Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

04. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
முத்தரசி மாலதியை வளர்த்த அத்தை. அவளை பொறுத்தவரை மாலதி சம்பளம் வாங்காத வேலைக்காரி. அவளுக்கு வந்த வரன்களை ஏதாவது ஒரு குறை சொல்லி தட்டி கழித்தபடி இருந்தவள். ஓரளவு அதை மாலதி அதை அறிந்திருந்த போதும் அத்தையை மீறி அவளால் எதுவும் செய்ய முடியவில்லை. தன் காலில் நிற்கும்படியாக படிப்போ, கைத்தொழிலோ கற்றுக் கொண்டிராத நிலையில் வீட்டை விட்டு வெளியேறவும் துணிவற்று இருந்தபோது தான் மனோரமா தன் கணவனை மணக்க கோரி வந்து நின்றாள். மூத்தவள் கூடவே இருக்க இரண்டாவது மனைவியாக வாழ கொஞ்சமும் பிடிக்கவில்லை. அதையே முத்தரசியும் சொல்லி, " உன் அழகுக்கு எதுக்கு இந்த தலை எழுத்து? அப்படியே உனக்கு ஒரு குழந்தை பிறந்தால் அதை வைத்துக்கொண்டு உன்னை விரட்டி விடவும் செய்வார்கள், என்று தட்டிக்கழிக்க வழக்கம் போல முயன்றாள். மனோரமா தூரத்து உறவு தான் என்றாலும் அவளை பற்றி அறிந்திருந்த மாலதிக்கு அத்தையின் பேச்சும் பிடிக்கவில்லை. கூடவே இதுதான் அவளிடம் இருந்து விடுதலை பெற வழி என்றும் தோன்றிவிட, தன் விருப்பு வெறுப்பை ஒதுக்கிவிட்டு திருமணத்திற்கு ஒத்துக்கொண்டாள்.

அதே போல மனோரமா, ஓரளவு அத்தையை பற்றி அறிந்திருந்ததால், அவளது வருமானத்திற்கு ஏற்பாடு செய்வதாகவும், அவள் பெயரில் வங்கியில் கணிசமான தொகையை போடுவதாக வாக்களித்ததோடு அதை நிறைவேற்றவும் செய்தாள். திருமணம் ஆன கையோடு ஊர் சுற்ற கிளம்பி விட்டாள் முத்தரசி.. மனோரமா உயிரோடு இருக்கையில் அப்போதே அவள் அதிக நாள் உயிர் வாழப்போவதில்லை என்று உணர்ந்தாற் போல கணிசமான தொகையை மீண்டும் வங்கியில் மிருதுளா மூலம் போட்டு விட்டிருந்தாள். (மிருதுளாவிற்கு விருப்பம் இல்லை என்றாலும் தங்கைக்காக செய்தார்).

முத்தரசிக்கு பணத்தை வட்டிக்கு விட்டிருந்ததால் அவளுக்கு பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை ஓடியது. ஒரு கட்டத்தில் கூடவே வட்டிப்பணம் வசூலிப்பது பெரும்பாடக இருந்தது. இதற்கு இடையில் மனோரமா காணாமல் போனதும், மாலதி ஏதோ ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பதாகவும் அறிந்தாள். அவளுக்கு பணம் வருவது நிற்காததால் அதை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. இப்படியே இரண்டு வருடங்கள் கழிய, அந்த வாழ்க்கை அவளுக்கு சுவாரசியமாக இல்லை. தானே சமைப்பதும் தின்பதும், ஊர் கதை பேசுவதும் அலுத்துவிட, அண்ணன் மகள் மாலதியை ஒரு நடை பார்த்து வரலாம் என்று கிளம்பினாள்.

அப்போது மாலதி உண்டாகி இருந்தாள். மசக்கையாக இருக்கும் பெண்களுக்கு உண்டான மயக்கமும் பலவீனமும் மாலதிக்கும் இருந்தது. அதுபோக மகள் மகதியை கவனிக்கும் பொறுப்பும் இருந்ததால் அவள் திணறிக் கொண்டு இருந்த சமயம் முத்தரசி வந்ததும் சற்று ஆறுதலே அடைந்தாள் எனலாம். எதிர்பார்த்ததை விடவும் மாலதி பெரிய வீடு ..இல்லை பெரிய பங்களாவும் கார்களும், ஏவலுக்கு வேலையாட்களும் என்று ராஜ வாழ்க்கை நடத்திக்கொண்டு இருந்ததை பார்த்த முத்தரசிக்கு வயிறு காந்திற்று. கூடவே அவள் அந்த வீட்டு சம்பந்தி என்ற எண்ணம் தலை தூக்க, அந்த வீட்டிற்கே எஜமானியாக எண்ணிக் கொண்டாள். இப்படி ஒரு வாழ்வை விட்டுவிட்டு போன மனோரமா சரியான பைத்தியக்காரி என்று நினைத்தவள், அதுவும் நல்லதாயிற்று. இல்லாவிட்டால் விருந்து மருந்தும் 3நாள் என்று துரத்திவிட்டிருப்பாள் என்று ஆசுவாசமானாள்.

ஆனால் மாலதியின் நிலையை கண்ட பெரியவளுக்கு சந்தோசம் ஒருபுறம் ஆத்திரம் ஒருபுறம். அவள் தத்து எடுத்து வைத்திருக்கும் பெண் குழந்தை. அப்படி என்ன அவசியம் அவசரம் ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு? அட எடுத்தது தான் எடுத்தாள் ஒரு ஆண்பிள்ளையை எடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம். இப்போது சொத்தில் பங்கு வேறு கொடுத்தாக வேண்டுமே? இது போன்ற பெரிய வீடுகளில் பெண் பிள்ளைகளை படிக்க வைப்பது ஒரு செலவு.. அதற்கும் மேலே கட்டிக்கொடுக்கும் போது நகை நட்டு பண்டபாத்திரம் என்று ஏகப்பட்ட செலவுகள். .. அது வேறு செலவுகள்.. இதை எல்லாம் யோசிக்காமல் இப்படி முட்டாள்தனமாக பண்ணி வைத்திருக்கிறாளே?? இப்போது அந்த குழந்தைக்கு அவள் ஆயா வேலை வேறு பார்த்ததாக வேண்டும். பெரிதாக ஒன்றும் இல்லை தான். வேலை ஆட்கள் குளிபாட்ட, விளையாட்டு காட்ட எல்லாம் செய்தார்கள். சோறு ஊட்டுவது மட்டும் மாலதி அல்லது முத்தரசி செய்ய வேண்டும். ஆனால் முத்தரசியை முதல் பார்வையிலேயே குழந்தைக்கு பிடிக்காமல் போய்விட, மாலதியே பார்த்து கொண்டாள். அல்லது பழகிய வேலையாட்களிடம் ஒட்டிக்கொண்டாள் குழந்தை. அதுவும் நல்லதாயிற்று என்று சொகுசு வாழ்க்கையை அனுபவித்தாள். நிறை மாதமான சமயத்தில் குழந்தை மாலதியை விட்டு விலக மறுத்தது.

அன்றைய தினம் மகதிக்கு பிறந்தநாள், மனோரமாவின் நினைவு நாள். கூடவே மாலதிக்கு எந்த நேரமும் பிரசவ வலி எடுக்ககூடும் என்று மதனகோபாலும் வேலைகளை ஒதுக்கி வீட்டில் இருந்தார். அதனாலேயே விழாவிற்கு ஏற்பாடு செய்யவில்லை. இன்னும் ஒரு வாரம் என்று மருத்துவர் சொல்லி இருந்தாலும் முன்னதாகவும் பிறக்கவும் கூடும் என்று முத்தரசியிடம் எல்லாம் தயாராக எடுத்து வைக்க சொல்லி இருந்தார். மாலையில் பிரசவ வலி அதிகமாகவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அன்று பெண் குழந்தை பிறந்தது. அது மகதியின் நகல் போல இருந்தது. குழந்தை பிறந்து வீடு வந்தபிறகு, பெரிய குழந்தையிடம், "அம்மா பாப்பாவை கவனிக்க வேண்டும் என்று எடுத்து சொல்லி பாட்டியிடம் அனுப்பி வைத்தபோது மகதி அடம்பிடிக்காமல் சொன்னபடி நடந்தாள். கூடவே தன்னால் ஆன மட்டும் மாலதியும் பெரியவளை கவனித்து கொள்ள, சில நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் கழிந்தது. ஆனாலும் சிறு குழந்தைகளுக்கே உரிய சில பிடிவாதங்கள் மகதிக்கும் இருந்தது. அப்படி ஒரு சமயம் அடம்பிடித்து முத்தரசியின் கையை கிள்ளிவிட்ட குழந்தையிடம், "அனாதை கழுதை உனக்கு எவ்வளவு கொழுப்பு" என்று அடிக்க கை ஓங்க...

அப்போது அங்கே வந்த மாலதியின் காதில் அந்த வார்த்தைகள் விழ, கொதித்து போனாள். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது போல என்ன பேசுகிறோம் என்று உணராமல், "அத்தை ஜாக்கிரதையாக பேசுங்கள். இன்னொரு முறை அவளை அப்படி சொன்னால் நான் பொல்லாதவளாகிவிடுவேன், என்று எச்சரித்துவிட்டு பணியாளை அழைத்து குழந்தையை அனுப்பி வைக்க,

முத்தரசி வளர்த்து ஆளாக்கிய அவளையே அதிகாரம் செய்வதா என்ற ஆத்திரத்துடன், " அப்படி என்னடி நான் இல்லாததை சொல்லிட்டேன்? என்னை வந்து அடக்குகிறாயே? உனக்கு அவள் மகளாக இருக்கலாம். எனக்கு தெரியாதா என்ன? அனாதையை அனாதை என்று தானே சொல்வார்கள்?"

"அத்தை என்னிடம் சொன்னதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். என் புருஷன் காதில் விழுந்தால் அவ்வளவுதான். உங்களை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்" என்று மீண்டும் எச்சரித்தாள்.

"இதென்னடி கூத்தாக இருக்கிறது?? உள்ளதை சொன்னா உடம்பு எரியுதாக்கும்?? கோவம் வர்றதுக்கு, என்னவோ அவருக்கு பிறந்த குழந்தை மாதிரி" என்றாள் நக்கலாக...

அவளுக்கு உண்மையை விளக்கி விடும் வேகத்தில், "என்ன உள்ளதா? என்னத்தை கண்டீர்கள் அத்தை? ஆமாம், அவள் அவருக்கு பிறந்த மகள்தான். மனோரமா அக்காவுக்கும் அவருக்கும் பிறந்த குழந்தை அவள். அக்கா இப்போது இல்லை. அதனால் நான்தான் அவளுக்கு அம்மா. அவளுக்கு இந்த விஷயம் எப்பவும் தெரியக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இனி ஒரு முறை குழந்தை முன்னாடி அந்த வார்த்தையை சொல்லாதீர்கள்". என்னாலும் தாங்கமுடியாது" என்று படபடத்து விட்டு நகர்ந்து விட

முத்தரசிக்கு பொதுவாக யாரும் சந்தோசமாக வாழ்வதை கண்டால் ஆகாது. காரணம் அப்படி ஒரு நல்வாழ்வு அவளுக்கு அமையவில்லை. கணவன் ஓடிப்போனான். குழந்தை பாக்கியமில்லை. மாறாக அண்ணன் வீட்டில் தஞ்சமாகி அவர் பெற்ற மகளை வளர்க்கும்படி நேர்ந்தது. அவரும் போனபிறகு சும்மா என்றால் அனாதை ஆசிரமத்தில் போட்டிருப்பாள். ஆனால் அண்ணன் வங்கியில் வைத்திருந்த காப்பீட்டுத் தொகை அவளை அடக்கியது. சந்தோசம் என்பது தனக்குள் தான் இருக்கிறது என்பதை உணராத பதர், பணமும் வசதியான வாழ்வுமே சந்தோசம் என்ற எண்ணம் அவளுக்கு. மாலதியின் வாழ்வு அதனால் தான் சந்தோசமாக இருப்பதாக நினைத்தாள். இப்போது இந்த ரகசியம் அவளுக்கு ஒரு துருப்பு சீட்டாக அமைந்தது. அதை கொண்டு எப்படி ஆதாயம் தேடலாம் என்று மனதில் கணக்கு போடலானாள். ஒரு குடும்பத்தை உடைப்பது பாவம் என்று எண்ணவில்லை அந்த பொல்லாதவள்.

இரண்டு குழந்தைகளும் வளர வளர இரட்டையர்களாக தோன்றினர். இரண்டு வயது வித்தியாசம் என்று சொன்னால் நம்ப முடியாத அளவிற்கு தோற்றமும் வளர்ச்சியும் இருந்தது.

முத்தரசி தன் வேலையை ஆரம்பித்தாள். மகதி அவளிடம் ஒட்டவில்லை. ஆனால் சின்னவள் நன்றாக ஒட்டிக்கொண்டாள். அதன் விளைவாக பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலானாள். "உன் தாய்க்கு நீதான் முதல் பெண். அவள் உன் கூடப்பிறந்தவள் இல்லை. உன் அம்மா உன்னை விட அவளுக்கு தான் முன்னுரிமை தருகிறாள்." இப்படி அந்த குழந்தைக்கு புரியும் வகையில் உரு ஏற்றிவிட்டதோடு நில்லாமல் அவள் செய்யும் தவறுகளை மகதி மீது பழி சுமத்தி அதற்கு சாட்சியமும் கூற, சின்னவளுக்கு அது ஒரு விளையாட்டு ஆயிற்று.

அவ்வப்போது வந்து போய் கொண்டு இருந்த மிருதுளாவும்கூட. சின்ன குழந்தை தானே வளர வளர சரியாகிவிடும் என்று எண்ணினாள்.

மாலதி முட்டாள் அல்ல. கூடிய சீக்கிரமே காரணத்தை ஆராய்ந்து கண்டுபிடித்தவள், வயதான காலத்தில் விரட்டி அடித்த பாவம் தனக்கு வேண்டாம் என்று மதுமதியை வெளியூர் பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைக்க ஏற்பாடு செய்தாள். முத்தரசி சொன்னது தான் உண்மை என்பது போல மதுமதிக்கு தோன்றிவிட, அதனால் வன்மம் தான் கூடியது.

மகதிக்கும் ஓரளவு விவரம் புரியத் தொடங்கியது. விடுமுறையில் மதுமதி வந்தபோது, மாலதி அவளை நன்றாகவே பிரியத்துடன் நடத்தினாள். ஆனால் அது எதுவும் அவள் கருத்தில் படவில்லை. அன்னை தன்னை வெளியூர் அனுப்ப காரணமே மகதி தான் என்ற எண்ணம் வலுவாக மனதில் பதிந்துவிட்டிருந்தது. அதனால் அவள் ஒரு காரியம் செய்தாள். அதன் விளைவாக மாலதி, மகதியை அந்த வீட்டை விட்டு அனுப்ப நேர்ந்தது.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top