Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

38. மதிமுகம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
மதுமதி பதற்றத்துடன் வாயிலுக்கு சென்று அவளது வண்டியை கிளப்ப அது கிளம்பவில்லை. காரணம் டயர் பங்சர் ஆகியிருந்தது. பணியாளை விளித்து அதை சரிபார்க்க கொண்டு செல்லும்படி சொல்லிவிட்டு, உடனே வெளியேறி ஆட்டோவை பிடித்து காவல் நிலையம் சென்றடைந்தாள்.

"யாரும்மா? என்ன கேஸ்"என்றார் அங்கிருந்த ரைட்டர்.

"என் பெயர் மதுமதி. சப் இன்ஸ்பெக்டர் ஏதோ கேஸ் விஷயமாக வரச் சொன்னார்."

"சார் உள்ளே தான் இருக்கிறார் போய் பாரு"

மதுமதி உள்ளே தயக்கத்துடன் சென்றாள். அவள் நிறைய செய்திகளில் காவல் நிலையத்திற்கு சென்ற பெண்களின் நிலையை அறிந்திருக்கிறாள்.

அது இப்போது நினைவிற்கு வந்து பயத்தில் அவளுக்கு வியர்த்து ஊற்றியது.

"என்னம்மா விஷயம்? யார் நீ? என்றார் சப் இன்ஸ்பெக்டர்.

"வந்து போன் பண்ணியிருந்தீங்களே சார். நான் தான் மதுமதி"

"ஓ நீ தானா அது? உட்காரு, என்றவர் “,201 அந்த பொம்பளையை கூட்டிட்டு வாங்க” என்றார்.

அழைத்து வரப்பட்ட பெண்ணை பார்த்ததும் மதுமதிக்கு தொண்டை உலர்ந்து போயிற்று. அவள் தான் மைதிலி, அவர்கள் வீட்டில் பணியாற்றியவள். அன்றைக்கு மகதியை கடத்துவதற்கு உதவி செய்தவள்.

"இவளை தெரியுமா? என்றார்

அவளை தெரியாது என்றால் மகதியை கடத்திய விஷயத்தை அவள் சொல்லி விடுவாள் என்று எண்ணி, "தெரியும் சார். கொஞ்சம் நாளைக்கு முன்னாடி எங்கள் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தாள்" என்றாள்

"ஏன் இப்ப வேலை செய்யறது இல்லை?

"அது அவள் தான் வேலை விட்டு நின்றுவிட்டாள் சார்"

"ஓஹோ! அது சரி இந்த வளையல் உன்னோடதா? என்றார்.

மதுமதிக்கு திக் திக் என்று இதயம் பலமாக அடித்துக்கொள்ள, இதற்கு என்னவென்று சொல்வது? ஆமாம் என்றால் அது அவள் திருடிவிட்டாளா என்று கேட்பார். ஆமாம் என்று சொல்ல முடியாது. அவள் தான் அன்றைக்கு அவசரத்தில் கையில் பணமில்லாததால் வளையலை கொடுத்திருந்தாள்.

அவள் என்ன சொல்வது என்று தடுமாறுகையில் அங்கே மோகன் சாதாரண உடையில் வந்து நின்றான்.

அவனை பார்த்ததும்,"அண்ணா” என்று அழைத்தாள் மதுமதி.

ஒருகணம் அவளை ஏற இறங்க பார்த்தவன், "ஏய் மது, நீ இங்கே என்ன பண்றே? என்றவன், திரும்பி "என்ன கேஸ் மேன்? என்றான்.

"ஒரு சந்தேக கேஸ் சார். இந்த பொம்பளை இந்த வளையலை அடகு வைக்க வந்தபோது சேட்டுக்கு சந்தேகம் வந்து போன் பண்ணினார். கூட்டிட்டு வந்து விசாரிச்சா, இந்த வளையலை அந்த மேடம் தான் கொடுத்ததாக சொல்லுறா. அதான் சார் விசாரிச்சிட்டு இருக்கிறேன்".

போலீஸ் உயர் அதிகாரிக்கு தெரிந்தவள் என்றதும் மேடம் என்று மரியாதை கொடுப்பதை பார் என்று எண்ணினாள் மதுமதி.

"என்னம்மா, நீ சொல்றது நிஜமா? அவள்தான் கொடுத்தாளா? என்றான் மோகன் அதட்டலாக..

வேலைக்காரி சற்று யோசித்தாள். ஆமாம் என்றால் ஏன் கொடுத்தாள் என்று கேள்வி வரும்..அப்புறம் கடத்தியதை சொல்ல வேண்டி வரும்.. அதுவும் அந்த பொண்ணு இந்நேரம் செத்துப் போயிருக்கும்.. அப்புறம் மதுமதிகூட கூட்டுனு உள்ளே தள்ளிட்டா, என்ன செய்யறது.. அவளுக்கு பெரிய இடத்துல தெரிஞ்ச ஆள் இருக்கு, சுளுவா வெளியே வந்துருவா நாம அப்படியா? உள்ளே காலத்துக்கும் களிதான் துன்னனும், அது நமக்கு தொண்டையில இறங்காது என்று யோசனையில் ஆழ்ந்தவளை,

"ஏம்மா கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் என்ன யோசனை? உண்மையை சொல்லு, இந்த வளையல் எப்படி உன்கிட்ட வந்தது? "என்று சப் இன்ஸ்பெக்டர் அதட்டினார்.

"இல்லைங்க ஐயா. மன்னிச்சிடுங்க ஐயா. நான் தான் வயித்துப் பாட்டுக்காக திருடிப்போட்டேன். இனிமே இப்படி செய்ய மாட்டேனுங்க. ஐயா நீங்க கொஞ்சம் சொல்லுங்க, என்று மோகனிடம் கெஞ்சினாள்.

"ம்ம்.. சரி, இன்ஸ்பெக்டர் இந்த தடவை முதலும் கடைசியுமா அவளை மன்னிச்சு விட்டுருங்க..., அந்த வளையலை மதுமதிக்கிட்டே கொடுங்கள். நீ போம்மா. இனிமே இந்த மாதிரி செய்தால் கம்பி தான் எண்ணனும் புரிஞ்சுதா" என்று அவளை மிரட்டி அனுப்பிவிட்டு, மதுமதியிடம் திரும்பினான் மோகன்.

"நீ எதில் வந்தே மது?

"ஆட்டோவில் வந்தேன் அண்ணா "

"சரி, உன்கிட்ட, பேசறதுக்காக நானே உன்னை சந்திக்கணும் என்று நினைச்சுட்டு இருந்தேன் மதுமதி. நீ போய் கொஞ்சம் வெளியே வெய்ட் பண்ணு, நான் இன்ஸ்பெக்டர்கிட்டே ஒரு கேஸ் விஷயமாக பேசிவிட்டு வருகிறேன் என்று அனுப்பியவன், இன்ஸ்பெக்டரின் கை பற்றிக் குலுக்கிவிட்டு, "நான் சொன்னதை ஞாபகம் வைச்சு, ஃபாலோ பண்ணி பிடிச்சதுக்கு ரொம்ப நன்றி இன்ஸ்பெக்டர்" என்றான்.

"என்ன சார்? இதுக்கு போய் நன்றி எல்லாம் சொல்லி கொண்டு,..

"இது Official என்றால் நன்றி சொல்ல வேண்டியதில்லை தான். But it's unofficial. அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு கொடுத்ததற்கு நன்றி சொல்லனும் தானே?" என்றவன் ஓகே See you Later" என்று விடை பெற்றுக் கொண்டான்.

மதுமதியை அவன் வந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சற்று உயர்தரமான உணவகத்திற்கு வண்டியை ஓட்டச் சொன்னான் மோகன்.

"அண்ணா, நான் கிளம்பறப்போ சாப்பிட்டு தான் வந்தேன்" என்றாள் மதுமிதா. அவள் வாக்கியத்திற்கு ஒரு அண்ணா போடுவதை கேட்டு உள்ளூர சிரித்துக் கொண்டான் மோகன்.

"ம்ம்.. அதனால் என்ன மதுமதி? வெறும் ஜூஸ் தானே? அடிக்கிற வெயிலுக்கு எனக்கு ஏதாவது ஜில்லுனு இறக்கினால் தான் தாங்கும்" என்றவன் ஆர்டர் எடுக்க வந்தவனிடம் மூன்று மாதுளை ஜூஸ்ஸிற்கு ஆர்டர் செய்து, ஒன்றை ஓட்டுனரிடம் அனுப்பச் சொன்னான். சர்வர் நகரவும், "அதோடு உன்கிட்ட பேசணும்னு சொன்னேனே ?? வெயிட் முதலில் ஜூஸ் குடித்துவிடலாம்".

அவனது பேசும் தொனி மதிமதியின் வயிற்றை கலக்கியது. சர்வர் சீக்கிரமே ஜூஸை கொணர்ந்து வைக்க அவனுக்கு பணத்தை வைத்துவிட்டு, மோகன் பருக ஆரம்பித்தான். உள்ளுர கலக்கத்துடன் அவளும் பருகி முடித்ததும், மறுபடியும் ஜீப்பில் ஏறி பயணித்தனர்.

சென்னை மாநகர சாலைகள் 11மணிக்கும் கூட பரபரப்பில் இருந்தது. அவற்றை கடந்து ஜீப் ஒரு பூங்காவின் முன்பாக நின்றது. அவளை உள்ளே செல்லுமாறு பணித்துவிட்டு, ஓட்டுனரிடம் சற்று நேரத்தில் வந்துவிடுவதாக சொல்லி தொடர்ந்து உள்ளே சென்றான் மோகன்.

பூங்காவில் அதிக ஆள்நடமாட்டம் இல்லை. ஒர் இருக்கையில் அமர்ந்து அவளையும் அமரச் சொன்னான்.

"என்கிட்ட என்ன பேசவேண்டும் அண்ணா? "என்றாள் மதுமதி தயக்கத்துடன்...

"மகதியை பற்றி" என்றவனின் குரலில் அதுவரை இருந்த இலகுத்தன்மை காணாமல் போயிருந்தது.

மதுமதி உள்ளூர அதிர்ந்தாலும், "அவளைப் பற்றி என்ன கேட்கனும் அண்ணா? அம்மாவிற்கு தான் நன்றாக தெரியும்" என்று சமாளிப்பாக பதில் அளித்தாள்.

"ம்ம்.. அவங்ககிட்ட கேட்கணும்னு தோன்றினால் கேட்டுகொள்வேன். இப்போது உன்னிடம் கேட்கிறேன், கொஞ்சம் சொல்கிறாயா? என்றபோது அவன் குரலில் இருந்தது என்னவென்று யூகிக்க இயலவில்லை. ஆனால் நெஞ்சுக்குள் குளிர் பரப்பியது.

"மகதியை பற்றி எனக்கு சரியாக தெரியாது அண்ணா. எனக்கு அவளை பிடிக்காது... என்று உண்மையை சொன்னாள்.

"ஓ! அதுதான் அவளை கொலை செய்யும் அளவிற்கு துணிந்தாயா? என்றான் ஒருமாதிரி குரலில் மதுமதி அதிர்ச்சியில் சிலகணங்கள் வாயடைத்துப் போனாள்.

"சொல் மது. உனக்கு அவள் மேல் அப்படி என்ன வெறுப்பு? "நீ ஒன்றுமே செய்யவில்லை என்று சொல்லாதே மது. இந்த வேலைக்காரி தான் மகதியை வீட்டிலிருந்து கடத்துவதற்கு உனக்கு உதவியவள் என்பது உட்பட....எனக்கு விவரம் தெரியும். ஆனாலும் குற்றம் செய்தவர் தரப்பு நியாயத்தை சொல்ல ஒரு வாய்ப்பு தரவேண்டும் என்பார்கள். அதுபோல உன் பக்கத்து நியாயத்தையும் கேட்கவேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் கேட்டதற்கு உண்மையான பதிலை சொல்" என்றான்.

அன்றுவரை அவளை பெற்ற அன்னை உட்பட அவள் பக்கமும் நியாயம் இருக்கும் என்று யாருமே அவளிடம் கேட்டதில்லை. ஆனால் மோகன் அவள் பக்கத்து நியாயம் என்று சொன்னது அவளது ஆழ் மனதை தொட்டது. யாருமே இல்லை என்று எண்ணியிருந்தது மாறி அவளிடம் கூட அக்கறை வைக்க ஒரு ஜீவன் இருக்கிறதே என்று எண்ணியவளுக்கு அன்று வரை மனதுக்குள் இருந்த இறுக்கம் தளர்வது போல உணர்ந்தாள். கூடவே காரணமின்றி கண்கள் கலங்கி, தொண்டை இறுகியது.

"சொல்லும்மா மது! சின்ன வயதில் மகதி உன்னை அடித்தாளா? உன்னோடு சண்டை போட்டாளா? அல்லது உங்கள் வீட்டில் இருக்கும அந்த பழைய சமான்கள் அறையில் பூட்டிவைத்தாளா? அல்லது உன்னை அம்மா அப்பாவிடம் பொய்யாக குற்றம் சாட்டி மாட்டி வைத்து திட்டு வாங்கிக் கொடுத்தாளா? அல்லது உனக்கென்று வாங்கியதை அவள் எடுத்துக் கொண்டாளா?? இதை தாண்டி வேறு எதுவும் உன்னை அவள் கஷ்டப்படுத்தினாளா? மோகன் ஒவ்வொன்றாக வெகு நிதானத்துடன் கேட்க கேட்க, மதுமதிக்கு சிறுபிராயத்து நினைவுகள் மனதில் சித்திரமாக ஓடியது...

அதில் மோகன் கேட்டதை எல்லாமும் மகதிக்கு அவள் தான் செய்திருக்கிறாள் என்று உணர வைத்தது..அந்த கணத்தில் அத்தனை நாள் அவள் மகதி மீது கொண்டிருந்த வெறுப்பு, ஆதாரமற்றது என்றும் எவ்வளவு அபத்தமானது என்றும் புரிந்தது. ஒரு நாளும் மகதி அவளோடு சண்டை என்ன,வெறுப்பாக கூட பார்த்தது இல்லையே.. நினைக்க நினைக்க எவ்வளவு தவறுகளை செய்துவிட்டோம் என்று தவிக்கையில்... ஒர் உண்மை அவளுக்கு உரைத்தது.. நியாயமாக பார்த்தால் மதுமதி தானே பெற்றோரின் பாசத்தை பங்கு போட நடுவில் வந்தவள்? அத்தனை குற்றச்சாட்டுகளையும் அவள் மீது மகதி அல்லவா சுமத்தியிருக்க வேண்டும்..? அது நியாயமும் கூட...

ஆனால் யாரோ ஒரு கிழவி ஏதோ சொன்னாள் என்று அதை அப்படியே நம்பியது எவ்வளவு முட்டாள்தனம்?? அதாவது அறியாத வயதில்...ஏதோ செய்துவிட்டாள் என்று விட்டுவிடலாம். ஆனால் அம்மா எத்தனை எடுத்துச் சொல்லியும், அதுவும் பிடிக்காமல் போய் சகோதரி மீது மேலும் மேலும் வன்மத்தை வளர்த்துக் கொண்டாளே தவிர சிந்தித்துப் பார்க்கவே இல்லையே.. கடைசியில் அவளை.. அவளை கொல்லவும் கூட...என்று எண்ணியவளின் உடல் விதிர்விதிர்க்க சட்டென்று எழுந்து நின்றாள்.

மோகனுக்கு அவள் சிந்திக்கத் தொடங்கிவிட்டாள் என்பது புரிந்ததால், தொந்தரவு செய்யாமல் அவளது முகத்தையே கவனித்தபடி இருந்தவன், அவள் திடுமென எழுந்து நிற்கவும்,"என்னாச்சு மது? என்றான் திகைப்புடன்.

அவனது குரல் கேட்கவும் தான் சுற்றுப்புறம் கருத்தில்பட்டது, "வந்து..நா.. நான் வீட்டுக்கு போகணும்." என்றபோது அவளது குரல் நடுங்கிற்று..

"மது, முதலில் உட்கார், அவளது கையைப் பற்றி அமர வைத்தான். அவளது கை லேசான நடுக்கத்துடன் ஜில்லிட்டு இருந்ததை அவனால் உணர முடிந்தது. உடனே ஓடிப்போய் ஜீப்பில் இருந்து தண்ணீர் பாட்டிலுடன் திரும்பி வந்து, அவளுக்கு குடிக்கக் கொடுத்தான்.

மதுமதிக்கும் தொண்டை காய்ந்தார்போல இருக்கவே மறுக்காமல் குடித்தாள்.

சிலகணங்கள் மௌனமாக இருந்த மோகன், அவள் பதற்றம் குறைந்ததை கவனித்து விட்டு,"இதோ பார் மதுமதி. நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அதை சொல்லாமல் உன்னை நான் எங்கேயும் அனுப்புவதாக இல்லை"என்றான் அழுத்தமாக...

"எ..என்ன கேட்டீர்கள்? என்றாள் இன்னமும் உள்ளத்து நினைவுகள் தந்த அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாய்...!
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top