Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

22. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India


மங்களம் வீட்டை முழுவதுமாக மாலதிக்கு சுற்றி காண்பித்தார். அதோடு அவரது பிள்ளைகளை பற்றி, கணவர் பற்றி நிறைய விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டார். எல்லாமும் கேட்ட பிறகு மாலதிக்கு பல காலமாய் பழகியது போன்ற உணர்வே உண்டாயிற்று. அது மட்டுமல்ல, அவளை இயல்பு நிலைக்கு கொணரவே அவர் இந்த முயற்சியை செய்திருக்கிறார் என்பதும் புரிய, ஒரு முடிவிற்கு வந்தாள். ஏற்கெனவே மகேந்திரன் உண்மை அறிந்து மகதியை ஏற்றுக்கொண்டு விட்டான். அவனது தாயும் உண்மை அறிய கடமை பட்டிருக்கிறார் என்று எண்ணினாள்.

கடைசியில் முன் புறமாக இருந்த லானிற்கு வந்து அங்கிருந்த நிழற்குடையின் கீழே போடப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர். பணியாள் பருகுவதற்கு பழரசம் கொணர்ந்து வைத்துவிட்டு போக, "எடுத்துக் கொள்ளுங்கள் அண்ணி", என்று விட்டு தானும் ஒன்றை எடுத்து கொண்டார் மங்களம்.

"இருக்கட்டும் அண்ணி, என்றவள், "நான் உங்களிடம் சில விஷயங்களை சொல்ல வேண்டும், என்று தொடங்கி, "மங்களம் வீட்டார் மதுமதியை பெண் பார்க்க வந்து மகதியை பார்க்க நேர்ந்தது முதல் நடந்தவற்றை தெரிவித்தாள். அத்தோடு மகதியை பெற்ற தாய் அவள் இல்லை என்ற விபரத்தையும், அதன் காரணத்தையும் சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

மாலதியின் கையைப் பற்றி தட்டி கொடுத்த மங்களம், "புரியாத சிலது இப்போது புரிகிறது அண்ணி. பெண் பார்க்க வந்தப்போ நான் மருமகளை கவனித்தேன். அதனால் தான் அவளுக்கு சம்மதம் சொல்ல அவகாசம் கொடுத்தேன். அப்புறம் நீங்கள் வந்து அவள் சம்மதித்து விட்டதாக சொன்ன பிறகு நிம்மதி ஆச்சு. திடீரென்று மகேன் மருமகள்கிட்ட பேசணும்னு சொன்னப்போ எனக்கு கொஞ்சம் பதற்றம் தான். இப்ப நிச்சயதார்த்த தேதி குறித்து, அதற்கு தேவையான ஷாப்பிங் கூட பண்ணிவிட்டோம். ஆக, இப்போது எல்லாம் தெளிவாகி விட்டதில்லையா அண்ணி? இன்னமும் ஏன் கவலைப்படுகிறீர்கள்? "என்றதும்

"என் சின்ன மகள் பற்றி தான் அண்ணி. இன்னும் அவளுக்கு நிச்சயதார்த்தம் பற்றி சொல்லவில்லை. படிப்பு விளையாட்டு நடனம் என்று அவளிடம் நிறைய திறமைகள் இருக்கிறது. இதுவரை அவளைப் பற்றி எந்த ஒரு புகாரும் வந்ததில்லை. அவள் இயல்பில் கெட்டவள் இல்லை அண்ணி. ஆனால் குழந்தை மனசில் என் அத்தை விதைச்சது விஷமாக வளர்ந்து விட்டது. இத்தனை வருஷத்தில் அவள் மாறிவிடுவாள் என்று நாங்கள் எதிர் பார்த்தோம். ஆனால் அவள் மாறவே இல்லை. இன்னும் அவள் மனதில் வன்மமாக இருக்கிறது என்று இப்போது நிரூபித்துவிட்டாள்.

இப்போது என் பயமெல்லாம் திருமணம் ஆகிற வரையில் மகதியை எப்படி பாதுகாப்பது என்பது தான். மது அவள் மனதை எத்தனை தரம் காயப்படுத்தி இருந்தாலும் மகதிக்கு தங்கை மீது இருக்கும் பாசம் கொஞ்சமும் குறையவில்லை. ஏன் அவளை பெற்றேன் என்று நான் வேதனைப்படாத நாளில்லை அண்ணி".

"உங்கள் வருத்தம் புரிகிறது அண்ணி. மனசில் ஆழமாக வேறோடிப் போயிருக்கிற விஷயத்தை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியாது அண்ணி. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது அண்ணி. ஆனால் நீங்கள் அதை தப்பாக எடுத்துக் கொள்வீர்களோ என்று தயக்கமாக இருக்கிறது."

"என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். மகதியை அவள் சகோதரியாக ஏற்றுக் கொண்டால் போதும் அண்ணி"

"நீங்கள் முதலில் ஜூஸ் குடியுங்கள் அண்ணி, " நீங்கள் சொன்னதெல்லாம் கேட்ட பிறகு, என்னுடைய அனுமானம் இது. நான் சொல்வதை கவனமாக கேட்டுவிட்டு அப்புறமாக உங்கள் அபிப்ராயம் சொல்லுங்க. ஒரு விஷயத்த தீவிரமாக எண்ண தொடங்கி அதுவே உண்மை என்று மனது நம்பிவிடுகிறது. அதன் காரணமாக ஒருவித மன அழுத்தம் உண்டாகி இருக்கலாம். நீங்களே சற்று யோசித்து இருந்தால் இதை செய்திருப்பீர்கள். அவள் இப்படி நடந்து கொள்ள ஆரம்பித்த பிறகு, கோபத்தை காட்டாமல் அவளுக்கு புரிய வைக்க முயன்று இருந்தால் அவள் ஒரு வேளை மாறி இருக்ககூடும்." என்றதும் மாலதி குறுக்கிட்டு,

"மகதி இங்கே இல்லாத போது அவள் இயல்பாக இருந்தாள். அப்போது அவளிடம் நான் அந்த முயற்சியும் செய்தேன் அண்ணி. அதன்படி மகி எஸ்டேட் போனதில் இருந்து அவளை இவள் தொந்தரவு செய்யவில்லை. அவள் விடுமுறையில் வரும்போது கூட சுமூகமாக நடந்து கொண்டாள். சொல்லப்போனால் இரண்டு பேரும் ஒன்றாக வெளியே சென்று வரும் அளவுக்கு நிலைமை மாறி இருந்தது. இல்லை அப்படி அவள் நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறாள் என்று அன்று பெண் பார்க்கும் நிகழ்வில் தெரிந்து போயிற்று. அது ஏன் அப்படி செய்தாள் என்பது எனக்கு இன்னும் விளங்கவில்லை அண்ணி. மாப்பிள்ளை படத்தை பார்த்து அவள் சம்மதம் சொன்ன பிறகு தான் தரகரிடம் தகவல் சொன்னோம். அவளிடம் கேட்டால் உண்மை சொல்வாள் என்று இப்போது நினைக்க முடியவில்லை." மாலதிக்கு வேதனையில் கண்கள் கலங்கி குரல் கரகரத்தது.

"கவலைப்படாதீர்கள் அண்ணி. எல்லாம் சரியாகிவிடும். தரகர் உங்களுக்கு இரண்டு பெண்கள் இருக்கிற விஷயத்தை சொல்லவில்லை. ஒருவேளை இங்கே ஒரு பெண் தானே இருக்கிறாள் என்று எண்ணி சொல்லாமல் விட்டிருக்கலாம். மகேன் படத்தில் காட்டியிருந்த பெண் மகதி என்று நீங்கள் இப்போது சொன்ன பிறகு தான் விளங்குகிறது. மதுமதி என்ன நினைத்து செய்திருந்தாலும் இதுவரை நல்லதாகவே நடந்துவிட்டது போல இனியும் நடக்கும் என்று நம்புங்கள் அண்ணி", என்றபோது மாலதியின் கைபேசி ஒலித்தது.

💜💜💜

கடற்கரை ரிசார்ட்ஸ்சில் இருந்து கிளம்பியது முதல் மகேந்திரனின் முகத்தில் தீவிர சிந்தனையை கண்டு மகதி எதுவும் கேட்கவில்லை. சற்று தூரம் பயணப்பட்டதும், நிகழ்விற்கு திரும்பியவனாக,

"என்னடா, ஒன்றும் பேசாமல் இருக்கிறாய்? நடந்தது என்னவென்று தெரிந்து கொள்ள உனக்கு ஆர்வமே இல்லையா? என்றான்.

"அது.... ஆர்வம் இருக்கிறது தான். மதுவை நான் அறிந்திருப்பதால் ஓரளவுக்கு என்னால் யூகிக்க முடிகிறது மனு, எப்படியும் நான் கேட்காமலேயே சொல்லுவீர்கள், என்று தெரியும். தவிர நீங்கள் ஏதோ யோசனையில் இருந்தீர்கள். அதை கலைக்க வேண்டாம் என்று நினைத்தேன்"என்று புன்னகைத்தாள்.

"இப்படி ஒரு புரிதலான மனைவி கிடைக்க நான் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் மதி, என்று மெச்சிவிட்டு, அவளை தோளோடு சேர்த்து அணைத்தவன், "இந்த சாலையில் இல்லாமல் நான்கு சுவற்றுக்குள் இருந்தோமில்லையே என்று வருத்தமாக இருக்கிறது" என்று அணைத்திருந்த அவனது பிடி சற்று இறுகியதும்,

"வெட்கச்சிரிப்புடன், வெளியே பார்க்கும் பாவனையில் சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டாள் மகதி.

ஆளரவமற்ற அந்த சாலையின் ஓரமாக இருந்த மரத்தின் நிழலில் வண்டியை நிறுத்திவிட்டு,"ஒற்றை விரலால் அவன் புறமாக திருப்பி, ரசனையுடன் சில கணங்கள் பார்த்திருந்தவன், ஏதோ நினைவில் முகம் தீவிரமாக மாற, வேறு விஷயம் பேசினான்,"எனக்கு சில விஷயங்கள் தெரிய வேண்டும் மதி"

"கேளுங்கள் மனு?

"மதுமதி பேசியபோது சில விஷயம் தெரிந்தது. அத்தை உன்னை பெற்றவர்கள் இல்லை என்பது போல பேசினாள். ஏன் அப்படி சொன்னாள்? அவள் சொன்னதை நினைத்தால் மனம் நடுங்குகிறது. அவளுக்கு உன்னிடம் இவ்வளவு வெறுப்பு எதனால்? நாம் முதல் முதலாக சந்தித்த அன்று கூட நீ அவளைப் பற்றி சொல்லும்போது இதெல்லாம் அவளுக்கு விளையாட்டு என்றாய்". அப்படி என்றால் இதற்கு முன்பும் அவள் உன்னை இப்படி சங்கடப்படுத்தியிருக்கிறாள் என்று தானே அர்த்தம்? இதோ பாரடா மதி, அவளது கோபத்தை வைத்து மட்டுமாக நான் இதை எல்லாம் கேட்கவில்லை. தங்கையை எப்படி விட்டுக்கொடுப்பது என்று எண்ணாமல், நம் வாழ்வு நல்லவிதமாக அமைவதற்காக கேட்கிறேன் என்பதை மனதில் கொண்டு எல்லாமும் விவரமாக சொல்லு மதி"

மகேந்திரனின் குரலில் இருந்த கலக்கம் மகதிக்கு புரிந்தது. அவள் சொல்லப்போவதை கேட்டால் அவனது பதற்றம் இன்னமும் அதிகரித்து விடுமோ என்று அச்சமாக இருந்தாலும் அவனிடம் சொல்லி விடுவதே நல்லது என்று தோன்ற, அவள் அறிந்த வரையில் எல்லாம் சொல்லி முடித்தாள்.

சட்டென்று அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்ட மகேந்திரனின் உடம்பு நடுங்குவதை உணர்ந்த மகதி, ஆறுதலாக அவனது முதுகை வருடினாள். "மதிம்மா, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறதடா, நீ வேண்டுமானால் கல்யாணம் வரை பெரியம்மா வீட்டிலேயே இருந்து கொள்கிறாயா?" என்ற போது குரலிலும் கலக்கம் தெரிய, அவனிடமிருந்து மெல்ல விலகி,

"அதெல்லாம் முடிந்து போன கதை மனு, நான் விலகி போனால் மதுமதி நினைப்பது போல அவள் அம்மாவை நான் அபரிக்க எண்ணவில்லை என்று புரிந்து, என்னுடன் சுமூகமாக நடந்து கொள்வாள் என்று நினைத்து தான் அப்போது அப்படி ஒரு முடிவை எடுத்தேன் மனு. இனி அதுபோல முட்டாள்தனம் செய்வதாக இல்லை" என்றாள் உறுதியான குரலில்.

"துஷ்டரை கண்டால் விலகிவிடுவது நல்லதுதானே மதி? நான் வேறு அவளை தேவையில்லாமல் சீண்டிவிட்டு வந்துவிட்டேன். நீயானால் இப்படி சொல்கிறாயேடா. உன்னை இழந்தால் நான்... என்று அவன் மேலும் பேசுமுன்பாக கையால் அது வாயை பொத்திவிட்டு,"மனு, தைரியமாக இருங்கள். நீங்களே கலங்கினால் எப்படி? என்றாள்.

"ம்ம்.. சரிடா..அப்ப நீ பத்திரமாக இருப்பாய் அப்படித்தானே?

"ம்ம் அப்படியேதான். முன்னாடி என்றால் என்ன சொல்லியிருப்பேனோ? ஆனால் இப்போது அப்படி இல்லை மனு, என்றவளின் முகம் லேசாக சிவக்க, அதுவரை இருந்த கலக்கம் நீங்கி மகேந்திரனின் கண்களில் ரசனையும் ஆர்வமும் உண்டாக, அவளை தன்புறமாக திருப்பி அமரச் செய்து,"ம்ம்.. இப்போது புதிதாக என்னாயிற்றாம்? என்று குறும்புடன் வினவ,

"ம்.... அதுவா? திடுமென ஒருவர் வந்து என் மனதில் நிறைய ஆசைகளை உண்டு பண்ணிவிட்டார். இப்போது அதெல்லாம் நிறைவேறும் போல் இருக்கையில் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்ளத்தானே வேண்டும்," மகதி கண்களில் குறும்பும் இதழில் சிரிப்புமாக அவனை பார்த்து கண்ணடித்தாள்.

அவனது மனநிலையை மாற்றுவதற்கான முயற்சி அது என்று மகேந்திரனுக்கு புரிந்தது. அத்தோடு அவள் அவனுக்காக பத்திரமாக இருப்பாள் என்பதும் மனதுக்குள் தெம்பை உண்டு பண்ணியது. இதழில் புன்னகை தவழ, அவளது கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்தபடி நன்றி கண்மணி". என்றான்.

"நமக்குள் இதெல்லாம் எதற்கு மனு, என்று மணியை பார்த்தவள், நேரமாகிறது பாருங்கள். அங்கே அம்மா வேறு என்னாயிற்றோ என்று பதற்றத்துடன் காத்திருப்பார்கள். முதலில் அவங்களுக்கு ஃபோன் செய்து பயப்படாமல் இருக்கச் சொல்லுங்கள்" என்றதும் அவனது கைபேசியில் எண்களை அழுத்தினான் மகேந்திரன்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top