Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

28. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மகேந்திரன் காவல் துறை உயர் அதிகாரியான நண்பனிடம் புகார் அளித்துவிட்டு மருத்துவமனைக்கு திரும்பினான். மாலதியின் சிகிச்சை முடிந்திருக்க, அவளை டிஸ்சார்ஜ் செய்து அவளது வீட்டில் கொணர்ந்து விட்டு, சற்று நேரம் அவளை ஆறுதல் படுத்தவென்று அவளது அறையில் மங்களமும் மகேந்திரனும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அவன் சென்று வந்த விபரத்தை தெரிவித்து, "அத்தை நீங்கள் கவலைப்படாதீர்கள். மகதியை சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம். அப்புறம் மாமாவிடம் அவள் பெரியம்மா நியாபகம் வந்துவிட்டதால் கொடைக்கானல் போயிருப்பதாகவும், இரண்டு நாளில் வந்துவிடுவாள் என்றும் சொல்லுங்கள்"என்றான்.

"எல்லாம் என்னால் தான் மாப்பிள்ளை. அவள் அங்கேயே பத்திரமாக இருந்திருப்பாள். அவளுக்கு நல்லது செய்கிறேன் என்று அழைச்சிட்டு வந்து இப்போது தொலைச்சிட்டு நிற்கிறேன், அவள் மட்டும் கிடைக்கவில்லை என்றால் நான் உயிரோடு இருக்க மாட்டேன்." மாலதி முகத்தை மூடிக்கொண்டு அழுகையில் குலுங்க, மகேந்திரன் விழிகளும் கலங்கியது.

மங்களமும் உள்ளூர கலங்கியபோதும் காட்டிக்கொள்ளாமல்,"அப்படி எல்லாம் ஆகாது அண்ணி. நம்ம பொண்ணு சீக்கிரம் கிடைத்து விடுவாள். நீங்களே அண்ணாவிற்கு காட்டி கொடுத்து விடுவீர்கள் போல, தைரியமாக இருங்கள் அண்ணி, என்று சற்று அழுத்தமாக கூறியவாறு மாலதியை அரவணைத்து ஆறுதல்படுத்தினார்.

ஒருவாறு அவள் திடமாகிவிட, தாயும் மகனும் விடைபெற்று கிளம்பினர். அதுவரையிலும் மதுமதி கீழே இறங்கி வரவில்லை, என்பதை மகேந்திரனின் மனம் குறித்துக்கொண்டது. வழக்கமாக எந்த ஒரு மகளும் இதுபோன்ற சமயத்தில் மருத்துவமனை வரை போய் வந்த தாயின் நலனை விசாரித்து, காணாமல் போன சகோதரி கிடைத்துவிடுவாள் என்று ஆறுதல் கூறி உடன் இருப்பாள். இவளானால், எட்டிக்கூட பார்க்கவில்லையே?? ஒருவேளை அவள் மருத்துவமனையில் இருந்து இன்னமும் வீட்டிற்கு வரவில்லையோ என்று எண்ணம் எழ, மாலதிக்கு ஃபோன் செய்து விசாரித்தான். அவள் அறையில் இருப்பதாக தெரிவிக்க, அத்தோடு பேச்சை முடித்துக்கொண்டான்.

மகேந்திரனுக்கு மதுமதி மீது கொலை வெறி உண்டாயிற்று. பெற்ற தாயிடம் கூடவா அன்பற்று போவாள் ஒருத்தி??அவள் எல்லாம் ஒரு பெண்ணா? மகதி உடன் பிறக்கவில்லை என்றால் என்ன? சகோதரி தானே? இத்தனைக்கும் அவள் ஒதுங்கிப் போகிறவள். அவளைப் போய் துன்புறுத்த எப்படித்தான் மனம் வருகிறதோ"... அவன் தீவிரமான சிந்தனையில் இருக்க, பல காலமாய் ஓட்டிய பழக்கத்தில் கைகள் இயங்கிக்கொண்டு இருந்தபோது

திடுமென மங்களம், "மகேன்" என்று அலற, சட்டென்று சுதாரித்து வண்டியை திருப்ப பெரும் ஆபத்திலிருந்து தப்பினார்கள்.

"மகேன், கவனம்டா, இப்படி இருந்தால் எப்படி மகேன்? அவள் உயிருக்கு ஒன்றும் ஆகியிராது. அதுதான் மோகனிடம் சொல்லிவிட்டாய் அல்லவா? அவன் நிச்சயம் கண்டுபிடித்து விடுவான். தைரியமாக இருப்பா"மங்களம் மகனுக்கு தைரியம் சொல்வது போல தனக்கும் சொல்லிக் கொண்டார்.

மகன் வெளியே திடமாக காட்டிக்கொள்ள முயற்சித்த போதும், உள்ளூர அவன் உடைந்து போயிருப்பதை மங்களம் உணர்ந்தே இருந்தார். இப்போது கண்கூடாக பார்த்து வெலவெலத்துப் போனார். மகதிக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அவளது மைந்தன் எப்படி தாங்குவான்? கடவுளே என்னோட பிள்ளைகளை சேர்த்து வைத்து விடு. எந்த சங்கடமாக இருந்தாலும் அதை பனி போல் விலக்கிவிடு இறைவனே என்று அந்த தாயின் உள்ளம் மன்றாடியது.

அவசரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதை அனுபவ பூர்வமாக பட்டபிறகே உணர்ந்தாள் மகதி. அன்று மதியம் நடந்தது நினைவில் ஓடியது. மதிய உணவை சாப்பிட்டதாக பெயர் பண்ணிவிட்டு அறைக்குள் நுழைந்த மகதி, சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். இப்படி திடுமென அவள் காணாமல் போனால் எல்லாரும் தவித்துப் போவார்கள். முக்கியமாக தந்தையின் உடல் நிலை இப்போது தான் சற்று தேறி வருகிறது. அது கெட்டுப்போகும்.

அடுத்து மகேந்திரன் பழகிய சில தினங்களுக்குள் அவள் மீது உயிராகிப் போனவன். சும்மா விலகிப் போவதாக சொன்னதற்கே உயிரை விட்டுவிடுவேன் என்றவன், வேண்டுமானால் அவனே சொன்னது போல சும்மா பெரியம்மா வீட்டிற்கு பாதுகாப்பு கருதி செல்வதாக தெரிவித்துவிட்டு கிளம்பி விடலாம். அதன் பிறகு செய்ய வேண்டியதை அங்கே போனதும் பார்த்துக் கொள்ளலாம்" என்று ஒரு முடிவிற்கு வந்தாள்.

ஆகவே அவள் எழுதிய கடிதங்களை கிழித்து விடலாம் என்று அதை வைத்த இடத்தில் பார்த்தால் காணவில்லை. அறையில் எல்லா இடத்திலும் தேடியும் அது அகப்படவில்லை. குப்பென்று வியர்த்துப் போனது. அவள் இப்போது எல்லாம் சாப்பிட சென்றாலும், சும்மா கீழே சென்று அம்மாவுடன் பேசுவதாக இருந்தாலும் சரி அறையை பூட்டிவிட்டு தான் எங்கேயும் கிளம்புகிறாள். அப்படி இருக்க அவள் அறையில் வைத்தது காணாமல் எப்படி போகும்? அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே சற்றும் எதிர்பாராத விதமாக ஒரு துணி அவளது முகத்தில் வைத்து அழுத்தப்பட்டதும் மயங்கிவிட்டாள்.

அவள் மயக்கம் தெளிந்தபோது, பழைய கயிற்றுக் கட்டிலில் கைகள் கால்கள் பிணைக்கப்பட்டு வாயில் துணியால் கட்டப்பட்டு ஒரு அறையில் கிடந்தாள். எந்த இடம் என்று அவளுக்கு சற்று நேரம் ஒன்றும் விளங்கவில்லை. கடலின் இரைச்சலும், கூடவே மரங்கள் காற்றில் அசைந்து உரசும் சலசலப்பும் கேட்டபடி இருந்தது. 5வருடங்களுக்கு முன்பு மதுமதி அவளை சாகட்டும் என்று அடைத்து வைத்த அதே அறை தான்.

அன்றைக்கு பிறகு மாலதி நிறைய வேண்டாத பொருட்களை அங்கிருந்து அகற்றிவிட்டிருந்தாள். அதன் பின் அறையை மாதம் ஒரு முறை துப்பறவு செய்து சுத்தமாக வைத்திருந்தாள். முன்பு போல இருட்டாக இல்லாமல் எப்போதும் சிறு வெளிச்சம் இருக்கும்படி குறைந்த வெளிச்சம் தரும் பல்ப் ஒன்றையும் பொருத்தியிருந்தாள். சொல்லப்போனால் இப்போது அங்கே ஒருவர் தங்கிக்கொள்ள போதுமானதாக காணப்பட்டது. ஆக மறுபடியும் மதுமதி அவள் ஆட்டத்தை தொடங்கி விட்டாள். ஏன்? அதுதான் அம்மா அவளுக்கு சாதகமாக பேசினாளே? என்று எண்ணும்போதே, பாதிப் பேச்சில் அவசரப்பட்டு வந்துவிட்டோமே, ஒருவேளை அம்மா அவளது கோரிக்கையை நிராகரித்துவிட்டாளோ? ஆனால் அப்படி இருந்தால் மதியம் சாப்பிடும்போது அம்மாவுடன் அத்தனை சுமூகமாக மது பேசியிருக்க மாட்டாளே? மகதி தீவிரமாக யோசிக்க யோசிக்க, அவளுக்கு எல்லாமும் விளங்கியது. முதலாவதாக அவள் இங்கே வந்த அன்று மதுமதி கதவை தட்டியும் திறக்காததால், அவளது அறைக்கு மாற்று சாவியை தயாரித்திருக்கிறாள் என்பது புரிந்தது.

இப்போது இரண்டு நாள் மௌனவிரதம், அப்புறம் அம்மாவிடம் உருக்கமான பேச்சு இரண்டுக்கும் பலன் இல்லாது போகவும் இந்த கடத்தல் நாடகத்தை நடத்திவிட்டாள். ஆனால் இதை அவள் தனியாளாக செய்ய வாய்ப்பே இல்லை என்று தோன்றியது. மதுமதிக்கு துணையாக இருப்பது யார்?

இந்த அறையில் முன்பு போல பயமில்லை தான். கூடவே மதுமதியை நினைத்து அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது. முன்பு அவள் யோசிக்கத் தெரியாமல் இங்கே கொணர்ந்து அடைத்து வைத்தாள். மறுபடியும் இங்கே அடைத்து வைத்தால், யாரும் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்திருக்கிறாளே? வளர்ந்து விட்டாளே தவிர கொஞ்சமும் அறிவே இல்லை. சினிமா பார்த்து இப்படி ஒரு அபத்தமான காரியத்தைச் செய்திருக்கிறாள் போலும்... என்று கேலியாக நினைக்கும்போதே, அப்படி அல்ல, மதுமதி திட்டமிட்டு தான் நடத்தியிருக்கிறாள் என்பதற்கு அவளது கடிதங்கள் காணாமல் போனதே பெரிய சான்று. சோறு தண்ணீர் இல்லாமல் இப்படியே கிடந்து சாகட்டும் என்று இப்படி கிடத்தியிருக்கிறாள் என்று தோன்ற, மகதியின் உள்ளம் முதல் முறையாக நடுங்கிற்று..
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top