Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

26. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
நிகிலன் மனைவியை அழைத்துக்கொண்டு நடைபயிற்சிக்கு சென்றுவிட மதுவந்தியின் இதயம் ஒருகணம் திகைத்து பின் வேகமாய் துடித்தது. உடலும் மனதும் பரபரத்தது. என்ன செய்வது என்று சில கணங்கள் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. நிகிலன் சொன்ன செய்தி அவளுக்கு ஒருவித சந்தோஷ படபடப்பை உண்டு பண்ணியது. அவனை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற எண்ணத்தில் வெட்கம் வெட்கமாய் வந்தது.

ஆனால்.... எந்நேரமும் அவன் வரக்கூடும் என்ற விஷயம் கருத்தில பட மளமளவென்று அவனுக்கு பிடித்தமான உணவு வகைகளை தயார்செய்யத் தொடங்கிவிட்டாள். கூடவே சுமதிக்கும் இரவுக்கான உணவை தயார்செய்து முடிக்கையில் காலிங் பெல் ஓசை கேட்டதும் மதுவந்தி, திடுக்கிட்டாள்.

ஏனோ சட்டென்று மருதமுத்துவின் நினைவு வர ஒருகணம் நடுங்கிப் போனாள். அதற்குள் பொறுமையின்று அழைப்பு மணி ஒலிக்க, அவசரமாய் சென்று கதவைத் திறந்தாள் மதுவந்தி. ரவீந்தரன் தான் வந்திருந்தான். அதுவரை அவனை தூரத்தில் பார்த்திருந்தவளுக்கு அத்தனை அருகாமையில் பார்த்ததும் குப்பென்று வியர்த்தது.

கதவைத்திறந்த அழகிய பெண்ணைப் பார்த்த ரவீந்தரன் சற்று திகைத்துதான் போனான். அவன் அக்காவையோ மாமாவையோ எதிர்பார்த்திருக்க, யாரோ ஒரு இளம் பெண் திறப்பாள் என்று சற்றும் அவன் எதிர்பார்க்கவில்லை. இருவரது விழிகளும் நேருக்கு நேராய் சிலகணங்கள் சந்தித்துக்கொள்ள, ஏனோ ரவீதந்தரன் அந்த விழிகளுக்குள் மூழ்குவதைப் போல உணர்ந்தான். சட்டென்று சுய உணர்வுக்கு வந்நவள் லேசாய் முகம் சிவக்க பார்வையை தழைத்துக் கொண்டு கதவை விரியத் திறந்து விட்டு,"உள்ளே வாங்க சாப்" என்றவாறு துப்பட்டாவால் முகந்தை மறைத்துக் கொண்டாள் மதுவந்தி.

தானும் சுயஉணர்விற்கு வந்தவனாய் உள்ளே நுழைந்தான். ஒரு கண நேர மௌனத்திற்கு பின் "அக்காவும் மாமாவும் எங்கே?" என்று வினவினான்.

அப்போதுதான் அவளுக்கு சுமதியும் நிகிலனும் சென்று வெகு நேரமாகிவிட்டது என்பது நினைவிற்கு வர," அவங்க வாக்கிங் போனாங்க சாப், இன்னும் வரக்காணோம்? கவலையுடன் மதுவந்தி கூறிக்கொண்டிருக்கையில், அவனது கைபெசி ஒலிக்க...மன்னிப்பு கோரிவிட்டு கைப்பேசியில் பேசியவாறு தன் உடமைகளுடன் அறையினுள் சென்றுவிட,

சமையலறையினுள் நுழைந்த மதுவந்தி அவசரமாய் நிகிலனின் எண்ணிற்கு டயல் செய்து "எங்கே இருக்கீங்க அண்ணா? எதுவும் பிரச்சனையா அண்ணா? ரொம்ப நேரமாகிடுச்சே? பதற்றமும் கவலையுமாய் கேட்க, நிகிலன், மறுமுனையில், "பயப்பட ஒன்னும் இல்லைம்மா மது, இப்படியே ஒரு டிரைவ் போய் வரலாம்னு உன் அண்ணி சொன்னாள், அதான் கிளம்பிட்டோம். அரைமணியில் வந்துருவோம்மா" என்றவன் ‘’ஆமா மச்சான் வந்துட்டானா? என்று வினவ

‘’இப்போதான் அண்ணா வந்தார்" என்றதும்"

சரிம்மா, பார்த்துக்க நாங்க வந்துடுறோம்" என்று பேச்சை முடித்துக் கொண்டான் நிகிலன். கவலை அகன்றவளாய், ரவீந்தரனுக்கான சாப்பாடை மேசை மீது எடுத்து வைக்கலானாள் மதுவந்தி.

சற்றுநேரத்தில் உடைமாற்றி சாப்பிட அமர்ந்தவனின் புருவம் யோசனையாய் உயர்ந்தது. கொடைக்கானலில் பார்த்த அதே வட நாட்டு உணவு வகைகள். அக்கா வீட்டில் இரவு இட்லி தோசை இப்படித்தான் எளிதாக செய்வது வழக்கம். இவனுக்கு பிடிக்கும் என்று பார்த்து சமைப்பவள் அம்மா மட்டுமே கொடைக்கானலில் பார்த்தபோது வியந்தாலும் அது உயர்தர ஹோட்டலின் மெனு என்று எண்ணிக் கொண்டான். ஆனால் இங்கே அதே உணவு? மெனக்கெட்டு செய்யப்பட்டிருக்கிறது எப்படி? அக்கா சொல்ல வாய்ப்பு இல்லை. மாமாவுக்கும் தெரியாது. அப்பா வா ??

அவன் சாப்பிடாமல் உணவைப் பார்த்தவாறு இருப்பதை கவனித்த மதுவந்தி, "சாப்பிடுங்க சாப்! என்னாச்சு? ஏதும் தவறாகிவிட்டதா? உணவு பிடிக்கலையா? சிறு கவலைக் குரலில் மதுவந்தி வினவ,

"இல்.. இல்லை தவறில்லை இல்லை ! இது எனக்கு பிடிச்ச சாப்பாடுதான், என்றவாறு சாப்பிடத் துவங்கினான். அதே ருசி! என்ன மர்மம் இது? இந்தப் பெண்ணை அப்பா கொடைக்கானலில் இருந்துதானே அழைத்து வந்தார்? ஒருவேளை அந்த ஹோட்டலில் பணிபுரிந்தவளாக இருப்பாளோ?? தனக்குள்ளாக ஆராய்ந்தவனாக சாப்பிட்டு முடிக்கும் தருவாயில் சுமதியும் நிகிலனும் வந்து சேர்ந்தனர்.

"வாடா ரவி, சாப்பிட்டு முடிச்சிட்டியா? என்றவாறு சுமதி சாப்பாட்டு மேசைக்கு வந்தாள்"வாப்பா ரவி, அத்தை இப்ப எப்படி இருக்காங்க? என்று பின்னோடு வந்த நிகிலன் கேட்டான்

"சாப்பிட்டேன் அக்கா" என்று தமக்கையிடம் பதிலிறுத்துவிட்டு, “அம்மாக்கு இப்ப பரவாயில்லை அத்தான். அவங்க பேசுனதைக் கேட்டதே எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு. சீக்கிரமா பழைய அம்மாவை பார்த்திடலாம்னு நம்பிக்கை வந்திருச்சு."

"அடடே என்னம்மா மது ஸ்பெஷல் சமையலா இன்னிக்கு?" என்று சுமதி கேட்க" அண்ணா சொன்னாரே மச்சான் ஊர்ல இருந்து வர்றார்னு அதான் அண்ணி. ஆனால் இது ஸ்பெஷல் இல்லையே, சாதாரண வட இந்திய சமையல்தானே??என்று பதில் சொல்லிவிட்டு மதுவந்தி சமையல் அறையினுள் நுழைந்துவிட்டாள்.

"ஆமா மது அவனுக்கு இதெல்லாம் பிடிக்குமானு ஒரு வார்த்தை என்கிட்டகூட கேட்கலையேமா அதான் கேட்டேன்" என்று கணவரை அர்த்தமாய் பார்க்க இருவரும் விழிகளால் பேசிக் கொள்வதை ரவி கவனித்தான்.

சாதாரண சமையல்தானே அதற்கு ஏன் இத்தனை மதிப்பு தருகிறார்கள். இதில் என்னவோ மர்மம் இருப்பதாக சற்றுமுன் அவன் எண்ணியது சரிதானோ??

மறுநாள் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டிய சில முக்கிய வேலையில் ஆழ்ந்திருந்தான் ரவீந்தரன். கைபாட்டிற்கு வேலை செய்ய மனமோ சற்றுமுன் நடந்தவற்றை அசை போட்டிருந்தது. அந்தப் பெண் மது முழுபெயர் என்னவோ ? அவளைப் பார்த்தால் வீட்டு வேலைக்கு வந்தது போலவே தோன்றவில்லை. அழகாக இருக்கிறாள் அது வட இந்தியப் பெண்களில் சிவந்த நிறமும் களையான முகமும் கொண்டவர்கள் அதிகம். ஆனால் வீட்டு வேலைக்கென்று இல்லாது அக்காவின் ஒத்தாசைக்கு என்றல்லவா அப்பா அழைத்து வந்தார். இத்தனை சின்னப் பெண் பிரசவ நேரத்தில் எப்படி உதவியாக இருப்பாள்?? அதுவும் குழந்தை பேறு பற்றியும் பிரசவம் பார்த்த அனுபவமோ இல்லாத இவளை அப்பா அழைத்து வந்தது ஏன்? வீட்டோடு வேறு தங்க வைத்திருக்கிறார்கள்.. அக்காவும் மாமாவும் சிறு சலனமின்றி அவள் முன்பாகவே வீட்டு விஷயங்களை பேசிக் கொள்கிறார்கள், எல்லாவற்றையும் விட அண்ணா,அண்ணி என்று உறவு முறை வைத்து வேறு அழைக்கிறாள் அந்த மது! என்ன நடக்கிறது என்னைச் சுற்றி?? எல்லாமும் தெரிந்து கொள்ளாவிட்டால் தலையை வெடித்துவிடும் போலிருந்தது. திடுமென கொடைக்கால் பெண்ணின் தோற்றம் மனதில் தோன்ற ரவீந்தரனின் மனம் ஒருகணம் பரபரத்தது.

ஒருவேளை அந்தப் பெண்தான் இவளோ? நினைக்கையில் ஒருவிஷயம் இடித்தது, அவளோ அந்த ஹோட்டலின் முதலாளி போல அல்லவா தோன்றினாள். அவளுக்கு என்ன தலை எழுத்து இங்கே வந்து ஊழியம் செய்வதற்கு?? அவள் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஏவினால் பணி செய்ய எத்தனையோ பேர் வருவார்களே?

ம்ஹீம்… இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு இன்னொன்றும் நியாபகம் வந்தது. தந்தை அந்தப் பெண்ணை கொண்டுவிட அவரே வந்தது. அழகான பெண்ணிடம் மகன் மயங்கி விடுவான் என்றா? நினைக்கையிலேயே அந்த மதுவின் அழகு முகம் ஒருகணம் மனதில் வந்து போக தலையை உலுக்கிக் கொண்டான்.

எத்தனை பெண்கள் வந்தாலும் அம்மா பார்த்து வைத்திருக்கும் பெண்ணைத்தான் மணப்பது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் இன்று வரை அந்தப் பெண்ணைப் பற்றி அப்பாகூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே. ஒரு வேளை அம்மாவின் கவலையில் மறந்திருக்கலாம். அல்லது ஒரு வேளை இந்த மூன்று வருடங்களில் அவளுக்கு திருமணமே ஆகிவிட்டதோ என்னவோ? தொடர்பே இல்லாது போனவர்களுக்காக யாரேனும் காத்திருப்பார்களா என்ன? ஆனாலும் அம்மா தேறி வந்து எந்தப் பெண்ணை கை காட்டுகிறார்களோ அவள்தான் என் வாழ்க்கைத் துணைவி, என்று ரவீந்தரன் முடிவு செய்தான்.

ஆனால் அவனே, அதை மாற்றிக் கொள்ளும் நிலை வரப்போவதை அப்போது ரவீந்தரன் அறியவில்லை.
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top