Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

08. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
99
Reaction score
14
Points
8
Location
India
விடிய விடிய கவலையும் பயமுமாக மதுவந்தி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவு அறையின் வாயிலில்.. காத்திருந்தாள்.

மருத்துவர் கொடுத்த கெடு நெருங்க நெருங்க பதற்றமும் கூடிக் கொண்டு போக, பசி தாகம் எதுவும் உணராமல் மருத்துவர் சொல்லப்போகும் வார்த்தையை எதிர்பார்த்திருந்தாள்.

மருத்துவர் பரிசோதனைகளை முடித்துவிட்டு வந்து "அவருக்கு உணர்வு திரும்பிவிட்டது. ஒருநாள் முழுதும் எங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். அதன் பிறகு தனி அறைக்கு மாற்றப் படுவார்" என்றார்.

"நன்றி டாக்டர். நான் அப்பாவை பார்க்கலாமா ? ஆவலுடன் கேட்டாள் இளையவள்.

" பார்க்கலாம். ஆனால் அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். பெரும் முயற்சிக்கு பின் அவரை மீட்டிருக்கிறோம். அவருக்கு எந்த அதிர்ச்சியும் ஏற்படக்கூடாது." மருத்துவர் சொல்விட்டு செல்ல,

மதுவந்தியை மீண்டும் கவலையும் பயமும் தொற்றிக் கொண்டது.
மருத்துவர் சொன்னதிலிருந்து தந்தையின் உயிர்தான் காப்பாற்றப் பட்டிருக்கிறது, அவரது ஆரோக்கியம் இன்னும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது என்று புரிந்தது.
தந்தையைப் பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சி. அவரது வலது கையில் பெரிய கட்டுப் போடப் பட்டிருந்தது. கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து விசும்பலுடன் அறையை விட்டு வெளியேறி குலுங்கி குலுங்கி அழலானாள் மதுவந்தி.

தேற்றவோ ஆறுதல் சொல்லவோ ஆளில்லாமல் மதிவந்தி அழுகையில் சற்று நேரம் கரைந்தாள்.

ஒருவாறு சுற்றுப்புறம் கருத்தில் பட எழுந்து சென்று முகத்தை கழுவிவிட்டு வந்தவள்,அடுத்து செய்ய வேண்டியது என்ன என்று யோசித்தவளுக்கு, என்ன செய்வது என்று கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. ஆனாலும் மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டியதை கருத்தில் கொண்டு நர்ஸிடம் விபரம் கூறி தன் கைபேசி எண்ணை தந்துவிட்டு மருத்துவமனையை விட்டு வெளியே சென்று,இருந்த கொஞ்ச நகைளில் கம்மல் மற்றும் சங்கிலியை தவிர்த்து மற்றவற்றை விற்று பணத்தை ஏற்பாடு செய்து மருத்துவமனையில் கட்டினாள் மதுவந்தி.

தந்தையை கண்ணாடி வழியாக பார்த்து விட்டு இருக்கை ஒன்றில் அமர்ந்தவளுக்கு லேசாக பசி தெரிந்தது. சாப்பிடும் மனநிலை இல்லை. ஆனால் வெறும் வயிற்றோடு இருப்பதால் என்ன லாபம்? நடமாட சக்தி வேண்டுமே, அதற்கேனும் எதையாவது சாப்பிட்டு வரலாம் என்று கேன்டீனிற்கு சென்றாள்,

தந்தையின் கைபேசி ஒலித்தது. ஏதோ புதிய எண் யாராக இருக்கும் ? யோசனையுடன் உயிர்பித்தாள.

"ஹலோ,ஹலோ...இது மாணிக்கம் அண்ணா நம்பருதானே? நீ யாரும்மா மதுவா பேசுறது?? இது சரளா அத்தையின் குரல்.

அப்பாவின் ஒன்றுவிட்ட தங்கை. "ஆமா, சொல்லுங்க அத்தை நல்லா இருக்கீங்களா?.

"அட, இந்த அத்தை குரல கண்டுபுடிச்சிட்டியே கண்ணு. எனக்கென்ன நல்லா இருக்கேன் கண்ணு. அப்பாக்கிட்ட பேசனும்னு போன் போட்டேன் கண்ணு. இது என்னோட நம்பரு புதுசா போன் வாங்கியிருக்கேன் கண்ணு அத சொல்லத்தான் கூப்புட்டேன், ஏன் கண்ணு அப்பா இன்னிக்கு வேலைக்கு போவலியா ? நீயும் காலேஜிக்கு போவலையா? என்று படபடத்தாள்.

அப்பாவின் நினைவில் துக்கம் தொண்டையை அடைக்க.. "அது வந்து அத்தை எனக்கு இப்போ லீவுதான்,ராத்திரி. அது.. அ.. அப்பாவுக்கு விபத்து ஆகிட்டு. இப்போ... ஆஸ்பத்திரியில இருக்கோம்."

மதுவந்தி செய்த பெரும் பிழை அது என்பதை காலம் கடந்து தான் உணர்ந்தாள்.

ஆனால் வில்லில் இருந்த புறப்பட்ட அம்பும், வாயிலிருந்து வெளிப்பட்ட சொல்லும் திரும்ப பெறமுடியாதல்லவா??

தனியாய் தவித்துக் கொண்டிருந்த மதுவந்திக்கு சரளாவின் குரல் கொஞ்சமாய் ஆறுதல் தந்தது.
சரளா, விஷயத்தை கேட்டதுமே மறுமுனையில் குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட

மதுவந்திக்கு அவளிடம் முழுதாய் விஷயத்தை புரியவைப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.
ஒருவழியாய் புலம்பலை நிறுத்தி விஷயத்தை கேட்டுக் கொண்ட சரளா,

“சரி கண்ணு நீ தனியா கஷ்டப்படுறியே நானும் உன் அத்தானும் இப்பவே கிளம்பி வர்றோம் கண்ணு ,நீ எதுக்கும் கவலை படாதே, அல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிறோம் கண்ணு. நீ அப்பாவுக்கு தெகிரியம் சொல்லு கண்ணு போனை வச்சுடுறேன்."

மதுவந்தி குறுக்கிட்டு மறுக்க முயன்றதை சற்றும் காதில் வாங்காமல் பேசி முடித்துவிட்டாள் சரளா. இப்போது அவர்கள் வந்து என்ன செய்யப்போகிறார்கள்?
அடுத்தவரின் பேச்சை கொஞ்சமாவது கேட்கிற பழக்கம் வேண்டும். சரளா பேசினால் எதிராளியை பேசவே விடமாட்டாள்.

ம்ஹும்..ஒரு பெருமுச்சுடன் கேன்டீனில் அறைகுறையாய் சாப்பிட்டு விட்டு தந்தை இருந்த அறை பக்கமாய் அமர்ந்து கொண்டாள்.

மனோகரி நலம் விசாரித்து போன் செய்த போது தந்தையின் நிலையைப் பற்றி மதுவந்தி கூறாது மறைத்துவிட்டாள். தேவையில்லாமல் அத்தனை தூரத்தில் இருப்பவளை ஏன் கலவரப் படுத்துவானேன், அப்பாதான் பிழைத்துக் கொண்டாரே என்று எண்ணினாள்.

அது அவள் செய்த அடுத்த பிழை என்று அவள் தெரிந்து கொண்டபோது காலம் கடந்து இருந்தது.
 

Attachments

  • 20201209_093413.jpg
    20201209_093413.jpg
    324.1 KB · Views: 0
Back
Top