Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

06. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
முன் இரவில் பல விடை தெரியா கேள்விகளோடு போராடிவிட்டு விடியும் தருவாயில் கண்ணயர்ந்தவளை 5:30 மணி அலாரம் சிணுங்கி எழுப்பியது. கண்களை பிரிக்கக்கூட பிரியமில்லை சாருவிற்கு. உடலும் மனமும் சோர்ந்து கெஞ்சியது. ஆனால் மற்ற நாளாக இருந்தால் பரவாயில்லை. தாமோதரனிடம் சொல்லிக் கொள்ளலாம் என்று படுத்துவிடுவாள். இப்போது அது முடியாதே, சலுகை அதுவும் அவனிடம் போய் கேட்பதா? என்னவென்று கேட்பது? ஆசையாய் பேசி மோசம் செய்தவனிடம் வேலை செய்வதே கேவலம். நினைத்தாலே உடம்பெல்லாம் எரிகிறது. கௌரவமாய் வாழ வேண்டியவளை இப்படி ஒரு நிலையில் நிறுத்தி விட்டானே? ஆனால் அந்த குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் எத்தனை கம்பீரமாய் வந்து நிற்கிறான்?? கூடவே அந்த ஊனம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்று ஒருபுறம் தவித்த மனதை அடக்க முடியவில்லை. இத்தனைக்கு பிறகுமா அவனிடம் இரக்கம் உனக்கு என்று மனது இடித்தது.

மனம் ஏதேதோ எண்ணினாலும் கைகள் வேலைகளை செய்தபடி இருக்க "அம்மா" என்ற மகளின் வீறிடலில் நிகழ்விற்கு வந்த சாரு அவளிடம் விரைந்தாள்.

"என்னடா குட்டிமா, என்னாச்சு என் பட்டுக்குட்டிக்கு ? என்றவாறு மகளை அள்ளி மார்போடு அணைத்து வருட அழுகை மெல்ல நின்று.."அம்மா என் பொம்மையை அந்த நவீன் பிடுங்க வந்தான்" என்றாள் கேவலுடன்.

“சே, சே அவன் குட் பாய் இல்லையா செல்லம். அவன் அப்படிலாம் பண்ண மாட்டான்மா. அம்மா அவன்கிட்ட சொல்லிடுறேன் சரிதானா? இப்ப சமத்தா போய் பிரஷ் பண்ணிட்டு வந்து பால் குடிப்பியாம், அம்மா அதுக்குள்ள உனக்கு பிடிச்ச பூரி கிழங்கு செஞ்சிடுவேனாம். உம்ம்மா"என்று நெற்றியில் உச்சிமுகர்ந்து மகளை பாத்ரூமில் விட்டு அவளுடைய குட்டி பிரஷில் பேஸ்ட்டை வைத்து தந்தாள்.

பதிலுக்கு கன்னத்தில முத்தமிட்டு "ஹைய்யா பூரி"என்று பிரஷ்ஷை பெற்றுக் கொண்ட மகளை ஒரு கணம் பார்த்திருந்துவிட்டு சமையலை கவனிக்கப் போனாள் சாரு!

எவ்வளவு முயன்றும் சித்ரஞ்சனால் அந்த விஷயத்தை நம்பவே முடியவில்லை. எல்லாருக்கும் முன்னதாக அலுவலகம் வந்து அவளது விவரங்கள் அடங்கிய கோப்பை கணினியில் பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. திருமதி. சாருமதி என்று இருந்தது.

ஆனால் அவளது பெயர் லதா அல்லவா? ஒரு வேளை வீட்டில் கூப்பிடும் பெயர் லதாவாக இருக்குமோ?? அன்று அவன் அவளை அப்படி கூப்பிட்ட நினைவும் இருக்கிறது. அவளது ஆத்திரம் நியாயம் தான். ஒரு மாதத்திற்குள் வந்து திருமணம் செய்வதாகச் சொல்லிவிட்டு ஆளே காணாமல் போனால் கோபப்படாமல் கொஞ்சவா செய்வார்கள்?? என்று அவள் பக்கம் நியாயம் கற்பித்தவனுக்கு அவன் வாழ்வு சூனியமாகிப் போனதை எண்ணி மனம் தவித்தது.

அடுத்தவர் மனைவியாகிவிட்டபின் அவன் ஒதுங்கிப் போவதுதான் சரி. ஆனால் ஏனோ அதை அவனால் ஏற்கவே முடியவில்லை. உண்மை கசக்கும் என்பது இதுதானோ?? தினம் தினம் அவளை பார்த்துக் கொண்டு இருந்தால் போதும்தான். ஆனால் அடுத்தவர் மனைவியாகி விட்ட பெண்ணை அவ்வாறு பார்ப்பது கூட தவறல்லவா? அவளோடு வாழப்போவதாய் செய்திருந்த கற்பனைகள் வேறு நோகடிக்குமே! அவளுக்கும் கூட ஒருவகையில் தர்மசங்கடம் தானே என்று தோன்றியது.

முதலில் அவள் குடும்பம் கணவன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்புறமாய் அவள் வளமாய் வாழ முடிந்த உதவி செய்யலாம். அதை அவள் எற்கமாட்டாள் தான். முயற்சியை ஏன் விடுவது? எங்கே என்றாலும் அவள் சுகமாய் வாழவேண்டும்" தனக்குள்ளாக அவன் திட்டம் போட்டான்.

ஆனால் சாருவோ அவன் கேள்வி கேட்கும் நிலையைக் கூட தரக்கூடாது என்று எண்ணினாள்.

அலுவலகப் பணியாளர்கள் வரத் தொடங்கினர். அவளைக் காணவில்லை. அவனது கேபினிலிருந்த கண்ணாடி தடுப்புச்சுவர் மூலம் அவளது இருக்கையை காண முடிந்தது. ஒருவேளை அவன் மீது உள்ள ஆத்திரத்தில் வேலைக்கு வராமல் இருந்துவிடுவாளோ என்று மனம் அஞ்சியது. ஆனால் உரிய நேரத்திற்குள்ளாக அவள் வந்து சேர்ந்தாள்.

சாரு மகளை தயார் செய்து நேரத்தோடுதான் கிளம்பினாள். பள்ளியில் மகளை விட்டுவிட்டு அலுவலகம் வரும் வழியில் வண்டி பழுதாகிவிட்டது. சித்ரஞ்சன் முன் போய் காரணம் சொல்லிக் கொண்டு நிற்க மனமின்றி வண்டியை மெக்கானிக் ஷாப்பில் விட்டு செலவைப் பாராமல் ஆட்டோ பிடித்து வந்து சேர்ந்துவிட்டாள். கையில் ஒரு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இப்படிப்பட்ட செலவுகள் அடிக்கடி கட்டுப்படியாகாது என்று மூளை அறிவுறுத்தியது. இனி இதுபோல நேராமல் பார்த்துக் கொண்டால் போயிற்று என்று எண்ணிக் கொண்டு அலுவலைத் தொடங்கினாள்.

ஆனால் மனிதர்கள் போடும் திட்டங்கள் அப்படி நிறைவேறினால் வாழ்க்கை உப்பு சப்பில்லாது போய்விடுமே...


@@@

சித்ரஞ்சன் சாருவைப் பற்றி தாமோதரனிடம் கேட்கலாமா என்று ஒரு முறை யோசித்தான். ஆனால் அவர் விஷயம் என்ன என்று கேட்டால் கொடுப்பதற்கு நம்பும்படியான வலுவான ஆதாரம் ஏதும் தன்னிடம் இல்லாததால் அந்த எண்ணத்தை கைவிட்டான். எப்படியும் அவளைப் பற்றி அறிந்தே தீரவேண்டும் என்று நினைத்தவன் ஒரு முடிவிற்கு வந்தவனாக கைபேசியில் யாரையோ தொடர்பு கொண்டான். பேசி முடித்ததும் தான் சற்று நிம்மதி உண்டானது.

தன்னிடம் சித்ரஞ்சன் பேச முயல்வான் என்று எதிர்பார்த்தாள் சாரு. ஆனால் அவன் அவளை அறிந்தவனாகக் கூட காட்டிக் கொள்ளாமல் அலுவல் பணி தவிர வேறு பேச்சு பேசவில்லை. அதுவும்கூட சாருவிற்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியது. ரொம்ப அழுத்தம்தான்.

பண்றதையும் பண்ணிவிட்டு ஒன்றுமே நடவாததுபோல என்ன ஒரு நடிப்பு? ஒரு வேளை அவனுக்கு திருமணம் ஆகிவிட்டிருக்குமோ? அவள் பேரழகியாக இருப்பாளோ? அந்த எண்ணமே அவளுக்கு தாங்கமுடியாத துன்பமாக இருந்தது. ஆனால் மனசாட்சியுள்ள எந்த மனிதனும் அப்படி நடந்து கொள்ள மாட்டானே? ஒரு சின்னப் பெண்ணின் வாழ்வை அழித்துவிட்டு அதைப் பற்றிய குற்றக் குறுகுறுப்பே இல்லாமல் நடமாடுவது சாத்தியமா? இன்று கையில் குழந்தையோடு கஷ்டப் படுவது அவளல்லவா? மனதுக்குள், தினம் தினம் எரிமலையாய் குமுறிக் கொண்டு இருந்தாள்.

ஒருவாரம் கடந்ததே ஒரு யுகம் கடந்தாற் போல உணர்ந்தாள் சாரு! அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையிலேயே மகளை அழைத்துக் கொண்டு மாமல்லபுரம் பஸ்ஸில் ஏறிவிட்டாள். வீட்டில் இருந்தால் மனம் இருக்கும் நிலையில் அதையே நினைத்து வேதனைதான் மிஞ்சும். மன மாறுதலுக்காகவும், மகளுக்கு ஒரு இடத்தை காட்டும் முயற்சியாகவும் இருக்கட்டுமே என்று சாரு, நினைத்தாள், ஆனால் குரங்கை நினையாது மருந்து குடிக்கச் சொன்ன கதையாக ஜோடிகளை பார்க்கையில் தன் இழப்பு நினைவிற்கு வர, அது அவளை பெரிதாக பாதித்தது. மாலை வரை ஒருவாறு மகளுடன் சுற்றிப் பார்த்ததில் மனம் கொஞ்சம் லேசாகியிருந்தது.

மாலையில் கடற்கரைக்கு மகளுடன் சென்றாள், சாரு! ஆனால் ஏனோ தன்னை யாரோ கவனிப்பது போலவே ஒரு உணர்வு ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தால் அப்படி யாரும் கண்ணில் படவில்லை. இன்றைக்கு தடி எடுத்தவன் தண்டல்க்காரன் என்பது போல எல்லாரிடமும் கைபேசி இருப்பதால் பேசுகிறார்களா? நடிக்கிறார்களா என்று அறிய முடியவில்லையே. ஒருவேளை அது தன் பிரம்மை தானோ என்று தோன்ற திரும்பிப் பார்ப்பதை நிறுத்திக் கொண்டாள்!

தண்ணீரில் நிற்பதென்றால் மஞ்சரிக்கு ரொம்ப இஷ்டம். சாருவுக்குதான் கொஞ்சம் பயம். ஆனாலும் மகளின் ஆசைக்காக போய் நிற்பாள். அன்றும் மகளுடன் நின்றிருந்த போது வேறு ஒரு சிறுவன் பந்தை தண்ணீரில் தூக்கிப் போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். பந்து நழுவி தண்ணீருக்குள், ஓட... அந்தப் பையன் கரைக்கு ஓடிச்சென்று யாரையோ அழைத்துவரப் போனான்.

ஆனால் வேடிக்கைப் பார்த்திருந்த மஞ்சரி அந்த பந்தைப் பிடிக்கிறேன் என்று எதிர்பாராத தருணத்தில் சாருவின் கையை உதறிவிட்டு தண்ணீருக்குள் தாவிவிட அதிர்ந்து போய்விட்டாள்.

"ஐயோ என் கண்ணம்மா...என் பிள்ளையை காப்பாற்றுங்க...காப்பாற்றுங்க..."என்று அலறியவள் அப்படியே மயங்கிச் சரிய, வலுவான கரம் ஒன்று அவளைத் தாங்கிக் கொள்ள, அதே சமயத்தில் ஒரு இளைஞன் தண்ணீரில் பாய்ந்து மஞ்சரியை காப்பாற்றி கரை சேர்த்தான்.

நல்லவேளையாய் குழந்தைக்கு ஒன்றும் நேரவில்லை. அவள் அணிந்திருந்த உடைகள் ஈரமாகியிருக்க குளிர் காற்றில் நடுங்கினாள். சாரு, வைத்திருந்த பையினுள் பார்க்கும்படி தன் உதவியாளனிடம் பணித்துவிட்டு சாருவையும் கரைக்கு கொணர்ந்திருந்தான் சித்ரஞ்சன்.

முகத்தில் தண்ணீரை தெளிக்க மலங்க விழித்தாள் சாரு, மகள் நினைவு வர பதறி எழுந்தவளை, "உன் மகளுக்கு ஒன்றும் ஆகவில்லை ,பதறாதே அவள் பயந்துவிடப் போகிறாள்"என்ற சித்ரஞ்சனின் அழுத்தமான குரலில் இன்னும் அதிர்ந்து போனவளாய் சட்டென்று அவனிடமிருந்து விலகினாள்.

அவள் எழுந்ததைக் கண்டதும் "அம்மா" என்று ஓடிவந்து கால்களைக் கட்டிக் கொண்டாள் மஞ்சரி. ஈர உடையை களைந்து மாற்று உடை அணிவிக்கப்பட்டிருந்ததைக் கண்டவள், அருகில் அவளது பையோடு நின்றவனிடம் "நன்றி தம்பி" என்று சொல்லிவிட்டு பையை ஒரு கையில் வாங்கிக் கொண்டு மறு கையால் மகளை தூக்கிக் கொண்டு மணலில் கால்கள் புதைய வேகமாய் நடந்துவிட்டாள் சாரு! அவள்,போவதையே

யோசனையாய் பார்த்திருந்த சித்ரஞ்சனுக்கு ஒரே குழப்பம்..
 
Back
Top