா உணர்வில் மனசு படபடத்தது.. வாய் உலர்ந்தது. மித்ரன் முன்பாக செல்ல முடியாமல் எங்கிருந்தோ வெட்கம் அவளை ஆட்கொள்ள கன்னங்கள் சூடேற..மாயாவை விளித்து அவளிடம் காபி இருந்த தட்டை கொடுத்துவிட்டு, அறைக்குள் தஞ்சமானாள்.

"மாயா, மது எங்கே? என்றான் மகேந்திரன்.

"மாப்பிள்ளை முன்னாடி வர்றதுக்கு வெட்கப்பட்டு உள்ளே இருக்கிறாளா? என்றான் மோகன் கேலி குரலில்..

"ஆமாங்க, அவளைப் பார்த்தால் அப்படித்தான் தோனுச்சு" என்றாள் மாயா புன்னகையுடன்.

"அவங்ககிட்டே நான் அப்புறமா பேசுகிறேன் என்ற மித்ரன், தொடர்ந்து, நான் உங்ககிட்டே முதலில் பேசிவிடுகிறேன்.. உண்மையில் மதுமதி மீது நான் மிகுந்த கோபத்தில் இருந்தேன். மகதியைப் போல ஒரு மென்மையான நல்ல பெண்ணை கொல்லும் அளவுக்கு சென்றவளை, அவ்வளவு எளிதாக என்னால் மன்னிக்க முடியலை.. நேற்று மகேந்திரன் என்னை சந்தித்து விவரம் சொன்னப்போ எனக்கு சுத்தமா நம்பிக்கை இல்லை மோகன்.. மணிவாசகம் மாமாதான் மாப்பிள்ளை இவ்வளவு தூரம் கிளம்பி வந்து சொல்கிறார், என்றால் அதில் உண்மை இருக்கும் என்று தான் எனக்கு தோனுது, அதனால நீ நேரில் போய் பார்த்துவிட்டு அப்புறமா முடிவு செய்னு சொன்னாங்க.. எனக்கும் அது சரின்னு பட்டது, ஆனால் இவனுக்கு, அதுல விருப்பம் இல்லை.. ஏன்னா முன்னாடியே இந்த சந்திப்பு பற்றி தெரிஞ்சுதான் மது நடிக்கிறான்னு உங்களுக்கு தோன்றும் அதனால சின்னதா ஒரு பிளே பண்ணலாம்னு சொன்னார். நானும் ஒத்துக்கிட்டேன்.. இங்கே வந்தேன். அதன்படி மது பேசினதை நான் கேட்டேன். அதில் பொய் இல்லை.. எனக்கு இந்த கல்யாணத்தில் பூரண சம்மதம்.. என் பெற்றோருக்கு நான் இன்னும் சொல்லவில்லை.. காரணம் மது முழுமனசா என்னை ஏற்றுக்கணும்.. அவங்க ஏற்றுக்கிட்டதும் நான் சொல்றதா இருக்கிறேன்.. என்று நிறுத்திய மித்ரன், குரலை வெகுவாக தனித்துக் கொண்டு.."உங்க யாருக்கும் ஒரு விஷயம் தெரியாது.. என்றுவிட்டு, "நான் இந்தியா வந்ததுக்கு இரண்டு காரணங்கள், ஒன்று அம்மாவுக்கு மகதியை பிடிச்சு போய் என்னை திருமணம் செய்துக்க சொல்லி ஒரே பிடியா நின்றாங்க. அப்போது என் மனதில் கல்யாணம் செய்துக்கிற நினைப்பே இல்லை. வாழ்வில் செட்டில் ஆகணும்கிற எண்ணம் தான் மேலோங்கி இருந்தது. அதனால அவளுக்கு சொல்ல வேண்டாம், எனக்கு பிடிச்சா நானே சொல்றேன், அப்புறமா அவகிட்டே சொல்லி சம்மதம் கேளுங்கன்னு சொல்லிட்டேன்..." அவன் சொல்லவும் குறுக்கிட்டு,


"எப்பா சாமீ, என் வயிற்றில் பாலை வார்த்தேடா..என்று கும்பிட்டான்..

"மித்ரன், மட்டுமின்றி மற்ற இருவரும் வாய் விட்டு சிரித்தனர்..

"ஏன்டா டேய்.. என் தவிப்பு உங்களுக்கு கிண்டலா இருக்கா..ஆனால் இதெல்லாம் மகதி என்கிட்டே சொல்லவே இல்லையே" என்றான் மகேந்திரன் .. பரிதாபமாக

""மகதிக்கு இந்த விஷயம் தெரியாது.. நான் சொல்லவில்லை. அவள்கிட்டே நான் எதுக்கு வந்தேன் என்று சொன்னேன்.. ஆனால் அந்த பெண் அவள் என்று சொல்லவில்லை.. அன்றைய பேச்சை தெரிவித்து, மேலும் சொன்னான்..இது தெரிஞ்சா அவள் ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்ணுவா.. எனக்கு மதுவோட நடக்கிற இந்த திருமணம் ஒருவித நிர்பந்தம் என்பது உண்மை தான். ஆயினும் நான் சந்தோஷமாக பண்ணிக்கத்தான் விரும்புகிறேன். அதனால மதுவோட முடிவை கேட்டு சொல்லுங்க.. இரண்டு நாள் நான் இங்கே இருப்பேன்.. அவசரம் இல்லை.. என்றான் மித்ரன்.


"கொஞ்சம் உட்காருங்க அண்ணா, என்ற மாயா உள்ளே சென்றாள்.

"அங்கே காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு, கண்களை மூடியவாறு அமர்ந்து இருந்தாள் மதுமதி.

மாயா அவளது தோள் தொட, கண்களை திறந்தாள்.. "என்ன அண்ணி? அவர் போய்விட்டாரா? என்றாள்.

"ஏய்..இவ்வளவு நேரம் மித்ரன் அண்ணா பேசுனதை நீ கேட்கலையா மது? என்றாள் ஏமாற்றத்துடன்.

"இல்லையே என்னாச்சு அண்ணி? அவர்.. அவர் என்ன சொன்னார் அண்ணி" என்றாள்..கவலையுடன்

"இப்ப பதறு, என்றவள் எதுவும் ஆகவில்லை மது.. உன்னை கல்யாணம் செய்து கொள்ள சம்மதம் சொல்லிட்டார். உனக்கு சம்மதமானு கேட்க சொன்னாங்க.. இரண்டு நாட்கள் அவகாசம் கொடுத்திருக்கிறார். உனக்கு அவகாசம் வேண்டுமா? நீ என்ன சொல்றே மது?

"நிஜமாவா அண்ணி? அத்தான் வேற மாதிரி சொன்னாரா? அதுதான் என்ன சொல்வாரோனு நான் ஹெட்செட் போட்டு பாட்டு கேட்க உட்கார்ந்தேன்.. எனக்கும் சம்மதம் தான் அண்ணி.. ஆனால் திடீரென்று எப்படினு வீட்டுல முக்கியமா அம்மா, மகதிக்கு சந்தேகம் வராதா? என்றபோது அங்கே மற்ற மூவரும் வந்தனர்.


"டேய் இதை நாம யோசிக்காமல் விட்டுவிட்டோமே? இவங்க இரண்டு பேருக்கும் எப்படி பழக்கம் என்று வீட்டுல கேட்டால் என்னானு சொல்றது? என்றான் மகேந்திரன்..

"அட இது ஒரு பிரச்சினையா? நான் இப்போது வீட்டுக்கு முன்னாடியே போய்டுறேன். நான் ரிசார்ட் விஷயமா மகேந்திரனை பார்க்க இங்கே வந்ததாக சொல்வேன். அப்புறமா மகேந்திரன் அல்லது மோகன் சார் மதுவை கொணர்ந்து வீட்டில் விடறது போல வாங்க, அப்போ அறிமுகம் செய்துக்கலாம்.. அப்புறம் நடக்க வேண்டியதை நான் பார்த்துக்கிறேன்.. என்றான் மித்ரன்..

"பார்த்துக்கிறேன் என்றால் ? என்று புரியாமல் வினவினான் மோகன்.

"இந்த ஊர் எனக்கு புதிது.. மகதி புதுப் பெண் என்கூட வரமுடியாது அதனால சென்னையை சுற்றி பார்க்க, மகேந்திரனை பார்க்க என்று மதுவை துணைக்கு கூட்டிட்டு கிளம்பிடுவேன். அப்புறம் கல்யாணத்துக்கு ஏழு நாட்கள் இருக்கும் போது, நாங்க விரும்புறதா சொல்லிடுவோம்.. பிறகு என்ன ஒரே பந்தலில் இரண்டு கல்யாணம்.. சுபம்.. எப்படி ஐயாவோட ஐடியா??


"வாவ்.. சூப்பர்.. அண்ணா என்று குழந்தை போல குதூகலித்த மாயா, "சரி நான் போய் டிபன் எடுத்து வைக்கிறேன்.. எல்லோரும் போய் கைகால் கழுவிட்டு வாங்க" என்று சமையல் அறைக்கு சென்றாள்..


"பிரிலியண்ட் ஐடியா தம்பி, உனக்கு இதுக்காகவே ரிசாட் கட்டுறதுல கன்சேஷன் தர்றேன்.."

மதுமதி மோகனின் முகம் பார்த்து நின்றாள்.. அதை மித்ரன் கவனித்தான்..

சிலகணங்கள் கழித்து,"ஓகே மித்ரன், உன்னை சந்தித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உன்னோட யோசனைப்படியே செய்யலாம்.. நான் மதுவை வீட்டில் ட்ராப் பண்றேன். மகி உங்களை வீட்டில் ட்ராப் செய்வான்.. அப்படியே.. அப்போது நாம் அறிமுகம் ஆனதுபோல காட்டிக் கொள்வோம்.. எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் நம் ஐந்து பேரைத் தவிர யாருக்கும் தெரியக்கூடாது. மணிவாசகம் அங்கிள்கிட்டேயும் தெளிவு படுத்திடுங்க.. ஓகேயா? சரி இப்ப வாங்க சாப்பிடலாம்...என்றான்..


அடுத்து அவர்கள் சொல்லி வைத்தது போலவே எல்லாமும் நடந்தது.. அன்று மாலையில், "சின்ன அத்தை நீங்க எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?

"என்ன செய்யணும் தம்பி? என்னால் முடிஞ்சா நிச்சயம் செய்றேன்"

"வந்து எனக்கு இந்த சிட்டி புதுசு.. அதனால நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் மதுவை என்னோடு அழைச்சிட்டு போகட்டுமா?" என்றான் மித்ரன்.

"அவளைப் பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது தம்பி"என்று தயங்கினாள் மாலதி.

"தெரியும் அத்தை..மகதி எல்லாம் சொல்லியிருக்கிறாள். உங்களுக்கு அவளை என்னோடு அனுப்ப இஷ்டமில்லை என்றால் பரவாயில்லை, நான் மானேஜ் பண்ணிக்கிறேன்" என்றதும்..

"எனக்கு ஒன்றுமில்லை தம்பி, அவள் வந்தால், நீங்க தாராளமாக கூட்டிட்டு போங்க.. என்றவள் மதுவை அழைத்து விவரம் சொல்ல, "சரிம்மா, நான் போய் உடை மாற்றிவிட்டு வர்றேன்" என்றவளை.. இடைமறித்து

"இதுவே சூப்பராக இருக்கிறது மது.. மாற்ற வேண்டாம்.. இப்பவே ரொம்ப லேட் ஆகிடுச்சு.. வா வா, என்று அவளது கையைப் பற்றி இழுக்காத குறையாக அழைத்து போக.. மாலதி ஒருகணம் அதிர்ச்சியாக பார்த்து நின்றாள்.. பிறகு அவன் வெளிநாட்டில் வளர்ந்தவன் என்பதால் அப்படி நடந்து கொள்கிறான் என்று தன்னை சமாதானம் செய்து கொண்டாள்!
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top