Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

25. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
மும்பை

பிறைசூடன் கிளம்பிய மறுநாள் மதுவந்தி, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவென்று பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தாள். பிற்பகல் நேரம் என்பதால் சற்று வெறிச்சோடியிருந்தது. கடை வாயிலில் சரக்கு இறக்க வந்த லாரி ஒன்று வாசலில் நின்றிருந்தது. முக்காடு அணிந்திருந்த மதுவந்தி கடையினுள் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கையில் மறுபுறம் யாரோ ஒரு ஆண் தமிழில் பேசுவது காதில் விழுந்தது..

"ஆமா நீ கிராமத்துல ராஜாவாட்டம் சுத்திட்டு இருந்தியே பங்காளி, எப்படி இங்கே? அதும் ட்ரக் ட்ரைவரா? நம்பவே முடியலை! ஏதோ மாமா பொண்ணைக் கட்டிக்கப் போறேன்னு கேள்விப்பட்டேனே??

"ப்ச் அதை ஏன்டா கேட்கிறே? எல்லாம் கைகூடி வர்ற நேரத்தில அந்த சண்டாளி என் கண்ணுல மண்ணை தூவிட்டுப் போயிட்டா. ஊருல ஏற்கனவே ரொம்ப கடன். அதை சரிகட்டிடலாம்னு பார்த்தாக்க முதலுக்கே மோசமாகிட்டுது. ஊரைவிட்டே ஓடிவந்துட்டேன். அவ மட்டும் என் கையில சிக்கட்டும் அப்புறம் இருக்கு கச்சேரி" குரலில் ஆத்திரம் கொப்பளிக்க பேசிக்கொண்டே மருதமுத்துவும் வாசல் புறம் வந்துவிட்டிருந்தான்.

மறுபுறம் நின்றிருந்த மதுவந்திக்கு நெஞ்சு நடுங்கியது. வாங்க வந்த மற்ற பொருள்களை மறந்தவளாய் எடுத்த பொருட்களை கவுண்டரில் கொடுத்துவிட்டு அவசரமாய் பில் போடச் சொன்னாள். கூட்டமில்லாததால் பில்லும் துரிதமாய் போடப்பட்டு பொருட்களை எடுத்துக் கொண்டு வேகமாய் வெளியேறி வாசல்புறமாய் வந்துவிட்ட மருதமுத்துவை அவசரமாய் கடந்தபோது, முக்காடு நழுவ -அதைக்கூட பொருட்படுத்தாமல் ஓட்டமும் நடையுமாய் விரைந்தவள் வந்த ஆட்டோவை நிறுத்தி போகும் இடம் சொல்லிவிட்டு ஏறினாள்.

அவள் பதற்றமாய் வெளியேறுவதை அசுவாரசியமாய் பார்த்திருந்த மருதமுத்து முக்காடு நெகிழ்ந்து அவளது பக்கவாட்டுத் தோற்றம் காணவும் பரிச்சயமான முகம் போலத் தோன்ற இரண்டு எட்டில் வெளியே வந்தவனின் கண்களில் இப்போது அவளின் பாதி மறைக்கப்பட்ட முகத்தில் கண்கள் மட்டுமே தெரிந்தது. ஆனாலும் அவனுக்கு நிச்சயமாகிப் போயிற்று. அவள் மதுவந்தி தான் என்று.

கண்களில் சினம் துளிர்க்க ஆத்திரத்துடன் அவன் ஓட்டிவந்திருந்த வண்டியில் ஓங்கி அடித்தான் மருதமுத்து. அவனுடன் பேசிக்கொண்டிருந்தவன் புரியதவனாய் அருகில் வந்து விபரம் கேட்டான். முந்தியவன் விபரம் சொல்லவும், பக்கத்தில்தான் எங்கேனும் இருக்கக்கூடும். எப்படியும் கண்டுபிடித்து விடலாம் பங்காளி. மறுக்க வந்தா நான் தகவல் சொல்லுறேன்” என்றான்.

இது எதுவும் அறியாதபோதும் மதுவந்தி முன் எச்சரிக்கையுடன் ஆட்டோவை அவர்கள் வசிக்கும் குடியிருப்பிற்கு சற்று தூரத்திலேயே நிறுத்தச்சொல்லி இறங்கி ஓட்டமும் நடையுமாய் வீட்டை அடைந்தாள். அரக்க பறக்க வீடு வந்தவளை கேள்விக்குறியுடன் நோக்கிவிட்டு சுமதி ."என்னாச்சு மது ? " என்று வினவினாள்.

"ஒன்னுமில்லை அண்ணி, கேஸ் அணைத்தேனா இல்லையா என்று சந்தேகம் வந்துவிட்டது” என்று நேராய் சமையல் அறையினுள் நுழைந்துவிட்டாள்.

சுமதிக்கு அவள் ஏதோ மறைக்கிறாள் என்றும் கேட்டாலும் சொல்லமாட்டாள் என்றும் புரிந்தது. தெரியாத ஊர் யாரேனும் வம்பு பண்ணிருக்கக்கூடும். அதில்தான் பயந்து வந்திருப்பாள் என்று எண்ணிய வேளையில்… பிறைசூடனின் கைப்பேசி அழைப்பு வந்தது.

மதுவந்தி சமையல் அறையினுள் வாங்கி வந்திருந்த பொருட்களை அடுக்கிவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

ரவீந்தரனின் மும்பைப் பயணம் எதிர்பாராதது அல்ல. அவனுக்கு அலுவலகம் அங்கே தான். அதிகநாள் லீவு போடமுடியாத பெரிய பொறுப்பு அவனுடையது. கணினி மூலமாய் வேலையும் செய்தபடிதான் கொடைக்கானலில் இருந்தான். இடையில் மதுரை சென்றதுகூட பணிநிமித்தமாய் கலந்தாலோசனை செய்வதற்காகத்தான். இப்போதும் அவனே நேரடியாய் கவனித்தாக வேண்டிய சூழல் என்பதால் தான் உடனே கிளம்பிவிட்டான்.

அன்னையின் உடல்நலம் குன்றியபின் அவனுக்காக அலுவலகத்தில் தந்திருந்த வீட்டில் பெற்றோரை தன்னுடன் வைத்திருந்தான். சுமதி அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்வாள். ஆனால் சுமதி உண்டாகி விட்டபின் பிறைசூடன் மனைவியை அழைத்துக்கொண்டு மகள் வீட்டிற்கு வந்துவிட்டார். ரவீந்தரன் தமக்கை வீட்டிற்கு வந்து போய் இருந்தான்.

இப்போது அலவலகத்தின் அழைப்பு வந்ததும் நேரே சகோதரியின் வீட்டிற்குத்தான் வந்தான். காரணம் அவனது வீட்டில் என்றால் அவனே தான் எல்லாமும் செய்ய நேரும். இத்தனை நாட்கள் பூட்டிக் கிடக்கும் வீட்டில் துப்புரவு வேலைகள் நிறைய இருக்கும். இப்போது அதை எல்லாம் செய்ய முடியாதபடிக்கு, அவன் கடந்த இரண்டு நாட்களில் நேர்ந்த பரபரப்பில் வெகுவாக களைத்திருந்தான். சற்று ஓய்வுக்காகத்தான் சாப்பாடு வாங்கி வருவதாக சொல்லி வீட்டிற்கு கிளம்பியதே. ஆனால் தவிர்க்க முடியாமல் மும்பைக்கு கிளம்ப நேர்ந்துவிட்டது. அக்காவிற்கும் தகவல் அனுப்பிவிட்டிருந்தான். விமானத்தில் அமர்ந்தவன் சற்று இறுக்கம் தளர சாய்ந்து அமர்ந்தபோது விமான பணிப்பெண் அவனை கடந்து சென்றாள், ஏனோ திடுமென ஹோட்டலில் பாரத்த பெண்ணின் தோற்றம் மனதில் வர ஒருகணம் திடுக்கிட்டுப் போனான். இத்தனைக்கும் அவள் முகத்தைக்கூட அவன் பார்க்கமுடியவில்லை. பின்புற தோற்றத்தை தான் காண முடிந்தது. நீளமான கூந்தலில் பின்னலிட்டு இருந்தாள். இப்போது இந்தப் பெண் உடுத்தியிருந்த இதே நிறத்தில் அவளும் அன்று புடவை அணிந்திருந்தாள். ஒருவேளை அதனால்தான் அவள் நினைவு வந்திருக்குமோ என்று எண்ணியவனுக்கு ஏனோ தன்னையறியாமல் முறுவல் மலர்ந்தது.

சுமதிக்கு மதுவந்தியின் மீது உள்ளுர இருந்த சந்தேகம் அவளது நடவடிக்கையில் வலுப்பெற்றுக் கொண்டே வந்தது. அவளோ வீட்டில் ஒருத்தியாக மாறி எல்லாமும் பார்த்து பார்த்து செய்தாள், அவளைப் பற்றி ஏதேனும் கேட்டால் மட்டும் மழுப்பலாய் பேச்சை திசை திருப்பிவிடுவாள். நிகிலனுக்கு அவள் உடன் பிறவா தங்கையாகிப் போனாள். அண்ணி என்று சுமதியிடமும் பிரியமாய் இருந்தாள். தமிழில் போலவே ஹிந்தியிலும் சரளமாய் பேசினாள்.

கடையிலிருந்து திரும்பியவளின் பதற்றத்தைக்கூட சுமதி இயல்பாகத்தான் நினைத்தாள், தந்தையிடம் பேசும்வரை.

பிறைசூடன் மகளிடம் இனியும் மறைக்க வேண்டாம் என்று எண்ணி தொலைபேசியில் சுருக்கமாய் விபரம் தெரிவிக்க சுமதிக்கு சந்தோஷத்தில் ஒருகணம் பேசவே முடியவில்லை. ஏற்கெனவே அவளது சந்தேகம் இவள்தான் அன்னை தம்பிக்காக தேர்வு செய்த பெண்ணோ என்று உள்ளுர ஐயம் தோன்றிக் கொண்டே இருந்தது. இப்போது அது உறுதியானதில் நிம்மதி அடைந்தவள். சட்டென்று அவள் பதற்றமாய் வீடு வந்த தோற்றம் நினைவுவர அது பற்றி தந்தையிடம் தெரிவித்தாள். அவர் சற்று யோசித்துவிட்டு மேலும் சில விவரங்களை தெரிவிக்க சுமதி கலங்கினாள்.

மாலையில் பணிமுடிந்து வந்த கணவனிடம் தந்தை சொன்ன விவரங்களை சுமதி தெரிவித்தாள். நிகிலனுக்கு வியப்பாக இருந்தது. இப்படி ஒரு பெண்ணா என்று. கூடவே அவளை பாதுகாப்பது அவனது கடமை என்று மனைவிக்கு வாக்களிக்க அவள் சற்று அமைதியானாள்.

இது எதுவும் அறியாத மதுவந்தி வழக்கம் போல தன் வேலைகளை முடித்துக் கொண்டு சுமதியுடன் நடைபயிற்சிக்கு செல்ல தயாராகி வந்தாள்.

"இன்னிக்கு நான் சுமதிகூட வாக்கிங் போயிட்டு வர்றேன் மதுவந்தி. நீ வீட்டிலேயே இரு. எங்கேயும் வெளியே போய்விடாதேம்மா. என் மச்சான் எந்த நேரத்திலும் வந்திருவான்" அவனுக்கு வேண்டிய சமையல் செய்யனுமில்லையா. அவன் வேற பசி தாங்கமாட்டான்" என்று நமட்டு சிரிப்புடன் நிகிலன் சொல்ல மதுவந்தி சொல்வதறியாது திகைத்து நின்றாள்!
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top