Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

24. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அடுத்த மூன்று நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கடந்தது. முக்கியமாக மதுமதி எங்கேயும் போகாமல் அவளது அறையில் முடங்கி கிடந்தாள் எனலாம். உணவை கூட பணிப்பெண் மூலம் தருவித்து சாப்பிட்டாள். மாலதி, மகதி அவரவர் அறையில் இருக்கும் சமயத்தில் மட்டும் பின்புறமாக இறங்குவதற்கு பின்புறம் இருந்த படிக்கட்டு வழியாக தோட்டத்தில் சென்று அமர்வதும், பின் ஓசைப்படாமல் அறைக்குள் முடங்குவதுமாக இருந்தாள். பெற்றவளாய் மாலதிக்கு மகளின் இந்த மாறுதல் இதமாக இருந்தாலும் அதை அவள் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவளால் முடிந்ததாக மகளுக்கு பிடித்ததை சமைத்து அனுப்பினாள்.



மகதிக்கும் கூட தங்கை அடைந்து கிடப்பதை பார்க்க சற்று வருத்தமாக இருந்தது. அவள் சுமூகமாக நடந்து கொண்ட இடைப்பட்ட காலங்கள் மீண்டும் வராதா என்று ஏங்கவும் செய்தாள். ஆனால் சூடுபட்ட பூனையாக தயங்கி விலகியே இருந்தாள்.

நான்காம் நாள், மாலதி துவைத்து பெட்டி போட்டு வந்திருந்த துணிகளை அலமாரியில் அடுக்கிக் கொண்டு இருந்தபோது, மங்களம் போன் செய்து, நலம் விசாரித்து முடித்துவிட்டு, தொடர்ந்து "அண்ணி, நிச்சயதார்த்தம் நிகழ்ச்சியை யார் வீட்டில் வைத்துக் கொள்வது என்பது பற்றி அண்ணாவிடம் கேட்டீர்களா? அண்ணா என்ன சொன்னார்?என்று வினவ,

மாலதி, "கேட்டுவிட்டேன் அண்ணி, நானே உங்களுக்கு போன் பண்ணனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். நீங்களே கூப்பிட்டு விட்டீர்கள் என்றுவிட்டு, தொடர்ந்து "உங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று அவர் சொல்லிவிட்டார்" தெரிவித்தாள்.

"ரொம்ப சந்தோஷம் அண்ணி. நான் மேற்கொண்டு ஆக வேண்டிய ஏற்பாடுகளை பண்ணிவிடுகிறன். கூட்டம் அதிகம் சேர்க்க வேண்டாம் என்று மகேன் சொல்லி விட்டான். கல்யாணத்திற்கு சொந்த பந்தங்கள் எல்லாரையும் அழைத்துக் கொள்ளலாம், தொழில் துறையை சேர்ந்த எல்லாருக்கும் வரவேற்பிற்கு அழைத்தால் போதும் என்றுவிட்டான். சரிதானே அண்ணி?

"அதுவும் சரிதான். எல்லாரையும் ஒன்றாக அழைத்துவிட்டு சரியாக கவனிக்க முடியாது போனால் கஷ்டம் தானே அண்ணி? இது நல்ல யோசனை தான்" என்று விட்டு தொடர்ந்து, உங்கள் வீட்டிற்கு இரண்டு நாட்களில் வருகிறேன். அப்போது என்ன உணவு, எத்தனை வகை என்ற விஷயங்களை கலந்து பேசுவோம். சரிதானே?"

"நல்லது அண்ணி, வரும் போது மருமகளையும் அழைத்து வாருங்கள்".

"கட்டாயம் அண்ணி", என்று பேச்சை முடித்த மாலதி, அறையின் வாசலில் மதுமதி நிற்பதை கண்டு துணுக்குற்றாள். ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாது எழுந்து விடுபட்ட வேலையை தொடர்ந்தாள்.

"அம்மா நான் உங்கள் மகள் என்பதையே மறந்து விட்டீர்களா? "என்றாள்.

"ஏய் என்னடி உளறுகிறாய்? இப்போது அப்படி என்ன செய்துவிட்டேன்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? மூன்று வேளையும் வாய்க்கு ருசியாக சமைத்து போடுகிறேன். நீ எங்கேயும் போய் வர வண்டி வாங்கி கொடுத்திருக்கிறேன். உன் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் எங்கே போகிறாய் என்ன செய்கிறாய் என்று கூட நான் கேட்பது இல்லையே. கைச் செலவுக்கு வேறு கேட்கிறப்போ எல்லாம் ஏன்னு கேட்காமல் பணம் கொடுக்கிறேன். உன்னைப் பெற்ற அம்மாவாக என் கடமைகளை சரியாக செய்கிறேனே? அப்புறம் என்ன?

"இதெல்லாம் போதுமா அம்மா? என்னிடம் பாசமாக பேசமாட்டேங்கிறீங்க, அவ்வளவு ஏன், வீட்டில் ஏதோ விஷேசம் நடக்கப்போகிறது. அதை என்னிடம் சொல்லக்கூட இல்லையென்றால் இந்த வீட்டில் நான் யார் அம்மா?

மாலதிக்கு, எரிச்சல் உண்டாயிற்று, "ம்க்கும்.. நீ ஒழுங்காக வீடு தங்கினால் தானே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும்? ஏதோ லாட்ஜில் இருப்பது போல நீ இஷ்டம் போல வர்றே,போறே... திடீரென்று டூர் போகிறேன் என்று கிளம்பிப் போறே, என்ன ஏதுன்னு கேள்வி கேட்டால் நீ பொய் தான் சொல்லப்போறே? அதனால் நான் அதையும் விட்டுவிட்டேன். அத்தோடு உனக்கு மகதியை கண்டால் ஆகவில்லை. அவளுக்கு ஒரு நல்லது நடக்கப் போகிறது என்று உன்னிடம் சொன்னால் நீ என்ன வில்லங்கத்தை பண்ணி அதை கெடுத்து விடுவாயோ என்று எனக்கு பயமாக இருக்கிறது. என்னை கேட்டால் விசேஷம் நடக்கிற அன்றைக்கு நீ எங்கேயாவது டூர் போய்விட்டு அப்புறமாக வரலாம் மது" என்று சற்று விட்டேத்தியாக முடித்தாள்.

அன்னை பேச பேச மதுமதி மனதுக்குள் எரிமலையாய் குமுறினாள். ஆனால் அதை காட்டிவிடாது இருக்க பெரும் பிரயத்தனம் செய்து அடக்கினாள். அதற்கு சிலகணங்கள் பிடித்தது.

"அம்மா என்னை ஏன் அம்மா இப்படி அவமானப படுத்துறீங்க? நான் அப்படி என்ன பண்ணிட்டேன். முன்னாடி அறியாத வயசில் மகதியை ரூமில் வைத்து பூட்டினேன் தான். அப்புறமாக அவளை நான் எதுவுமே பண்ணவில்லையே? இப்போது கூட நான் மூன்று நாட்களாக வீட்டில் தானே இருக்கிறேன். அவள் பக்கத்தில் கூட போகவில்லையே. எனக்கு பார்த்தவரை அவளுக்கு கட்டி வைக்க நினைக்கிறீங்களே.. அது மட்டும் நியாயமா?

"அட, உனக்கு நியாயம் அநியாயம் எல்லாம் தெரியுமா? நீயாகத் தானே அன்றைக்கு உன் தலையில் மண்ணள்ளி போட்டுக்கொண்டாய்? உண்மையைச் சொல்லு, அன்று நீ எதுக்கு மகியை ஊரிலிருந்து அவசரமாக அழைத்தாய்?

"அதுதான் சொன்னேனே அம்மா. எனக்கு ஒரு நல்ல விஷயம் நடக்கிறப்போ அவளும் கூட இருக்கனும்னு ஆசைப்பட்டு அழைத்தேன் என்று...

"சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் நீ ஏன் அந்த நேரத்தில் வெளியே கிளம்பிப் போனாய்?? என்றாள் மாலதி ஆத்திரத்துடன்...

"அது என்னோட தோழிக்கு விபத்து ஏற்பட்டதால் நான் அவசரமாக போகவேண்டி வந்தது என்று அன்றைக்கே விபரம் சொன்னேனே அம்மா, என்றவள், தாயை பேசவிடாமல் தொடர்ந்து, "அப்படி நான் போனது தப்புத்தான், அம்மா. ப்ளீஸ், ஐம் எக்ஸ்ட்ரீம்லி வெரி சாரி அம்மா. இதற்கு முன்பு நான் வேறு எதுக்காவது ஆசைப்பட்டு அடம் பிடிச்சிருக்கிறேனா சொல்லுங்க? என்னை பெற்ற அம்மா நீங்கள். உங்களுக்கு என் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறை, இல்லையா? ப்ளீஸ் அம்மா இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நீங்கள் எனக்கு ஆதரவாக இருங்கள். நான் இனி மகதிக்கு எந்த கஷ்டத்தையும் தரமாட்டேன் என்று வாக்கு கொடுக்கிறேன் அம்மா. என்னை தயவுசெய்து இந்த ஒரு தரம் நம்புங்கள். ப்ளீஸ் அம்மா மகேந்திரனை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்" என்று சட்டென்று அன்னையின் கால்களை கட்டிக்கொண்டு கண்ணீர் விட்டாள் மதுமதி.

மகளின் கண்ணீரும் இந்த பணிவும் மாலதிக்கு புதிது. அத்தனை நேரம் பிடித்து வைத்திருந்த கோபமெல்லாம் நீங்கிவிட, பெற்றவளாய் மனது தவிக்க, அவளையும் அறியாமல் விழிகள் கலங்கி வாயடைத்து நின்றாள்.

மகேந்திரன் பீச்சிற்கு அழைத்து போவதாக போன் செய்திருந்ததை அன்னையிடம் தெரிவிக்க ஆவலோடு மகதி அன்னையின் அறை வாசலை சமீபித்த வேளையில் தான், மதுமதி பேச தொடங்கியிருந்தாள்.

சரி, அப்புறமாக சொல்லிக் கொள்ளலாம். இப்போது அம்மாவும் மகளும் பேசுகையில் குறுக்கிட வேண்டாம் என்று எண்ணி, விலகி நடக்க முயன்ற மகதி, தங்கை அவளது பெயரை குறிப்பிட்டு பேசவும் அப்படியே நின்றுவிட்டாள். தங்கை பேச பேச, மனம் உருகியது. ஆனால் மகேந்திரனை கல்யாணம் செய்து வைக்க சொல்லவும் அதிர்ந்தாள். அது எப்படி முடியும்? மனது தவிக்க, அவள் கலங்கிக் கொண்டிருக்கையில்... விசும்பல் ஒலியில் நிகழ்விற்கு வந்தாள். அன்னையின் பதிலை எதிர்பார்த்து மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு காத்திருந்தாள் மகதி...
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top