Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

23. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
கடற்கரையில் முன் மாலை மெல்ல மறைந்து இளம் காற்று வீசிக் கொண்டிருந்தது. சூழ்நிலைக்கு மாறாக மதுமதி மனதில் ஆத்திரம் கொந்தளித்த போதும் அதை அடக்கிவிட்டு சற்று தீவிரமாக சிந்தித்தபோது, மோனீஷ் முன்தினம் பேசியதை மகேந்திரன் துளியும் நம்பவில்லை என்பதை உணர்ந்தாள்.

மோனீஷின் அழைப்பு வந்தபிறகு மகேந்திரன், கொஞ்சம் தீவிரமாகவே செயல்பட்டிருக்கிறான் எனபது தெளிவு. அந்த எண்ணை வைத்து அது எங்கிருந்து பேசப்பட்டது, யாருடையது என்று எல்லாம் கண்டு பிடித்திருக்கிறான். அது ஒரு பொய் நாடகம் என்று நிரூபிக்கத்தான் அவசரமாக முன் யோசனையோடு மகதிக்கு மூக்குத்தி அணிய வைத்திருக்கிறான். அதை மதுமதி அறிந்து விடாமல் இருக்கும்படியும் செய்திருக்கிறான் என்று தோன்றியது.

மற்றபடி மகதி ஒன்பது மணிக்கெல்லாம் போய் படுக்கையில் சுருண்டு விடுகிறவள் அல்ல. அப்போது மனதில் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது என்று மனதில் தீவிமாக எண்ணிக் கொண்டிருந்ததால் அது கருத்தில் படவில்லை. இப்போது யோசித்துப் பார்த்தால் மகேந்திரன் திட்டமிட்டு செயல்பட்டிருக்கிறான் என்பது புரிந்தது. அதிலும் மகதியை அங்கேயே அழைத்து வந்ததைத்தான் அவளால் ஜீரணிக்க முடியவில்லை. கை முஷ்டியை இறுக்க, கூரான நகங்கள் உள்ளங்கையில் பதிந்து வலித்த பிறகே அவள் நிகழ்விற்கு வந்தாள்.

மதுமதிக்கு மற்றது எல்லாவற்றையும் விட இப்போது எப்படி வீட்டிற்கு செல்வது என்ற கலக்கம் உண்டாயிற்று. இந்நேரம் மாலதிக்கு விஷயம் தெரிந்து போயிருக்கும். அன்றைக்கு ஆள்மாறாட்டம் செய்தபோது பெரிதாக கோபப்படாததற்கு காரணம் ஒருவேளை அது அவளது பெரிய மகளுக்கு நன்மையாய் மாறி விட்டதால் இருக்கலாம். ஏற்கனவே அவள் எச்சரித்ததையும் மீறி மகள் செயல்பட்டிருக்கிறாள் என்று அறியும் போது சும்மா இருப்பாள் என்று என்று சொல்வதற்கு இல்லை. என்ன யோசித்தும் அவளுக்கு ஒரு வழியும் தெரியவில்லை. இறுதியாக ஒன்று தோன்ற எழுந்து அவளது இருசக்கர வானத்தை நோக்கி நடந்தாள் மதுமதி.

அங்கே அதே நேரம்..

மகதியும் மகேந்திரனும் வீடு போய் சேர்ந்தனர். வந்தவர்களை கைகால்களை கழுவச் சொல்லி, அதன்பிறகு சாப்பிட சிற்றுண்டியும் பானமும் கொடுத்தார் மங்களம். அதுவரை என்ன ஏது என்று மாலதியும் கேட்கவில்லை. மங்களத்திடம் பேசிய பிறகு அவளுக்கு சற்று பதற்றம் குறைந்து விட்டிருந்தது.

நால்வருமாக பக்கவாட்டில் இருந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட கல் மேசையை சுற்றிலும் இருந்த சிமெண்ட் நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர். சிலகணங்கள் அங்கே அமைதி நிலவியது. அதன்பிறகு மகேந்திரன், அன்று கோவிலில் சந்தித்தபோது மகதி சொன்னதை முதலில் தெரிவித்தான்.

"என்னை மன்னித்து விடுங்கள் அத்தை" என்றாள் மகதி சங்கடத்துடன்..

"அதற்கெல்லாம் அவசியமே இல்லை மருமகளே. யாருக்கு யார் என்பது இறைவன் வகுப்பது. எப்போது நீ எதிர்மறையான விளைவுகள் உண்டாகும் என்று அறிந்தும் மகேனிடம் உண்மையை சொன்னாயோ, அங்கே உன் உயர்வு தெரிகிறது. என் மகன் சந்தோஷம் எனக்கு முக்கியம். அவன் யாரை விரும்புகிறானோ அவளே என் மருமகள். இதுவரை அவன் தேர்வு பொய்த்தது இல்லை. அந்த வகையில் உன்னை அவன் தேர்வு செய்திருப்பதில் எனக்கு திருப்தி தான். அதனால் நீ தான்மா இந்த வீட்டுக்கு மருமகள். அதில் எந்த மாற்றமும் இல்லை. நீ எதைப்பற்றியும் கவலைப்படாதே" என்று அவளது தலையை வருடினார், தொடர்ந்து மகனிடம்

"நல்லது மகேன். இன்றைக்கு அண்ணியும் என்கிட்ட மதுமதி பற்றி சொல்லிவிட்டார்கள். அதனால் நீ இன்று என்ன நடந்தது என்று சொல்லு" என்றார் மங்களம்.

மகேந்திரன் நடந்ததை சுருக்கமாக சொல்லவும்,

"அவளை இப்படியே விடக்கூடாது. அவர் ஊரில் இருந்து வரட்டும். இதற்கு ஒரு முடிவு கட்டிவிட்டு தான் மறு வேலை" என்று ஆத்திரத்துடன் மாலதி சொல்ல,

"இல்லை அத்தை. நீங்கள் அதுபோல எதுவும் செய்துவிடாதீர்கள். சொல்லப்போனால் இப்போது தான் நீங்கள் மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் தான் சற்றும் யோசியாமல் பேசி அவளை சீண்டிவிட்டேன். இப்போது அதுவே என்ன மாதிரி வெடிக்குமோ என்று எனக்கு பதற்றமாக இருக்கிறது. நீங்கள் எதையும் காட்டிக் கொள்ளவேண்டாம். நிச்சயதார்த்தம் நல்லபடியாக நடக்கவேண்டும். இப்போது அதுதான் முக்கியம்" என்றான்

"ஆமாம் அண்ணி மகேன் சொல்வது தான் சரி. அதுவரை நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். மகதியை நினைத்து பயமாக இருந்தால் அவளை கொடைக்கானலுக்கு அனுப்பி விடுங்கள்" என்று யோசனை சொன்னார் மங்களம்.

"நானும் அதைத்தான் அம்மா உங்கள் மருமகளிடம் இங்கு வரும் போதும் சொன்னேன். ஆனால் அவள் போகமாட்டேன் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள்" என்று ஆதங்கத்துடன் மகேந்திரன் சொன்னான்.

"ஏன் மகி? என்று மாலதியும் விளக்கம் கேட்க, " அது வந்து அம்மா நீங்கள் தானே சொன்னீர்கள்? நான் அவளைவிட பெரியவள். தைரியமாக இருக்க வேண்டும் என்று... அவள் என்னை இனி ஒன்றும் செய்ய மாட்டாள் அம்மா. இப்போதே அவள் இந்த விஷயம் உங்களுக்கு தெரிந்து நீங்கள் என்ன செய்வீர்களோ என்று பயந்து தான் இருப்பாள். அத்தையும் உங்கள் மாப்பிள்ளையும் சொன்னது போல நீங்கள் அவளை எதுவும் செய்யவோ சொல்லவோ வேண்டாம். அதிலேயே அவள் குழம்பிப்போய் காரணத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்வாள். அத்தோடு நாம் இப்போது உஷாராக இருப்போம் என்று அவளுக்கு தெரியும் என்பதால் உடனேயே அடுத்த திட்டம் போட துணிய மாட்டாள், அதனால் நான் எங்கேயும் போவதாக இல்லை" என்றாள் உறுதியாக

இரண்டு பெண்மணிகளுக்கும் அவளது பேச்சில் சற்று திடம் உண்டாயிற்று.

ஆனால் மகேந்திரனுக்கு உள்ளூர இருந்த பதற்றம் குறையவே இல்லை. அதிலும் மகதியை கொல்லவும் துணிந்தாள் என்று அவள் வாய்மொழியாக கேட்டிருந்ததால் சற்று திகிலாகத்தான் இருந்தது.

மகேந்திரன் பல பேரை சந்தித்து பழகி வெற்றிகரமாக ஒரு தொழிலை நடத்துகிறவன். மதுமதியும் கைதேர்ந்த கிரிமினல் இல்லை. அதனால் அவளது திட்டத்தில் ஓட்டைகள் இருந்ததை அவன் எளிதாக கண்டுபிடித்து பொய் என்று நிரூபித்து விட்டான். ஆனால் இப்போது அவள் அடிபட்ட நாகமாக மிகுந்த கவனமாக செயல்படக்கூடும். இப்போது அதுபற்றி பேசி கலங்கடிக்க வேண்டாம் என்று அவனும் மேலோட்டமாக அவளது கருத்தை ஏற்றுக்கொண்டது போல் காட்டிக் கொண்டான்.

மகதி ஏதேதோ காரணங்களை சொன்ன போதும் உண்மையில் அவளுக்கு மகேந்திரனை பிரிந்து செல்ல கொஞ்சமும் மனமில்லை. அதை வெளிப்படையாக சொல்ல நாணம் தடுத்தது. அவள் முன்பு போல மதுமதியின் பசப்பு பேச்சில் மயங்கப் போவதில்லை. அவளது பாதுகாப்புக்கு வீட்டில் அன்னை இருக்கிறாள், எனும் போது எதற்காக பயப்படுவது என்று எண்ணினாள்.

மதுமதி விரிக்கப்போகும் வலையில் அவளை அறியாமல் விழப்போவதையும், அதன் காரணமாக மகேந்திரன் பெரும் கலக்கத்தில் தவிக்கப் போவதையும்.. அப்போது மகதி அறியவில்லை..

மதுமதி வீடு வந்து சேர்ந்த போது இருட்டத் தொடங்கியிருந்தது. மாலதியும் மகதியும் அவளுக்கு முன்னதாக வந்துவிட்டதை வாசலில் இருந்த செருப்புகள் பறைசாற்ற.. தயங்கியபடியே கூடத்திற்குள் நுழைந்தாள். அன்னையும் சகோதரியும் பூஜை அறையில் இருப்பதை அறிந்தவள், ஓசைப்படாமல் மாடிக்கு சென்றுவிட்டாள். உடையை மாற்றிவிட்டு கட்டிலில் விழுந்தாள்.

மதியமும் சரியாக உண்ணாததால் இப்போது ரொம்பவே பசித்தது. கீழே சென்றால் அம்மாவின் அர்ச்சனையை கேட்டாக வேண்டும். அதுமட்டுமன்றி அவள் தண்டனை என்று இப்போது என்ன சொல்வாளோ? அநேகமாக பாக்கெட் மணியில் தான் கைவைப்பாள். அவளுக்கு எப்போதும் கைகொடுக்க அவளது நண்பர்கள் இருக்கிறார்கள். இப்போது இந்த பசியை போக்க வழி பார்க்க வேண்டுமே? அம்மாவும் பொண்ணும் தூங்கப் போனபிறகு தான் அவள் கீழே செல்ல முடியும். சொந்த வீட்டிலேயே அவளுக்கு இந்த நிலை வர காரணமானவளை சும்மா விடக்கூடாது என்று மனம் போன போக்கில் எண்ணியபடியே களைப்பில் கண்ணயர்ந்தாள்.

திடுமென யாரோ கதவை தட்ட, வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து அமர்ந்த மதுமதிக்கு அவள் எங்கே இருக்கிறாள் என்று புரிவதற்கு சிலகணங்கள் ஆயிற்று. பணிப்பெண் தான்,"மது மேடம், மது மேடம் கதவை திறங்கள் " என்று சொல்ல எழுந்து சென்று கதவைத் திறந்து " என்ன விஷயம் மைதிலி? "என்று வினவ

"உங்களை சாப்பிட வரச் சொன்னாங்க பெரியம்மா.” என்றாள்.

"சரி சரி நீ போ,நான் வர்றேன் " என்றுவிட்டு உள்ளே சென்று முகம் கழுவிக்கொண்டு கீழே சாப்பிட சென்றாள்.

அங்கே கைப்பேசியில் ஏதோ பார்த்தவாறு மகதி சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள். மாலதியின் முகம் அமைதியாக இருந்தது. அவளுக்கு பிடித்த வெஜ் ரவா கிச்சடி, கொத்தமல்லி சட்டினி தேங்காய் சட்டினி எல்லாமும் அவள் விருப்ப உணவாக இருந்தது. உள்ளூர குழப்பமாக இருந்த போதும், அதை எல்லாம் சிந்திக்கும் மனநிலை இல்லாததால் மௌனமாக சாப்பிட்டாள் மதுமதி.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top