Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

08. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
அன்றைக்கு ஒருவாறு மகளை சமாதானம் செய்து தூங்க வைத்த சாருவிற்கு தூக்கம் தொலைந்து போயிற்று. இழப்பும் அப்போது பட்ட வலியையும் எண்ணி இப்போது அழுகையில் கரைந்தாள் சாரு! பெண்களுக்கான வடிகால் அதுதானே!!

மறுநாள்...

ஞாயிறு!

இரவெல்லாம் அழுததில் காலையில் தலையை வலித்தது. அன்றைக்கு வீட்டில் நிறைய வேலைகள் இருந்தது. அலுவல் பணி காரணமாய் வாரம் முழுதும் தாமதமாய் வீடு வர நேர்ந்ததால் அன்றாடப் பணிகள் தேங்கி விட்டுருந்து. இன்றைக்கு அதனால் வேலை பளுவும் அதிகம். அதன் காரணமும் நினைவிற்கு வர ஆத்திரத்துடன் பல்லைக் கடித்தாள் சாரு, ராஸ்கல் எல்லாம் அவனால் வந்தது. மகளின் விருப்பத்தை அவளால் நிறைவேற்ற முடியாது. அவனிடம் போய் நிற்க அவளுக்கு இஷ்டமில்லை என்பது மட்டுமில்லை. மஞ்சரியை வாரிசு என்று உரிமை கொண்டாடுவானோ என்று உள்ளூர ஒரு பயம் இப்போது உண்டாகி இருந்தது. அது அர்த்தமற்றது தான்.

ஆனாலும்…

இத்தனை நாட்கள் அவளைப் பார்த்தும் பழைய விஷயம் பற்றி பேச முன்வராதவன், குழந்தையை பார்த்தபின் அதனோடு பழக வந்திருக்கிறானே? இதற்கு என்ன காரணமாக இருக்கும்? தன் ரத்தம் என்ற துடிப்புதானே??அப்படி என்றால் மறைமுகமாய் தன் தவறை ஒத்துக் கொள்கிறான் என்றுதானே அர்த்தம்? அதை எண்ணும் போதே உடம்பெல்லாம் தகித்தது. அப்படி அவன் மஞ்சரியை உரிமை கொண்டாடி வந்தால் அவளால் அதை எப்படி ஏற்க முடியும்? ஆடு பகை குட்டி உறவா? மனம் பலவாறு சிந்தனையில் உழல கைகள் வழக்கம்போல் வேலையில் ஈடுபட்டிருந்தது.

மஞ்சரி இன்னும் எழவில்லை. இத்தனை நேரம் தூங்கும் வழக்கம் இல்லையே ? மனதில் ஏதோ உறுத்த குழந்தையிடம் சென்றாள் சாரு, போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த குழந்தை லேசாய் அனத்திக் கொண்டிருக்க.. நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள், அனலாய் கொதித்தது. பதறிப்போனவளாய், "கண்ணும்மா என்னடா பண்ணுது" என்று குழந்தையை வாரி மடிமீது போட்டுக்கொண்டாள்.

"ம்ம்ம்... அம்மா அம்மா.."

"சொல்லுடாமா, குளிருதாடா?"

ம்.... அம்மா ...மா அந்த அங்கிள்கிட்ட போகணு.... திக்கி திணறி குழந்தை சொல்ல அதிர்ந்து போனாள் சாரு!

என்ன சொல்வது என்று ஒருகணம் பேச்சே வரவில்லை. இத்தனை பாதிப்பு எப்படி வந்தது என்று சாருவுக்கு விளங்கவில்லை. ஆனால் இப்போது முதலில் தேவை குழந்தைக்கு சிகிச்சை என்று எண்ணியவளாய் மளமளவென்று உடைமாற்றிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள் சாரு!

ஞாயிறு அன்று காலை விடிந்தது முதலே சித்ரஞ்சனுக்கு மனம் சரியில்லை. குழந்தையின் நினைப்பாகவே இரண்டு தினங்களாக தவித்துக்கொண்டிருந்தான். நிச்சயமாக மஞ்சரி அவனை தேடியிருப்பாள். பாவம் குழந்தை. அழுகிறாளோ என்னவோ? ஆனால் பிற குழந்தைகள் போல மஞ்சரி இல்லை. ஒன்றை கேட்டு அடம்பிடிக்கும் ரகம் இல்லை. எடுத்துச் சொன்னால் கேட்டுக்கொள்ளக் கூடியவள் என்று கண்டிருந்தான். ஒருவேளை, அன்னையிடம் சொல்ல வேண்டாம் என்றதால் மனதோடு வைத்து தவிக்கிறாளோ என்னவோ? சே, என்ன காரியம் செய்துவிட்டான்?? சாருவிற்கு அவள் என்ன மாதிரி வாழ்க்கை வாழ்கிறாள் என்று புரிய வைக்க எண்ணி இப்படி பிஞ்சு மனதில் எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டானே??

இன்று எப்படியும் போய் பார்த்துவிட வேண்டும்.. என்று நினைக்கையில்...கைபேசி சிணுங்க அவசரமாய் எடுத்தான். அவன் சாருவை தொடர வைத்திருந்த ஆள்தான், சாருவைப் பற்றி தகவல் சொன்னான். விவரம் கேட்டதுமே சித்ரஞ்சன் கிளம்பிவிட்டான்.

நன்றாகத்தானே இருந்தாள் குழந்தை திடீரென்று என்ன ஆகியிருக்ககூடும் மனம் பதைபதைக்க மருத்துவமனையை அடைந்தான் அவன்.

மருத்துவமனையில்...

மருத்துவர் குழந்தையை பரிசோதித்துவிட்டு" அட்மிட் " பண்ணும்படி மருத்துவர் கூற சாரு, திகைத்தாள்.

"என்னாச்சு டாக்டர்? என்ன விஷயம் சொல்லுங்க!" என்றாள் அழுகையை கட்டுப்படுத்த முயன்படி.

"காய்ச்சல் ரொம்ப அதிகமா இருக்குதும்மா. நல்ல நேரத்தில் அழைத்து வந்துட்டிங்க, இல்லை என்றால் ஜுர வேகத்தில் குழந்தைக்கு ஜன்னி கண்டிருக்கும். இப்போ முதல் உதவி செய்திருக்கிறேன். இன்று முழுதும் அப்சர்வேஷன்ல வைக்கனும். குழந்தை,"அங்கிள், அங்கிள் னு முனங்குறாளே, யார் அவர் ?? அவரை வரச் சொல்லுங்க. நாங்க சிகிச்சை ஆரம்பிக்கிறோம். அதுக்கு முன்னாடி முன்பணம் ரிசப்ஷன்ல கட்டிருங்க" என்றவர் நர்ஸ்க்கு கட்டளைகளை பிறப்பிக்க தொடங்க..

மனம் வேதனையில் துடிக்க தள்ளாடிய நடையுடன் மாடிப்படியை அணுகிய சாரு, எதிரே வேகமாய் ஏறி வந்த சித்ரஞ்சன் மீது மோதி விழப்போனாள். சட்டென்று தாங்கிப் பிடித்துக் கொண்டான், யாரோ என பதறி விலகப் போனவளை,"சாரு நான்தான் ரஞ்சன், என்னைப் பார்" என்றதும் உடைந்து போனவளாய்,

"ரஞ்சன்", என்ற கதறலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள்.

"ஏய்.. என்னாச்சும்மா, டாக்டர் என்ன சொன்னார்??"என்றவன் ஆறுதலாக அரவணைத்து அருகில் இருந்த இருக்கையில் அமரவைத்தான். அவளோ பொங்கி பொங்கி அழுதாள். எதை எதையோ எண்ணி அருவியாய் கண்ணீர் வழிந்தது. அதற்குள்ளாக நர்ஸ் ஒரு மருந்து சீட்டை கொடுத்து “சார் இதை உடனே வாங்கி வாங்க" என்றாள் அவனிடம், சாருவை அந்த நிலையில் விட்டுச்செல்ல மனமற்றவனாய் சற்று தூரமாய் நின்ற காரோட்டியை அழைத்து அவனிடம் கொடுத்து அனுப்பினான்.

"மஞ்சரிக்கு ஒன்றும் ஆகாதும்மா. நீ பயப்படாதே. அழாதே ப்ளீஸ்.... எனக்கு கஷ்டமா இருக்கு"என்று கண்ணீரைத் துடைக்கையில் நர்சு மீண்டும் வந்து ,"சார் குழந்தை அங்கிள் அங்கிள்னு புலம்புறா அந்த அங்கிள் நீங்கதானா? என்றதும் சித்ரஞ்சன் சட்டென்று எழுந்தான்.

" ஆமா சிஸ்டர் ! எந்த அறை? என்று கேட்டவன் "வா சாரு, என்று அவளையும் எழுப்பிக் கூட்டிப் போனான்.

மஞ்சரியின் இந்த நிலைக்கு காரணமே அவன் தான் என்பது அப்போதுதான் சாருவிற்கு நினைவு வந்தது. ஆனால் அதற்கான ஆத்திரம் எல்லாம் அந்த கணத்தில் தோன்றவில்லை. மாறாய் மகள் பிழைத்துக் கொண்டால் போதும் என்ற மனநிலையில் இருந்தாள் அவள்.

இரண்டு நாட்களாக மனதினுள்ளே வைத்து ஏங்கியிருக்கிறாள் குழந்தை என்பதும் அப்போதுதான் சாருவிற்கு புரிந்தது.

அவளுக்கு இரண்டே சந்திப்பில் அவனைப் பிடித்துப் போனதே. அதுபோல மூன்று நாட்களாக சிலமணி நேரங்கள் கூடவே இருந்து அன்பு செலுத்திவிட்ட காரணமாக குழந்தையும் அவனிடம் ஒட்டிக் கொண்டாள் போலும்.! மனம் அவனை நியாயப்படுத்த முயல,அவனது கையின் பலத்தில் சாரு, மஞ்சரி இருந்த அறைக்கு சென்றாள்,சாரு!

கண்ணைக் கூட திறக்காமல் கிடந்தாள் மஞ்சரி. மருத்துவர்கள் இருவர் அங்கே சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

சித்ரஞ்சன் தன்னை அறமுகப்படுத்திக் கொண்டு விபரம் கேட்டான்,

"குழந்தைக்கு ஆபத்து ஒன்றும் இல்லை சார். ஏக்கம்தான்... வெளியே சொல்ல முடியாமல் தவித்துப் போயிருக்கிறாள். சற்று நேரத்தில் கண்விழித்து விடுவாள். மாலை வரை கண்காணிப்பில் இருக்கட்டும் அதன் பிறகு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம். இப்போ மருந்து கொடுத்திருக்கிறதால தூங்குகிறாள். நீங்கள் அருகிலேயே இருங்கள் சார். கண்விழிக்கையில் உங்களைப் பார்த்தால் குழந்தைக்கு தெம்பாக இருக்கும்" என்று தலைமை மருத்துவர் சொல்லிவிட்டு விடை பெற்றார். மற்றவர்களும் வெளியேற

"எதுவும் அவசரம்னா என்னைக் கூப்பிடுங்க என்றுவிட்டு நர்சும் வெளியேற அங்கே நிசப்தம் நிலவியது...!!
 
Back
Top