Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

14. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
அத்தை மகன் நிரஞ்சன் வந்து முழுமையாக இரண்டு தினங்கள் முடியவில்லை. அதற்குள் என்னவெல்லாம் நடந்து விட்டது??

மலர்வதனிக்கு என்ன நடக்கிறது என்று ஒரே மலைப்பாக இருந்தது. மருத்துவமனையில் நிரஞ்சன் பேசியதைக் கேட்டு மாமாவும் அத்தையும் தர்மசங்கடத்தில் திணறிக் கொண்டிருக்க, அவளோ சிலையாகிப் போனாள். அவனுடன் அவள் பேசியதை அறிந்தாலே அந்த பாட்டி தாண்டவம் ஆடிவிடுவாள். அதற்கு மேலாக, அவன் அப்போது பேசியது மட்டும் காந்திமதி காதில் விழுந்தால், என்னாகும் என்று நினைக்கும்போதே உள்ளம் பதறியது.

ஆனால் நிரஞ்சன் மருத்துவமனையில் ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை என்று வீட்டுக்கு சென்றதும் செயல்படுத்தவும் ஆயத்தமாகி விட்டான். இல்லை சொல்லப்போனால் அதற்கு முன்பாகவே பாட்டியை எதிர்கொள்ள தயாராகி விட்டதைப் போல, முதல் முயற்சியாக அனைவரையும் காரில் வீட்டிற்கு அனுப்பினான். கார் கிளம்பிச் சென்றதும்,

"இரண்டு கார்கள் இருக்கும்போது, அத்தையை அவர்களோடு நெருக்கடியில் ஏன் அனுப்பி வைத்தீர்கள்? என்று கோபத்தை அடக்கியபடி கேட்டாள் மலர்வதனி.

"இரண்டு கார்களா? என்று ஒருகணம் புரியாமல் விழித்தவன்,விஷயம் புரிய, தொடர்ந்து,"என் அம்மாவை அப்படி எல்லாம் வேண்டுமென்றே கஷ்டப்படுத்துவேனா? என்றான் முகத்தில் குறும்பாய் சிரிப்பு மலர்ந்தது.

அவன் சிரிப்பு அவளுக்கு மேலும் அத்திரத்தையே உண்டு பண்ண,"நான் வழக்கம் போல பஸ்சில் போய்க் கொள்கிறேன்"என்று அவள் இரண்டு எட்டு எடுத்து வைக்க, குறுக்கே கையை நீட்டி,"கூல் பேபி, எதுக்கு இத்தனை கோபம்? இதென்ன சின்னப் பிள்ளைத்தமா சொன்னதையே சொல்லிக் கொண்டு என்று கடிந்து கொண்டு, தொடர்ந்து,"வெல், வதனி, நான் உனக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன், அதனால் நீ என்னோடு தான் வந்தாக வேண்டும். இல்லாவிட்டால் அம்மாவின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும், அத்தோடு, உன் அத்தைக்ககு Medicines எல்லாம் வாங்க வேண்டும். நீ தான் நர்ஸம்மா ஆயிற்றே இந்த மருந்து எல்லாம் எது காலாவதி ஆனது ஆகாகாதது என்று பார்த்து வாங்குவாய் தானே? போகிற வழியில் அதையும் வாங்கிக் கொண்டு போகலாம். அதனால் இங்கேயே நில். நான் போய் வண்டியை எடுத்து வருகிறேன் என்று அழுத்தமான குரலில் கூறிவிட்டு பார்க்கிங் ஏரியாவுக்குள் சென்றான்.

"இவன் மனதில் என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறான்? அவன் சொல்வதற்கு எல்லாம் அவள் தலையாட்டுவாள் என்று நினைத்துக் கொண்டானா? அத்தை மகன் என்பதற்காக இல்லை, அவனது அம்மாவின் மனதுக்கு கஷ்டம் உண்டாகி விடக்கூடாது என்று கொஞ்சம் பணிந்து போனால், ஏதோ பெரிய மகாராஜன் போல் ஒரே அதிகாரம் தூள் பறக்கிறதே",என்று உள்ளுக்குள் பொறுமியபடி நின்றாள் மலர்தனி.

சிலகணங்களில் அவள் பின்புறமாக இருசக்கர வாகனம் வரும் சத்தம் கேட்டு நகர்ந்து நிற்க,"ஏறிக்கொள் வதனி," என்று அருகாமையில் கேட்ட குரலில் துள்ளி குதிக்காத குறையாக திரும்பிப் பார்த்தாள். காரில் அவனோடு போனாலே பாட்டியம்மாள் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். இதில் ஊரே பார்க்கும்படி பைக்கில் உட்கார்ந்து சென்றால், அவளுக்கு அந்த வீட்டில் இன்றைக்கு தான் கடைசி நாள். அப்புறம் அவள் எங்கே போவது? அதை எல்லாம் இவனிடம் சொல்ல முடியுமா? சொல்வதும் தான் அவளுக்கோ அத்தைக்கோ கௌரவமா இருக்குமா என்ன? இப்போது எப்படி தவிர்ப்பது என்று புரியாமல் கையைப் பிசைந்தாள் மலர்வதனி.

"என்னாச்சு மேடம்? வீட்டுக்குப் போகனும்,வீட்டுக்குப் போகனும்னு அப்படி குதிச்சியே? இப்ப சாவகாசமாக நின்று கொண்டிருக்கிறாய்? ஒருவேளை, என்னோடு வருவதை தவிர்ப்பதற்காகத் தானா?அவனது நேரடி கேள்வியில், முகம் கன்ற,"இவனோடு இதே ரோதனைதான். முகத்துக்கு நேராக கேட்டு வைத்து சங்கடத்தில் ஆழ்த்துகிறான்"

அவள் முகம் போன போக்கை பார்த்துவிட்டு,"Its ok, அது எதுவாக இருந்தாலும் சரி வதனி,இப்போது கிளம்பினால் தான், உன்னை வீட்டில் விட்டுவிட்டு, நான் ஜாஸ்மினுடன் லஞ்சிற்கு வெளியே செல்ல நேரம் சரியாக இருக்கும். நேற்று ஜுரம் காரணமாக என்னால் அவளோடு இருக்க முடியாமல் போய்விட்டது"என்று அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே மலர்வதனி, துப்பட்டாவால் தலையில் வெயிலுக்கு போர்த்திக் கொண்டு பின்புறம் ஏறி அமர்ந்து விட, நிரஞ்சன் தனக்குள் சிரித்தபடி வண்டியை கிளப்பி வேகமெடுத்தான்.

முதல் முறையாக ஒரு ஆடவனின் அருகாமையில் அமர்ந்து செல்வது மலர்வதனிக்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. அவளுக்கு வளர்ந்த பிறகு இதுதான் முதல் பைக் பயணம். முன்பு குழந்தையாக இருந்தபோது தந்தையோடு முன்புறம் அமர்ந்து சென்ற நினைவுகள் நிழலாக மனதுக்குள் வலம் வந்தது. உயரமாக இருந்த அப்பா அவளை பூப்போல தூக்கி முத்தமிட்டது, அவளோடு அவர் விளையாடும் போது அம்மா சாதம் ஊட்டுவது, மனதின் அடியில் புதைந்து இருந்தவை, நிழற்படமாக தெரிய, வண்டி நின்றுவிட்டதை உணர்ந்தவளாக விழிகளில் தூளிர்த்த கண்ணீரை வெகுவாக முயன்று அடக்கினாள்.

நிரஞ்சன் என்ன நினைத்தானோ, அவளை அழைத்து வற்புறுத்தாமல், மருந்துக்கடைக்குள் சென்றுவிட, அந்த அவகாசத்தில் ஒருவாறு தன்னை சமாளித்து முகத்தை சீராக வைத்துக் கொண்டாள். அப்படித்தான் நினைத்துக் கொண்டாள்.

ஆனால் மருத்துகளை கொணர்ந்து கொடுத்தபோது அவளை தீவிரமாக பார்த்துவிட்டு வண்டியை கிளப்பியவன் வீடு வரும்வரை பேசவில்லை.

வீட்டிற்கு முன்புறமாக செல்லும் பாதை வழியே அவன் வண்டியை செலுத்துவதை கவனித்துவிட்ட மலர், " இல்லை, என்னை இப்படியே இறக்கி விடுங்க"என்றாள் பதற்றத்துடன்.

"இவ்வளவு தூரம் வந்தவளுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் வருவதில் என்ன ஆகிவிடப் போகிறது? என்ற நிரஞ்சன், கேட்டதோடு நில்லாமல் வீட்டின் மதிலுக்குள் நுழைந்து போர்டிகோவில் சென்றுதான் நிறுத்தினான்,

மலர்வதனி அவன் நிறுத்து முன்பாவே குதித்து இறங்கியவள்,பக்கவாட்டில் இருந்து பின்புறமாக செல்லும் பாதையில் ஓடிச்சென்றாள். அவளது அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டவளுக்கு உடலும் மனமும் பதறியது. மருந்து அடங்கிய பையை மேசை மீது வைத்துவிட்டு,அப்படியே கட்டிலில் விழுந்தாள். அவளையும் அறியாமல் கண்களில் நீர் வழிந்தோடியது. திடுமென இத்தனை காலமாக வராத சிறு பிராயத்து நினைவுகளால் அவள் மனம் தவித்தது. முதல் முறையாக இழந்து விட்ட பெற்றோரை எண்ணி அழலானாள்.

ஆனால் அதற்குள்ளாக கதவை தட்டும் ஓசை கேட்க,"அவளுக்கு நிம்மதியாக அழக்கூட சுதந்திரம் இல்லையா? என்று ஒருகணம் தோன்றிய போதும், வேகமாக சென்று, முகத்தை கழுவி துடைத்துக் கொண்டாள். வடிவுக்கரசியாக இருந்தால் கேட்கும் கேள்விகளுக்கு அவளால் சொல்ல முடியாது. அதனால் அத்தையாக இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு, கதவைத் திறந்தாள்.

அங்கே பணிப்பெண் சொக்கி நின்றிருக்கவும் சற்று ஆசுவாசமாகி," என்னங்க அக்கா? என்றாள்.

"உன்னை அத்தை வரச் சொன்னாங்க," என்றபடி அவளது பார்வை எங்கோ சென்று மீண்டது.

அவள் சொன்னதை கேட்டு அதிர்ந்தவளாய்,"எ.. என்ன சொல்றீங்க அக்கா? அத்தையா? என்று அவள் கேட்குமுன் இரண்டு முறை சொக்கியின் பார்வை எங்கோ போய் போய் மீளவும்,

மலர்வதனிக்கு சந்தேகம் உண்டாயிற்று. அதைக் காட்டிக் கொள்ளாது,"அக்கா ஆஸ்பத்திரியில் இருந்து இப்பத்தான் வந்தேன். அதனால் ஒரே கசகசனு இருக்கிறது. ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து விடுவதாக சொல்லுங்க, என்றவள் மருந்துப் பை நினைவு வர,"அக்கா ஒரு சின்ன உதவி செய்யுங்கள், இது அத்தையோட மருந்துகள். இப்போது காலைப் பலகாரம் சாப்பிட்டதும் போட வேண்டியிருக்கும், கொஞ்சம் கொடுத்து விடுகிறீர்களா?" என்று அவளிடம் கொடுக்க,

வேறு வழியின்றி "சரி, மலர், நீ குளிச்சதும் ஒரு குரல் கொடு. நான் உனக்கு காபி பலகாரம் கொண்டாறேன்'' என்று விட்டு போனாள் சொக்கி.

"அத்தை அவளை அழைத்திருக்க வாய்ப்பில்லை. அவளுக்கு ஒரு ஊகம் இருந்தது. நிரஞ்சன்!!ஆனால் அவளை எதற்காக பொய் சொல்லி அழைக்க வேண்டும்? அப்படி அவள் வீட்டிற்குள் வந்தால் விளைவு என்னவாக இருக்கும் என்று அவளுக்கு அல்லவா தெரியும்? இன்றைக்கு பட்டினியே கிடக்க நேர்ந்தாலும் சரி. அவள் வீட்டிற்குள் செல்வதாக இல்லை, என்ற உறுதியுடன் குளிக்கச் சென்றாள்.

☆☆☆

அங்கே, வடிவுக்கரசியை ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு சத்யமூர்த்தி மருத்துவர் சொன்ன ஆலோசனைகள் பற்றி விளக்கமாக கூறியவர், தொடர்ந்து, "வடிவுக்கு இனி வேலைப்பளு கூடாது என்பதால், இனி சமையலுக்கு யாரையாவது அமர்த்திக் கொள்ளலாம் அம்மா" என்று அபேச்சை முடித்து அவர் தோட்டத்திற்கு சென்றுவிட,

"பார்த்தியா அம்மா, என்னவோ ஒரு நாள் உடம்புக்கு ஆகாமல் படுத்துவிட்டாள், என்பதை சாக்காக வைத்துக் கொண்டு உன் மருமகள், அண்ணனை பேச வைச்சு பொறுப்பை தட்டிக் கழிக்க வழி செய்துவிட்டாள். நீ சும்மா இருந்தாய் என்றால் அவ்வளவுதான் அம்மா. மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காதுன்னு காட்டனும் அம்மா. இப்போது நானும் என் மகளும் ஊரைப் பார்க்க கிளம்புகிறோம். அங்கே நான் போட்டது போட்டபடி வந்தேன், என்றவள், "நிகிதா, சீக்கிரம் கிளம்படி, அப்பத்தான் மதிய சாப்பாட்டுக்கு ஊர் போய் சேர முடியும்" என்று உள்ளே சென்றாள் சந்திரமதி.

காந்திமதி திக்பிரமை பிடித்தவளாய் அப்படியே அமர்ந்திருந்தாள்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top