Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

35. அத்தியாயம்{நிறைவு பகுதி}

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
கொடைக்கானல்...

அன்று அதிகாலையில் மதுவந்தி கனவு கண்டாள். அழகான பூஞ்சோலை நடுவே அவள் ரவீந்தரனுடைய கையணைப்பில் தன்னை மறந்த விலையில் நிற்கிறாள். அவன் அவளது காதோரம் மெல்ல ஏதோ ரகசியம் சொல்ல மதுவந்தி வெட்கத்தில் மேலும் அவன் மார்பில் புதைந்து கொள்கிறாள். சுகமாய் அந்தக் காட்சியில் லயித்திருந்த போது எங்கோ கதவைத் திறக்கும் ஓசையில் அவளது,கனவு கலைய கண்களைத் திறவாமல் போர்வையை இழுத்து போர்த்திக் கொள்ள முயல யாரோ அதனை பற்றி இழுப்பது உணர்ந்து பதறிப்போய் எழுந்தாள்.

அவள் எதிரே ரவீந்தரன் நின்றிருக்க... அத்தனை நேரம் கண்ட கனவின் தாக்கம் என்று எண்ணிக் கொண்டு மறுபடியும் போர்வைக்குள் புதையப் போனவளின் காதில் " மதுவந்தி" என்ற ரவீந்தரனின் குரல் விழ விழுக்கென்று எழுந்தமர்ந்து கண்களை கசக்கிவிட்டு மறுபடியும் பார்த்தாள்..

அவனேதான்!!

"நீ...நீங்களா?" அவள் ஆச்சரியமும் பதற்றமுமாக வினவியபடி அருகில் கிடந்த துப்பட்டாவை மேலே போட்டுக் கொண்டு படுக்கையிலிருந்து இறங்கினாள்.

"நானேதான்"என்று முறுவலுடன் அவளை நெருங்கினான்.

"யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் ரவீந்தர்?" நீங்கள்.. எப்படி நீங்கள்..வீட்டிற்குள் வந்தீங்க? வார்த்தைகள் குழறியது. இன்னமும் அவளால் நம்ப முடியவில்லை.

"முறைப்படி சந்திரமௌலி சார்கிட்ட அனுமதி வாங்கிட்டுதான் வந்திருக்கேன். அதனால் நீ பயப்படத் தேவையில்லை"

தலை தானாய் கவிழ"அய்யோ, அவரிடம் என்னவென்று சொன்னீங்க?" தடுமாற்றத்துடன் கேட்கையில் அவளது முகம் லேசாக சிவந்தது.

அதற்குள் அவளை நெருங்கிவிட்ட ரவீந்தரன் ஒற்றை விரல் நீட்டி அவளது முகத்தை நிமிர்த்தி,"இப்போ அதுவா முக்கியம்?? என்றுவிட்டு அவளது கரத்தை பற்றி அழைத்துச் சென்று அங்கே போடப் பட்டிருந்த சோபாவில் அமர்த்திவிட்டு அடுத்து அவனும் அமர்ந்தான்.

இனிய படபடப்பில் மதுவந்தி மௌனமாய் தன் கரத்தை பற்றியிருந்த ரவீந்தரனின் கரத்தை பார்த்தவாறு அமர்ந்திருக்க...

"மதுவந்தி, நான் உன்னிடம் பேச வந்திருக்கேன். நான் ஓரளவுக்கு உன்னைப் பற்றி யூகித்துவிட்டேன். நான் நினைத்திருந்தால் அப்பாவிடமே கொஞ்சம் அழுத்திக் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார் தான். ஆனால், எனக்கு அதை உன் வாயால் கேட்க வேண்டும். நமக்குள் அடுத்தவர் வர வேண்டாம் என்று விரும்புகிறேன். அதற்கு முன்பாக ஒரு விஷயத்தை உனக்கு தெளிவுபடுத்தி விடுகிறேன். என் வாழ்வில் திருமணம் என்று ஒன்று நடந்தால் அது உன்னோடுதான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நீ என்னுயிரைக் காப்பாற்றியதற்கு பிரதி உபகாரம் என்று ஒருபோதும் நினைத்துவிட வேண்டாம். உன்னைப் பார்க்கும்வரை நான் அம்மா பார்க்கும் பெண்ணைத்தான் மணப்பேன் என்று உறுதியாய் இருந்தவன் மாறிப்போனதன் காரணத்தை இறுதியில் சொல்கிறேன், என்றவன் தொடர்ந்து, "என்னைத்தவிர என் வீட்டினர் எல்லாருக்கும் நீ அறிமுகமானவளாக இருக்கிறாய் எப்படி? எல்லாவற்றையும் விட என் அம்மாவின் கைப் பக்குவத்தில் உன் சமையல். அது எப்படி சாத்தியம்? மற்ற விஷயங்களைவிட இதுதான் என்னை அதிகம் யோசிக்க வைத்தது. நீ யார் மதுவந்தி??" பற்றிய கையை விடாது அவன் கேட்க,

சில கணங்கள் பேசாது இருந்துவிட்டு, "என்னைப்பற்றி என்ன யூகித்தீர்கள்? அதை முதலில் சொல்லுங்கள் சொல்லுங்கள்" என்று மெல்லிய குரலில் வினவினாள் மதுவந்தி.

"ம்ம், அந்த ஹோட்டல் சந்திரமௌலி சாருக்கு சொந்தமானது. அதில் நீ முதலாளிப் பொறுப்பில் இருக்கிறாய். அதனால்தான் அங்கே என்னைப் பார்த்திருக்கிறாய். என்னை அறிந்தவள் போல உணவு அனுப்பியது நீதான் என்பது வரை தெரிந்ததே தவிர உனக்கு என்னை எப்படித் தெரியும் என்பதுதான் இன்னும் புதிராக இருக்கிறது"

லேசாய் முறுவலித்து "அதெல்லாம் சரிதான். நீங்கள் சரியாய் கண்டு பிடித்து விடுவீர்கள் என்று எண்ணினேன். சொல்லுங்கள் ரவீந்தர் உங்களுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்பது எனக்கு எப்படி யார் சொல்லியிருக்க கூடும்? என்று மதுவந்தி எதிர் கேள்வி கேட்க...

சில கணங்கள் யோசித்துவிட்டு, வியப்பால் விழிகள் விரிய " அம்மா" அம்மாவா? அப்படி என்றால் நீதான் அம்மா பார்த்திருந்த மருமகளா? ரவீந்தரன் கேட்கையிலேயே மனதுக்குள் அதுவரை தாய்க்கு கொடுத்த வாக்கை மீறவேண்டி வந்துவிட்டதே என்று குற்ற உணர்வில் இருந்தவனுக்கு அந்த இறுக்கம் தளர நிம்மதி உண்டாயிற்று. கூடவே, நிறைய புதிர்கள் அவிழ்ந்தது போல, அவள் மருத்துவமனையிலிருந்து குழந்தையை பார்க்காமல் போவது பற்றி யோசித்தது நினைவிற்கு வந்தது. காரணம் மனோகரி அங்கே வந்து கொணடிருக்கிறாள் என்பதுதான். அதே போல பிறைசூடனும் அவளை அடிபட்ட கையோடு அங்கிருந்து கிளப்பிக் கொண்டுவந்து இங்கே விட்டது. ஆக மனோகரி மூலமாக அவள்தான் அவனுக்காக பார்த்திருக்கும் மணமகள் என்று தெரிந்து போகும் என்றுதான் அந்த ஏற்பாடு போலும். அவனுக்கு தெரிந்தால் நல்லது தானே ஏன் அதை எல்லாருமாய் மறைக்கவேண்டும்?" வாய்விட்டு கேட்டுவிட்டான்.

"மன்னிச்சிடுங்க, நான்தான் மறைக்கச் சொன்னேன் ரவீந்தர் என்றவள் தன் காரணத்தையும் விளக்கினாள். அம்மா சொல்வதற்காக நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டால் என்மீது உங்களுக்கு உண்மையில் பாசம் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பத்திலேயே தான் வாழ நேரும். கட்டிக் கொண்டதற்காக நல்ல கணவனாக நீங்கள் நடந்து கொண்டாலும்கூட என் மனதில் உங்கள் நேசம் பற்றிய ஐயம் இருந்து கொண்டே தான் இருக்கும். முன்பானால் எப்படியோ, ஆனால் பணத்திற்காக என்னை ஒருவன் ஏமாற்ற முனைந்துவிட்ட பிறகு எனக்கு அந்த உறுதி மிகவும் அவசியமாப்பட்டது ரவீந்தர்."

" உன் நிலையில் நீ செய்தது சரிதான் மதுவந்தி, அதே போல எனக்கும் உன் மீதான நேசம் அது நேசம்தானா அல்லது அந்த சமயத்தில் உன் மீது உண்டான கருணையா என்ற குழப்பம் இருந்தது. அதனால்தான் நீ கிளம்பியபோது உன்னை என்னால் உறுதியோடு தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் பிறகு யோசித்துப் பார்க்கையில் ஒன்று தெளிவாகிப்போயிற்று. அதிகமாய் நீ என்னுடன் பேசிப் பழகாவிட்டாலும் அந்த சிலகணங்கள் உன்னை அணைத்திருந்த தருணத்தில் என்னை நான் உன்னிடம் இழந்துவிட்டேன் என்பதுதான் உண்மை. அது உண்மை நேசம் என்று உணர்ந்து விட்டேன். பிறகு சொல்கிறேன் என்றேனே அது உன்னை நான் அக்கா வீட்டில் பார்த்த முதல் நாளே எனக்குள் சலனம் உண்டாகிவிட்டது. அந்தப் பார்வை பார்த்து வைத்தாயே என்றவன் கண்ணில் சிரிப்புடன் தொடர்ந்து, அதை தொலைபேசியில் சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால்தான் வேலை முடித்த கையோடு வண்டிஏறிவிட்டேன்."

அவன் சொல்லவும் மதுவந்தி அழகாய் முகம் சிவந்தாள்.

சிலகணங்கள் அவளது விரல்களை வருடியபடி கழிய ஏதோ நினைவு வந்தவனாய், "ஏன் மதுவந்தி அந்த கயவனை போலீஸில் ஓப்படைத்த போது அவன் மீது நீ சுமத்திய குற்றம் உண்மைதானா? அவன் ஏன் உன்னை கடத்தினான்? எனக்கு இன்னும் ஏதோ தெரிய வேண்டியது இருப்பது போல தோன்றுகிறது. ஆனால், சொல்வது கஷ்டமாயிருந்தால் வேண்டாம்"

"இல்லை இல்லை ரவீந்தர், எல்லாம் சொல்கிறேன், என்று தொடங்கி மனோகரியை சந்தித்ததிலிருந்து மும்பையில் மருதமுத்து கடத்த வந்தது வரை எல்லாமும் ஒருவாறு சொல்லி முடித்த போது அத்தனை நாள் ஏற்றி வைத்திருந்த பாரமெல்லாம் வடிந்தார் போல மதுவந்தி நீளமூச்சை எடுத்து ஆசுவாசமானாள்.

எல்லாமும் குறுக்கிடாமல் கேட்டவாறு அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்த ரவீந்தரனின் மனது அப்படியே உருகிப்போயிற்று. மதுவந்தி அவனுக்கு இறைவன் அளித்த அபூர்வ தேவதை, அவளை காலமெல்லாம் கண்ணுக்குள் வைத்து காக்கவேண்டும் என்று அவனது உள்ளம் பேராவல் கொண்டது. அவள் மீது காதலும் மதிப்பும் பெருகிற்று. இவளைவிட சிறந்த துணை தேடினாலும் கிடைக்கமாட்டாள். எண்ணங்கள் உள்ளே கரை புரண்டோட, "மதி, என்றழைத்தவன் தொடர்ந்து" ஆம் நீ என் மதியேதான். எத்தனை சந்தர்ப்பங்களை உன் மதியால் வென்று இருக்கிறாய்...? "ஐ லவ் யூ மதி"என்று ரவீந்தரன் மதுவந்தியை அள்ளி அணைத்துக் கொண்டான்.

அவளோ கூடுசேர்ந்த பறவையாய் அவனிடம் ஒன்றிக்கொண்டாள். அங்கே வார்த்தைகளுக்கு இடமில்லை. மௌனத்தின் பரிபாஷையில் இரு உள்ளங்கள் காதல் மொழி பரிமாற எங்கோ இனிமையாய் குயில் ஒன்று கூவியது..

ஒரு மாதம் கழித்து, சுமதி – நிகிலன் தம்பதியின் அருமந்த புத்திரனுக்கு சிறப்பாக பெயர் சூட்டும் விழா நடந்தேறியது. அன்றைய தினமே மதுவந்தி – ரவீந்திரன் நிச்சயதார்த்த வைபவமும் நடைபெற்றது. அடுத்து வந்த முகூர்த்ததில் இருவருக்கும் திருமணம் செய்வதாக முடிவு செய்யப்பட்டது

அந்த சுபயோக சுபதினத்தில்....
பெற்றோர் பெரியோர்களின் ஆசீர்வாதத்துடன்... சந்திரமௌலி தந்தையாய் முன் நின்று தாரை வாரத்துக் கொடுக்க.... ரவீந்தரன் மதுவந்தியின் மணிக்கழுத்தில் பொன் தாலி கட்டி அவளை தன்னுயிராக்கிக் கொண்டான்.

மனோகரியின் ஆசை மருமகள் ஆனாள் மதுவந்தி..


*சுபம்*
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top