Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

12. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
26
Points
28
Location
India
முன் இரவில் அவள் கேட்டதற்கும் இப்போது சரளா சொல்வதற்கும் அர்த்தமே வேறாக தோன்றியது, நியாயமாகவும்! ஆனால் அது மனதுக்குதான் கொஞ்சமும் ஒப்பவில்லை. சரளா சொல்வதைப் பார்த்தால் அவள் மருதமுத்துவிற்கு மனைவியாவது தவிர வேறு வழியில்லை போலிருக்கிறதே? ஆனால் மனதில் ரவீந்தரனை வைத்துக்கொண்டு அடுத்தவனோடு எப்படி வாழ முடியும். இக்கட்டில் உதவி செய்திருந்த போதும் மணவாழ்வை மருதமுத்துவோடு ஏற்படுத்திக் கொள்வது எல்லாம் நடவாத காரியம், மனதோடு மதுவந்தி போராடிக் கொண்டிருக்க..

சரளா அதை வேறுவிதமாய் புரிந்து கொண்டவளாய் மேலும் பேசினாள், "நாம கொடுத்துவச்சது அவ்ளோதான் கண்ணு, அப்பாவுக்கு இப்படி ஆகும்னு யாரு கண்டா? இங்கனயே இருந்தா இன்னும் கஸ்டம்தான் கண்ணு! அதனால அத்தை, சொல்றத கேளு! பத்தாம் நாள் கரியத்துக்குள்ளார இந்த வீட்டு வேலயமுடிச்சுப் போட்டு ஊருக்குப் போய் உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்தை பண்ணிவச்சுட்டா அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கு நிறைவேறும் கண்ணு. நீ கொஞ்சமும் யோசிக்காதே நா உன் நல்லதுக்குதான் சொல்லுறேன்! என்று பேசிக் கொண்டே போக அவளால் அதை ஏற்க முடியவில்லை.

ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டு, "அத்தை, நான் இப்போ கல்யாணம் பண்ணிக்கிற நிலமையில இல்லை. நான் படிக்கனும்னு நினைக்கிறேன், வேலைக்குப் போய்க்கிட்டே படிக்க முடிவு பண்ணியிருக்கேன். இந்த வீட்டை வித்தா அதிகமா ஒன்னும் கிடைக்காது. பேசாம வாடகைக்கு விட்டா ஒரு வருமானம்னு எனக்கு வரும். படிப்புக்கு எனக்கு உபகார சம்பளமும் கிடைக்கும்! நான் ஹாஸ்டல்ல தங்கிக்குவேன். நீங்க வேணும்னா காரியம் முடிஞ்சதும் ஊருக்கு கிளம்புங்க அத்தை, நீங்க அப்பாவுக்காக செலுவு பண்ணுன பணம் எவ்வளவுனு சொல்லுங்க நான் கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துடுறேன்... கோர்வையாக சின்னவள் பேசவும் சரளா செய்வதறியாது விழித்தாள்.

ஆனால்..

எல்லாமும் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த மருதமுத்து வேகமாக வெளியே வந்து,,"அம்மா அவள பேசாம இருக்கச் சொல்லு இல்லைன்னா எனக்கு வர்ற கோவத்துக்கு நான் என்ன செய்வேனு எனக்கே தெரியாது" என்று ஆத்திரமாய் கத்த, மதுவந்தி சற்று அரண்டு போனாள்.

அதை கவனித்த மருதுமுத்து இன்னும் குரலை உயர்த்தி, "ஆமா, நீ இப்போ அவசரமா படிச்சி எந்தக் கோட்டையை பிடிக்கப்போறே? மாமா உன்னை எனக்கு கட்டி வைக்கனும்னு ஆசை பட்டாரு. அத பார்க்காம அவரு போய் சேர்ந்துட்டாரு. இப்போ உன் பொறுப்பு எங்களோடது. அதோட இந்த வீட்டை வித்தா நல்ல விலைக்கு போகாதுன்னு உனக்கு யாரு சொன்னா? ஆனாக்க அந்த கவலை எல்லாம் உனக்கு எதுக்கு?? படிச்சிருக்கியே ஒழிய உனக்கு உலக வெவரம் பத்தலை, நீ கை எழுத்த மட்டும் போடு போதும், மத்தத எல்லாம் நான் பாத்துக்கிறேன்" என்று அதட்டலாய் சொல்ல..

மதுவந்திக்கு உள்ளம் நடுங்கியது. எதிர்காலம் பயங்கரமாய் தெரிய கண்ணீருடன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

வாழ்க்கை நதியில் நீந்திக்கரை சேருவது சுலபமா என்ன??

மதுவந்திக்கு அந்த நொடியில் யாருமில்லாமல் தனித்து விடப்பட்டது போன்ற உணர்வில் மனது மிகவும் வலித்தது. இவர்களை எப்படி வெளியேற்றுவது? அவர்கள் இருவரது எண்ணத்தில் நல்லது கூட இருக்கலாம். ஆனால் அவளுக்கு அதில் கொஞ்சமும் விருப்பமே இல்லாதபோது அவள் அதை எப்படி ஏற்றுக் கொள்வாள்? அவர்களோடு ஊருக்கு போவதும் நடவாத காரியம். அதிலும் மருதமுத்து பேசிய தோரணையை கண்டுவிட்ட இப்போதோ நிச்சயமாய் அவனோடு வாழ்வு என்பது ஒருபோதும் சாத்தியமில்லை என்பது புரிந்துவிட்டது. மருதமுத்து ஏன் வீட்டை விற்பதில் தீவிரமாய் இருக்கிறான் என்பதற்கு அவளுக்கு அன்று விடை கிடைத்தது.

சரளா என்ன இருந்தாலும் வயதானவள் ஏதோ சமைத்து போடுகிறாள். அதனால் இதர வேலைகளை ஏற்று செய்தாள், மதுவந்தி. அப்படி வீட்டை ஒழுங்கு படுத்திய போது மருதமுத்து கழட்டி வீசியிருந்த சட்டையை எடுத்து கொடி போட்டாள், அதிலிருந்து ஒரு விசிட்டிங் கார்டு விழ எடுத்துப் பார்த்தாள். அது ஒரு பிரமோட்டர்ஸ் விலாசம். அதைப் பார்த்ததும் எல்லாமும் விளங்கிப் போயிற்று.

அதன் பின் எதையும் காட்டிக் கொள்ளாமல் மதுவந்தி அடுத்து செய்ய வேண்டியதை தீவிரமாய் யோசிக்கலானாள். ஒரு முடிவிற்கு வந்தவளாய் வீட்டில் தந்தையின் பெட்டியில் சிலவற்றைத் தேடி எடுத்து பத்திரப் படுத்தினாள். கல்லூரிக்கு கொண்டு செல்லும் பேக்கில் ஒவ்வொன்றாய் சேகரித்தாள். அவள் உடன் பயிலும் தோழிக்கு குறுஞ்செய்தியில் சுருக்கமாய் தகவல் அனுப்பி சில ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்க அவளும் செய்வதாக ஒத்துக் கொணடாள்.

அதன்படி மறுநாள் காலையில் தோழி கீதா வீட்டிற்கு வந்தாள். உரிய விதமாய் தந்தையின் மறைவுக்கு மிகவும் வருந்தினாள். நல்ல வேளையாய் மருதமுத்து வெளியில் போயிருந்தான். வந்தவளை உபசரித்து விட்டு பையை கொடுத்து உன்னோட திங்க்ஸ் சரியா இருக்கா பார்துக்கோ கீதா. ஏதும் மிஸ்ஸாகியிருந்தா சொல்லு என்று தோழியை நேர் பார்வை பார்க்க அவளும் புரிந்தவளாய் சரி பார்ப்பது போல் பாவனை செய்துவிட்டு, எல்லாம் சரிதானடி. ஊருக்கு போய் வந்ததுல வீடு களேபரமா இருக்கு அம்மா தனியா சிரமப்படுவாங்க, நான் கிளம்பறேன்." கீதா விடைபெற்று சென்று விட அறையினுள் புகுந்து கொண்டாள்.

மதியம் சாப்பிட்டதும் சரளா ஒரு தூக்கம் போடுவாள். மருதமுத்து யாரையோ பார்க்கப் போக வேண்டும் என்று முன்னதாக கிளம்பிச் சென்றுவிட்டான். அந்த நேரத்தில் மதுவந்தி வீட்டில் ஒரு இடம் விடாமல் வலம் வந்தாள். இனி அந்த வீட்டிற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை. எண்ணும் போதே தொண்டையை அடைத்தது. ஆனாலும் ஒருபுறம் மனம் நிறைந்திருந்து. நம்பிக்கை எனும் கீற்று தெரியத்துவங்கியது.

ஆற்றில் மிதப்பவளுக்கு பிடிமானம் கிடைத்து விட்டால், விட்டுவிடுவாளா என்ன??
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top