Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

05. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அடுத்த வாரம்...

ஞாயிறன்று… ஷாப்பிங் மாலில் காத்திருந்தான் சித்ரஞ்சன். ஆனால் அவள் வரவில்லை. மாறாக அவனது கைபேசிக்கு குறுஞ்செய்தி வந்திருந்தது. அவசரவேலை வந்துவிட்டதால் வரமுடியவில்லை மன்னிக்கவும் மிஸ்டர். ரஞ்சன், அந்தப் பொருள்கள் பத்திரமாக இருக்கிறது. எப்போது வேண்டுமோ இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். நான் வந்து தந்துவிடுகிறேன்"_லதா.

அவள் வராதது வருத்தமாக இருந்தாலும் அவளது எண்ணையும் பெயரையும் தெரிந்து கொண்டு விட்டதற்காக சந்தோஷப் பட்டான். அதற்காக அவளுக்கு போன் செய்து தொந்தரவு தரவில்லை அவன்.

ஆனால், அவளுக்கு பதில் மட்டும் அனுப்பினான் இப்படி, "நானே உன் விடுதிக்கு வராலாம் என்றுதான் நினைத்திருந்தேன் மிஸ்.லதா, காரணம் நான் சொன்ன அந்தக் கல்லூரி மாணவியின் குடும்பம் மாற்றலாகிப் போய்விட்டதால் இனி அந்தப் பொருட்கள் எனக்கும் பயன்படாதுதான். ஆகவே அவற்றை நீயே பயன் படுத்திக் கொள், உனக்கு அதில் விருப்பமில்லாவிட்டால் தெரிந்தவர்களுக்கு தந்துவிடு" உன் தகவலுக்கு நன்றிம்மா. நான் இன்னும் ஒருரிரு தினங்களில் ஊருக்கு கிளம்பி விடுவேன். டேக் கேர்" என்று.

அதன் பிறகு அவளிடம் இருந்து பதில் இல்லை. அவள் கொஞ்சம் ஒதுங்கிப் போகிற குணமுடையவள் என்று அவனும் அறிந்திருந்ததால் சித்ரஞ்சன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

இரண்டு நாளில் கிளம்பி விடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் வேலை ஒருவாரத்திற்கு இழுத்துவிட்டது. ஊருக்கு கிளம்புமுன்பாக அவளை சந்தித்த இடத்திற்கு போகவேண்டும் போல இருந்ததால் அங்கே சென்றான் சித்ரஞ்சன். என்ன ஆச்சர்யம் அவளும் அங்கே வந்திருந்தாள்.

அவனுக்கு உலகமே வண்ணமயமாகிப் போனது. அவசரமாய் அவளை நோக்கிப் போனான், அவனை பார்த்ததும் வியப்பாய் விழிகள் மலர புன்னகைத்தாள் வரவேற்பாய்!

"நீ..நீங்களா? இரண்டு நாளில் ஊருக்கு கிளம்புவதாக சொன்னீர்களே சார்? என்று கேட்கவும் செய்தாள்,

அவள் கேட்டதை விடுத்து"என்னது சாரா?" என்றான் இளம்குரலில்.

" ரஞ்சன் சார், சரிதானா?" என்றாள்.

"ம்ம் அந்த சார் எதற்கு கொசுறு? நண்பர்களுக்கு நான் ரஞ்சன் தான். ரஞ்சி அம்மா கூப்பிடுவார்கள்" என்று பேச்சை வளர்த்தான்.

"சரி சரி அப்படியே கூப்பிடுகிறேன். நான் கேட்டதற்கு இன்னும் பதில் சொல்லவில்லையே? அல்லது அதை தவிர்க்கத்தான் பேச்சை மாற்றினீர்களோ? சந்தேகமாய் கேட்டு வைக்க..

"இது ஏதடா சித்ரஞ்சா உன் வாக்குக்கு வந்த சோதனை என்று எண்ணிக்கொண்டு "அச்சச்சோ இல்லையம்மா நேற்று வரை வேலை இழுத்துவிட்டது. இன்று மாலையில் ஊருக்கு கிளம்புகிறேன். அடுத்த வாரம் இந்தத் தொழில் சம்பந்தமாய் வெளிநாடு போகிறேன், வர ஒரு மாதம்கூட ஆகலாம். அதுதான் பெங்களூரை ஜஸ்ட் ஒரு ரவுண்ட் சுத்திவிட்டு கிளம்பலாம் என்று நினைத்தேன். அப்படியே இங்கேயும் வந்தேன். போதுமா விளக்கம்" என்று புன்னகையுடன் சொல்ல

அவள் முகம் ஒருகணம் மாறி மீண்டது."மறுபடியும் எப்போது பெங்களூர் வருவீர்கள்? வருவீர்கள் தானே?"என்றாள். அவள் குரலில் கலக்கம் அல்லது தவிப்பு என்னவென்று அவனால் உணரமுடியவில்லை. ஆனாலும் அவனுக்கு அவள் கேட்டதிலேயே மனம் நிறைந்து போயிற்று.

"நிச்சயமாய் வருவேன் உனக்காக" என்றான் அழுத்தமான குரலில்.

சட்டென்று அவனை ஏறிட்டாள். நான்கு விழிகளும் ஒன்றாய் கலந்திட சுற்றுப்புறம் மறந்து வாய்மொழி சொல்லாததை எல்லாம் விழிமொழியால் சொல்லிக் கொண்டார்கள். எங்கோ ஒரு குழந்தையின் வீறிடலில் இருவரும் நனவுலகம் வந்தனர். அவள் அழகாய் முகம் சிவந்தாள். சித்ரஞ்சனின் மனதில் அந்த முகம் ஆழமாய் பதிந்தது.

சுற்று முற்றும் அவசரமாய் பார்வையை ஓடவிட்டவள், நினைவு வந்தாற்போல "வந்து, அன்று நீங்கள் தந்த பொருட்கள் பத்திரமாய் இருக்கிறது. அதை உங்களிடம் தரத்தான் கேட்டேன்! அந்த கல்லூரி மாணவி யாரென்று...? அவள் மேலே கேட்கத் தயங்கி நிறுத்தவும் அவன் குறும்புடன் நகைக்க அவள் மீண்டும் முகம் சிவந்தாள்.

அன்று அவள் தன்னைப் பற்றிக் கூறினாள். படிப்பை முடித்துக் கொண்டதும் தந்தையின் நண்பர் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகக் கூறியிருந்ததையும் தெரிவித்தாள்.

"அதற்கெல்லாம் அவசியமே இருக்காது லதாம்மா. நான் வெளிநாடு போய் வந்ததும் உன்னைப் பற்றி வீட்டில் சொல்லி நம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்துவிடுவேன்" என்றான் உறுதியான குரலில்.

அவளுக்கு அவன் சொன்னதைக் கேட்டதும் வியப்பாய் இருந்தது."உங்கள் வீட்டில் என்னை பிடிக்காவிட்டால்?" என்று ஐயத்துடன் வினவினாள்,

"நான் யாரை காட்டுகிறேனோ அவளை மனதார ஏற்றுக் கொள்வார்கள். என் பெற்றோருக்கு இப்போது இருக்கும் ஒரே ஆசை என் திருமணம் தான்" என்றான் விளக்கமாக.

"ஓ! ஆனாலும் நான் படிப்பை முடித்தே ஆகவேண்டும் ரஞ்சன். என் பெற்றோரின் ஆசை அது" என்றாள் மறைந்துவிட்ட பெற்றோரின் நினைவில் கண்கள் கலங்க!

"ஷ், ஷ்..கண்ணைத் துடைத்துக் கொள் லதா. இது பொது இடம். யாரும் பார்த்தால் தவறாய் எண்ணக்கூடும் என்றவாறு தன் கைக்குட்டையை நீட்டினான்

அன்று கிடைத்த சில மணிநேரத்தில் அவர்கள் கோர்வையாய் எதையும் பேசிக் கொள்ள முடியவில்லை. ஒன்று அது பலபேர் வந்து செல்லும் பொது இடம் என்பதால் நிறைய தடங்கல்கள். மனதில் இருப்பதை எல்லாம் கொட்டிவிடத்தான் இருவரும் ஆசைப் பட்டார்கள். அவனுக்கோ ஊருக்கு கிளம்ப வேண்டும். அவளுக்கும் வேறு சில வேலைகள் இருந்தது. ஆக இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள அந்த அவகாசம் போதவில்லை. சரி அதுதான் இருக்கவே இருக்கிறது கைபேசி எண். இருவரும் பேசிக் கொள்ளலாம், இருவருமே பிரிய மனமின்றித்தான் அன்று பிரிந்தனர். லதாவைப் பற்றி சித்ரஞ்சன் அறிந்தது, அவளுக்கு பெற்றோர் இல்லை. தமக்கை ஒருத்தி இருக்கிறாள். அவளும் கூட விடுதியில் அவளுடன்தான் தங்கிப் படிக்கிறாள். இதற்கு மேலாக விவரம் தெரியாது.

அன்றைய நாள் மனதில் சித்திரமாய் ஓடியது. இருவருமே மற்றவரின் நினைவில் தான் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள். அந்த ஒன்றிலேயே ஒருவரின் மனம் மற்றவருக்கு விளங்கிப் போயிற்று. எதனால் ஏன் என்று இருவருமே ஆராய நினைக்கவில்லை. ஆபத்தில் காப்பாற்றியதோடு அவளை பத்திரமாய் இருப்பிடத்தில் சேர்த்ததில் அவள் மனம் அவனிடம் சரணடைந்துவிட்டது.சாருவிற்கு அந்த நாள் என்றேனும் மறக்குமா என்ன? அன்றைக்கும் அவளை கொணர்ந்து விடுதியில் சேர்த்துவிட்டுத்தான் சென்றான். அவனருகில் அமர்ந்து வந்த அந்த கணங்கள் அவளுக்கு ஒருவித பெருமிதத்தை தந்தது.

ஆனால்...

அதன் பிறகு?? என்னவெல்லாம் நடந்துவிட்டது. வாழ்க்கையை புரட்டிப்போட்ட தருணங்கள் அவை...!!
 
Back
Top