Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

27. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
மருத்துவமனையில்...

மாலதியை பரிசோதித்த மருத்துவர், பயப்படும்படியாக ஒன்றும் இல்லை. எதிர்பாராத அதிர்ச்சியை தாங்க முடியாமல் மயக்கமாகிவிட்டார். மிகவும் பலவீனமாக இருக்கிறார். அதனால் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருக்கிறது. அது முடிந்ததும் வீட்டிற்கு அழைத்துப் போகலாம் என்றார்.

அதற்குள் மங்களமும் அரக்க பரக்க வந்து சேர்ந்தார். அவரிடம் விவரம் தெரிவித்த மகேந்திரன், மாலதிக்கு துணையாக இருக்கச் சொல்லிவிட்டு, மகதியின் கைப்பேசியை அன்னையிடம் தந்து, "இது உங்ககிட்டேயே இருக்கட்டும் அம்மா, என்று நேர்பார்வை பார்க்க ஏதோ விஷயம் என்று புரிந்துகொண்டு, "சரி, மகேன், உன் மாமனாருக்கு தகவல் சொல்லிவிட்டாயா?" என்றார்.

"இல்லை அம்மா, அவரிடம் இப்போது சொல்ல வேண்டாம். மகதி விஷயத்தை வேறு மாதிரி தான் சொல்ல வேண்டும், அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இப்போது நான் அவசரமாக ஒருவரை பார்க்க போக வேண்டும். நான் வரும்வரை எங்கேயும் போய்விடாதீர்கள் அம்மா" என்றுவிட்டு கிளம்பினான்.

மாலை சூரியன் மறைந்து இருள் பரவி, தெருக்களில் விளக்குகள் எரியத் தொடங்கியிருந்தது. மகேந்திரன் காரில் ஏறி அமர்ந்து விட்டானே தவிர, மனம் மகதியின் நினைவில் உழன்றது. அவள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று உருபோட்டவாறு இருந்தான். அடுத்து என்ன என்று சிந்திக்கவும் முடியாத வகையில் உடம்பும் மனமும் தளர்ந்தாற்போல உணர்ந்தான். இலக்கின்றி வெறித்தவனின் பார்வையில் பரபரப்புடன் மருத்துவமனை வாசலுக்குள் நுழைந்த மதுமதி தென்பட்டாள். இவள் எப்படி இங்கே என்று அவனுக்கு திகைப்பும் ஆச்சரியமும் உண்டாயிற்று. காரணம் அவன் இந்த மருத்துவமனையில் சேர்க்கப் போவதாக அவனது தாயை தவிர வேறு யாருக்கும் தகவல் தரவில்லை. அப்படி இருக்க அவள் எதற்காக இங்கே வந்திருக்கிறாள் என்று யோசனை ஓடியது. காரில் இருந்து இறங்கி அவசரமாக அவள் அறியாமல் பின் தொடர்ந்தான்.

மதுமதி வரவேற்பில் விசாரித்துவிட்டு மாலதி அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள். மங்களம் ஒருகணம் அவளை கூர்ந்து கவனித்துவிட்டு, "வாம்மா மதுமதி" என்றார்

"அம்மாவிற்கு, இப்போது எப்படி இருக்கிறது ஆன்ட்டி ?"

மங்களத்திற்கும் உள்ளூர வியப்பு உண்டாயிற்று. மதுமதி முதல் முறையாக அவரை சந்திக்கிறாள். அதனால் அடையாளம் தெரியாமல் தடுமாறுவாள் என்று அவளுக்கு பதிலை சொல்ல காத்திருந்தால், அவளோ ரொம்ப காலம் பழகியவள் போல பேசுகிறாளே? என்று எண்ணியவாறு," பயப்பட தேவையில்லை என்று டாக்டர் சொல்லிவிட்டார். இந்த ட்ரிப்ஸ் முடிந்ததும் வீட்டிற்கு போகச் சொல்லிவிட்டார். ஆனால் தூங்குவதாக நர்ஸ் சொன்னாங்க."

'ஓ! சரி ஆன்ட்டி. நான் அம்மாகூட இருக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் வீட்டிற்கு கிளம்புங்கள்", என்றாள்

"இல்லையம்மா என் மகன் திரும்ப வந்து அழைச்சுட்டு போறேன்னு சொல்லியிருக்கிறான். மேகலாவும் இருக்கிறாள். அதனால் நீ வீட்டிற்கு போ அப்பா வந்தால் பதற்றப்படப் போகிறார்," என்றபோது ஏதோ நினைவு வந்தவராக, "ஆமா, நீ எப்படி இங்கே வந்தாய் மதுமதி? இந்த விஷயத்தை உனக்கு யார் சொன்னார்கள்? என்று கேட்டார்.

அவர்களின் உரையாடலை வெளிப்புறம் நின்று கேட்டிருந்த மகேந்திரன் அவன் கேட்க எண்ணியதை தன் அன்னை கேட்கவும் அவரை மெச்சிக்கொண்டான்.

"அது.. அது வந்து ஆன்ட்டி, நான் என் தோழி பர்த்டேக்கு போயிருந்தேன். வர லேட்டாகும்னு சொல்ல அம்மாவுக்கு ஃபோன் செய்தேன் எடுக்கவில்லை. அப்புறம் லேண்ட் லைனில் கால் பண்ணினப்போ வேலைக்காரன் இப்படி விஷயம், மேகலா இந்த ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக வீட்டுக்கு ஃபோன் பண்ணினாள் என்று சொன்னான். அதுதான் பார்ட்டியை பாதியில் விட்டுவிட்டு நேராக இங்கே வந்துவிட்டேன் ஆன்ட்டி" என்றாள்.

அத்தனை நேரம் மேகலா அங்கே தான் இருந்தாள். மகேந்திரன் கிளம்பியதும், மங்களம் தான் அவளை தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மற்றும் இருவருக்கும் காபி வாங்கி வருமாறு அனுப்பி வைத்திருந்தார்.

"ஆக, இவள் பொய் சொல்கிறாள் என்று உணர்ந்த போதும், அதை காட்டிக்கொள்ளாமல், "ஓஹோ, சரிம்மா..வயசுப் பொண்ணு நீ, நேரத்தோட வீட்டுக்கு கிளம்புமா. இங்கே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று பேச்சு முடிந்தது என்பது போல் அங்கு ஓடிக்கொண்டிருந்த டிவியில் கவனத்தை செலுத்தினார் மங்களம்.

மகேந்திரனுக்கு கொஞ்சம் இருந்த சந்தேகம் பாதி உறுதியானது போலிருந்தது. சிலகணங்கள் நின்று விட்டு அறை வாசலுக்கு மதுமதி வர, அதை உணர்ந்தவன் மெல்ல நழுவி, கேன்டீன் பகுதிக்கு சென்றான். அங்கே காபிக்காக காத்திருந்த மேகலாவிடம் விசாரித்தான், அதன்படி உண்மையை ஊர்ஜிதம் செய்து கொண்டான். பிறகு அவளிடம் வேறு சில விஷயங்களை கேட்டறிந்து கார் பார்க்கிங்கிற்கு விரைந்தான்.

காவல்துறை இளம் உயர் அதிகாரி மோகன், மகேந்திரனுடைய பால்ய சிநேகிதன். பள்ளியில் உடன் படித்தவன். பாதைகள் வேறாக மாறிய பிறகும் அவர்களது நட்பு தொடர்ந்தது. சொல்லப் போனால் ஓராண்டுக்கு முன்புவரை அவன் வடமாநிலத்தில் தான் பணியாற்றி வந்தான். சென்ற ஆண்டு அவனுக்கு திருமணம் ஆயிற்று. அதன் பிறகு பதவி உயர்வு கிடைத்து, சென்னைக்கு மாற்றலாகி வந்துவிட்டான்.

மகேந்திரனுக்கு அதுவே இப்போது பெரும் ஆறுதலை தந்தது. மற்றபடி அவன் வருங்கால மனைவியை காணவில்லை என்றும் மைத்துனி மீது சந்தேகம் என்று அவன் வெளியாளிடம் எப்படி சொல்லுவான்? அதற்காக கையைக் கட்டிக்கொண்டும் இருக்கமாட்டான் தான். வேறு வழியைப் பார்த்திருப்பான். ஆனால் இப்போது அவனது நண்பனே பொறுப்பில் இருப்பதால் சற்று திடமாக உணர்ந்தான்.

மோகனிடம் தொலைபேசியில் சந்திக்க வருவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்ததால் அவன் நண்பனை கண்டதும் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். "சொல்லுடா மகி, என்ன பிரச்சனை?"என்று விசாரித்தான்.

மகேந்திரன் மகதியை முதல் முதலில் பார்த்தது முதல் அன்று மருத்துவமனையில் நடந்தது வரை விவரமாக எல்லா விபரங்களையும் தெரிவித்தான். அத்தோடு மகதி எழுதிய கடிதங்களை அவனிடம் ஒப்படைத்தான்".

"மதுமதி அவ்வளவு தூரம் பிரிலியண்ட்டா மகி? என்று வினவினான் மோகன்.

"பிரிலியண்ட்டா, இல்லையா என்றெல்லாம் தெரியாதுடா. ஆனால் நான் உன்னிடம் சொன்னது தான் நிஜம். இங்கே வருவதற்கு முன் நடந்ததை பார்க்கும் போது எனக்கு அவள் மீது தான் சந்தேகம் தீவிரமாகிறது. அவள் இதில் சம்பந்தப்படவே இல்லையென்றால் சந்தோசப்படற முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன். மகதி உயிரை விடும் அளவுக்கு கோழை அல்ல. இப்போது அவள் அம்மா மற்றும் சகோதரி மீது வைத்திருக்ககும் பாசம்தான் வீட்டைவிட்டு செல்ல காரணம் என்பது என் யூகம் "

"ம்ம்.. ஓகேடா மகி, நீ எதற்கும் கவலைப்படாதே, தங்கச்சியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, கண்டுபிடித்து கொடுப்பது என் பொறுப்பு," என்ற மோகன், தொடர்ந்து அம்மாவை கேட்டதாக சொல்லு" என்றான்.

"சொல்கிறேன். சாரிடா, என் பிரச்சனையில் நான் தங்கச்சியை பற்றி கேட்க மறந்துவிட்டேன்டா. உன் கல்யாண வாழ்க்கை எப்படி போகிறது? என்று விசாரித்தான்.

"நல்லா போகுதுடா. இப்ப மாயா உண்டாகியிருக்கிறாள், நேற்று தான் கன்பர்ம் ஆச்சு. நேரில் வந்து அம்மாவிடம் சொல்லவேண்டும் என்று நினைத்தேன், அதை இப்படி சொல்ல வேண்டியதாயிற்று"என்று மோகன் வருத்தத்துடன் தெரிவிக்க,

நண்பனை அணைத்துக் கொண்டு, "ஹேய், சூப்பர்டா வாழ்த்துக்கள். நான் மாமா ஆகப்போகிறேன்",என்றான் மகிழ்ச்சியோடு.

சிலநிமிடங்களில் மகேந்திரன் விடைபெற்று கிளம்பிப்போனான். அவன் மனதுக்குள் மகதியைப் பற்றிய கவலையும் பயமும் ஆட்கொண்டிருக்கும் நிலையில் அதை மறைத்து நண்பனை வாழ்த்துகிறானே இந்த நல்ல உள்ளத்திற்காக, சீக்கிரமே மகதியை கொணர்ந்து அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினான் மோகன். அத்துடன் மதுமதி மற்றும் அவளது தோழர் குழாமை கண்காணிக்க ஏற்பாடு செய்தான்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top