Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

37. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அன்று இரவு மாலதி மொட்டை மாடிக்கு கணவனை அழைத்து சென்றாள்.

“என்ன விஷயம் மாலதி ? ஏன் உன் முகம் ஒரு மாதிரியா இருக்கு? மகளுக்கு கல்யாணம் நட்ககப் போகுது அந்த சந்தோஷம் உன் முகத்தில் இல்லையே.. என்னாச்சு? என்றார் லேசாக பதற்றமுற்று..

“அதை சொல்லத்தான் அத்தான் இங்கே கூட்டி வந்தேன். நீங்க கொஞ்சம் இலகுவாக உட்காருங்கள்.. “நான் சொல்லப்போற விஷயத்தை கொஞ்சம் பொறுமையாக கேளுங்க, என்றவள், “ அன்றைக்கு மாப்பிள்ளை பெண் பார்க்க வந்தாரே அப்போது என்ன நடந்தது என்று தெரியுமா? என்றவள் தொடர்ந்து அன்றைக்கு மதுமதி செய்த விஷமத்தை சொன்னாள்.

“அப்படி என்றால் மாப்பிள்ளை பார்த்தது மகதியையா? அவளும் சம்மதித்துவிட்டாளா?”

“அப்போது வேறு வழி தெரியவில்லை அத்தான். அதுதோடு எனக்கு அந்த மகேந்திரன் நம்ம மகதிக்கு அமைந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. மதுமதி செய்ததில் இதுதான் ஒரே நல்ல விஷயம் அத்தான் “ என்றாள் மாலதி மகிழ்வோடு

“ஏன் மாலதி உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா? உன் வயிற்றில் பிறந்த பெண்ணிற்கு வந்த வரனை மகதிக்கு கட்டி வைக்க நினைக்கிறாயே? உண்மையை சொல்லும்மா”

“மகதியை நான் வயிற்றில் சுமக்கவில்லையே தவிர என் நெஞ்சில் சுமந்துட்டு இருக்கிறேன் அத்தான். அவள் என் மூத்த மகள், இனியொரு முறை அவளை என்னோட பெண் இல்லை என்று சொல்லாதீர்கள் அத்தான். அதை என்னாலும் சரி அவளாலும் சரி தாங்க முடியாது” என்று கண்கலங்க சொன்னவள் உடனேயே, “ மதுமதி அவள் தலையில் அவளே மண்ணள்ளி போட்டுக்கொண்டாள்.. என்று தான் நான் முதலில் நினைத்தேன் .. ஆனால் மகேந்திரன் ஏற்கனவே கொடைக்கானலில் வைத்து மகதியை பார்த்துவிட்டு பிடித்துப் போனதால், இங்கே இரண்டு பெண்கள் இருகுகும் விஷயம் தெரியாமல் மகதியை பெண் கேட்டு வந்திருக்கிறார். அதை அவரே மகதியிடம் சொல்லியிருக்கிறார். உங்களுக்கு இன்னொரு விஷயம் தெரியுமா அத்தான். இப்படி ஆள்மாறாட்டம் செய்தது தெரிந்த பிறகு அவர் கோவித்துக்கொள்ளாததற்கு அவள்தான் அவர் விரும்பியவள் என்பதற்காக இருக்கலாம். .. ஆனால் அவரோட அம்மாவுக்கு தெரிந்தபோது , அவர் ஒரே வார்த்தையில், “ என் மகன் விருப்பம்தான் எனக்கு முக்கியம் என்று பெருந்தன்மையாக முடித்துவிட்டார். இப்போது மகதி தான் பயந்து கொண்டு இருக்கிறாள் அத்தான் என்று அவர் விஷயத்தை கிரஹிக்க அவகாசம் கொடுத்து நிறுத்தினாள்...

சற்று நேரம் முகம் இறுக அமர்ந்திருந்தவர், “இப்ப மறுபடியும் மதுமதியால் மகிக்கு ஏதும் பிரச்சனையா? என்றார் நிதானமாக .

“அவளை நான் பார்த்துக் கொள்வேன் அத்தான். உங்களுக்கு உடம்பு சரியில்லாததால் இந்த விஷயத்தை கேள்விப்பட்டால் நீங்கள் தாங்கமாட்டீர்கள் என்று மகதி பயப்படுகிறாள். நீங்க என்ன சொல்வீர்களோ என்று எங்களுக்கு கவலை அத்தான். நாளை காலையில் அக்காவும் பெரிய அத்தானும் மாப்பிள்ளையை பார்த்து விட்டு கல்யாண விஷயம் பேசுவதற்காக வருகிறார்கள்... என்றவள் கண்வன் யோசிப்பதை பார்த்து மௌனமானாள்.

மதனகோபால் சில கணங்கள் தீவிர யோசனையில் இருந்தார். மதுமதி அன்றைக்கு திருமண விஷயம் பேசும்போது அவள் செய்த தவறு காரணமாகத்தான் எழுந்து ஓடினாள் என்று இப்போது புரிந்தது.. கூடவே பெரிய மகளும் அன்று திருமண விஷயம் பேசும் போது பதிலே பேசாததும் நினைவு வந்தது.. சின்ன மகளை நினைக்கும்போது கோபம் வந்தது... ஆயினும் மனைவி சொன்னது போல அவளது கிறுக்குத்தனத்தால் திருமணமே வேண்டாம் என்று இருந்த பெரிய மகளுக்கு நல்லதொரு வாழ்வு அமைகிறதே என்று நிம்மதி உண்டாயிற்று..

"மதுமதி என்றைக்கு திருந்துவாளோ என்று பெருமூச்சுவிட்டவர், தொடர்ந்து,” ஆனால் மாப்பிள்ளைக்கு நடக்க முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டாரே. அதுதான் ரொம்ப வேதனையாக இருக்கிறது. எதற்கும் மகதியின் வாய் மூலமாக கேட்டுவிட்டால் எனக்கு திருப்தியாக இருக்கும்" என்றார்.

"அது.. என்று ஒருகணம் தயங்கிய மாலதி.. மகிக்கு பூரண சம்மதம் அத்தான். ஆனால் இன்னும் ஒரு விஷயம் இருக்கிறது. அதை மாப்பிள்ளை சொல்லும்போது தெரிந்து கொள்ளுங்கள்.. இங்கே வைத்து நான் எதையும் சொல்ல முடியாது அத்தான். என்றாள்

“மது தான் காரணமா மாலதி? என்றார் வருத்தமும் ஆதங்கமுமாக..

“ஆமாம் அத்தான்.. நீங்க தயவுசெய்து மனதை தளரவிடாதீர்கள். நம் மகிக்கு திருமணம் நடக்கப் போவதை எண்ணி சந்தோஷமாக இருங்க.. என் கையில் குழந்தையாக நேற்று தான் வாங்கியது போல இருக்கிறது அத்தான்.. இப்போது அவளுக்கு கல்யாணம்.. மனோ அக்காவிற்கு கொடுத்து வைக்கவில்லையே அத்தான்.. என்றாள் மாலதி மிகுந்த வருத்தத்துடன்..

மனைவியின் கையைப் பற்றி தட்டிக் கொடுத்தவர், ‘என்னம்மா என்னைச் சொல்லி விட்டு நீ வருத்தப்படுகிறாயே.. மனோவுடைய ஆசீர்வாதம் அவளுக்கு எப்பவும் இருக்கும்.. சரி, வா நேரமாச்சு, நமக்கு நிறைய வேலைகள் இருக்கிறது“ என்று உற்சாக குரலில் சொல்லி எழுந்தவர், மனைவியை எழுப்பிவிட்டு, தோளோடு அரவணைத்தவாறு படிகளை நோக்கி நடந்தார்..மதனகோபால்.

💜💜💜

மறுநாள்

காலை வேளையில்

மிருதுளா மணிவாசகத்துடன் கிளம்பி சென்னை வந்து சேர்ந்தார். அவர்களிடம் மகதி விஷயத்தை கணவரிடம் சொல்லி விட்டதை தெரிவித்தாள். அதன் பிறகு மிருதுளாவும் மணிவாசகமும் மகதியை கேலி செய்து கொண்டிருந்தனர். சற்று நேரம் எல்லோரும் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.

மதுமதி குளித்து தயாராகி கீழே வந்தபோது அவளை தந்தை அலுவல் அறைக்கு அழைப்பதாக பணியாள் சொன்னான். கூடத்தின் கடைக் கோடியில் இருந்த அறையின் கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.

"நீ உன் மனசுல என்னதான் நினைச்சிட்டு இருக்கிறாய் மது? என்றார் எடுத்த எடுப்பிலேயே கோபமாக...

"இவர் எதைப்பற்றி கேட்கிறார் என்று தெரியாமல் குழம்பி," நான் என்னப்பா செய்தேன்? என்றாள் முகத்தை பாவமாக வைத்தபடி.

"ஏன் நீ செய்தது என்னனு உனக்கு தெரியாதா? ஆள் மாறாட்டம் .. நீ செய்திருப்பது கிரிமினல் குற்றம் மது. அவள் மட்டும் போலீசில் புகார் கொடுத்திருந்தால் உனக்கு ஏழு வருஷம் ஜெயில் தண்டனை கிடைத்திருக்கும்"என்றார் கடுமையான குரலில் கேட்டார்.

தந்தையின் கோபம் ஒன்றும் அவளுக்கு புதிதல்ல... ஆனால் போலீஸ் ஜெயில் என்று பேசவும் பதற்றம் உண்டாயிற்று.

உடனே மன்னிப்பு கேட்டுவிட்டால் அவரது கோபம் சற்று தணிந்து விடும் என்று எண்ணி,"அது.. அப்பா. .ஐம் வெறி ஸாரி அப்பா. இனி இப்படி ஒரு தப்பை செய்ய மாட்டேன்"

"செய்வதையும் செய்துவிட்டு தளுக்காக ஒரு மன்னிப்பை கேட்டு விட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அந்த மாதிரி நினைப்பு இருந்தால் இன்றோடு மறந்து விடு"

"அப்பா நான்..என்றவளின் பேச்சில் குறுக்கிட்டார்.

"போதும் மது. இத்தோடு எல்லாவற்றையும் நிறுத்திக் கொள். இனி நீ மகதி விஷயத்தில் தலையிடாதே, அவளோட கல்யாணத்தில் உன்னால் ஏதும் தடங்கல் ஏற்பட்டால் நான் மனுஷனாகவே இருக்கமாட்டேன். ஜாக்கிரதை. பெற்ற மகள் என்று கூட பார்க்க மாட்டேன், நானே உன்னை போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவேன். என்று கடுமையான குரலில் சொல்ல

"சொல்லி வைத்தது போல் அப்பாவும் அம்மாவைப் போலவே மிரட்டவும் மதுமதிக்கு திக் கென்றது. மேற்கொண்டு வாதாட பயந்து மௌனமாக அங்கிருந்து நகர்ந்தவளிடம்,

"அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், உனக்கு இனி தனியாக பாக்கெட் மணி கிடையாது. தினமும் பெட்ரோலுக்கு ஒரு Amount கொடுத்து விடுகிறேன். அதை தவிர ,உனக்கு எப்போது பணம் தேவையோ, என்னிடமோ அம்மாவிடமோ கேட்டு வாங்கிக் கொள்ளலாம். முக்கியமாக சரியான காரணம் சொல்லணும். இல்லைன்னா கிடையாது.. அடுத்து நாங்க பார்க்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இரு” என்று கறாராக தெரிவித்தார்.

மதுமதிக்கு உள்ளம் கொதித்தது. ஆமாம் இவர்கள் காட்டுகிறவனுக்கு கழுத்தை நீட்டத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆத்திரத்துடன் எண்ணினாலும் முகம் மாறாமல் காத்து அறையிலிருந்து வெளியேறி, அவளது அறைக்கு விரைந்தாள்.

மதுமதிக்கு அந்த நாளின் தொடக்கமே சரியில்லாது போக... சற்று நேரம் அறைக்குள் நடந்து ஆசுவாசமாகி கீழே சாப்பிட வந்தாள். பெரியவர்கள் நால்வரும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.

"அவள் மௌனமாக தட்டை வைத்து தனக்கு தேவையானதை பரிமாறிக்கொண்டு சாப்பிட தொடங்க, மதனகோபாலும் மணிவாசகமும் சாப்பிட்டு முடித்து ஏதோ உரையாடியவாறு எழுந்து கூடத்திற்கு சென்றனர். அப்போது அவளது மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. எடுத்து "ஹலோ" சொன்னாள்.

"எதிர்முனையில்.. நீலாங்கரை போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சப் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன். உங்கள் பெயர் மதுமதிதானே?"

போலீஸ் என்றதும் மதுமதிக்கு வியர்க்க தொடங்கியது. "ஆ.. ஆமா சார். என்ன விஷயம் ?"

"ஒரு கேஸ் விஷயமா உங்களை கொஞ்சம் விசாரிக்க வேண்டும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள் என்று சொன்னால் உடனே வந்துவிடுவோம்" என்றார் காவலர்.

பொதுவாக ஒருவரை விசாரிப்பது என்றால் அவரது இடத்திற்கு சென்று தான் போலீஸார் விசாரிப்பார்கள். அல்லது சந்தேகத்தின் பெயரில் கைது செய்து கூட்டிப்போய் தான் விசாரிப்பார்கள். இதுபோல எல்லாம் போனில் கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள் என்ற விவரம் தெரியாததாலும், செய்திருந்த தப்பும் மதுமதியை பதற வைத்தது.

"இல்லை சார். எதுக்கு உங்களுக்கு வீண் சிரமம் நானே வந்து விடுகிறேன். ஆமா, ஒரு அரைமணி நேரத்தில் அங்கே இருப்பேன்" என்று பேச்சை முடித்துவிட்டு, அவசரமாக சாப்பிட்டேன் என்று பெயர் பண்ணி விட்டு எழுந்து ஓடவும், இரு பெண்மணிகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்துக்கொண்டனர்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top