Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

06. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
நிரஞ்சனா சொன்னது சக்திக்கு ஒருபுறம் குழப்பமாகவும் இன்னொருபுறம் ஆச்சர்யமாகவும் இருந்தது. ஒரு இளம் பெண் தனியாக இருக்கையில் அந்நிய ஆடவன் வழிமறித்தால், அவனை காயப்படுத்தியேனும் தன்னை காப்பாற்றிக் கொள்ளத்தான் எண்ணுவாள், இவள் சிறிதும் பயமின்றி நிதானமாக நின்று பதில் சொல்கிறாள், கூடவே அவனுக்கு காயம் ஏற்படக்கூடாது என்று ஏன் நினைக்கிறாள்?

சக்திக்கு அவளிடம் கேட்க எத்தனையோ கேள்விகள் இருந்தது. ஆனால் அதை மற்றொரு சமயத்தில் கேட்டுக் கொள்ளலாம், இப்பொழுது இங்கே வெகு நேரம் தாமதிப்பது சரியில்லை என்று தோன்றியது.

அதற்குள் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில் " நான் போகனும்,வீட்டில் தேடுவாங்க, வழியை விடுங்க " என்றாள்,

"சரி , சரி, உன் பெயரையாவது சொல்லிவிட்டுப் போ" என்று மனம் இறங்கினான் சக்தி.

"பெயரை தெரிஞ்சு என்ன செய்ய போறீங்க? " என்று கேட்டவாறு ஒற்றையடி பாதையை கவனித்தவள், "ஐயோ யாரோ வர்றாங்க , நான் போறேன் வழியை விடுங்களேன், ப்ளீஸ்."என்று பதற்றமாய் கெஞ்சினாள். அவளது ப்ளீஸில் அதற்கு மேலாக வற்புறுத்த மனமற்றவனாய் விலகி நிற்க, சட்டென படிகளில் இறங்கியபடியே "நிரஞ்சனா என் பேரு" என்றுவிட்டு வேகமாய் ஓடிப் போனாள்.

அவள் பின்னோடு சக்தியும் நடக்கலானான்.. மனது ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.

"நிரஞ்சனா" அழகான பெயர், இது கிராமத்தில் சாதாரணமாக வைக்கப்படும் பெயர் இல்லை. டவுனில் கூட இந்த மாதிரி பெயர்கள் அபூர்வம். இந்த பெண் நிச்சயம் சென்னை போன்ற பட்டணத்தில் இருந்து வந்தவளாக இருக்க வேண்டும். அவளது பேச்சும் தோரணையும் அவனை வெகுகாலமாக அறிந்தவள் போலிருந்தது... எங்கோ இடி முழக்கமும் அதைத் தொடர்ந்து மின்னலும் வெட்டியது , அடுத்த மழைக்கு முன்பாக வீட்டை அடுந்து விட ஓட்டமும் நடையுமாக விரைந்து வீட்டை அடைந்தபோது, அங்கே வேறு ஒரு விஷயம் தொடங்கியிருந்தது.

வீட்டில் அவனது மனநிலைக்கு மாறாக, அவனது தாய் மாமன் சிதம்பரம் குடும்பத்துடன் வந்திருந்தார். சக்திக்கோ யார் கண்ணிலும் பட விருப்பமில்லை. ஆனாலும் நாலு வருடங்கள் கழித்து வந்திருக்கிறார். அதற்கு மரியாதை செய்ய வேண்டும் என்று உள்ளே சென்றான் .

வீட்டுச்சூழல் அவனுக்கு உவப்பாக இல்லை ஆனாலும் வந்தவர்களை முறையாய் வரவேற்றுவிட்டு, "என்ன மாமா எங்க ஞாபகம் எல்லாம் இருக்கா உங்களுக்கு ?அல்லது இந்த பக்கம் எதுவும் விசேஷம்? என்று கேட்டான்.

"விசேஷம் இல்லாவிட்டால் நான் வரக்கூடாதா மருமகனே? என்று சிரித்தார் சிதம்பரம்.

"தாராளமாக எப்ப வேணும்னாலும் வரலாம் மாமா. நாலு வருஷமா இந்த பக்கம் வராதவர் திடுமென்று வந்திருக்கிறீர்கள். அதனால் தான் கேட்டேன்"

"உன் மாமன் பொண்ணு மல்லிகா படிப்பை முடிச்சிருச்சாம், அவளுக்கு கல்யாணத்தையும் முடிச்சிரலாம்னு சம்பந்தம் பேச வந்திருக்காரு" என்றவாறு மகனுக்கு குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து வந்த அழகம்மை சொல்லவும்,

தண்ணீர் குவலையை கையில் பெற்றுக்கொண்டவன், "அடடே, அவ்வளவு பெரியவளாகிட்டாளா மல்லிகா? மாப்பிள்ளை பார்த்தாச்சா மாமா? பையன் என்ன பண்றான்?"எப்ப கல்யாணம்??"

சிதம்பரம் ஏதோ சொல்ல முயல, அவரை கையமர்த்தி தடுத்துவிட்டு, தந்தை கல்யாண சுந்தரம் பேசினார். "நான் சொல்றேன் மகனே, நாங்க உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணிவச்சு பேரன் பேத்திய பார்க்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்படுறோம். உனக்கும் வயசு ஆகிட்டு போகுது, உன் வயசுல எனக்கு நீயே பிறந்துட்டே,என்று சொல்லிக்கொண்டே வந்தவர் , விஷயத்தை அவன் கிரகிக்க அவகாசம் தருவது போல் ஒரு கணம் நிறுத்திவிட்டு பிறகு தொடர்ந்து,

"நியாயமா நாமதான் பொண்ணு கேட்டு போயிருக்கணும், சரி அவனே வந்துட்டான். இப்ப நீ தான் பதில் சொல்லணும். உன் அபிப்பிராயம் என்ன சொல்லு சக்தி?" எனக் கேட்கவும்

சக்தி ஒருகணம் திணறிப் போனான். மனதுக்குள் நிரஞ்சனா வந்து போனாள், "அப்பா நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்கிறதா இல்லை. "என்றான்

"அப்போ கிழவனானப்புறமா பண்ணிக்கப் போறியா? "என்றாள் அழகம்மை சிறு கோபத்துடன்.

"நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லலைம்மா, இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும், நானே சொல்றேன்"

"உன் வயசுப் பசங்க எல்லாம் வரிசையா கண்ணாலத்தை பண்ணிட்டு கையில் பிள்ளையோட நிற்கிறானுங்க, நீ இன்னும் நாள் போகட்டும்னு சொல்றே , தம்பி வேலை எல்லாம் போட்டுட்டு வந்திருக்கான். நீ சம்மதம் சொல்லிட்டா தாம்பூலம் மாத்திக்க நாளைக்கு நாள் நல்லா இருக்கு"என்ற அழகம்மைக்கு மகன் சரி என்றுவிடமாட்டானா ? அவனை கல்யாண கோலத்தில் கண்டுவிடமாட்டோமா என்று அத்தனை ஆவல்,

"அம்மா, இது நான் வாழப்போற வாழ்க்கை, நீங்க சொல்றது போல் அவசரமா முடிவு எடுக்க முடியாது." என்றான் மகன்

"மருமகனே என் பெண்ணை பிடிக்கலைன்னா பரவாயில்லை. நீ வேற யாரையாவது விரும்புகிறாயா? சொல்லு பேசி முடிப்போம்" என்ற சிதம்பரத்தின் குரலில் என்ன இருந்தது? கிண்டலா? குத்தலா? ஏன்?

சக்திக்கு, "திக்" என்றது. கல்யாண சுந்தரத்தின் முகமும் மாறியது.

"அதெல்லாம் எதுவும் இல்லை மாமா”என்று சக்தி சொல்ல எண்ணி வாயை திறக்குமுன் அவரே தொடர்ந்து,"அத்தான் சக்தி படிச்ச பையன் , அவன் மனசுக்கு பிடிச்ச பொண்ணை கட்டிக்க நினைக்கிறதுல தப்பென்ன? இல்லைன்னா” என்று அவர், மேலே பேச எத்தனிக்கையில்,

"போதும் தம்பி, இப்போ நீ என்ன சொல்ல வர்றேனு நல்லாப் புரியுது. அன்னிக்கும் சரி, இன்னிக்கும் சரி நாங்க ஒரே மாதிரிதான் இருக்கோம் அன்னிக்கி நடந்ததுக்கு நாங்க காரணமில்லை. அது உனக்கும் நல்லா தெரியும். அப்படியே இன்னிக்கு எங்க மவன் யாரையாச்சும் இஸ்டப்பட்டாக்க எங்ககிட்ட சொல்லுவான். எங்கள மீறி அவன் ஒன்னும் பண்ணிக்கிட மாட்டான். இதுக்கு மேல எதுவும் பேச வேணாம்" என்று படபடவென்றாலும் அழுத்தத்துடன் அழகம்மை சொன்னாள்.

சில கணங்கள்,அங்கே பலத்த நிசப்தம் நிலவிற்று.

சிதம்பரத்தின் மகள் மல்லிகா நிலைமையை சுமூகமாக்க எண்ணியவளாய்...”சரி சரி எல்லாரும் வாங்க எனக்கு ரொம்பப் பசிக்குது. அத்தை வகைவகையா சமைச்சிருக்காங்க. சீக்கிரம் வாங்க இல்லைன்னா எல்லாத்தையும் நானே காலி பண்ணிடுவேன்" என்று போலியாக மிரட்ட இறுக்கம் தளர்ந்தாற் போல் அத்தனை பேர் முகமும் இலகுவாயிற்று ஒருவனை தவிர. ..

அதிர்ந்து பேசாத அன்னை அவ்வளவு பேசியது வியப்பு என்றால், அவள் ஏன் அப்படி பேசினாள் என்று சக்தி யோசனையில் ஆழ்ந்தான்..
 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top