Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

34. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மகேந்திரனுக்கு எதிர்பாராமல் நேர்ந்துவிட்ட விபத்திற்கு ஒருவகையில் அவனும் காரணமாகிவிட்டதை எண்ணி வருந்தினான் மோகன். அதிலும் நீண்ட நேர சிகிச்சைக்கு பிறகு வெளியே வந்த டாக்டர், "கண்களுக்கு ஏதும் சேதமில்லை. ஆனால் இனி அவரால் எழுந்து நடக்க முடியாது. வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியில் தான் இருக்க வேண்டும் என்றதை அவனால் தாங்கவே முடியவில்லை..

மருத்துவர் சொன்னதை கேட்டு அங்கே இருந்த எல்லோருமே அதிர்ந்து தான் போனார்கள். மங்களம் திடமான பெண்மணி தான். ஆனால் பெற்ற பிள்ளை இனி எழுந்து நடமாடமாட்டான் என்பதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உண்டு. அதனாலேயே அவரது உடல் நலத்தை பேணுவதில் மிகுந்த அக்கறை எடுத்து கொண்டிருந்தான் மகேந்திரன்.

மங்களத்திற்கு ஓய்வு தேவை என்று மருத்துவர் ஊசியைப் போட்டு தூங்க வைத்தார் மருத்துவர். மாலதி அவருக்கு துணையாக அமர்ந்திருந்தாள். மாப்பிள்ளையாகப் போகிற வீட்டில் பந்தா காட்டும் இளைஞர்கள் மத்தியில் மகேந்திரன் வித்தியாசமானவன் என்பதில் ஐயமில்லை. இன்னமும் நிச்சயமாகிவிடாத போதும் பழகிய இந்த சில நாட்களிலேயே அவளுக்கு அவனும் ஒரு பிள்ளையாகி விட்டிருந்தான். வேறு ஒருவன் என்றால் மதுமதியை சிறையில் தள்ளிவிட்டுத்தான் மறு வேலை பார்த்திருப்பான். ஆனால் இவனோ அவள் மனது மாறி நல்லபடியாக குடும்பத்துடன் சேர வேண்டும் என்று நினைக்கிறான். இத்தனை நல்ல மனம் படைத்த மருமகனின் நிலையை எண்ணி மிகுந்த வேதனை உண்டாயிற்று.

💜💜💜

மகேந்திரனுக்கு விபத்து ஏற்பட்ட விவரம் அறிந்து, கொடைக்கானல் சென்று கொண்டிருந்த மதுமதி பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்பி வந்து சேர்ந்தபோது அங்கே இருந்தவர்களின் முகங்களை பார்த்தே ஏதோ கெட்ட செய்தி என்று உணர்ந்தாள்.

மதன் ஒருபுறம் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்திருந்தார். அவர் அருகில் சென்று அமர்ந்தாள் மதுமதி. மகளைப் பார்த்ததும் கண்கள் கலங்கினர். மதனகோபால். "அவருக்கு என்னாச்சு அப்பா?"என்றாள் தவிப்பை அடக்கியவாறு.

தந்தை நடந்த விபரத்தை தெரிவித்தார். அதை கேட்டதும் ஒருகணம் மதுமதி வெகுவாக அதிர்ந்து போனாள். ஆனால் உடனே சுதாரித்து கொண்டு வேகமாக யோசித்தாள். பொதுவாக எந்த பெற்றோரும் இந்த மாதிரி ஒருவனுக்கு தங்கள் மகளை கொடுக்க முன்வரமாட்டார்கள். இந்த நிலையில் மகேந்திரனை அவளும் திருமணம் செய்து கொள்வதாக இல்லை. மகதியை ஒழித்துக்கட்டுவதற்கு முன்பாக இந்த விபத்து நேர்ந்திருந்தால் அவளது பழிவாங்கும் படலம் சுலபமாக நிறைவேறி இருக்கும். இப்போதும் காலம் தாழ்ந்துவிடவில்லை.

முதலில் திடுமென அந்தர்த்தனம் ஆகிவிட்ட மகதியை கண்டு பிடித்தாக வேண்டும். அவளிடம் மகேந்திரன் நிலையை தெரிவித்து விட்டால் போதும். அவள் ஒரு சென்ட்டிமெண்டல் ஃபூல். அந்த முட்டாள் மகேந்திரன் எப்படி இருந்தாலும் திருமணம் செய்து கொள்வாள். இப்படி ஒருவனை கட்டிக்கொண்டு மகள் நடத்தும் வாழ்க்கையை பார்த்தால் எந்த பெற்றோர் தான் தாங்குவார்கள்? பெற்றோரிடமிருந்து அவளது உரிமையை பறித்த மகதிக்கும், அவளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்த பெற்றோருக்கும் இது தான் சரியான தண்டனை" என்று ஒரு புறம் உள்ளூர மதுமதி எண்ணிக் கொண்டிருக்க,

இன்னொரு புறம் மதனகோபால் மகள் மேற்கொண்டு பேச்சற்று போனதை கவனித்து விட்டு, அவள் மகேந்திரன் நிலையை எண்ணி கவலைப்படுதாக நினைத்தார், ஆனால் மருத்துவமனையில் வைத்து எதையும் பேசுவது உசிதமில்லை என்று தோன்ற அமைதியாகிவிட்டார்.

மகேந்திரனுக்கு உணர்வு வந்த பிறகு, அன்று மாலையே வேறு தனியறைக்கு மாற்றப்பட்டான். மகனுக்கு துணையிருப்பதாக மங்களம் சொன்னபோது மாலதி ஒத்துக்கொள்ளவில்லை. "அண்ணி, நீங்கள் வீட்டிற்கு போய் ஓய்வெடுத்து கொண்டு காலையில் வாருங்கள். மாப்பிள்ளையோடு நான் துணையிருக்கிறேன். அவர் எனக்கும் மகன் தானே?"என்று அவரை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள்.

"ரொம்ப நன்றி அத்தை", என்றான் மகேந்திரன்.

"என்ன மாப்பிள்ளை இதற்கு போய் நன்றி எல்லாம் சொல்றீங்க? பெற்றால் தான் பிள்ளையா என்ன?" என்று செல்லமாக கடிந்து கொண்டாள்.

"சரி அத்தை இனி சொல்லவில்லை" என்றவன், "மதுமதியிடம் கொஞ்சம் பேசவேண்டும், அத்தை. காலையில் அவளை வரச்சொல்றீங்களா?"

"எதுக்கு மாப்பிள்ளை? தேவை இல்லாமல் அவகிட்ட போய் வாயை கொடுக்கணுமா??

"நீங்கள் கவலைப்படும்படி ஏதும் இல்லை அத்தை. ப்ளீஸ் வரச்சொல்லுங்க"

"சரி சரி மாப்பிள்ளை. இப்போ நீங்க அமைதியாக தூங்குங்கள்".

💜💜💜

மறுநாள் காலையில்.. மருத்துவமனைக்கு மதுமதி வந்தாள். மாலதி விஷயத்தை தெரிவித்தபோது அவளுக்கு ஆச்சரியம் தான். கூடவே உள்ளூர அவன் எதற்காக அவளை அழைத்திருக்கிறான்? அவளிடம் அப்படி என்ன பேசப்போகிறான்? என்று கேள்விகள் எழ, உள்ளே சென்றாள்.

'மகேந்திரனின் கால்கள் போர்வைக்குள் மறைந்திருக்க, வலது கண்ணிலும், வலது கையிலும் கட்டுக்கள் போடப்பட்டு இருந்தது.

"வா மதுமதி. இப்படி உட்கார்"என்றான் மகேந்திரன்.

"இல்லை பரவாயில்லை. என்னை எதுக்கு வரச் சொன்னீங்க?"

"மன்னிப்பு கேட்கத்தான் மதுமதி".

மதுமதிக்கு திகைப்புத்தான். "மன்னிப்பா? எதுக்கு அதுவும் என்கிட்ட?"

"உன்னை வேண்டாம்னு மகதியை கல்யாணம் செய்து கொள்ள நினைச்சேன். ஆனால் அவளும் சொல்லாமல் காணாமல் போய்விட்டாள். அவள் நினைவில் உண்டான மனஉழைச்சல் காரணமாகத்தான் இந்த விபத்து நேர்ந்து விட்டது. அதன் விளைவாக நானும் இப்போது முடமாகிவிட்டேன். எல்லாம் நான் உன்னை நிராகரித்த பாவத்திற்கு தான் மதுமதி. அதனால் என்னை மன்னிச்சுடு" என்றான் உருக்கமான குரலில்.

மதுமதி சிலகணங்கள் பேச்சற்று அவனையே வெறித்தாள். அவளுக்கு சந்தோஷம் உண்டாகவில்லை. மாறாக மகதி மீது தான் ஆத்திரம் கொண்டாள். அவள் மட்டும் பெண் பார்த்த அன்றோடு விலகிப்போயிருந்தால் இந்த மகேந்திரன் தனக்கு சொந்தமாகி இருப்பான். எல்லாவற்றையும் கெடுத்துவிட்டாளே பாவீ என்று மனதுக்குள் அவளை திட்டிவிட்டு,"அப்படி எல்லாம் நீங்களாக வீண் கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள் மகேந்திரன். ஏதோ கெட்ட நேரம். இந்த மட்டிலும் உயிர் பிழைத்துவிட்டீர்களே. அதுவே போதும். கால்கள் இல்லை என்பதெல்லாம் இப்போது பெரிய பிரச்சினையே இல்லை. செயற்கை கால்கள் பொருத்தி நடனம் ஆடுகிறவர்களும், ஓடுகிறவர்களும் உதாரணங்களாக இருக்கின்ற காலம் இது. நீங்கள் கூட பழையபடி நடக்கலாம். அதனால் மனதைப் போட்டு அலட்டிக் கொள்ளாமல் ஓய்வு எடுங்கள். கெட் வெல் ஸுன்" என்று புன்னகையுடன் அவனது அடிபடாத கையை பற்றி அழுத்தினாள்.

மகேந்திரனுக்கு பிரமிப்பாக இருந்தது. இந்த மதுமதி புதியவள். மாலதி சொன்னது போல இதுதான் அவளது இயல்பு. மகதி மீது அவளுக்கு இருக்கும் வெறுப்பு மட்டும் நீங்கிவிட்டால்.. அவனுக்கு நினைக்கவே மகிழ்ச்சியாக இருந்தது. பதிலாக புன்னகைத்து,"நன்றி மதுமதி, இன்னொரு விஷயம் கேட்கலாமா ? என்றான்.

"கேளுங்கள்"

"இன்னமும் உன் மனதில் நான் இருக்கிறேனா?"

"இதென்ன சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்வி என்பது போல் கூர்ந்து பார்த்தாளே தவிர பேசவில்லை.

மகேந்திரன் தொடர்ந்து பேசினான், "ஏன் கேட்கிறேன்,என்றால் இந்த நிமிடம் உன் அப்பாவை பொறுத்தவரை நீதான் மணமகள். அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. மகதி இருந்திருந்தால் நீ தப்பித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்திருக்கும். ஆனால் இப்போது அவள் இல்லை என்பதால் நீதான் மணப்பெண். Maybe இந்த மாதிரி சூழலில் அந்த நிச்சயதார்த்தம் நடக்க வழியில்லை தான். ஆனால் நீ பேசியதை பார்த்ததும் எனக்கு உன் மனம் பற்றி தெளிவுபடுத்திக் கொள்ள தோன்றியது” என்றான்.

மதுமதி உள்ளூர அதிர்ந்தாள். அவனது பேச்சில் ஏதோ உள்ளர்த்தம் இருக்குமோ என்று சிறு சந்தேகம் இருந்தபோதும், அவனது கேள்விக்கு என்ன பதில் அளிப்பது என்று திணறினாள். இல்லை என்று சொன்னால் அவளை அவன் தவறாக நினைக்க கூடும். ஆமாம் என்றால் அவனை திருமணம் செய்து கொள்ள சம்மதம் என்று நினைக்ககூடும், இரண்டு பதிலுமே அவளுக்குத்தான் பாதகமாக அமையும். ஏசி அறையிலும் அவளுக்கு குப்பென்று வியர்த்தது.

அவளது முகத்தை பார்த்திருந்த மகேந்திரன் மனதுக்குள் நகைத்துக்கொண்டான்.

பதிலுக்காக மகேந்திரன் காத்திருப்பது புரிந்து,பாதகமே ஆனாலும் அவன் தன்னை தவறாக நினைக்க இடமளிக்க விரும்பாது,"அதில் என்ன உங்களுக்கு சந்தேகம் ? ஒருவரை மனதில் நினைத்துவிட்டு மறப்பது எளிதான காரியமா? என்றதும்

அவளது சமாளிப்பை ரசித்துபடி,"ஓகே, மதுமதி. நன்றி. என் மனம் இப்போதுதான் லேசாயிற்று. நீ போகலாம்". என்றதும்

மதுமதி தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளியேறினாள்.

💜💜💜

அன்று மதிய உணவிற்கு வந்த மதனகோபால் சாப்பிட்டுவிட்டு வழக்கம் போல் உடனே கிளம்பாமல் கூடத்தில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தார். அப்போதுதான் அவருக்கு அடுத்த சோபாவில் மதுமதியும் தீவிர யோசனையில் இருப்பதை கவனித்தார்.

"என்னம்மா மது, மகேந்திரனுக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்துகிறாயா? என்று வினவ, தன் யோசனையில் இருந்து விடுபட்டு நிகழ்விற்கு வந்தாள்.

"ஆ ஆமாம் அப்பா” என்று வருத்தம் காட்டி சொன்னாள்

(மகேந்திரன் சொன்னது போல தந்தையைப் பொறுத்தவரை அவள் தானே மணமகள்)

"அப்பா இருக்கும்போது உனக்கு என்னம்மா கவலை? என்று சொல்லிக்கொண்டு இருந்தார்.

பணிப்பெண்ணிடம் சாப்பாட்டு மேசையை ஒதுங்க வைக்கச்சொல்லிவிட்டு மாலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு பற்றி சொல்லிக்கொண்டு இருந்த மாலதி அங்கே வந்தாள்.

"அத்தான் நீங்கள் என்ன சொல்ல வர்றீங்க? என்றாள் அவரை நேராக பார்த்து,

"நடைமுறை வாழ்க்கையை நாமும் யோசிக்க வேண்டும் இல்லையா மாலதி? நம்ம பொண்ணு காலத்துக்கும் இப்படி ஒருவருக்கு சேவை செய்து கொண்டு வாழ்வது என்றால் அது எப்படி முடியும் சொல்லு?? டாக்டர் ஏதோ நம்பிக்கை தரும் விதமாக பின்னாளில் நடமாட முடியும் என்றால் கூட அவருக்கு பெண்ணை கொடுக்கலாம். ஆனால் அப்படி ஒருவழியும் இல்லாதபோது நாம் தெரிந்தே பெண்ணை அங்கே கொடுக்க முடியுமா? என்றார்.

மாலதி இருவரையும் தீர்க்கமாகப் பார்த்துவிட்டு ஒரு கேள்வி கேட்டாள். மற்ற இருவரும் சொல்வதறியாது விழித்தனர்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top