Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

05. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
26
Points
28
Location
India
சக்தி சுந்தரத்திற்கு அன்று இரவு முழுதும் அதே சிந்தனை தான். அந்த முகம் பார்த்த ஞாபகம் இருந்தது. எங்கே என்றுதான் நினைவில்லை. அதனால் அவனுக்கு இன்னும் ஒரு முறை பார்த்து தெளிவு படுத்திக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டது.

ஆகவே...மறுநாள் அதிகாலையில் சக்தி அந்த மண்டபத்திற்கு சென்றான். அந்தப் பாதை கொஞ்சம் திகிலூட்டியபோதும், இளம்பெண்! அவளே போகையில் அவன் கட்டிளம் காளை, அவன் பயப்படலாமா?? அவனுக்கு அந்தப் பெண் முன் தினம் போல் இன்றைக்கும் வருவாள் என்ற எண்ணம். ஆனால் அவள் வரவில்லை. மூன்று நாட்கள் அது தொடர்ந்தது. சக்திக்கு இப்போது நண்பன் சொன்னது போல அவள் பெண்ணல்லவோ என்ற சந்தேகம் தோன்ற உள்ளுர சற்று கலக்கமாக இருந்தது. ஆனால் அவள் கண்முன் மறையவில்லையே, எழுந்து ஓடித்தானே போனாள் என்று திடத்தை வரவழைத்துக் கொண்டான்.

நான்காம் நாள் முன் இரவிலிருந்து அடை மழை விடாது காலையிலும் தொடர்ந்தது. அதனால் சக்தியினால் மண்டபத்திற்கு செல்ல இயலவில்லை. மனம் தவித்தது. ஒருவழியாய் பிற்பகலில் மழை ஓய்வு எடுக்க.. சாப்பிட்ட கையோடு சக்தி மண்டபத்திற்கு கிளம்பினான்.

அவனுக்கே இது சற்று சிறு பிள்ளைத்தனமாக தோன்றியது. அந்தப் பெண் இந்த ஊரில் தான் இருக்கிறாள் என்று என்ன நிச்சயம் ? ஒருவேளை அவள் சென்றுவிட்டு இருந்தால்? நினைக்கவே பிடிக்கவில்லை. எப்படியும் அவளை கண்டு பிடிக்காமல் விடக்கூடாது என்று மனதுக்குள சங்கல்பம் செய்து கொண்டான்.

மண்டபத்தை கவனித்தான். சற்று சுத்தமாக காணப்பட்டது. ஒரு மூலையில் இருந்த விளக்குமாறு காரணத்தை விளக்கியது. அதுவே நம்பிக்கையையும் கொடுத்தது. அப்படி என்றால் அவள் இங்கேதான் இருக்கிறாள். தினமும் அதிகாலையில் வந்தபோது அந்த இருட்டில் இதை எல்லாம் காண முடியவில்லை. இப்போதும் கூட மழை மேகமாக சற்று வெளிச்சம் குறைவாகத்தான் இருக்கிறது. ஆனாலும் நிதானமாக பார்க்கையில் எல்லாமும் தெளிவாய் தெரிந்தது. உடனே திரும்ப மனமற்று

சில்லிட்டு இருந்த தரையில் தாயின் வறபுறுத்தலுக்காக தலையில் கட்டிக் கொண்டு வந்த துண்டை விரித்துப் படுத்தான். அத்தனை நாள் சரியான தூக்கம் இல்லாததாலோ என்னவோ அவனையும் அறியாமல் கண்கள் அயர அப்படியே தன்னை அறியாமல் கண்ணயர்ந்துவிட்டான். திடுமென சந்தன சோப்பின் வாசம் நாசியை தாக்க திடுக்கிட்டு விழித்த சக்தி, இருள் சூழ்ந்திருந்ததைக் கண்டுவிட்டு வெகுநேரம் தூங்கிவிட்டதை உணர்ந்தான். கைப்பேசியில் மணியை ப் பார்த்தான் 6ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. அவசரமாய் எழுந்தான். சன்னமான கொலுசின் ஒலி கேட்க, நண்பன் அன்பரசு சொன்னது அசந்தர்ப்பமாக நினைவிற்கு வர, அந்த நேரத்திலும் அவனுக்கு ஒருகணம் பயத்தில் குப்பென்று வியர்த்தது. ஆனாலும் ஒருவாறு தன்னை திடப்படுத்திக் கொண்டவனுக்கு இப்போது. இருட்டு கண்களுக்கு பழகிவிட, வாசல் புறம் திரும்பினான், கையில் சிறு டார்ச்சுடன் அந்தப் பெண்ணின் உருவம் ஒரு தூணிற்கு பின்னால் சென்று டார்ச்சை கீழே வைத்துவிட்டு உடை மாற்றத் தொடங்கவும்,

"கொஞ்சம் பொறு, நான் வெளியே போய்டுறேன்" என்று சக்தி எழுந்து வாசலுக்கு போக, அவனது குரலில் நிரஞ்சனா வெலவெலத்துப் போனாள். இதயம் வேகமாய் தடதடத்தது. அவசர அவசரமாய் உடையை மாற்றி முடித்தவளுக்கு, குளித்த ஈரம் காயாத நிலையில் வியர்க்க ஆரம்பித்தது. மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாசலுக்கு சென்று படியில் கால் வைக்கவும் கையை குறுக்கே நீட்டினான் சக்தி, சட்டென பின்வாங்கியவள், "வழியை விடுங்கள்" என்றாள் கோபத்துடன். ஆனால் குரலில் அழுத்தமோ பயமோ இல்லை என்பதை சக்தி கவனித்தான். வழக்கமாக தனியாக இருக்கிற பெண், அந்நிய ஆணைக் கண்டால் பதறுவாள். அல்லது நடுங்கி அழுது கெஞ்சுவாள். ஏதோ பழகியவரிடம் சொல்வது போல இருந்தது அவளது தொனி,உள்ளுர வியந்தபடி,

"ம், ம்... முதலில் நீ யார் என்று சொல்லு"பிறகு வழியை விடுகிறேன்"

"தனியா இருக்கிற பெண்ணிடம் இப்படி கேட்கிறது தப்புனு படிச்ச உங்களுக்கு தெரியாதா?"

அவன் படித்தவன் என்று அவளுக்கு எப்படி தெரியும்? அப்படியானால் அவனை அவளுக்கு ஏற்கனவே தெரியும் போலிருக்கிறதே, சுவாரசியம் கூடிக்கொண்டே போக, "உன்னை முன்னே இந்த ஊரில் பார்த்தது இல்லை, அதுதான் யாருன்னு விசாரிக்கிறேன், அதில் என்ன தவறு? அது எப்படி நான் படிச்சவன்னு சொல்றே? அப்படின்னா உனக்கு என்னை முன்பே தெரியுமா? எப்படி அதையும் சொல்லு" என்றான் சக்தி அழுத்தமான குரலில்.

"ஒருகணம் தயங்கியவள். அதை எல்லாம் உங்களுக்கு இப்ப சொல்ல முடியாது". என்றாள்.

அந்த பதிலில் சக்திக்கு மேலும் வியப்பு கூடியது,"பின்னே எப்போ சொல்லுவாய்?"

"இப்ப சொல்ல முடியாது அவ்வளவுதான், என்றவள்," எனக்கு நேரமாகிறது. வீட்டில் தேடுவார்கள். நான் போகனும் வழியை விடுங்கள்" என்றாள் கறார் குரலில்.

“விடவில்லை என்றால் ?" சக்திக்கு தன்னை எண்ணியே வியப்பாக இருந்தது. பொதுவாக உறவு வகையில் உள்ள இளம் பெண்களிடம் நின்று கூட பேச தயங்குவான். அப்படிப்பட்டவன் இன்று அந்தி முடிந்து இருள் சூழ்ந்த வேளையில் ஒரு இளம் பெண்ணிடம் இப்படி வம்பு செய்கிறானே?

"ராத்திரி பூராவும் இங்கேயே நிற்பீங்களாக்கும்? சும்மா வம்பு பண்ணாம வழியை விடுங்க, இல்லைன்னா." என்று பேச்சை நிறுத்தினாள்.

"இல்லைன்னா? கூச்சல் போட்டு ஊரை கூட்டுவியா? எங்கே அதை செய் பார்க்கலாம்" என்று சவால் விட்டான் சக்தி. யாரும் அறியாமல் வந்து போகிறவள் அந்த காரியத்தை செய்ய துணிய மாட்டாள் என்று திடமாக நம்பினான்.

"நான் ஏன் கூச்சல் போடப் போறேன்? அப்படி போட்டாலும் இங்கே யாரும் வர வாய்ப்பில்லை என்று எனக்கு தெரியாதா?? அதனால் நான் உங்களை தள்ளிவிட்டுட்டு ஓடிருவேன், ஒரு ஆண் பிள்ளையை தொடக்கூடாது என்பதற்காகவும் அப்படி தள்ளினால் படியிலிருந்து கீழே விழுந்து உங்களுக்கு அடிபட்டுவிடுமே என்பதற்காகவும் தான் நான் பொறுமையாக சொல்றேன், வழியை விடுங்கள் " என்று திருத்தமாக சொன்னாள் நிரஞ்சனா.

அவளது பேச்சு திகைப்பை உண்டு பண்ணிற்று.... இன்றைக்கும் இருட்டில் அவளை சரியாக பார்க்க முடியவில்லை. ஆனால் அவளது பேச்சும் தோரணையும் படித்தவள் போல தெரிகிறாள்.... யாரிவள் ?? இந்த கிராமத்தில் என்ன செய்கிறாள்??
 

Attachments

  • IMG-20220111-WA0024.jpg
    IMG-20220111-WA0024.jpg
    86.6 KB · Views: 0
Back
Top