Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

30. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
காரை ஒப்படைத்து விட்டதாகவும் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்த ரவீந்தரனின் நண்பன் விஜய், இப்போது எங்கே இருக்கிறான் என்று விசாரித்தான். அவனுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கையில் அந்த ஆட்டோ முட்டுச்சந்தில் நுழைந்து கடைசியாய் இருந்த ஓட்டு வீட்டின் முன்பாக நிற்க ரவீந்தரன் தான் இருக்கும் இடத்தை நண்பனிடம் தெரிவித்து போனை கட் செய்து பைக்கை கண் மறைவாக நிறுத்திவிட்டு ஹெல்மட்டுடன் நோட்டம் விட்ட போது மதுவந்தி ஓடிவருவதும் அவளை மற்ற இருவரும் துரத்தி வருவதும் தெரிய மதுவந்தியை நோக்கி ஓடினான் ரவீந்திரன்.

மதுவந்திக்கு மயக்கம் ஏற்படவில்லை. அதை காட்டிக் கொள்ளாமல் அசைவற்று கிடந்தவள், ஆட்டோ நின்று மருதமுத்து பூட்டை திறக்க இறங்கிய தருணத்தை சரியாகப் பயன்படுத்தி வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல ஓடத்துவங்கினாள்.

மருதமுத்துவின் திட்டம் மதுவந்தியை மும்பையிலிருக்கும் பலான இடத்தில் விற்றுவிட்டு அதில் வரும் பணத்தோடு ஊரைப்பார்க்க போய் செட்டிலாவதுதான். ஆட்டோவில் வரும்போது அவன் ஆட்டோக்காரனிடம் அதை சொல்லிவிட்டு அந்த ஏஜன்ட்டிடம் பேசினான். அவனோ தற்போது அழைத்துவர வேண்டாம் இருட்டியதும் அவன் சொல்லும்போது ஹோட்டலுக்கு கூட்டி வந்தால் போதும் என்றுவிட்டான். அதனால் அதுவரை மதுவந்தியை மறைவாக வைத்திருக்க அவனது இருப்பிடத்திற்கு அழைத்து வந்திருந்தான். அவளோ திடுமென இப்படி புள்ளிமானாய் துள்ளி ஓடக்கூடும் என்று எதிர்பாராததால் மருதமுத்து திகைத்து நின்றது சிலகணங்கள் தான். ஆட்டோக்காரனும் அவனுமாய் அவளை துரத்தி வந்தனர்.

ஆட்டோவில் ஏறிய சில கணங்களில் மருதமுத்து ஏறிக் கொண்டு முதலில் அவளது செல்லை அணைத்து சட்டைப்பையில் போட்டுக்கொண்டு அவள் கத்துமுன்பாக மயக்க மருந்தை மூக்கில் வைத்தான். மதுவந்தி இதை ஓரளவு எதிர்பார்த்திருந்ததால் அவன் கைக்குட்டையை அதிகம் அழுத்துமுன்பாகவே மயங்கிவிழுந்தது போல பாவனை செய்தாள்! அதனாலேயே அவன் திட்டத்தை அவளால் அறியவும் முடிந்தது. உள்ளூர வெகுவாக அதிர்ந்த போதும் எப்படி தப்பிப்பது என்று யோசித்தவாறு இருந்தவளுக்கு இந்த சிறு அவகாசமே போதுமானதாக இருந்தது. மெல்லிய ஆரோக்கியமான தேகம் என்றாலும் ஒரே நிலையில் அமர்ந்து வந்ததில் மரத்திருந்த கால்களால் ஓடுவது சற்று சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் எதிரே ஓடி வந்த ஹெல்மட் அணிந்த உயரமான மனிதனைக் கண்டதும் மதுவந்தி வெலவெலத்துப் போனாள்.

மருத்துவமனையில்..

நிகிலனும் பிறைசூடனும் செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கையில். சுமதி அழைப்பதாக நர்ஸ் வந்து கூறவும் நிகிலன் மனைவியிடம் விரைந்தான்.

பிறைசூடன் சந்திரமௌலியிடம் விவரம் சொல்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தார்.

மதுவந்தி ஓடவும் "ஓடாதே மதுவந்தி" என்று கத்தியவாறு மருதமுத்து பின்னால் ஓடிவர, எதிரே ஹெல்மட் அணிந்த இளைஞனும் அவளை நோக்கி ஓடி வர மதுவந்திக்கு பயத்தில் உடல் நடுங்கியது! இருபுறத்திலும் ஆபத்து வந்தால் அவள் எப்படி தப்புவது? கடவுளே, என்னை காப்பாற்று என்று மனதோடு உருப்போட்டவாறு தப்பிக்கும் வழி அறியாது அவளது கால்கள் துவள அதற்குள்ளாக அவளை சமீபித்திருந்த ரவீந்தரன் இரண்டே எட்டில் அவளை தாங்கிப் பிடித்துக்கொள்ள, "ஐயோ, என்னை விடு," என்று அவனது பிடியிலிருந்து தப்பிக்க திமிறினாள் மதுவந்தி."

"ஷ்ஷ்... மது நான் தான் ரவீந்தரன்" என்றவாறு ஹெல்மெட்டை அகற்றினான். சட்டென்று விழிகள் அகல.. வியப்பும் ஆனந்தமுமாய் விழிகளில் நீர் திரள.. அன்னாந்து அவன் முகத்தைப் பார்த்தாள், அவனும் அதுவரை இருந்த பதற்றம் தளர ஆறுதலாய் அவளை நோக்க விழிகள் நான்கும் கலந்தது. அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொள்ள முடியாது திணறிப்போனான் ரவீந்தரன். அந்தக் கணத்தில் ஏதோ ஒரு மாற்றம் அவனுள் நிகழ்ந்தது. காலமெல்லாம் அந்த விழிகளை கலங்காது காக்கவேண்டும் என்ற உணர்வு பேரலையாய் அவனை ஆட்கொண்டதில் ஒருகையால் அவளை அணைத்திருந்த பிடி இறுகியது.

மருதமுத்து அந்தக் காட்சியில் திகைத்து நின்றது சில கணங்கள் தான். உடனேயே பழைய நினைவில் ஆத்திரம் பொங்க, "ஓஹோ, காப்பாத்த வந்த கதாநாயகனாக்கும்?? மரியாதையா அவளை இங்கன விட்டுட்டு நடைய கட்டு. இல்லைன்னாக்க உன் உசிரு உன்கிட்ட இருக்காது" என்று இடுப்பிலிருந்த கத்தியை உருவிக் கொண்டு முன்னேறினான்.

இருவரும் இருந்த அந்த மோன நிலை கலைய, சட்டென்று அவளை விலக்கி தன் பின்புறமாய் நகர்த்தினான் ரவீந்தரன்,

அப்போதுதான் அவனது கையில் கத்தியை பார்த்த மதுவந்தி அதிர்ந்து போனவளாய் "வேண்டாம்.... ரவீந்தர் வாங்க நாம் போய்டலாம்," என்று பதற்றமாய் அவனது கையைப் பற்றி இழுக்க முயன்றாள்.

"ஷ்..நீ..போ மது,நான் இவனைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஹெல்மட்டை அவளிடம் தந்து கிளப்ப முயன்றான். அவளோ வாங்கிய ஹெல்மட்டை கண் இமைக்கும் நேரத்தில் மருதமுத்துவை நோக்கி வீச அது சற்று குறி தப்பி அவனது இடது தோளை உராய்ந்துவிட்டு போக,அதில் ரவீந்தரனின் கவனமும் லேசாய் சிதற, அவளது அந்த முயற்சியில் மேலும் ஆத்திரமடைந்த மருதமுத்து, கத்தியுடன் ரவீந்தரன் மீது பாய்ந்தான். அவன் மீதே கண்ணாய் நின்ற மதுவந்தி இமைப் பொழுதில் இருவருக்கும் இடையே புகுந்துவிட்டாள்.

அதை சற்றும் எதிர் பாராத மருதமுத்துவின் கத்தி, மதுவந்தியின் வலது தோள்பட்டையில் இறங்க, ரவீந்தரன் விதிர்விதிர்த்து நின்றான்.

சரியாக அதே கணத்தில் ரவீந்தரனின் நண்பன் விஜய் போலீஸ் படை சூழ அங்கே வந்து சேர்ந்தான். ரத்தம் வழிய சரிந்தவளை தன்மீது தாங்கிப் பிடித்த ரவீந்தரனின் விழிகள் அவனையுமறியாது கலங்கியது.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top