Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

22. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
மலர்வதனியை வீட்டு பெண் என்றும் அவள் போக வர வாகனம் ஏற்பாடு செய்வதாகவும் நிரஞ்சன் கூறவும்,

மலர்வதனி ஆத்திரமடைந்தவளாய், "அதெல்லாம் ஒன்றும் வேண்டாம், நான் வழக்கம்போல பஸ்ஸில் போய் வந்து கொள்வேன். அத்தோடு நான் உங்கள் அம்மாவின் தம்பி மகள் அவ்வளவுதான், உங்கள் வீட்டுப் பெண் இல்லை, மற்றபடி அந்த வீட்டிற்கும் எனக்கும் வேறு சம்பந்தம் இல்லை. என் அம்மா கொடுத்துவிட்டு போன பணமும் நகையும் என்னை வளர்க்க படிக்க வைத்ததில் சரியாகிப் போயிருக்கும், அதற்கு மேலும் என்னை நானேதான் கவனித்துக் கொள்ளவேண்டும். அதில் இந்த வாகன சவாரி எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. அத்தைக்காகத் தான் நான் அந்த வீட்டிற்குள் வந்திருக்கிறேனே தவிர வேறு எந்தவித நோக்கத்திற்காகவும் இல்லை என்பதை தயவுசெய்து நினைவு வைத்துக்கொள்ளுங்கள்" என்று படபடத்துவிட்டு, வெளியே பார்க்கும் பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவளது முதுகுப்புறம் ஏறியிறங்குவதிலேயே அவள் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள போராடுவது நிரஞ்சனுக்கு புரிந்தது.

கூடவே அவனுக்கு இந்த பணம் பற்றிய விவரம் புதியது. அதை அவன் தாயோ தந்தையோ தெரிவிக்கவில்லை. ஆக, பாட்டியும் கூட இதனால் தான் போனால் போகட்டும் என்று பணியாளர்கள் குடியிருப்பில் அவளை தங்க வைத்தாள் போலும்? போலும் என்ன அதுதான் உண்மை. மற்றபடி பாட்டி அவளை அங்கே தங்கவைக்க ஒருபோதும் விட்டிருக்க மாட்டாள். அப்படி என்ன தவறு செய்துவிட்டாள் இந்த சிறுபெண்? அம்மா கூட அப்படி ஒதுக்கி வைத்த காரணத்தை சொல்லவில்லை. ஏன் பாட்டிதான் காரணம் என்பதையே மறைக்கத்தான் பார்த்தாள். இத்தனை காலத்துக்கு பிறகு பாட்டியிடம் அவன் வெறுப்பு காட்டிவிடக் கூடாது என்ற எண்ணம் போலும். அவன் என்ன இன்னும் சின்ன குழந்தையா? தொழிலை தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறான். அவனுக்கு நல்லது கெட்டது கூடத் தெரிந்து கொள்ள முடியாதா? யோசிக்கும் போதே அவனது எண்ணம் நிகழ்விற்கு தாவிற்று. அருகில் அமர்ந்திருந்தவளை தேற்றும் வகை தெரியாமல் தவித்தவன், மேற்கொண்டு பேசாமல் வண்டியை கிளப்பினான்.

வீடு வந்ததைக் கூட உணராமல் அமர்ந்திருந்த மலர்வதனியிடம்,"வதனி வீடு வந்தாயிற்று மா, இறங்கிக்கொள்"என்ற நிரஞ்சனின் மென் குரலில் சுயநினைவுக்கு வந்த மலர், சட்டென்று இறங்கி வீட்டிற்குள் ஓடி மறைந்தாள்.

ஒரு சிறு பெருமூச்சுடன் கார் சாவியை அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்துவிட்டு அவனும் தொடர்ந்தான்.
☆☆☆
மலர்வதனி நேராக அவளுக்கான அறைக்குள் நுழைந்து கொண்டாள். அவளைப் பொறுத்தவரை இந்த வீடு நிரந்தரம் அற்றது. அத்தை மகனின் செயல்கள் அவளை ரொம்பவும் அஞ்ச வைத்தது. அவளுக்காக அவன் செய்வதை அத்தை வேண்டுமானாலும் தவறாக பார்க்க மாட்டாள். ஆனால் மற்றவர்கள் என்ன எண்ணுவார்கள்? அத்தோடு அவளுக்கு என்று எந்த பின்புலமும் இல்லை எனும்போது அவளேதான் உழைத்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அதற்காகத் தான் அன்றைக்கு வீட்டை விட்டு கிளம்ப முடிவு செய்தது. அதுவும் கூட அவளுக்காய் தோன்றவில்லை. அந்த நிகிதாவின் அம்மா தானே அவளது நிலையை புரிய வைத்தாள்.

நிரஞ்சன் வந்த அன்றைக்கு எல்லோருமாக ஓய்வெடுக்கப் போன பிறகு மலர்வதனி அத்தை சொன்னபடி பிரட் அல்வா செய்ய வந்தபோது அந்த சந்திரமதி அடுப்படிக்குள் வந்தாள். "ஓஹோ இப்படி எல்லாம் சமைச்சுப் போட்டு என் மருமகனை மயக்கிடலாம்னு அண்ணியும் நீயும் சேர்ந்து திட்டம் போடுகிறீர்களா? என்றைக்கு இருந்தாலும் இந்த வீட்டுக்கு என் மகள் தான் மருமகளாக வரப்போகிறவள்" என்றாள் கடுமையான குரலில்.

திடுமென சந்திரமதியை அங்கே கண்டதில் திகைத்து போயிருந்த மலர்வதனிக்கு அவள் பேசியதைக் கேட்டு உடம்பெல்லாம் கூசிப்போயிற்று, பதில் சொல்லாமல் சிலையாக நின்றாள். மேலும் அவள் பேசினாள், "உன்னை அந்த ஒற்றை அறையில் எதற்காக என்னோட அம்மா தங்கவைக்க சம்மதிச்சாள் என்று தெரியுமா? எல்லாம் உன் ஆத்தா கொடுத்துவிட்டு போன நகையும் கொஞ்சம் பணமும் தான் காரணம். அதை வச்சுத்தான் இத்தனை வருஷமா உனக்கு சாப்பாடு, படிப்பு துணிமணிகள்னு செலவு செஞ்சாங்க. இல்லாது போனால் இந்த வீட்டுல இருந்து உனக்காக செலவு செய்ய என் அம்மா விட்டுருமாக்கும்? இப்பக்கூட உன் அத்தை உன்னை எதுக்கு வேலைக்கு அனுப்பறாள்னு தெரியுமா? நாளைப் பின்னே வீட்டை விட்டு விரட்டினால் நீ சோத்துக்கு கஷ்டப்படக் கூடாதுன்னு தான். இப்பவும் சொல்கிறேன் நீ வேலைக்கு போறே, நாலு காசும் சம்பாதிக்கிறே எப்படி என்றாலும் நிரஞ்சனுக்கு மனைவி என்று என் மகள் வந்துவிட்டால் உன்னை இங்கே இருக்க விடமாட்டாள். அதற்கு முன்பாக நீயே இடத்தை காலி பண்ணிடறது உனக்கு நல்லது அப்புறம் இப்படி எல்லாம் சொன்னது நான்தான் என்று உன் அத்தைக்கிட்டே சொன்னேனு தெரிஞ்சது, நான் என்ன செய்வேன் என்று தெரியாது. புத்தியோடு நடந்து கொள் அவ்வளவுதான் நான் சொல்லுவேன்" என்றுவிட்டு போய்விட,

சிலகணங்கள் செய்கையற்று நின்ற மலர்வதனிக்கு அவள் வந்த காரியம் நினைவு வர, மிகுந்த பிரயத்தனம் செய்து தன்னை ஒருமுகப்படுத்தி அந்த வேலையில் ஈடுபட்டாள்.
அப்போதே உடன் பணிபுரியும் தோழியிடம், அவள் தங்கியிருக்கும் விடுதியில் தனக்கு ஒரு அறை ஏற்பாடு செய்ய முடியுமா என்று குறுஞ்செய்தி அனுப்பி கேட்டாள். அவளும் செய்வதாக வாக்களித்தாள். அதனால் சற்று முன்னதாக கிளம்பி வருமாறு அந்த தோழி கேட்டுக் கொண்டதன் பெயரில் தான் அன்றைக்கு கிளம்பினாள். ஆனால் அத்தையிடம் உண்மையை மறைக்க திராணியின்றி உளறியதன் விபரீதம் அத்தையின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று அவள் கொஞ்சமும் நினைக்கவில்லை. கடைசியில் அவள் எங்கும் செல்வதில்லை என்று வாக்கு கொடுக்கும்படி ஆயிற்று. இப்போது எதிர்பாராத திருப்பமாக அத்தான் அவளை வீட்டினுள் அழைத்து வந்தான். அத்தோடு நில்லாமல் அவளுக்காக பாட்டியிடம் வக்காலத்து வாங்கவும் தயாராகி விட்டான். மேலும் இப்போது அவளுக்கு அந்த வீட்டுப் பெண் என்ற அங்கீகாரம் கொடுத்து, அவள் வேலைக்கு செல்ல வண்டியை ஏற்பாடு செய்வதாக சொல்கிறான். சும்மாவே அவளுக்கு முள் மீது நிற்பது போன்ற தவிப்பு. இதில் இவன் புதிது புதிதாக கிளப்பினால் அவள் என்ன தான் செய்வாள்? கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தபடி இருக்க, அப்படியே கட்டிலில் சரிந்தவளுக்கு அதன் மென்மையைக்கூட உணர முடியவில்லை.

மலர்வதனி இதுபோல் சட்டென்று உணர்ச்சிவசப்பட்டு அழுகிறவள் இல்லை. ஆனால் பெற்றோர்களின் நினைவுகள் கிளறப்பட்ட பிறகு அவளை அறியாமல் கண்கள் பொங்கிக்கொண்டு தான் இருக்கிறது. கண்ணீர் உகுத்தபடி சரிந்து கிடந்தவளை ஒரு கரம் மெல்ல தூக்கி அணைக்க, அது அத்தை தான் என்று உணர்ந்தவள், சிறு விசும்பலுடன் அவளது மார்பில் சாய்ந்து கொண்டாள்.

சிலகணங்கள் பேசாமல் அவளது முதுகை வருடியபடி இருந்த வடிவுக்கரசியின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

தம்பி மகளை என்னதான் அவள் அன்போடு கவனித்திருந்தாலும். இப்படி மடியில் போட்டு தாலாட்டும் வாய்ப்பு குறைவு. மலர் சிறுபிராயத்தில் சொன்னதை செய்ததால் அப்போது அது பெரும் பிரச்சனையாக தோன்றவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவள் கிளிப்பிள்ளை போல இருப்பதை உணர்ந்து மனம் வலித்தது. அதனால் தான் பெரும்பாலும் அவள் விடுதியில் இருந்து திரும்பும் சமயத்தில் கூடுதல் நேரத்தை அவளுக்குக்காக ஒதுக்குவாள். அதற்காக காந்திமதியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வாள். அதெல்லாம் மருமகளுக்கு முன் பெரிதாக அவளை பாதித்ததில்லை.
ஆனால்... அவளது மகனின் முயற்சியால் மருமகள் அந்த வீட்டிற்குள் வந்ததை எண்ணி மனம் குளிர்ந்த போதும், மாமன் மகள் மீது அக்கறை கொண்டு நிரஞ்சன் இந்த விஷயத்தை செய்யவில்லை, அவளது உடல் நிலை காரணமாகவே மகன் இதை செய்திருக்கிறான் என்பதுதான் அவள் மனதை பெரிதாக பாதித்தது. இப்போது அதுவும் கூட மகனிடம் பேசிய பிறகு நீங்கிவிட்டது.
ஆனால் தம்பி மகளுக்கும் அவளைப் போலவே அவள் உரிமையற்று அந்த வீட்டிற்குள் வந்துவிட்டதாக உறுத்தல் ஏற்பட்டு விட்டதா, அல்லது வரும் வழியில் நிரஞ்சனுக்கும் மலர்வதனிக்கும் ஏதும் தகராறு ஆகியிருக்குமோ? அதை எப்படி சொல்வது என்று தான் அழுகிறாளோ என்று வடிவுக்கரசிக்கு சந்தேகம் உண்டாயிற்று. ஆனால் இதில் அவள் செய்வதற்கு ஒன்றுமில்லை, அப்படியே அவள் மருமகளை சமாதானம் செய்ய முயன்றாலும் மகன் பக்கம் சாய்ந்து விட்டாள் என்று தோன்றும். அதைவிட இப்படி ஆறுதல் படுத்துவதே மேல்...

மலர்வதனிக்கு அத்தையும் தன்னோடு வருந்துகிறாள் என்று தோன்ற, ஒருவாறு தன்னை சுதாரித்துக் கொண்டு எழுந்து நேராக அமர்ந்தாள்.

"அத்தை ராத்திரி மருந்து எல்லாம் சரியாக சாப்பிட்டீர்களா? என்று கேட்டாள்.

வடிவுக்கரசிக்கு அவள் பேச்சை மாற்ற முயற்சி செய்வது புரிந்தது. அத்தோடு முன்னிரவில் போன் செய்து விசாரித்ததை திரும்பவும் விசாரிப்பதை எண்ணி சிரிப்பு வந்தது. அதை அடக்கியவாறு,"நீதானே எடுத்து கொடுத்தே? அப்புறம் என்னடி கேள்வி?

"நான் கொடுத்தேன் தான் அத்தை. நீங்கள் என் தலை மறைந்ததும் தூக்கி போட்டுவிட்டிருந்தால் அதான்"என்று ஏதோ சொல்லி சமாளிக்க முயன்றாள்.

"ம்ம்.. உன் அத்தை அப்படி செய்கிறவளா என்ன? என்றவள் "உனக்கு நேற்று ஓய்வே கிடைக்கவில்லை. அப்படியே ராத்திரி கண்முழித்து வேலையும் செய்து விட்டு வந்ததில் களைப்பாக இருக்கும். அதுதான் சம்பந்தமில்லாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறாய். முதலில் அந்த பிளாஸ்கில் இருக்கும் காபியை குடி. வென்னீர் போட்டு வைத்திருக்கிறேன். அலுப்பு தீர குளித்து விட்டு வா. உனக்கு இங்கேயே டிபன் அனுப்புகிறேன்", என்று மருமகளை லேசாக அணைத்துவிட்டு எழுந்தாள்.

"எனக்கு களைப்பு ஒன்றும் இல்லை அத்தை. அப்புறம் புது பழக்கமெல்லாம் ஆரம்பித்து வைக்காதீர்கள். என்னை எப்போதும் போல் இருக்க விடுங்க. டிபன் அனுப்பறதெல்லாம் வேண்டாம். நானே வந்து சாப்பிட்டுக்கொள்கிறேன்" என்றாள் காபியை குவளையில் ஊற்றியபடி...

"ம் ம்.. மழைக்காலத்தில் வெந்நீரில் குளிப்பது உனக்கு வழக்கம் தானேடி? அங்கே வெளியே விறகு அடுப்பில் போட்டு வைத்தேன். இங்கே கீசரில் போட்டிருக்கிறேன் அவ்வளவுதான். அத்துடன் நீதான் புரியாமல் பேசுகிறாய் மலர். கீழே பாட்டி இருப்பார்கள். நேற்று ஏதோ மூடில் வாயை மூடிக்கொண்டு கொண்டார்கள். இன்றைக்கும் அப்படி இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்? என்றாள் வடிவுக்கரசி.

மலர்வதனிக்கு அத்தை சொல்வது புரிந்தது. ஆனால் மகனிடம் ஒன்று சொல்லிவிட்டு இப்போது அதற்கு மாறாக நடந்தால் அவள் சொன்னது எல்லாம் வேஷம் என்று நினைக்க மாட்டான்? இப்போது அவள் என்னதான் செய்வது?? பாட்டிக்கு பயந்து கொண்டு அவள் எத்தனை நாட்கள் ஒளிந்து கொள்ள முடியும்? என்று எண்ணியபடி பேச்சற்று நிற்க, அவளது கன்னத்தில் தட்டிவிட்டு வெளியேறினாள் வடிவுக்கரசி.




















 

Attachments

  • IMG_20201009_182654_423.jpg
    IMG_20201009_182654_423.jpg
    116.8 KB · Views: 0
Back
Top