Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

05. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
50
Points
28
Location
India
முத்தரசியால் மகளின் நடவடிக்கை மாறிவிட்டதை உணர்ந்த மாலதி பதினைந்து வயது மகளை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தாள். அதற்கு காரணம் மகதி தான் என்று மதுமதி எண்ணி மனதில் வெறுப்பை வளர்த்துக் கொண்டாள்.

விடுமுறையில் மதுமதி வீட்டிற்கு வந்தபோது , முத்தரசியை பக்தி சுற்றுலாவிற்கு என்று வடக்கு பக்கம் அனுப்பி வைத்தாள் மாலதி. இதனால் எல்லாம் சீராகிவிடாது என்று அவளுக்கு தெரியும் தான். தற்காலிகமாக மகள்கள் சேர்ந்திருக்கும் இந்த தருணத்தில் அவளது தலையீடு இல்லாதிருந்தால் போதும் என்று எண்ணினாள்.

மகதிக்கு தங்கையிடம் அதிக பிரியம். அவளை இத்தனை நாட்கள் பிரிந்து இருந்ததே வருத்தமாக இருந்தது. அவள் லீவில் வந்ததும் சந்தோஷம் அடைந்தாள். அவளுக்காக என்று அன்னையிடம் சொல்லி வாங்கி வைத்தவற்றை கொடுத்து நல்லுறவை வளர்த்துக்கொள்ள முயன்றாள் மகதி. சின்னவளுக்கு அதுவும் ஆத்திரத்தையே உண்டாக்கியது. காரணமின்றி அவள் எல்லாரிடமும் எரிந்து விழுந்தாள்.

மாலதி மகள்களை வெளியே அழைத்து போய் உடைகள், ஹோட்டலில் சாப்பாடு என்று மனதை நல்ல நிலையில் வைத்திருக்க முயன்றாள். இரண்டு தினங்கள் சுமுகமாக போயிற்று. அதே சமயத்தில் மதனகோபால் கோவையில் புதிதாக தொடங்கி இருந்த கிளைக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்தார்.

அடுத்த நாள் மாலதிக்கு ஒரு முக்கியமான வேலையாக வங்கிக்கு செல்ல வேண்டியிருந்தது. இரண்டு தினங்களாக சின்ன மகள் சமத்தாக நடந்து கொண்டிருந்ததால் சற்று தெம்பாக இருந்தது. ஆனாலும் அவர்களை தனித்து விட உள்ளூர பயமாகவும் இருந்தது. அதனால் பெரிய மகளிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி எச்சரித்துவிட்டு விரைவில் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கையுடன் கிளம்பி சென்றாள்.

ஆனால் சென்ற இடத்தில் நீண்ட வரிசை இருந்தது. அன்றைக்கு பணம் கட்ட வேண்டிய கடைசி நாள் வேறு. அதனால் இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று திரும்பி வருவதற்கும் வழியில்லை. அப்போது திடுமென பெரிய மகள் கைப்பேசியில் அழைத்து தன் தோழியின் வீடு வரை போய் வருவதாகவும், சின்னவள் டிவி பார்த்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தாள். உண்மையில் அது அவளது பதற்றத்தை குறைத்தது எனலாம். எப்போதேனும் மகதி அவளது தோழி பிரியாவின் வீட்டிற்கு சென்று வருவது நடப்பது தான் என்பதால் சம்மதம் சொன்னாள். அதன் பிறகு அவள் கவலை அகன்றவளாய் வங்கியில் தன் பணியை முடித்து வீடு திரும்பிய போது வீட்டில் மதுமதி மட்டுமே இருந்தாள்.

மகதி கிளம்பி சென்ற நேரத்திற்கு திரும்பி வந்திருக்க வேண்டும். அதுவும் வயதுப் பெண் அதிக நேரம் அடுத்தவர் வீட்டில் தயங்கக்கூடாது என்று அறிவுறுத்தி இருக்கிறாள். இதுநாள் வரை அதை அவளும் கடைபிடித்து வந்திருக்கிறாள். மதிய உணவு நேரம் கடந்து விட்டிருந்தது. சின்னவள் டிவியில் ஏதோ ஜோக் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவளிடம் விசாரித்தால் "எனக்கு தெரியாது அம்மா. அவள் பிரண்ட் வீட்டிற்கு போவதாக சொன்னாள். அவ்வளவுதான் அவள் இன்னும் வரவில்லை" என்றவள், சரி அம்மா எனக்கு தூக்கம் வருது " என்று மாடிக்கு சென்றுவிட, அவசரமாக தோழியின் வீட்டிற்கு போன் செய்து கேட்டால் அவள் ஊரில் இல்லை என்று வீட்டு வேலைக்காரி தெரிவிக்க, வயிறு கலங்கியது. இதயம் வேகமாக அடித்துக் கொள்ள, மற்ற இரண்டு தோழிகளுக்கு தொடர்பு கொண்டால் அவர்களோ, " வருவதாக சொன்னாள் ஆனால் வரவில்லை ஆன்ட்டி," என்றதும் மாலதிக்கு பதற்றம் அதிகரித்தது. கூடவே கணவன் வேறு ஊரில் இல்லாத இந்த சமயத்தில் எப்படி மகளை கண்டுபிடிப்பது என்று புரியாமல் திணறினாள். வயது பெண்ணை காணவில்லை என்றால் அவரவருக்கு தோன்றியபடி கதை கட்டிவிடுவார்கள். நேரம் ஆக ஆக அவளுக்கு அழுகையே வந்துவிட்டது? மகதிக்கு எதுவும் ஆகிவிட்டால் அவளால் எப்படி தாங்க முடியும்? காரில் மெல்ல சென்றவாறு வீதிவீதியாக தேடியபோது அவளுக்கு உள்ளூர ஒரு விஷயம் உறுத்தியது. லேசாக சந்தேகமும் உண்டாயிற்று. மகதி படிப்பு விஷயமாகத்தான் தோழி வீட்டிற்கு செல்வது வழக்கம். பொதுத்தேர்வுகள் முடிந்து லீவில் இருப்பவள் தோழியை தேடி போவதற்கான காரணம் எதுவும் இல்லை. அதிலும் தங்கை வந்தால் அவளோடு ஜாலியாக விளையாட நிறைய பேசவேண்டும் என்றவள் அவளை விட்டு சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதலாக அவள் உள்ளே நுழையும் போது மதுமதி சிரித்தபடி டிவி பார்த்து கொண்டிருந்தாள். அது அப்படி ஒன்றும் சிரிக்ககூடிய ஜோக் இல்லை என்பது இப்போது கருத்தில் பட, அவள் தான் ஏதோ செய்திருக்கிறாள் என்று புரிந்துவிட வேகமாக வீடு திரும்பியவள், மகளின் அறை கதவை தட்டினாள். அவளோ திறக்கவில்லை. அதன் பிறகு பாலமாக தட்ட வேறு வழியின்றி கதவை திறந்தவளின் தோள்களை பற்றி " மகி எங்கே? " என்றாள்.

"அதுதான் அவள் தோழி வீட்டிற்கு. ..என்று சொல்ல ஆரம்பிக்கவும், "பொய் சொல்லாதே மது. நான் உன்னை எதுவுமே செய்ய மாட்டேன். மகி எங்கே? என்று மட்டும் சொல்லு"

"எனக்கு எதுவும் தெரியாதும்மா. தூக்கம் வருது விடுங்கம்மா, என்று விடுவித்துக்கொள்ள முயல, மாலதி பொறுமை இழந்து ஓங்கி கன்னத்தில் அறைந்தாள் .

பொறிகலங்கிப் போனவளாய் ஆத்திரத்துடன் தாயை வெறித்தாள். "உண்மையை சொல்லடி, அவளை என்ன செய்தே?? " மதுமதி விவரம் சொல்ல பதற்றத்துடன் வீட்டின் பின்புறம் ஓடினாள் மாலதி. பல வகையான பழ மரங்களுடன் இருந்த தோட்டத்தின் கடைக் கோடியில் ஒரு அறை இருந்தது. அதனுள் பழைய வேண்டாத பொருட்கள் கிடக்கும். அறைக்குள் மரங்கள் காரணமாக வெளிச்சம் அதிகம் விழாது. விளக்கு இருந்தது. அங்கே மகதியை வைத்து பூட்டி விட்டிருந்தாள் மதுமதி.

மதுமதி பழைய பொருட்கள் அறைக்கு மகதியை அழைத்து போகையில், "சின்ன பிள்ளையில் விளையாடிய சாமான் ஒன்று தனக்கு வேண்டியிருப்பதாகவும் அதை தேடி தரும்படியும் கேட்டிருந்தாள். இரண்டு நாட்களாக தங்கை அணுசரணையுடன் நடப்பதை கண்டிருந்த பெரியவளும் உண்மை என்று எண்ணி அவளுடன் உள்ளே சென்றாள். சற்று நேரம் இருவருமாக தேடிக்கொண்டு இருந்தனர். ஒன்றிரண்டு பொருட்களை எடுத்து பார்த்து அது பற்றி பேசியபடியே அங்கிருந்த பழைய பெட்டியை மகதி திறக்க மின் விளக்கு அணைந்துவிட, "அச்சச்சோ கரண்ட் போயிடுச்சே, மது, எங்கே இருக்கிறே? என்று குரல் கொடுத்தாள், பதிலின்றி போகவும், தங்கைக்கு தான் ஏதோ ஆகிவிட்டதோ என்று பதறிப்போனவளாக, மது, மதும்மா எங்கேடா இருக்கிறே?? என்று கேட்டவாறு மெல்ல வாசல் புறமாக நகர்ந்தவளுக்கு கதவை தாழிடும் சத்தம் கேட்க, ஒரு கணம் திடுக்கிட்டு நின்றாள். அதற்குள் இருட்டு கண்களுக்கு பழகிவிட, கதவருகே சென்று மது கதவை திற, ப்ளீஸ் மது... என்று குரல் கொடுத்தாள்.

"முடியாது, உள்ளேயே கிடந்து சாவு" என்றுவிட்டு அங்கிருந்து ஓடிச்செல்லும் ஓசை கேட்டது.

மகதிக்கு தங்கையிடம் ஏமாந்ததை எண்ணி ஆத்திரமும் அழுகையும் வந்தது. அந்த அறையின் விளக்கை வெளியில் இருந்து போடும்படி வைத்திருந்ததால் இருட்டை விலக்கவும் இயலாது போயிற்று. கூடவே சற்று தொலைவில் இருந்த கடல் அலைகளின் இறைச்சலும் காற்றில் மரங்கள் உரசும் ஓசையும் கேட்க அவளுக்கு சற்று அச்சமாக இருந்தது. அந்த சத்தத்தில் அவள் கத்தினாலும் வீட்டிற்கு கேட்காது. அம்மாவிடம் என்ன கதையை சொல்லி இருக்கிறாளோ? பிற்பகலில் யாரும் இந்த பக்கம் வரமாட்டார்கள். காலையில் தான் கூட்டி பெருக்க வேலைக்காரி வருவாள். அதுவரை இராத்திரி முழுவதும் இங்கே எப்படி இருப்பது?? இப்போதே எலியோ பெருச்சாலியோ ஓடுவது போல அச்சமாக இருந்தது. கதவின் அருகே அப்படியே சரிந்து அமர்ந்து அழலானாள். எவ்வளவு நேரம் அழுதாளோ.. அப்படியே தன்னை அறியாமல் கண்ணயர்ந்திருந்தவள், திடுமென விளக்கு வெளிச்சம் கண்ணை கூச, அதை தொடர்ந்து கதவு திறக்கும் ஓசையும் "மகிம்மா, கண்ணம்மா என்ற மாலதியின் குரலும் கேட்க, வாரிசுருட்டிக் கொண்டு எழுந்து" அம்மா., அம்மா "என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சு வராமல் அழுகையில் குலுங்க, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவள் மகளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டு," அழக்கூடாது, தங்கம். அதான் அம்மா வந்துவிட்டேனே. வா நாம வீட்டுக்கு போகலாம்" என்று மகளை நடத்திக்கொண்டு நகர்ந்து சற்று தூரம் சென்றதும், தாயின் கைபற்றி நிறுத்தி,"இங்கே நான் இருக்கிறது மதுவுக்கு பிடிக்கவில்லை அம்மா. அதனால் என்னை வேணும்னா ஹாஸ்டலில் சேர்த்துவிடுங்கள். லீவிற்கு கூட நான் வரவில்லை." என்ற மகளை ஆறுதலாக வருடி கொடுத்தவாறு,"அப்படி எல்லாம் பேசக்கூடாது கண்ணம்மா. உன்னை விட்டு அம்மா எப்படி இருப்பேன் சொல்லு?"

"ம்ம்..எனக்கு உங்கள் மேல கோவமில்லை அம்மா. மது மேலயும் கோவமில்லை. அவளோட அம்மாவை நான் பறிச்சிட்டதா நினைக்கிறாள். அப்படி இல்லை என்று நான் எவ்வளவோ தடவை சொல்லி பார்த்துவிட்டேன். அவள் புரிஞ்சுக்கிற மாதிரி தெரியவில்லை. அதனால் நான் விலகி இருக்கிறேன் அம்மா. மதுவுக்கு அதுலதான் சந்தோசம் என்றால் எனக்கு சம்மதம் தான். தூரமாக இருந்தாலும் நம்ம பாசம் அப்படியே தான் இருக்கும். ப்ளீஸ் அம்மா. எனக்கு இதற்கு அனுமதி கொடுங்கள்." என்றபோது மாலதிதான் உடைந்து போனாள். மிருதுளாவிடம் அவள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாமல் போனதை எண்ணி வருந்தினாள்.

மதுமதி அவள் அறைக்குள்ளேயே முடங்கி கிடந்தாள். அங்கேயே சாப்பாட்டை அனுப்பி வைத்தாள் மாலதி.

மறுநாள் முழுவதும் மாலதி மிகுந்த மனப்போராட்டத்தில் இருந்தாள். பெரிய மகளை மடியில் போட்டுக்கொண்டு அவள் மனதை மாற்ற முயற்சி செய்து பார்த்தாள். ஆனால் அவளோ, "அம்மா அழாதீங்க. என்னால தாங்க முடியாது. நீங்கள் என்னை அனுப்பவில்லை. நானாக தான் போகிறேன். அதனால் உங்களுக்கு எந்த குற்ற உணர்வும் வேண்டாம். மது நிச்சயம் ஒருநாள் மாறுவாள் அம்மா. அவளுக்கு அவகாசம் கொடுப்பதாக எண்ணுங்களேன்." என்று அன்னையை பணிய வைத்துவிட்டாள்.

கணவரிடம் இந்த விஷயத்தை எப்படி சொல்வது என்று மாலதி மிகவும் கலங்கினாள்... அவள் பெற்று வைத்திருக்கும் மகளால் ஏற்ப்பட்ட வேதனையை தாங்க முடியாமல் துடித்தாள்..
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top