Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

26. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மாலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்காக மகதியை அழைத்து வருமாறு பணிப்பெண்ணை அனுப்பி வைத்தாள் மாலதி. ஆனால் மகதி அங்கே இல்லை என்று பணிப்பெண் வந்து சொல்லவும், எழுந்து தோட்டத்திற்கு சென்று குரல் கொடுத்துப் பார்த்தாள். அதற்குள்ளாக பணிப்பெண் மேகலா கடைசி மதில் சுவர் வரையிலும் பார்த்து வந்து, அங்கே இல்லை சொல்ல மாலதிக்கு குழப்பம் உண்டாயிற்று. தன்னிடம் சொல்லாமல் மகள் எங்கேயும் போகமாட்டாள் என்று தெரிந்திருந்தும் ஏனோ மனம் வேகமாக அடித்துக்கொண்டது. கடவுளே எதுவும் அசம்பாவிதமாக நடந்து விடாமல் என் குழந்தையை காப்பாற்று என்று வேண்டிக்கொண்டாள். ஒருவேளை மொட்டை மாடியில் இருக்கும் ஊஞ்சலில் படுத்துக்கொண்டிருக்கிறளோ என்று தோன்ற மாடிக்கு சென்றாள். அவர்கள் வீட்டு மாடிப்படிகள் இருபுறமும் ஏறுவதற்கு வாகாக அமைக்கப்பட்டு இருக்கும். நடுவில் கூடம் போல ஒரு அறை. இடப் புறம் திரும்பினால் நான்கு அறைகள். அதில் ஒன்று மதுமதியுடையது. அதேபோன்று வலப்புறமாக இருந்த நான்கு அறைகளில் ஒன்று மகதியுடையது. அருகருகே அவர்கள் இருக்க வேண்டாம் என்று மாலதியின் ஏற்பாடு அது. மற்றவை விருந்தினர் அறைகள்

மொட்டை மாடிக்கு செல்ல அவர்களின் அறைகளின் முன்பாகவே படிக்கட்டுகள் இருந்தது. அங்கே இரண்டு ஊஞ்சல்கள் நிழற்குடையுடன் இருந்தது. மகதிக்கு மொட்டை மாடியில் இருக்கும் ஊஞ்சல் மிகவும் பிடித்தமான இடம். புத்தகம் படித்தபடி சிலசமயம் தூங்கியிருக்கிறாள். அந்த நினைவில் புன்னகை அரும்ப அவள் மொட்டை மாடியின் படிகளை நெருங்கிய போது,

வேகமாக படிகளில் ஏறிவந்த பணியாள் மூச்சு வாங்க, "மாப்பிள்ளை ஐயா வந்திருக்கிறார் அம்மா" என்று தெரிவிக்க, அவள் கீழே இறங்கி கூடத்திற்கு விரைந்தாள்.

"வாங்க, வாங்க, மாப்பிள்ளை, என்று வரவேற்று அமரச் சொல்லி தானும் ஓர் இருக்கையில் அமர்ந்தாள் மாலதி. அவளுக்கு அவனது திடீர் விஜயம் ஏன் என்று புரியவில்லை. அதை கேட்டால் தவறாகிவிடுமே என்று உள்ளூர் யோசனை ஓடியது.

"அத்தை மகதிக்கு உடம்புக்கு முடியவில்லை என்று பார்க்க வந்தேன். இப்போது பரவாயில்லையா? என்று வினவ, தலைவலிக்கே இத்தனை பதறுகிறானே, அவளை பார்க்க இப்படி ஒரு காரணமாக்கும் என்று மாலதிக்கு சிரிப்பு வந்தாலும், எதையும் காட்டிக் கொள்ளாமல், அவனது கவலையை போக்க எண்ணியவளாக,"அது பெரிதாக ஒன்றுமில்லை மாப்பிள்ளை, லேசாக தலைவலி தான். உங்களிடம் பேச்சுவாக்கில் சொல்லிவிட்டாள் போலிருக்கிறது". என்று மாலதி சொல்ல,

"என்ன சொல்றீங்க அத்தை?"என்ற மகேந்திரனின் முகத்தில் திகைப்பை கண்டுவிட்டு, "என்னாச்சு மாப்பிள்ளை. நான் நிஜமாகத்தான் சொல்கிறேன் சாதாரண தலைவலிதான், என்று விளக்கவும்,

"இல்லை, இல்லை அத்தை, என்னிடம் வயிற்றுப் வலி என்று சொன்னாள். அவள் குரலும் அப்போது சரியில்லை". என்று மகேந்திரன் பதற்றத்துடன் சொன்னான்.

"என்ன வயிற்று வலியா? இப்போது மாலதியும் ஒரு கணம் திகைத்துவிட்டு,"மதியம் அவள் சரியாக சாப்பிடவில்லை. அப்பத்தான் தலைவலிக்கிறது. தூங்கப்போகிறேன். யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்னு சொல்லிவிட்டுப் போனாள். நீங்கள் எப்போது பேசினீர்கள் மாப்பிள்ளை? என்று விவரத்தை சொல்லி வினவினாள் மாலதி.

"நான் பீச்சுக்கு போகலாம் என்று அழைத்தபோது மணி 11:30 மணிக்கு மேலே இருக்கும் அத்தை. சந்தோஷமாக வர்றேன்னு சொல்லி என்ன கலர் டிரஸ் என்பதுவரை பேசிவிட்டு, உங்களிடம் தெரிவிக்க போவதாக சொன்னாள். அப்புறம் முக்கால் மணிநேரத்திற்கு பிறகு வயிற்றில் வலி இருப்பதால் பீச்சுக்கு வரவில்லை என்று எனக்கு மெஸேஜ் அனுப்பியிருந்தாள். உடனே நான் கால் பண்ணி பேசினப்போ ரொம்ப முடியவில்லை என்று சொன்னாள். நானும் ரெஸ்ட் எடு ஈவ்னிங் அம்மாவோட வர்றேன் என்று சொன்னேன். நான் இங்கே கிளம்பறதுக்கு முன்னாடி கூட ஃபோன் செய்தேன் அத்தை. ஆனால் நாட் ரீச்சபிள் என்று வந்தது, சரி நேரில் போகிறோமே என்று அடுத்து கால் பண்ணவில்லை அத்தை" என்றவன் "சரி, மகதியை கூப்பிடுங்கள் எனக்கு அவளை பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கும்" என்று பதற்றம் குறையாதவனாக சொல்ல,

இப்போது மாலதிக்கும் அது தொற்றிக்கொள்ள, படபடக்கும் மனதுடன்,"ஐயோ, நீங்கள் பீச்சுக்கு கூப்பிட்ட விவரம் எதுவும் என்கிட்ட அவள் சொல்லவே இல்லை மாப்பிள்ளை" என்றதும் நிலை கொள்ளாமல் எழுந்து நின்றான் மகேந்திரன்.

"அத்தை உங்கள் சின்ன மகள் எங்கே? என்றான் சற்று இறுகிய குரலில்.

"பொறுங்கள் மாப்பிள்ளை. மது மதியம் சாப்பிட்டதும் வெளியே கிளம்பிவிட்டாள். அவளோட தோழிக்கு பர்த்டே என்று சொல்லி கிஃப்ட் வாங்க பணம் வேண்டும் என்று கேட்டு வாங்கிப்போனாள். ஆனால் அப்போது மகதி வீட்டில் தான் இருந்தாள். அத்தோடு அவள் என்னிடம் சொல்லாமல் எங்கேயும் போய் பழக்கமில்லை மாப்பிள்ளை. நான் இப்போது டிபன் சாப்பிட அவளை தேடினேன். அறையில் அவள் இல்லை. அதனால் தான் மேலே மொட்டை மாடியில் இருக்கிறாளோ என்று போனேன் அதற்குள்ளாக நீங்கள்

வந்திருப்பதாக வேலையாள் வந்து சொன்னான். அதனால் அங்கே அவனை பார்க்க சொல்லிவிட்டு இங்கே வந்துவிட்டேன்" என்று அவள் முடிக்கும் போது, அந்த பணியாள் வந்தான்.

"மகதி பாப்பா அங்கே இல்லை அம்மா. " என்று சொல்ல சட்டென்று எழுந்த மகேந்திரன்,"அத்தை மகதி அறை எந்த பக்கம்?, என்றவாறு மாடிப்படிகளை நோக்கி விரைய,

"வலதுபுறம் மாப்பிள்ளை, என்று அவனை தொடர்ந்து மாலதி ஓடினாள்.

மகதியின் அறைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அவளது படிக்கும் மேஜையின் மீது மடிக்கப்பட்ட நிலையில் இருந்த தாள்களை கைகள் நடுங்க எடுத்தான்.

ஒன்று வீட்டினருக்கும், மற்றது அவனுக்குமான கடிதங்கள் அவை.

வீட்டு பெரியவர்களுக்கு, என்று தொடங்கியிருந்தாள்..

இத்தனை நாளும் என்னை சந்தோஷமாக வாழ வைத்ததற்கு என்னால் எந்த கைமாறும் செய்ய முடியவில்லை. இனி நான் யாருக்கும் பாரமாக வாழ விரும்பவில்லை. அதனால் போகிறேன். தயவுசெய்து என்னை தேடாதீர்கள்"என்று எழுதியிருந்தாள்.

மற்றது அவனுக்கானது. கைகள் நடுங்க அதை பிரித்தவனுக்கு, மனதுக்கு வேகமாக அடித்துக்கொள்ள, மேற்கொண்டு படித்தான்.

"என் பிரியமான மனுவுக்கு என்று தொடங்கி, நீங்கள் என்ன வாழ்க்கையில் வந்த வசந்தம். ஆனால் உங்களுடன் பயணிக்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை. உங்களை பிரிந்து வாழும் சக்தி எனக்கு இல்லை மனு. அதனால் வராத இடத்திற்கு போகிறேன். உங்களுக்கு கொடுத்த வாக்கை நான் மீறிவிட்டதற்காக தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். மதுமதி கொட்டவள் இல்லை. என்னை மட்டும் அவளுக்கு பிடிக்காமல் போனது என்னோட துரதிர்ஷ்டம். அவளை ஏற்றுக்கொண்டு நீங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் ".

அதிர்ச்சியில் சிலகணங்கள் உறைந்து போய் நின்ற மகேந்திரன் உடனடியாக சுதாரித்தான். மதுமதியை திருமணம் செய்து கொள்ளுமாறு சொல்லியிருந்தது அவனுக்கு உறுத்தியது.

அவன் பின்னோடு வந்திருந்த மாலதியின் கையில் இரண்டையும் கொடுத்துவிட்டு, "அத்தை இன்றைக்கு இங்கே என்ன நடந்தது என்று விவரமாக சொல்லுங்கள். சின்ன விஷயம் என்று எதையும் அலட்சியப் படுத்தாமல் தெரிவியுங்கள்" என்று மகேந்திரன் அழுத்தமான குரலில் கேட்டதும்,

"சொல்கிறேன் மாப்பிள்ளை, என்று வழக்கத்திற்கு மாறாக மதுமதி பேசியது, அவளது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது எல்லாமும் தெரிவித்தாள்.

"இது எப்போது நடந்தது அத்தை. நேரம் சரியாக சொல்லுங்க."

"மாலதி, பதிலை சொல்லும்போதே அவளது மனம் திடுக்கிட்டது. வேகமாக அவள் மகளுக்கு சொன்ன பதிலை ஒரு தரம் ஓட்டிப் பார்த்தாள். விலுக்கென்று எழுந்தாள்.

"என்னவாயிற்று அத்தை? என்று அவனும் எழுந்து கொண்டான்.

"மகதி நான் முதலில் சொன்னதை மட்டும் கேட்டுவிட்டு போயிருக்கிறாள் மாப்பிள்ளை. அதனால் தான் என்ன காரணம் என்று அவள் குறிப்பிடவே இல்லை. எனக்கென்னவோ இதில் மதுவிற்கு பங்கு இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால் மகதி அவள் பெயரை குறிப்பிட்டு இருக்கிறாள். இன்று சின்னவளும் ஓவராக பணிந்து போனது சந்தேகப்படக்கூடிய விதமாகத்தான் இருக்கிறது. மகதி அவளாகப் போயிருக்கிறாளா? அல்லது மதுமதி போக வைத்தாளா? என்பதுதான் இப்போது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது."

"சரி அத்தை வாங்க கீழே போய் உங்கள் வீட்டில் வேலையாட்களிடம் விசாரிக்கலாம். அதில் ஏதும் துப்பு கிடைக்கலாம் " என்று மகேந்திரன் அறையை விட்டு வெளி செல்ல திரும்பினான். அங்கே படுக்கையில் மகதியின் கைப்பேசியில் வெளிச்சம் வந்து அடங்கியதை பார்த்துவிட்டு அருகே செல்லுமுன் சட்டென்று அது அணைந்து விட்டது. அதை எடுத்து ஆன் செய்து பார்த்தான், கால் ஏதும் வந்ததற்கான அறிகுறி இல்லை. ஒருவேளை ஏதேனும் கம்பெனி Sms வந்திருக்கலாம் என்று எண்ணி மொபைலை பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான். அவனுக்கு வேறு ஒரு யூகம் இருந்தது. ஆயினும் இப்போது அதை ஆராய்வது எவ்வளவு தூரத்திற்கு சரி என்று தெரியாததால், அதை விடுத்து, கீழே விரைந்தான்.

பணியாளர்கள் யாரும் மகதியை பார்க்க வில்லை என்று சொல்ல,இரண்டு பெண்களில் ஒருத்தியான மைதிலி மட்டும் பிற்பகலில் மகதி பின்புறமாக செல்வதை பார்த்ததாக சொன்னாள். எப்போதும் அவள் அப்படி செல்வது வழக்கம என்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவிக்க..

"ஐயோ என் கண்ணம்மா", என்றவாறு மாலதி மயங்கி சரிந்தாள். மகேந்திரன் சட்டென்று தாங்கிப் பிடித்து அருகில் இருந்த சோபாவில் படுக்கவைக்க, பணிப்பெண் ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து அவனிடம் நீட்டினாள். தண்ணீரை தெளித்தும் மாலதி எழாததால் பணியாளர்கள் உதவியுடன் அவளை காரில் ஏற்றினான்.

"ஐயா, அல்லது மதுமதி ,யார் போன் செய்து, அம்மாவை பற்றி கேட்டாலும் எங்கள் வீட்டிற்கு போயிருப்பதாக சொல்லுங்கள் " என்று பணியாட்கள்களுக்கு உத்தரவிட்டான். அப்படியே இரண்டு பெண்களில் ஒருத்தியான மேகலாவையும் உடன் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தபடியே கைப்பேசியில் அன்னையை அழைத்து நேராக மருத்துவமனைக்கு வரச்சொன்னான்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top