Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

05. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
அன்று இரவு ....
மதுவந்தி கோவிலில் நடந்தவற்றிலேயே உழன்றிருந்தாள். பிறைசூடன் தனக்கு தெரியக்கூடாது என்று மனைவியை பாதிப் பேச்சில் அழைத்தாரா? அல்லது அது எதார்த்தம் தானா?? என்று எண்ணிப் பார்த்தவளுக்கு தடுத்தார் என்பது நிச்சயமாய் விளங்கிப் போயிற்று.

கணவர் சொன்னதும் பேச்சை நிறுத்திய மனோகரி கார் பயணத்தில் அதை தொடராமல் வேறு பேச்சை தொடங்கி பேசினாளே. அப்படி எனில் அவளுக்கும் கணவரின் கருத்தில் உடன்பாடு என்றுதானே அர்த்தம்.
மதுவந்திக்கு மிகவும் வேதனையாக இருந்தது.

அவளிடம் சொல்வதால் பெரிதாக என்ன நேர்ந்துவிடப் போகிறது?அல்லது ரகசியம் காக்கத் தெரியாதவளா என்ன? ஒரு வேளை அந்த விஷயத்தை சொல்ல தான் தகுதியற்றவளா?? இப்படி பலவாறு சிந்தித்து தன்னையே நொந்து கொண்டாள் அவள்.

வழக்கமாக மதுவந்தி லீவில் இருந்தால், தந்தை பணிக்குச் சென்றதும் வீட்டில் இதர வேலைகளை முடித்துவிட்டு மனோகரியின் வீட்டிற்கு ஓடிப் போவாள். ஆனால் இன்று மிகுந்த சிரமத்துடன் அங்கே செல்லும் ஆர்வத்தை அடக்கிக் கொணடு வீட்டிலேயே இருந்தாள். ஆனால் என்ன முயன்றும் பாடப் புத்தகத்தில் ஒரு வரிகூட அவளால் படிக்க முடியவில்லை. ஏனோ காரணமின்றி அழுகை வேறு வந்தது. தன்னிரக்கம் கொள்வது தன்னையே அழித்துவிடும் என்று அவளது பேராசியர் சொன்னது நினைவுக்கு வர, ஒருவாறு மனதை சமனப்படுத்திக்கொண்டு அவளுக்குப் பிடித்த கதைப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினாள்.

பல முறை வாசித்ததுதான் என்றாலும் சலிக்காத கதை அது. மதுவந்திக்கு கவலை வருத்தம் ஆட்கொள்ளும் போது அவளுக்கு பிடித்த விஷயத்தில் மனதை ஈடுபடுத்திக் கொள்வாள். அது முடியாது போனால் பேசாமல் பாட்டு கேட்டபடி தூங்கிவிடுவாள்.

அதன்பிறகு அடுத்து செய்யவேண்டியதை யோசித்து தெளிவாக முடிவெடுப்பாள். இப்போதும் அதே யுக்தியைத்தான் கையாண்டாள். ஆனாலும் மனதில் இருந்த விஷயம் ஏனைய விஷயங்கள் போல சாதாரணம் அல்லவே. இது அவள் வாழ்நாள் முழுவதற்கும் வலி தரும் விஷயமாயிற்றே. ஒருவாறு மனதை திசை திருப்பும் விதமாக அவள் கதை புத்தகத்தில் லயித்திருந்தபோது, அழைப்பு மணி ஒலித்தது.

திடுமென கேட்ட அந்த ஓசையில் ஒருகணம் திடுக்கிட்டவள், ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துவிட்டு அவசரமாய் கதவைத் திறந்து வரவேற்றாள்.
மனோகரிதான் வந்திருந்தாள். "என்னம்மா மது, பரிட்சைக்கு படிக்கிறேன் என்று இன்றைக்கு ஆன்ட்டியை பார்க்கக்கூட வரவில்லையே?" என்றவாறு

மதுவந்தி காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்!

லேசாய் புன்னகைத்து விட்டு "வராமல் என்ன ஆன்ட்டி? இரவு தானே சந்தித்தோம்? படித்துவிட்டு சாயந்திரமா வரலாம்னு இருந்தேன் , அவசரம் என்றால் ஒரு குரல் கொடுத்தால் ஓடிவரும் தூரம்தானே? என்றவள், "கொஞ்சம் இருங்க ஆன்ட்டி மோர் கொண்டு வர்றேன்" என்று உள்ளே செல்ல முயன்றவளை,

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா, நான் உன்னை அழைக்க வந்தேன் மது" என்றதும் உள்ளம் பதற மருமகளை காட்ட கூப்பிட வந்திருப்பாளோ என்று எண்ணம் ஒட,

"எதுக்கு ஆன்ட்டி, நான் என்ன பெரிய மனுஷியா, வீட்டுக்கு வந்து கூப்பிட?ஒரு குரல் கொடுத்தா ஓடி வந்திருப்பேன்ல" என்று அவசரமாய் கேட்டாள்!

"அது என்னவோ நிஜம்தான் மது. நீ படிக்கிற பிள்ளை உன்னை அலைய வைப்பானேனு நானே வந்தேன். இன்னிக்கு சாயங்காலம் நீ கொஞ்சம் என்கூட வரமுடியுமா மதும்மா. நாங்க மும்பைக்கு அடுத்த வாரத்துல கிளம்பறோம் தெரியுமில்லையா? என் மகளுக்கு சில சாமான்கள் வாங்கனும், நீ நல்லா செலக்ட் பண்ணுவியே அதான் உன்னைக் கூட்டிட்டு போகலாம்னு நினைச்சேன்!" என்றாள் பெரியவள்.

அவள் எண்ணி பயந்தது போல இல்லை எனவும், முன்தினம் மனோகரி தன்னிடம் எதையோ சொல்லாமல் மறைத்துவிட்டாள் என்ற ஆதங்கம் வருத்தமெல்லாம் மறந்துபோயிற்று. வினாடி கூட யோசிக்கவில்லை உடன் வர சம்மதித்துவிட்டாள் மதுவந்தி..!

மாலையில்__

கடைகளுக்கு சென்று மனோகரியுடன் பொருள்களை தேர்வு செய்தது தனி அனுபவமாக இருந்தது. நிறைய விஷயங்களை அவள் கற்றுக் கொண்டாள். தேர்வு செய்தது என்னவோ மதுவந்தி தான் அதிலும் எப்படி செய்தால் எப்படி தரமானதை கண்டுபிடிக்கலாம் என்று சொல்லித் தந்தாள் பெரியவள். அன்னை இருந்திருந்தால் இப்படித்தான் சொல்லித் தந்திருப்பாள் என்று எண்ணிக் கொண்டாள் மதுவந்தி.

கடைசியில் வருங்கால மருமகளுக்கு என்று நகைக் கடையில் சின்ன சங்கிலியைத் தேர்வு செய்ய சொன்னாள் மனோகரி.

மதுவந்தி எடுத்து கொடுக்க, வாங்கி அவள் கழுத்தில் வைத்து பார்த்தபோது ஒரு கணம் அசைவற்றுப் போனாள். கண்களில் சிரிப்புடன் அழகு பார்த்துவிட்டு அதற்கு பில் போடச் சொன்னாள் மனோகரி. அதுவரை இருந்த உற்சாகம் காணாமல் போய் சோர்வு உண்டாயிற்று. அதைக் காட்டிக் கொள்ளாமல் வெளிப்புறமாய் வேடிக்கைப் பார்க்கும் பாவனையில் நின்று கொண்டாள் மதுவந்தி.

வீடு திரும்பிய போது நல்லவேளையாக மனோகரி மருமகள் பேச்சை எடுக்காமல் , வரப் போகும் பேரக் குழந்தை பற்றியும் மகளைப் பற்றியும் பேசிக் கொண்டு வந்ததால் அவளால் மனதை சமனப்படுத்தி அதில் கவனம் செலுத்த முடிந்தது.

இன்னாருக்கு இன்னார் என்ற இறைவன் வகுத்ததை யாரால் மாற்ற இயலும்....!
 

Attachments

  • 20201209_093413.jpg
    20201209_093413.jpg
    324.1 KB · Views: 0
Back
Top