Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

07. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
50
Points
28
Location
India
மதுமதிக்கு அம்மா மிகுந்த ஆத்திரத்தில் இருப்பாள் என்பது உறுதி. ஆனால் அதற்காக வீட்டிற்கு செல்லாமல் இருக்க முடியாது என்று ஒரு தந்திரம் செய்தாள். அதன்படி தந்தை வெளியே கிளம்பிச் செல்லும்வரை காத்திருந்து பிறகு வீட்டிற்கு வந்தாள் சின்னவள்.

அவளது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த மாலதி, தலையில் சிறு பிளாஸ்திரியும் காலில் கட்டுமாக வந்தவளை பார்த்ததும் மற்றது மறந்து, "என்ன ஆச்சு? எப்படி அடிபட்டுது உனக்கு? "என்றாள் பதற்றத்துடன்.

"அம்மா ரொம்ப ஸாரிம்மா"என்று முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டாள் மதுமதி.

அவள் கேட்டதற்கு ஏன் மன்னிப்பு கேட்கிறாள் என்று குழப்பத்துடன் மகளை பார்த்தாள்.

"நேற்று நான் குளிச்சிட்டு வந்தப்போ என்னோட தோழிக்கு ஆக்சிடெண்ட் என்று போன் வந்துச்சு. நான் உடனே கிளம்பினேன். மகியும் இருக்கணும்னு, அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு வரச் சொல்லியிருந்ததால அவள் அப்பதான் வந்தாள். அவகிட்ட விஷயத்தை சொன்னால் என்னை போகவிட மாட்டாள்னு நான் அவளை இருக்க சொல்லிவிட்டு கிளம்பி போய்விட்டேன். உடனே வந்துவிடலாம் என்றுதான் போனேன். அதே போல அவளுக்கு பெரிதாக ஆபத்து இல்லை என்று தெரிஞ்சதும் உடனே கிளம்பிட்டேன். இங்கே என்னை தேடுவீங்களேன்னு அதுவேற பதற்றம். என்னோட போனில் சார்ஜ் இல்லை. அவசரமா வரப்போ திடீரென்று ஒரு ஆட்டோக்காரன் இடிச்சிட்டுப் போய்விட்டான். நான் மயக்கமாகி விழுந்துட்டேன். கண்முழிச்சு பார்த்தால் ஏதோ நர்ஸிங் ஹோம். டாக்டர் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டார். அப்புறம் நான் இங்கே கிளம்பி வந்து அப்பாவுக்கு தெரிஞ்சுட்டா, சும்மாவே உடம்புக்கு முடியாதவர் டென்சன் ஆகிவிடுவார் என்று என் பிரண்ட் வீட்டிற்கு போய் தங்கிட்டேன். வலி மறக்க ஊசி போட்டதால் நல்லா தூங்கிவிட்டேன். காலையில் எழுந்ததும் போன் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனால் என் பிரண்ட் உங்களுக்கு விவரம் தெரிவிச்சுட்டேனு சொன்னாள், சரி என்று கிளம்பி வந்தேன்’’...

மதுமதி இரண்டு வரியில் முடித்திருந்தால் மாலதி நம்பியிருப்பாள். அவள் இத்தனை விவரமாக சொல்ல சொல்ல, அவளது இந்த விபத்து பொய் என்று புரிந்துவிட, உள்ளூர எழுந்த சினத்தை அடக்கி, " நல்ல வேளை சின்ன காயத்தோடு தப்பிச்சுட்டியே, சரி, சரி நீ போய் டிபன் சாப்பிட்டு ரெஸ்ட் எடு" என்றுவிட்டு தன் வேலையைப் பார்க்க சென்றாள்.

மதுமதிக்கு முன்தினம் நடந்தவற்றை, சாதாரணமாக இல்லாவிட்டாலும் கோபத்துடன் அம்மா அவளிடம் சொல்வாள் எதிர்பார்த்திருக்க, அவளோ எதையும் சொல்லாமல் அவளையும் கண்டிக்காமல் போவதை பார்த்து அதிர்ச்சி தான். ஆனால் நடந்ததை தெரிந்து கொள்ளாவிட்டால் அவள் மேற்கொண்டு திட்டமிடுவதும் செயல்படுத்துவதும் எப்படி என்று எண்ணியவள், அன்னையின் பின்னோடு சென்று,"நே..நேற்று என்ன ஆச்சு அம்மா? அவர்கள் வந்தார்களா? எப்படி சமாளித்தீர்கள்?? என்று சோகமாக கேட்க,

"வர்றேன்னு சொன்னால் வராமல் இருப்பார்களா? வந்தார்கள் மகியை பார்த்தார்கள். பிடித்திருப்பதாக வைரத்தில் அட்டிகையை போட்டு உறுதி செய்துவிட்டு போயிருக்கிறார்கள். எப்படியும் சீக்கிரமே திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று முடிவு பண்ணிட்டோம், என்ற மாலதி அப்போது ஒரு தவறு செய்தாள். மகியை அவர்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. அவள் அதிர்ஷ்டசாலி. மாப்பிள்ளையை எங்களுக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. யார் தலையில் என்ன எழுதியிருக்கோ அதன்படி தானே நடக்கும்" என்றவாறு நகர்ந்து விட்டாள்.

மதுமதியின் முகமும் கண்களும் ஆத்திரத்தில் சிவந்து போயிற்று. அதிர்ஷ்டசாலி அவளா இல்லை நானா என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று மனதுக்குள் சவால் விட்டாள். அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிடத் தொடங்கினாள். கூடவே அதை செயல் படுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை என்பதும் புரிந்தது. ஆனால் செய்தே ஆகவேண்டும் என்று தீவிரமாக யோசிக்கலானாள்.

மகதியை பெண் பார்த்து உறுதி செய்துவிட்டு வந்த மறுநாள் அவளை பற்றி மனதில் சில கேள்விகள் இருந்தபோதும், அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு, அன்றைக்கு செய்தி தாளில் பிரசுரமாகியிருந்த ஒரு முக்கியமான டென்டர் விஷயமாக பொது நிர்வாகி தெரிவிக்கவும், அது பற்றிய, கணக்கீடு, மற்றும் விவரங்களை இருவருமாக கலந்தாய்வு செய்ய வேண்டியிருந்தது. அந்த வேலை முடியவே உணவு இடைவேளை வரை ஆயிற்று. அதன்பிறகு அன்றைக்கு அவனே மேர்பார்வை செய்ய வேண்டிய சில இடங்களுக்கு சென்று பார்த்து முடித்து வீடு திரும்பும் போது மீண்டும் மனதுக்குள் சஞ்சலம் உண்டாக, அதை தெளிவுபடுத்திக் கொண்ட பிறகே அவனால் நிம்மதியாக இருக்க முடியும் என்று தோன்றியது. அதிலும் மகதியின் தோற்றம் தான் அவனை வெகுவாக பாதித்தது.

மகதிக்கு அவனை பிடிக்கவில்லையா? அல்லது அவள் மனதில் வேறு யாரும் இருக்க, பெற்றோரின் வற்புறுத்தலுக்காக வந்து நின்றாளா? நினைக்கவே மனதிற்கு பிடிக்கவில்லை. அவளை சந்தித்து பேசுவதை தவிர வேறு வழி இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை. ஆனால் அவளை எப்படி சந்திப்பது என்று யோசனையுடன் அவன் வீடு வந்து சேர்ந்தபோது மிகவும் தாமதமாகியிருந்தது.

காரை ஷெட்டில் விட்டுவிட்டு வீட்டினுள் சென்றால் அங்கே அன்னை அவனுக்காக தூங்காமல் காத்திருப்பதை காணவும் அவனுக்கு கோபம் உண்டாயிற்று. "என்னம்மா இன்னும் நீங்கள் தூங்கப் போகாமல் என்ன செய்கிறீர்கள்? நான் என்ன சின்ன பிள்ளையா அம்மா. என் வயிற்றுக்கு எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரியாதா? என்று கடிந்து கொண்டான்.

"ஆமா ஆமா நல்லா சாப்பிட்டாய். சதா வேலை வேலை என்று பாதி நாள் வெளியில் சாப்பிட்டு விடுகிறாய். வீட்டில் சாப்பிடும் போது கூட நீயாக அறைகுறையாக பரிமாறி சாப்பிட்டு எழுந்து விடுகிறாய். அப்புறம் அத்தனையும் சமைச்சு என்ன பிரயோஜனம் சொல்லு? "அதற்காக நீங்கள் இப்படி எனக்காக காத்திருந்து உடம்பை கெடுத்து கொள்ள வேணடுமா?

"எல்லாம் இன்னும் கொஞ்சம் நாளைக்கு தானே மகேன். அப்புறம் மருமகள் வந்து பார்த்து கொள்வாள். நானும் நிம்மதியாக இருப்பேன். எனக்கு எப்போது மருமகள் வருவாள் என்று ஆவலாக இருக்கிறது. அக்கம் பக்கத்தில் கூட எப்போது திருமணம் என்று கேட்கிறார்கள் என்றதும்,

"அம்மா ஒரு விஷயம்,"

"சொல்லு மகேன்"

"அது அம்மா, பெண்ணிடம் நான் கொஞ்சம் தனியாக பேச வேண்டும். நேற்று அங்கேயே இதை சொல்லியிருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வார்களோ என்ற தயக்கத்தில் கேட்கவில்லை. இப்போதானால் ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் என்று ரொம்பவும் தோன்றுகிறது. நீங்கள் அவர்கள் வீட்டில் கேட்டால் மறுக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்".என்றதும்...

"என்ன விஷயம் மகேன்? பெண்ணை நீ பார்த்து பிடித்து தானே நாம் அவளை பார்க்கப் போனோம்? பூ வைத்து நகைப் போட்டு உறுதி செய்துவிட்டால் பாதி திருமணம் நடந்துவிட்டது போலத்தான். இப்போது தனியாக பேச வேண்டும் என்றால் என்ன அர்த்தம்? ஏதேனும் பிரச்சனையா ?அன்னையின் குரலில் தெரிந்த தீவிரத்தை உணர்ந்து,

"அடடா அம்மா, அவளிடம் சில விஷயங்கள் தெளிவு படுத்திக்கொள்ள நினைக்கிறேன். அவ்வளவு தான் அம்மா. மற்றபடி நீங்கள் கவலைப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை"

"அவ்வளவு தானே மகேன்? வேறு எதையும் மறைக்கவிலேலைதானே?? என்றவரின் குரலில் இன்னமும் சந்தேகம் இருந்தது.

"ஐயையோ அப்படி எல்லாம் எதுவுமில்லை அம்மா. ஹூம்... இந்த காலத்தில் அவனவன் கல்யாணம் முடிவானதும் தனக்கு வரப்போகிற மனைவியை அழைத்துக்கொண்டு சினிமா,பீச், ஹோட்டல் என்று எங்கெல்லாம் சுத்தறாங்க. நான் ஜஸ்ட் அவகிட்ட பேசனும்னு தான் நினைக்கிறேன். அதைக்கூட அம்மா மூலமாக செய்ய நினைக்கிற என்னைப் போய் சந்தேகப்படறீங்களே அம்மா " மகேந்திரன் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு பாவனையோடு பேசுவதைப் பார்த்ததும் சிரித்துவிட்டார் மங்களம்.

மய"போடா சரியான டிராமா, கொஞ்சம் நேரத்தில் என்னை கலங்க வைத்துவிட்டாயே என்றவர், சரி சரி "காலையில் நான் சம்பந்தி வீட்டில் பேசுகிறேன். இப்ப நேரமாச்சு போய் தூங்கு " என்று அவரது அறையை நோக்கி சென்றார் அன்னை.

மகேந்திரன் சற்று ஆசுவாசமானான். அன்னை இவ்வளவு ஆர்வத்துடன் இருப்பதை பார்க்கையில் எதுவும் தவறாகிவிடக் கூடாது என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டு மனதுக்கு பிடித்தவளை சந்திக்கப் போவதை எண்ணி இருவிதமான உணர்வில் உறங்க சென்றான்.


ஆனால்...
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top