Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

33. மதிமுகம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
கொடைக்கானல்..

அங்கே மித்ரனை காண நேர்ந்ததில் மகதிக்கு சற்று சங்கடம் தான். ஆனால் அவனுக்கு மிருதுளா விவரம் சொல்லி விட்டிருந்ததால், அவன் இயல்பாகவே நடந்து கொண்டான். அதுவும் சற்று குன்றலாகத்தான் இருந்தது. அதைப் புரிந்தவனாக,

"என்னை உன் சகோதரனாக எண்ணிக்கொள் மகதி. நல்ல தோழனாகவும் நானிருப்பேன். அத்தோடு நீ மரணம் வரை சென்று மீண்டு வந்திருப்பதாக மாமி சொன்னதும் நான் ரொம்பவே ஆடிப்போனேன். நீ அங்கே இருந்து போராடாமல் இங்கே வந்து ஒளிந்து கொண்டிருப்பதாக உன் மீது நான் கோபமே கொண்டிருந்தேன். அப்புறமாக நீ தைரியமாய் கிளம்பியதும் மிகுந்த சந்தோஷப்பட்டேன். ஆனால் மதுமதி இத்தனை தரமிறங்கி, உன்னை கொல்லவும் துணிந்ததை நினைக்கையில் நீ இங்கே வந்ததே சரி என்று உணர்ந்துவிட்டேன். அதனால் உனக்கு என்னிடம் எந்த வித தயக்கமோ, கூச்சமோ தேவையில்லை. இயல்பாக இரு".

இரண்டு தினங்களே பழகிய இந்த மித்ரனுக்கு உண்டான பாசம் கூட ஒரே ரத்தமான தங்கைக்கு இல்லாமல் போனதே என்று உள்ளூர வருந்தினாலும் தங்கையை அவன் தப்பாக எண்ணுவது பிடிக்காமல் அவனிடம், என் தங்கை சுபாவாத்தில் நல்லவள் தான் மித்ரன், ஏனோ அவளுக்கு என்னை மட்டும் பிடிக்காமல் போனது என் துரதிர்ஷ்டம் என்று லேசாக புன்னகைத்தாள் மகதி.

ஓகே ஓகே.. எனக்கு புரிகிறது.. என்றவனுக்கு

இத்தனை கஷ்டத்தை அனுபவித்த பிறகும் தங்கையை அவன் தப்பாக எண்ணிவிடக் கூடாது.. என்று எண்ணுகிறாளே.. எந்த மாதிரியான பாசம் இது? அந்த மதுமதியை சந்தித்து மகதியின் உயர்ந்த கருத்தை சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் மித்ரன்.

💜💜💜

அன்றைக்கு மகதியை கொடைக்கானலுக்கு அனுப்புவதற்கு முன்பாக அவளுக்கு புது கைப்பேசியும், புது எண்ணும் வாங்கி கொடுத்து விட்டான் மகேந்திரன்.

மதுமதியை தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்திருந்தான் மோகன். மாலதியும் வீட்டில் இருக்கும் வேளைகளில் சின்ன மகளின் நடவடிக்கைகளை கண்காணித்துக்கொண்டு தான் இருந்தாள். அப்படி நோட்டம் விட்ட போது மகதி கிளம்பிய இரண்டாவது நாள் அவள் பழைய சாமான்கள் அறைக்கு செல்வதைப் பார்த்தாள். அவளறியாமல் பின் தொடர்ந்தாள்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த மதுமதி அங்கே கைற்றுக்கட்டில் இருந்த அடையாளமே இல்லை என்பதை கண்டவுடன், அவளையும் அறியாது, "ஐயோ" என்று அலறிவிட்டு, சட்டென்று கையால் வாயை பொத்திக் கொண்டு, மிரட்சியுடன் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள்.

கொஞ்சம் நஞ்சம் இருந்த சந்தேகமும் நீங்கிவிட, மாலதி சட்டென்று தன்னை ஒரு மரத்தின் பின்னே மறைத்துக் கொண்டு, படபடத்த இதயத்தை கையால் அழுத்திக் கொண்டாள்.

சில கணங்களில் அந்த அறையின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து மது பின்புறமாக செல்லும் படிகளில் மடமடவென்று ஏறுவதை பார்த்த மாலதிக்கு விஷயம் ஒருவாறு விளங்கிற்று. அவளும் அதே வழியில் மாடிக்கு சென்றபோது அவளது அறையை சாவி கொண்டு திறந்து உள்ளே சென்று அவசரமாக தாழிட்டுவிட்டாள்.

மாலதிக்கு அவள் உள்ளே என்ன செய்கிறாள் என்று பார்க்க இயலாத போதும் நிச்சயமாக யாருடனோ தொடர்பு கொண்டு பேசுகிறாள் என்று புரிந்தது.

💜💜💜

மதுமதியின் கைப்பேசியை ஏற்கனவே கண்காணித்து வந்த காவல் துறையினருக்கு அவள் யாரோடு என்ன பேசுகிறாள் என்பது எல்லாம் தெரிய வர, அதை பதிவு செய்து மோகனிடம் ஒப்படைத்தனர். அதன்படி அவள் தொடர்பு கொண்டது மைதிலியை என்பது புரிந்தது. ஆனாலும் மதுமதியை கைது செய்ய அவசரப்படவில்லை. ஒரு காரணம் வழக்கு பதியாதது.. அடுத்ததாக அவளுக்கு தண்டனை கொடுப்பது எளிது, ஆனால் அதனால் பிரயோஜனம் இல்லை. மதுமதி மனதில் இருக்கும் அந்த வெறுப்பு நீங்கி மகதியுடன் சுமூகமாக பழக வேண்டும். ஒரே குடும்பமாக இணைந்து மகிழ்ச்சியுடன் அவள் வாழ வேண்டும் என்பது. அதற்கான முயற்சியாகத்தான் அவளை தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்திருப்பது.

அடுத்து வந்த நாட்களில் மதுமதி தேள் கொட்டிய திருடன் நிலையில் இருந்தாள். மகதியை கட்டிப் போட்ட இடத்தில் அவளது சடலத்தை எதிர் பார்த்து போனால் அவளே மாயமாகிப் போனது தெரிந்தது முதலாக உள்ளூர தவித்துக்கொண்டு இருந்தாள். அன்னையை நோட்டம் விட்டுப் பார்த்தால், அவள் சோகமாகத் தான் நடமாடினாள்.

நாலு நாட்கள் கடந்த நிலையில், காலையில் உணவருந்த வந்து அமர்ந்த மதனகோபால், "அடுத்த வாரம் மதுவுக்கு நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது. மகி, எப்போது வருகிறாள் மாலதி? " என்றார்.

"அ.. அது வந்து இன்னும் நான் கேட்கவில்லை. அக்காவுக்கு கொஞ்சம் உடம்பு முடியவில்லை என்று சொன்னாள். அதனால் நானும் கிளம்பி வா என்று சொல்ல முடியவில்லை அத்தான்".

"ஓ! அவள் நம் பெண் மாலதி. எப்போதும் அவள் அங்கேயே போயா இருந்தால் எப்படி? உடம்பு சரியில்லை என்றால் பார்க்க கடமைப்பட்டவள் தான் என்றாலும்.. இங்கேயும் விசேஷம் நடக்க இருக்கிறது. அந்த நேரத்தில் வீட்டுப் பெண் இல்லாவிட்டால் எப்படி சொல்லு? என்றவர் தொடர்ந்து "சரி எதுவானாலும், விஷேசம் நடக்கிறதுக்கு முன்னாடி அவள் இங்கே வந்துடனும்னு நான் சொன்னதாக தெரிவிச்சுடு மாலதி"என்று சாப்பிடலானார்.

"கண்டிப்பா சொல்லிடுறேன் அத்தான். நீங்கள் வருத்தபடாமல் சாப்பிடுங்க. நம்ம மகி, இல்லாமல் நிச்சயதார்த்தம் நடக்காது. அதுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன்" என்றாள் மாலதி அழுத்தமான குரலில்

தந்தைக்கு இன்னமும் மகதி காணாமல் போன விஷயம் தெரியவில்லை என்பது அவர் பேச்சில் புரிந்தது. அத்தோடு மாலதியின் பேச்சு அவளுக்கு ஏதோ இரட்டை அர்த்தங்களை உணர்த்தியது. அதனால் திடுமென அவளுக்கு அந்த சந்தேகம் உண்டாயிற்று. ஒரு வேளை மகதியை தப்பிக்க வைத்து அம்மாவே கொடைக்கானலுக்கு அனுப்பிவிட்டு நாடகமாடுகிறாளோ என்று.. ஆனால் அதை எப்படி அறிந்து கொள்வது?

மதுமதிக்கு நண்பர்கள் தான் பலமும் பலவீனமும். அன்றைய ஆள்மாறாட்டம் சம்பவத்திற்கு பிறகு மோனீஷ் சுத்தமாக அவளிடம் பேசுவதையே நிறுத்தி விட்டிருந்தான். மற்றவர்களும் முன்பு போல் அவளோடு பழகுவதில்லை. ஏதேனும் ஒரு சாக்கிட்டு விலகிப் போனார்கள். அதற்கு ஏற்றார் போல அவர்கள் இவளைப் போன்று சும்மாவும் இல்லை. ஆளுக்கு ஒரு வேலையில் இருந்தனர். அவள் சந்தேகப்பட்டு விடக்கூடாது என்றோ என்னவோ இடையில் ஹோட்டல் சினிமா என்று ஒன்றாக போய் வந்தனர். அப்போதும் மோனீஷ் கலந்து கொள்வதில்லை. சமீபமாக எல்லோரும் விலகி போவதை உணர்ந்த போதும் அவர்களோடு உறவை முறித்துக்கொள்ள முன்வரவில்லை. மாறாக யாரும் அவளை புரிந்து கொள்ளவில்லை என்று வருந்தினாளே தவிர அவள் செய்ததை தவறு என்று ஒத்துக்கொள்வதாக இல்லை.

அதனால் இப்போது அவர்கள் அவளுக்கு உதவ முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆகவே வேறு வழியைத்தான் பார்க்க வேண்டும். நம்பகமான நபர் என்று ஒருவரும் இல்லை. அவளே தான் களத்தில் இறங்கியாகனும். அதுவும் எளிதில்லை. மகதி இல்லாத நிலையில் வெளியூர் செல்வதாக கிளம்பினால் அம்மா கேள்வி கேளாமலே சம்மதித்துவிடலாம். ஆனால் அடுத்த வாரம் நிச்சயதார்த்தம் அவளுக்குத்தான் என்ற நினைப்பில் தந்தை நிச்சயமாக ஒத்துக் கொள்ள மாட்டார்.

அதனால் இதற்கு என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்து இறுதியாக, கல்லூரியில் உடன் படித்த தோழியின் திருமணம் என்று ஒரு பொய்யை கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு கொடைக்கானலுக்கு கிளம்பிவிட்டாள் மதுமதி.

💜💜💜

மதுமதி கிளம்பி கொடைக்கானல் செல்லும் பஸ்ஸில் ஏறியதும் கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்த கவலர்களும் மோகனுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அவள் பின்னோடு கிளம்பினர். அவளை தடுப்பதற்கும், அவர்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் அதுதான் சரியான சமயம் என்று மோகனும் மகேந்திரனும் செயலில் இறங்கினர்.

அதன் விளைவாக மகேந்திரன் விபத்தில் சிக்கினான்.போலியான விபத்தை ஏற்படுத்துவதாகத்தான் திட்டம். ஆனால் உண்மையாகவே காலிலும் கண்ணிலும் காயம் பட்டுவிட்டது. உடனடியாக அவனை மோகனுடைய மருத்துவ நண்பரின் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.

மாலதிக்கும் மங்களத்திற்கும் அன்றுதான் நடத்தப்போவதாக முன்னதாக அறிவிக்காததால், விபரம் அறிந்ததும் பதற்றமும் கண்ணீருமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர். மோகன் அங்கே இருப்பதை பார்த்ததும், மங்களம் நடந்தது பற்றி விசாரித்தார். உண்மையை மறைக்காமல் தெரிவித்து, உயிருக்கு ஆபத்து இல்லை என்பதை தெளிவுபடுத்தவும் பெண்மணிகள் இருவரும் சீராக மூச்சுவிட்டனர்.

மதுமதிக்கு விஷயத்தை தெரிவிக்கும்படி மோகன் வலியுறுத்த, உடனே அவளை தொடர்பு கொண்டு பேசினாள் மாலதி. மதுமதிக்கு மிகுந்த அதிர்ச்சி என்பது அவளது பதற்றமான குரலிலேயே புரிந்தது. உடனே வருவதாக சொன்னாள்".

மதனகோபாலும் தகவல் அறிந்து விரைந்து வந்தார். பயப்படும்படியாக இல்லை என்றபோதிலும், நல்ல நிகழ்வு நடக்கவிருந்த நேரத்தில் இப்படி ஆயிற்றே என்று அவருக்கு வேதனை. உயிர் பிழைத்தது சற்று ஆறுதலாக இருந்தது.

மருத்துவர்கள் சிகிச்சை முடிந்து வெளி வந்ததும் சொன்னது எல்லோரையும் அதிர வைத்தது.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top