Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

10. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
சந்திரமதி எப்படியும் ஊருக்கு கிளம்பிவிட முயன்றாள். ஆனால் நிகிதா பிடிவாதமாக உடன் செல்ல மறுத்துவிட்டாள்.

"அம்மா மற்ற நேரம் என்றால் நானே கிளம்பியிருப்பேன். இப்போ அத்தை சுகமில்லாமல் இருக்கிறாங்க, அத்தோடு பாட்டியும் தனியாக இருக்கிறாங்க, இந்த நிலையில் நாம் கிளம்பிப் போறது சரியே இல்லை அம்மா. அப்படி போகத்தான் வேணும் என்றால் நீ கிளம்புமா. நான் நாளைக்கு அத்தை எப்படி இருக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, கிளம்பி வர்றேன்" என்று அழுத்தமாக கூறிவிட்டு தன் தந்தையை கைப்பேசியில் தொடர்பு கொண்டாள் நிகிதா.

மகள் இப்படி பேசுவாள் என்று சந்திரமதி எதிர்பார்க்கவில்லை. அப்படியே அவள் மட்டுமாக ஊருக்கு போனால் கணவர் மாசிலாமணியும் மகளின் கருத்துதான் சரி என்று சொல்லி அவளை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார். அவருக்கு மகளை நிறைய படிக்க வைத்து அவளது சொந்தக் காலில் நிற்கும்படி செய்ய வேண்டும் என்று ஆசை. அதனால் அதற்கு முன்பாக திருமணம் என்பதை நினைத்து கூட பார்க்க கூடாது என்று சொல்லி விட்டார். இன்றைக்கு கூட மகள் அடம்பிடித்ததால் தான் அனுப்பி வைத்தார்.

சந்திரமதி கூட மகள் மாமன் மகனைப் பார்க்கத்தான் அடம்பிடிக்கிறாள் என்று உள்ளூர மகிழ்ந்து போனாள். ஆனால் அந்த கழுதை இங்கே சாப்பிடத்தான் வந்தேன் என்று மானத்தை வாங்கிவிட்டது. ஆயினும் அவளுக்கு பத்தில் ஒரு வாய்ப்பாக மகளுக்கு அண்ணன் மகனை பிடித்துப் போய் திருமணத்திற்கு தலையாட்டினாலோ, அல்லது அவளுடைய மகளின் அழகில் மயங்கி அண்ணன் மகன் திருமணத்திற்கு சம்மதித்து விட்டாலோ அவளது கணவர் மறுப்பு சொல்ல மாட்டார் என்று ஒரு நப்பாசை. ஆனால் எல்லாமும் தகர்ந்து போயிற்று. ஒரு பெருமூச்சுடன் அறைக்குள் முடங்கிக் கொண்டாள்.

நிகிதா தந்தையிடம் விவரம் தெரிவித்த பின்னர் மீண்டும் சத்யமூர்த்தியை தொடர்பு கொள்ளை முயன்றாள். அப்போதும் ரிங் போனதே தவிர அவர் எடுக்கவில்லை.

ஆனால்....

சற்று நேரத்தில்,தோட்டத்தில் இருந்ததாக பணியாள் கொணர்ந்து கொடுத்தால் கைப்பேசியை பார்த்த பிறகே, சத்யமூர்த்தி அவரது கைப்பேசியை எடுத்துப் போகவில்லை என்று தெரிய வந்தது.

"சரி,நாம் காத்திருப்போம். மாமா வரட்டும் பாட்டி, என்றவள், அவளது கைப்பேசியுடன் அவளது தாய் இருந்த அறைக்கு சென்றுவிட,

காந்திமதி சமையல் அறைப்பக்கமாக சென்றாள். வடிவுக்கரசி திருமணமாகி காலடி எடுத்து வைத்த பிறகு அவள், சமையல் அறைக்கு சும்மா மேர்பார்வை செய்யத்தான் வருவாள். மருமகள் உடம்புக்கு முடியாத போதும் ஏதேனும் எளிமையான சமையல் செய்து விடுவாள். அப்படியும் முடியாதபோது மகன் உணவகத்தில் இருந்து வாங்கி வந்துவிடுவான். ஆனால் இன்றைக்கு வெகு காலத்திற்கு பிறகாக சமையல் அறைக்குள் வந்திருக்கிறாள். வேறு வழியில்லை. மகளிடம் சொன்னால், இப்போது இருக்கும் ஆத்திரத்தில், வேண்டா வெறுப்பாக செய்து வைத்து வாயில் வைக்கமுடியாமல் பண்ணிவிடுவாள். மருமகளின் அருமை இப்போது அவளுக்கு புரிந்தது.

காந்திமதியை பார்த்துவிட்டு பணிப்பெண் சொக்கி ஓடி வந்தாள். "அம்மா சட்னி அரைக்க சொன்னாங்க பாட்டி, அதை செஞ்சு வச்சிட்டேன். என்ன செய்யனுமுனு மட்டும் சொல்லுங்க, நான் செய்யறேன்" என்றாள்.

"நான் எல்லாம் பண்ணிடுவேன்டி, நீ முதல்ல அந்த பிரிஜ்ஜுக்குள் இருக்கிற இட்லி மாவை எடுத்து அப்படி வை. அப்புறமா போய் தட்டு, தம்ளர் எல்லாம் மேசை மேலே வை"என்ற முதியவளிடம்,

"உங்களால் முடியும் தான், ஆனால் உங்களுக்கு மூட்டு வலி இருக்கிறதால் ரொம்ப நேரம் நிற்க முடியாதே பாட்டி, அதனால் பிடிவாதம் பிடிக்காமல் அப்படி உட்காருங்க, இட்லி தானே அவிக்கணும்? என்று உட்கார ஒரு நாற்காலியை கொணர்ந்து போட்டு பெரியவளை அமர வைத்துவிட்டு, மளமளவென அடுப்பை பற்ற வைத்து வேலையில் இறங்கினாள் சொக்கி.

காந்திமதி பேசாமல் அமர்ந்து பல்வேறு நினைவில் ஆழ்ந்து போனாள்.

☆☆☆

சங்கரனை மருத்துவமனையில் இருக்கும்படி பணித்துவிட்டு, தந்தையும் மகனும் மருத்துவமனையில் இருந்து கிளம்பினர். சத்யமூர்த்தி வாகனத்தை ஓட்டினார். மலர்வதனியின் நினைவில் இருந்தான் நிரஞ்சன்.

அவர்கள் வீட்டிற்கு ஐந்து வயதில் வந்த அந்த குட்டிப் பெண்ணிடம் பேசவோ பழகவோ, குறைந்த பட்சமாக அவளது பெயரை அறிந்து கொள்ளக்கூட அவன் ஆர்வம் காட்டவில்லை. சின்ன பொம்மை போல உருவத்துடன் மிரட்சியுடன் பார்த்தபடி அவனது அம்மாவின் முந்தானையைப் பிடித்தவாறு சுற்றிக்கொண்டு இருந்த அவள், அப்படி அந்த வீட்டிற்குள் வளைய வந்தது மிஞ்சிப்போனால் ஓரிரு ஆண்டுகள் தான். அதன் பிறகு அவளை அவன் பார்க்கவில்லை. அவ்வளவு ஏன் அவளை பற்றி அறிந்து கொள்ளக் கூட முயலவில்லை. இத்தனைக்கும் அவள் அவனுடைய சொந்த மாமன் மகள். அவளுக்கு அந்த வீட்டில் சகல உரிமைகளும் இருந்தும், அந்த வீட்டின் ஒரு மூலையில் வளர்ந்திருக்கிறாள். எவ்வளவு கேவலமான விஷயம்? அவள் மீது கொஞ்சமும் அக்கறை இல்லாமல் இருந்ததை நினைக்கையில் அவன் மீதே வெறுப்பு உண்டாயிற்று.

சிறுமியான மலர்வதனியுடன் பேசிப் பழகாமல் போனதற்கு ஒருவேளை அவர்களுக்கிடையே இருந்த வயது வித்தியாசம் தடையாக இருந்திருக்கலாம், ஆனால் அதையெல்லாம் தாண்டி,"அந்த குட்டி நம்ப குலமில்லை, அது கூட பேச்சு வார்த்தை வச்சிக்காதே, என்ற பாட்டியின் தூபமும் ஒரு முக்கியமான காரணம். அந்த வயதில் குலம் பற்றி அறிந்திராத போதும் பாட்டிக்கு அவன் அந்த சிறுமியோடு பேசினால் பிடிக்காது என்று நினைத்தான். இப்போதும் கூட அவனுக்கு என்ன காரணம் என்று தெரியாது தான். அப்போதெல்லாம் பாட்டி பேச்சிற்கு அவன் மறு பேச்சு பேசமாட்டான். ஏன் வளர்ந்த பின்னும் கூட அவன் பாட்டி சொல் தட்டியதில்லை தான்.

ஆனால் சிறுவனாக இருந்தபோது அவனது அன்னை சொன்னதை அவன் கேட்டது இல்லை என்பது இப்போது தெளிவின்றி நினைவு வருகிறது. அதனால் தான் அவனது அன்னை இன்றைக்கு அப்படி ஆச்சர்யப்பட்டுப் போனாள் போலும். பெற்றவள் பிள்ளைக்கு கெடுதல் சொல்வாளா? சிந்திக்கத் தெரியாத வயதில் அவன் தன் பேச்சை கேட்டு நடக்கவில்லை என்பதற்காக அவனது தாய், அவனிடமிருந்து கிடைக்கக்கூடிய இயல்பான அன்பிற்குகூட ஏங்கியிருக்கிறாள் என்பது புரிய அவனுக்கு அவமானமாக இருந்தது.

இன்றைக்கு மலர்வதனியை பல வருடங்களுக்கு பிறகு பார்க்கும் போது அவனுக்கு அவளை அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால் அவளோ, அவனை வெகு நாட்களாக அறிந்தவள் போல இயல்பாக நடந்து கொண்டாள். அவனது அப்பாவிடம் சகஜமாக தடையின்றி பேசுகிறாள், அவனிடம் மட்டும் ஒதுக்கம் காட்டுகிறாளே ஏன்? சிந்தனையை கலைத்தது அவனது கைப்பேசி. எடுத்துப் பார்த்தால் ஜாஸ்மின் தான்.

"ஹலோ ஜாஸ், என்னாச்சு? அதற்குள் டின்னர் முடிந்து விட்டதா என்ன?

"இல்லை, நிரஞ்ச், நான் திரும்பி வர்றதுக்கு வண்டி அனுப்ப முடியுமா? சாருக்கு அவசரமாக போக வேண்டுமாம். அதான்"

"ஓ! சரி நான் அனுப்புகிறேன். நீ வாசலில் வெய்ட் பண்ணு" என்று விட்டு, தொடர்பை துண்டித்துவிட்டு சங்கரனை தொடர்பு கொண்டு விவரத்தைதெரிவித்தான்.

அதுவரை தந்தை ஒன்றும் பேசாமல் வருவது அப்போது தான் உணர்ந்தவனாக, "அப்பா ஏன் எதுவுமே பேசமாட்டேங்கிறீங்க?" என்றான்.

"உனக்கு உடம்புக்கு முடியலையே, தூங்குகிறாயோ என்று தான், அத்தோட அம்மாவுக்கு இப்படி திடீரென்று ஆனது எனக்கு வருத்தமாக இருக்கிறது. எல்லாம் என் தப்புத்தான், எல்லாரையும் பார்த்து பார்த்துக் கவனிக்கிறவளை நான்... அதற்கு மேல் அவரால் பேச முடியவில்லை. வண்டியை ஓரம் கட்டிவிட்டு அழுகையில் குலுங்க,

நிரஞ்சன் ஒருகணம் செய்வதறியாது திகைத்தான்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top