Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

36. மதிமுகம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மகேந்திரனுடன் மருத்துவமனைக்கு சென்று வந்தது முதல் மதுமதிக்கு,"என்ன காரணத்தை சொல்லி இந்த திருமணத்தில் இருந்து தப்பிப்பது என்று ஒரே யோசனையாக இருந்தது.

மருத்துவர் சொன்ன விஷயம் அவளுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்தது.. இனி மகேந்திரனுக்கு கால்கள் பழையபடி மாற வாய்ப்பில்லை என்பது அது. காலம் முழுவதும் ஒரு ஊனமுற்றவனோடு அவளால் எப்படி வாழ முடியும்?? அப்போது மாலதிக்கு மோகனிடம் இருந்து கைப்பேசி அழைப்பு வந்தது.

"ஹலோ மோகன் தம்பி என்ன விஷயம்? மாயா நல்லா இருக்கிறாளா? என்று நலம் விசாரித்தவளின் முகம் சட்டென்று மாறியது.

"என்ன சொல்றீங்க தம்பி? நிஜமாவா? அது.. அது நம்ம மகிதானா? நல்லா பார்த்தீங்களா தம்பி? மாலதி பரபரப்புடன் பேசினாள்.

"நீங்களே நேரில் போய் பார்த்தீர்களா? நல்லது தம்பி. நான் உடனே கிளம்பி வரட்டுமா? என்றாள் ஆவலோடு.

"அப்படியா சரி தம்பி. ஆனால் காலையில் அவளோட அப்பா வீட்டில் இருப்பார். நீங்கள் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அழைத்து வந்ததாக சொல்லி விடுங்கள், என்றவாறு பேச்சை முடித்து விவரம் சொன்னாள்.

"நம்ம மகி, கிடைச்சுட்டாளாம். ஒரு கிளினிக்கில் வேலை செய்துகிட்டு இருக்கிறாளாம். மோகன் மனைவியை செக்கப்பிற்கு அழைச்சுட்டு போனப்போ அங்கே பார்த்திருக்கிறார். அவள் இவரை பார்க்கவில்லையாம். டாக்டரிடம் மட்டும் விசாரிச்சிருக்கார். மற்ற விவரம் காலையில் வந்து சொல்றேனு சொன்னார்" என்று மகளை ஓரக்கண்ணால் பார்வையிட்டாள்.

மகதி திரும்பி வருவது ஒருபுறம் குதூகலமாக இருந்தபோதும் அன்னறைக்கு கடத்தியது பற்றி அவள் என்ன சொல்லி வைப்பாளோ, எந்த அளவிற்கு அவளுக்கு தெரியுமோ என்று உள்ளூர கலக்கமும் உண்டாயிற்று. அதுவும் அந்த போலீஸ்காரன் விசாரிக்காமல் விடமாட்டான். அப்படி அவன் கேட்கும்போது அவள் தன்னை மாட்டி வைத்து விடக்கூடாதே என்று பதற்றமும் உண்டாயிற்று.

மதுமதியின் முகத்தில் கலவரம் அப்பட்டமாக தெரிய திருப்தியுடன் பார்த்துவிட்டு எழுந்து சமையல் அறை நோக்கி சென்றாள் மாலதி.

💜💜💜

மறுநாள் காலையில் சீக்கிரமே எழுந்து குளித்து தயாரானாள் மதுமதி. தந்தை வருமுன் சாப்பாட்டு மேசைக்கும் வந்துவிட்டாள். ஆனாலும் மின்விசிறி வேகமாக சுழன்றும் கூட முகமெல்லாம் வியர்த்தது. மதனகோபால் சாப்பிட வந்தமர்ந்தார். சின்ன மகளை அத்தனை காலையில் அவர் எதிர்பார்க்கவில்லை. என்றாலும் மகிழ்ச்சி அடைந்தார்.

"பார்த்தாயா மாலதி? கல்யாணம் நடக்கப்போகிறது என்றதும் உன் சின்ன மகள் கூட இவ்வளவு சீக்கிரம் தயாராகி வந்து விட்டாளே? என்று தன் மகிழ்ச்சியை பேச்சிலும காட்டினார்.

"அதென்னவோ நிஜம்தான் அத்தான். போகிற வீட்டில் நம்ம பெயரை நிச்சயம் காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றவாறு பரிமாற,

"ம்ம்.. நேற்று சில திருமண பத்திரிகை மாதிரிகளை வரவழைத்தேன் மாலதி. இதோ இந்த கவரில் இருக்கிறது. மாப்பிள்ளையும் மதுவும் சேர்ந்து அதில் எது பிடிக்கிறதோ தேர்வு செய்யட்டும். அல்லது எதுவும் பிடிக்காவிட்டால் அவர்களாக போய் தேர்வு செய்து கொண்டு வரட்டும். எனக்கு இரண்டு நாட்களுக்குள் தந்துவிட வேண்டும். கூடவே எத்தனை பத்திரிக்கைகள் அவர்களுக்கு தேவை என்பதையும் கேட்டுவிடச் சொல்லு. அப்போதுதான் தூரத்து சொந்தங்களை சற்று முன்னதாக அழைக்க வசதியாக இருக்கும்" என்று சொல்லவும்தான், மதுமதி நிலைமையின் தீவிரத்தையும் மகேந்திரனிடம் பேச வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதையும் உணர்ந்தாள் மதுமதி. அவளுக்குள் வேகமாக யோசனை ஒன்று உதயமானது. அதை எப்படி செயல்படுத்துவது என்று யோசித்தவாறு பொங்கலை வாய்க்குள் திணித்த வேளையில்...

"வணக்கம் அங்கிள், வணக்கம் ஆன்ட்டி, என்றவாறு உத்தியோக உடையில் மிடுக்குடன் நடந்து வந்தவனைப் பார்த்த மதுமதிக்கு பொங்கல் தொண்டையில் சிக்க, விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

"வாங்க தம்பி உட்காருங்கள். சூடாக டிபன் சாப்பிடுங்க" என்று மதனகோபால் உபசரித்தார்.

"இல்லை அங்கிள் எனக்காக வீட்டில் மாயா டிபன் செய்து இருப்பாள். நான் போய் சாப்பிட்டால் அவள் இரண்டு வாய் அதிகம் சாப்பிடுவாள்" என்று மறுத்துக்கொண்டிருக்க, அவன் பின்னோடு வந்த மகதியை அப்போது தான் கவனித்தார்.

"வாம்மா மகதி,"என்றவர் குழப்பத்துடன், “தம்பி இவள் எப்படி உங்களோடு ? என்று கேள்வியை கேட்டு மதுமதியின் வயிற்றில் புளியை கரைத்தார்.

"நான் ரிலேடிவ்ஸை சென்ட் ஆஃப் பண்ண ஸ்டேஷன் வரை போயிருந்தேன் அங்கிள். சிஸ்டர் டாக்ஸியை கூப்பிட்டு கொண்டு இருந்ததை பார்த்தேன். இந்தப் பக்கம் ஒரு கேஸ் விஷயமாக வர வேண்டியிருந்தது. அதான் நானே கொண்டு வந்து விட்டுவிடலாம் என்று வந்தேன்"என்றவன், " நான் கிளம்புகிறேன் அங்கிள். பை ஆன்ட்டி என்று கிளம்ப

"நீங்கள் சாப்பிடுங்க அத்தான். நீ போய் பிரஷ்ஷாகிட்டு வாடா மகி", என்றுவிட்டு, நான் தம்பியை வழியனுப்பி விட்டு வர்றேன்”என்று மோகனுடன் சென்றாள் மாலதி.

“ஏன்டா மகி ஒரு ஃபோன் பண்ணியிருக்கலாமே? நானோ அம்மாவோ ஸ்டேஷன் வந்திருப்போமே? என்றார் மதனகோபால்.

அது காலை நேரத்தில் அம்மா பரபரப்பா இருப்பாங்க.. நீங்களும் கிளம்பற அவசரத்தில் இருப்பீங்க, அதனால ஒரு சர்ப்ரைஸ் தரலாம்னு தான் சொல்லவில்லை.. அத்தோடு நானு இன்னும் சின்னப் பிள்ளையா என்ன? என்று சகோதரியைப் தீர்க்கமாக பார்த்துவிட்டு, நான் போய் பிரஷ்ஷாகிட்டு வர்றேன்பா” என்று மாடிப் படிகளை நோக்கி சென்றாள்.

அந்த பார்வையில் ஒருவித தீவிரத்தை கண்ட மதுமதிக்கு, உள்ளூர பதறியது. இவள் என்ன சொல்லி மாட்டி வைப்பாளோ?

அதற்குள்ளாக அவளை சாந்தப்படுத்தியாக வேண்டும். மகேந்திரனை அவளுக்கே விட்டுக்கொடுப்பதாக சொன்னால் மற்றதை மறந்துவிடக்கூடும். அத்தோடு ஒரே கல்லில் இரண்டு மாங்காய். இல்லை மூன்று... ஒருபுறம் அவளது குற்றத்தை மறந்து விடுவாள், இன்னொரு புறம் அவளை பழி தீர்த்தது போலவும் ஆயிற்று. அடுத்து அவளை தூக்கி வைத்து கொண்டாடும் பெற்றோருக்கும் தண்டனை கொடுத்தது போலவும் ஆயிற்று

மதுமதி எல்லாவற்றையும் தனக்குள்ளாக கணித்து முடித்தபின் நிம்மதியாக உணவை சாப்பிட்டாள். முதலில் மகதியிடம் பேசிவிடுவது நல்லது என்று மாடிக்கு சென்றாள். அதன் பிறகு போனில் மகேந்திரனை அழைத்துப் பேசினாள்.

💜💜💜

மகதி குளித்து சாப்பிடும் வரை பொறுமை காத்தாள் மதுமதி. அதன் பிறகு அவளது அறைக்கு சென்று கதவை தட்டினாள். "உள்ளே வரலாம்"என்று குரல் கொடுத்தாள் மகதி.

மதுமதியை பார்த்ததும், உணர்ச்சி துடைத்த குரலில் "என்ன வேணும் உனக்கு? என்றாள்.

"எனக்கு ஒன்றும் வேண்டாம். நீ அப்போது ஏன் அப்படி பார்த்தாய்?"

"ஏன் உனக்கு தெரியாது?" என்று கடுமையான குரலில் கேட்டாள்.

"எ..என்ன சொல்றே எனக்கு ஒன்றும் புரியவில்லை."

"தூங்கிறவங்களை எழுப்பிடலாம். அப்படி நடிக்கிறவங்களை எழுப்ப முடியாது. சரி அதைக் கேட்கத்தான் வந்தாயா?"

"நீ ஏன் திடீரென்று காணாமல் போனாய்? அதுதான் அம்மா உனக்கு துணையாக இருக்காங்களே? அப்புறம் உனக்கு என்ன கஷ்....அவள் சொல்லி வரும் போது, மகதி அவளை கண்ணில் கனலோடு பார்க்கவும் மதுமதியின் பேச்சு நின்றது.

"எல்லாம் எனக்கு தெரியும் மது. அதை நீ எப்போதும் நினைவில் வைத்துக்கொள். இனிமேல் என் வழியில் குறுக்கிடுவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இந்த அறையில் கூட சிசிடிவி கேமரா வச்சுருக்காங்க. அது மோகன் அண்ணா மொபைலில் கனெக்ட் பண்ணியிருக்கு. ஏன் ஷாக் ஆகுறே? உனக்கு மட்டும்தான் அதெல்லாம் செய்யத் தெரியுமா? என்று கேட்டு அவளை மேலும் அதிர வைத்துவிட்டு, தொடர்ந்து, சந்தேகப்படற நபர் யார்னு கேட்டப்போ கூட நான் உன் பெயரை சொல்லவில்லை. காரணம் இத்தனை நாளும் அம்மாவுக்காகத்தான் பொறுத்து போனேன். இனி அப்படி இருக்க மாட்டேன். அதனால் ஜாக்கிரதையாக இருந்து கொள். அதுதான் எல்லாருக்கும் நல்லது" என்று எச்சரித்தாள்.

மதுமதியின் முகம் உறைந்து போயிற்று. பதில் ஒன்றும் கூறாமல் வேகமாக வெளியே கிளம்பிவிட்டாள்.

💜💜💜

அப்போது தான் மகேந்திரன் அலுவலகத்திற்கு கிளம்பியிருந்தான். வழியில அவனோடு பேசவேண்டும் என்று காபி ஷாப்பிற்கு வரச்சொன்னாள் மதுமதி. சரி என்று அவள் குறிப்பிட்ட காபி ஷாப்பிற்கு வண்டியை விடச் சொன்னான்.

அவன் போய் சேர்ந்த சில நிமிடங்களில் அவளது இரு சக்கர வாகனத்தில் வந்திறங்கினாள் மதுமதி. வண்டியை பார்க் செய்துவிட்டு அவனது காருக்குள் ஏறி அமர்ந்தாள்,"நீங்கள் இறங்கி சிரமப்பட வேண்டாம் மகேந்திரன். நான் சொல்ல வந்ததை சொல்லிவிடுகிறேன்," என்றதும், ஓட்டுனர் இறங்கிக் கொண்டான்.

ஏசி காரிலும் அவளுக்கு வியர்த்தது,"என்ன விஷயம் மதுமதி? ஏன் இவ்வளவு பதற்றம்? "என்றான்.

"மகதி வீட்டுக்கு வந்துவிட்டாள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். "என்றாள் அவனை நேராக பார்த்து.

"ஆமாம் மோகன் போன் பண்ணி சொன்னான். அத்தை இன்னும் சொல்லவில்லை. மகதியும் என்னை தொடர்பு கொள்ளவில்லை,என்றவன், இப்போது அதற்கு என்ன மதுமதி? இதை தெரிந்து கொள்ளவா அழைத்தாய்?

"ச்சு..ச்சு....அதுக்காக இல்லை. நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்புவதாக அம்மா சொன்னார்கள். அதன்பிறகு மகதி காணாமல் போய் உங்களுக்கும் விபத்து நேர்ந்து என்ன என்னவோ ஆகிவிட்டது. மகேந்திரன். எனக்கு உங்கள் மீது விருப்பம் இருந்தது உண்மைதான். ஆனால் அன்றைக்கு மருத்துவபனையில் நீங்கள் பேசியது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மகதி நினைவில் உங்களை மறந்துபோய் இப்படி விபத்தில் சிக்கும் அளவுக்கு நீங்கள் அவள் மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறீர்கள் என்று புரிந்து கொண்டேன். அதனால் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது தான் சரி என்று எனக்கு தோன்றுகிறது," என்று நிறுத்தினாள்.

எதுவானாலும் நீயே சொல் என்பது பேல மகேந்திரன் பேசாமல் அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

தொடர்ந்து,"ஆனால் இப்போது நானாக போய் இந்த திருமணம் வேண்டாம் என்றால் அப்பா என்னை தப்பாக நினைப்பார். அதனால் நீங்களே மகதியை பிடித்திருப்பதாக சொல்லிவிடுங்கள் மகேந்திரன். ப்ளீஸ்? என்றாள்.

"புரிந்து தான் பேசுகிறாயா மதுமதி? நான் உன்னை மறுத்து அவளை திருமணம் செய்து கொள்ள கேட்டால் எனக்கு பெண்ணே தரமாட்டேன் என்று சொல்லக்கூடும். அப்படியே நான் கேட்டு சம்மதித்தாலும் என் மீது என்ன மதிப்பு இருக்கும் சொல்லு?? அதனால் இதை நீதான் செய்ய வேண்டும். அல்லது நீ மணமகளாக தயாராகி விடு மதுமதி"

மதுமதி வசமாக சிக்கிக்கொண்டதை உணர்ந்தாள். அப்பாவிடம் ஒரு நியாயமான காரணத்தை சொன்னால் மட்டுமே அவர் சம்மதிப்பார். அப்படி ஒரு காரணத்திற்கு அவள் எங்கே போவது?? என்று யோசித்தவளுக்கு அன்று மாலதி அவளுக்காக ஒரு வரன் பார்த்திருப்பதாக சொன்னது நினைவுக்கு வந்தது. ஆக இதில் அவளுக்கு அம்மா தான் உதவ முடியும். அவளது பெரிய மகளுக்கு வாழ்க்கை கிடைக்கும் என்றால் நிச்சயமாக உதவி சொய்வாள் என்று எண்ணினாள்.

"ஓகே, மகேந்திரன் நான் வழி கண்டுபிடித்து விட்டேன். கூடிய சீக்கிரம் அப்பா உங்ககிட்ட பேசுவார். அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துக்கள் மகேந்திரன் " என்று அவள் காரை விட்டு இறங்கிக்கொள்ள அவனது இதழில் மர்மபுன்னகை ஒன்று விரிந்தது.

💜💜💜

மதுமதி அன்னையிடம் விஷயத்தை சொல்லி உதவி கேட்டதும், உடனேயே மாலதி ஒத்துக்கொள்ளவில்லை.

"ஏன்டி திடீரென்று பின்வாங்குறே?? என்ன விஷயம்? என்றாள்.

மகேந்திரனிடம் சொன்னதையே அன்னையிடமும் சொன்னாள். மகதியும் திரும்ப கிடைச்சுட்டா. அதனால் நீங்கள் தான் எனக்காக அப்பாவிடம் பேச வேண்டும்" என்றாள்.

"இப்பவாச்சும் புத்தி வந்துச்சே. சரி நான் அப்பாக்கிட்ட பேசுகிறேன், நீ மறுபடியும் ஏதாவது தகிடுதத்தம் பண்ணினே உன்னை நானே பிடிச்சு போலீஸில ஒப்படைச்சிருவேன். இது வெறும் மிரட்டல் இல்லை. சத்தியம். மனசுல வச்சுக்கோ" என்றுவிட்டு நகர்ந்தாள்.

"ம் ம் ஆளாளுக்கு மிரட்டவா செய்கிறீர்கள், இனிமேல் அதற்கெல்லாம் தேவையே இல்லை. நான் ஏன் சிக்கலில் மாட்டேறேன். அதான் இனி உங்க அருமை மகள் காலம் முழுவதும் ஒரு நொண்டி கூட தான் குடும்பம் நடத்தப்போகிறாளே? என்று மனதில் நகைத்துக்கொண்டாள் மதுமதி. ஆனால் அந்த சந்தோஷம் ஆனால் காணாமல் போகப்போவதை அப்போது அவள் அறியவில்லை..!
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top