Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

04. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
மருத்துவமனையில் ...

காயம் ஆழமில்லை. காரில் மோதிய பயத்தில் மயக்கம் வந்துவிட்டிருக்கிறது என்று மருத்துவர் சிகிச்சை அளித்து மருந்து மாத்திரை எழுதித் தந்து வீட்டிற்கு அழைத்து போகச் சொல்லிவிட்டார். தலையில் சின்ன கட்டுடன் வந்தாள் அவள். அவனைப் பார்த்து தயங்கியபடி" ரொம்ப நன்றி சார். என் பேக் ? என்று கேட்டாள்.

"என் காரில் தான் இருக்கு. உன் வீடு எங்கே என்று சொன்னால் நான் ட்ராப் பண்ணிடுறேன்."என்றான் சித்ரஞ்சன்

"இல்லை, உங்கள் உதவிக்கு நன்றி சார். உங்களுக்கு ஏன் சிரமம்? நானே போய்க் கொள்கிறேன்,மருத்துவமனைச் செலவு எவ்வளவு ஆயிற்று என்று சொன்னால் தந்துவிடுகிறேன்"என்றதும்,

சித்ரஞ்சனுக்கு அவள் தன்னை தள்ளி நிறுத்த முயல்வது புரிந்தது. இது முதல் முறை இல்லை. ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் தானே? இளம் பெண், இரவு நேரம் என்பதால் ஏற்கெனவே சந்தித்திருந்தாலும் கூட அவனோடு வரத் தயங்குகிறாள் போலும்? என்று எண்ணும்போதே மனதில் ஒருவித நிம்மதியும் தெளிவும் உண்டாக...

"எனக்கு என்ன சிரமம்?" என்றான். ஆனால் அவள் மறுப்பாய் ஏதோ சொல்ல முயலவும்...

"சரி,சரி, பில் பணம் பெரிய தொகை இல்லை. நீ, ஆட்டோவில் போ, ஆனால் இரவு நேரம் தனியாகப் போவது ஆபத்து. நான் பின்னாடியே வந்து நீ பத்திரமாய் வீடு சேர்ந்துவிட்டாய் என்பதை பார்த்தபின் என் இடத்திற்கு போய்க் கொள்கிறேன்" என்று சொல்ல

சிறு வியப்பும் வினோதமுமாய் பார்த்துவிட்டு,"சரி, உங்கள் காரிலேயே வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை நடந்தவற்றைப் பற்றி எதுவும் கேட்கக்கூடாது.. சரியா?" என்றதும்,

"எனக்கு எதற்கு அதெல்லாம் ? தெரிந்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். வழியில் , நான் எதுவும் கேட்கவில்லை. வாயைக் கூட திறக்காமல் வருகிறேன் போதுமா?" என்றான் புன்னகையுடன்.

எதிரொலியாய் லேசாய் புன்னகை கீற்று தெரிய அவள் மனம் மாறும் முன்பாக கிளம்பிவிட வேண்டும் என்று அவளை முன்னே போகச் சொல்லி பின் தொடர்ந்தான்.

அவன் சொன்னது போல பேசவில்லை. ஏன் அவள் பெயரை கூட அறிய முற்படவில்லை. டேப்பில் தமிழ்ப் படப்பாடல்களை ஓடவிட்டு காரை அவள் காட்டிய வழியில் செலுத்தினான் சித்தரஞ்சன்.

ஒரு பெண்கள் விடுதியின் முன்பாக காரை நிறுத்தச் சொல்லி இறங்கினாள் அவள். இறங்கும் முன்பாக அவன் தன் கார்டு ஒன்றை தந்தான். சில தினங்கள் தங்கப்போவதையும் அவசியமானால் உதவிக்கு அழைக்கும்படியும் சொன்னான் சித்ரஞ்சன்.

ஒருகணம் யோசித்துவிட்டு அதை வாங்கி பையில் போட்டுக் கொண்டு சிறு தலையசைப்புடன் நன்றி தெரிவித்துவிட்டு திரும்பிப்பாராமல் சென்றுவிட்டாள் அவள்.

முகத்தில் அறை வாங்கிய உணர்வு. சித்ரஞ்சன் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன பெண் இவள்? பதிலுக்கு அவளது பெயரைக்கூட சொல்லாமல் போகிறாளே? ஒருவேளை அன்றைக்கு ஹால் டிக்கட்டில் பார்த்திருக்ககூடும் என்று எண்ணி சொல்லாமல் விட்டிருப்பாளோ? அன்றைக்கு இருந்த பதற்றத்தில் அதை எல்லாம் அவன் எங்கே கவனித்தான்?

ஹூம்! மீண்டும் இப்படி ஓரு சந்திப்பு நிகழும் என்று அவனும்தான் நினைத்தானா என்ன? இருந்தாலும் மகா அழுத்தக்காரிதான். என்னாயிற்று என்று கூறாமலே போய்விட்டாளே? அங்கே அவள் எதற்காக போனாள்? அந்த இளைஞர்கள் ஏன் துரத்தினார்கள்? இப்படி நிறைய கேள்விகளுக்கு விடை அறிய முடியாமல் தன் இருப்பிடம் திரும்பினான்.

ஆனால் அடுத்த நாலாவது நாள் அவளை மீண்டும் சித்ரஞ்சன் சந்திக்க நேர்ந்தது!

அப்போது....!

🧡🧡🧡

அன்று ஞாயிறு...அது அந்த சம்பவத்திற்கு பின் நாலாவது நாள். காலை உணவை முடித்தபின் அன்று ஓய்வு நாள் என்பதால் சில பொருள்கள் வாங்கவென்று பிரபல மால் ஒன்றிற்கு சென்றான் சித்ரஞ்சன். வேண்டிய பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு கடையிலிருந்து வெளியேறும் போது, அந்த "அவள்" உள்ளே நுழைந்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகைத்தாள்.

பதிலாக புன்னகைத்து,"ஹாய் மா ! எப்படி இருக்கே? காயம் நல்லா ஆறிடுச்சா?" என்று நலம் விசாரித்தான்."

"ஆமா, போயே போச்சு" என்று புன்னகைத்தாள்.

"நீ தனியாகவா வந்திருக்கிறாய்??"என்று பேச்சை வளர்த்தான் சித்ரஞ்சன். அவனுக்கு வந்த வேலை முடிந்துவிட்ட போதும் அவளை விட்டு உடனே விலக மனம் வரவில்லை.

"இல்லை என் பிரண்ட் வர்றேன்னு சொல்லிருக்காங்க, அதுவரைக்கும் ஜஸ்ட் வின்டோ ஷாப்பிங் பண்ணலாம்னு இந்தப் பக்கமாக வந்தேன். நீங்கள் முடித்து விட்டீர்களா? அவள் மிக நிதானமாக பேசினாள்.

அவளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க விரும்பி, "எனக்கு தெரிந்த கல்லூரி மாணவிக்கு சில பரிசு பொருள் வாங்கித் தரவேணும். ஆனால் அவளுக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது என்று என்னால் கணிக்க முடியவில்லை. உனக்கு அவகாசம் இருந்தால் கொஞ்சம் உதவ முடியுமா? சிரமம் என்றால் பரவாயில்லை நான் கடைக்காரர் உதவியுடன் வாங்கிக் கொள்கிறேன்" என்று அவன் சொல்ல..

ஒருகணம் யோசித்துவிட்டு, "சரி என்னோடு வாருங்கள்" என்று அவள் பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் இருந்த கடைக்குள் நுழைந்தாள்.

சித்ரஞ்சன் உள்ளூர புன்னகைத்தவாறே அவளை பின் தொடர்ந்தான். அவள் காட்டிய சிலவற்றை என்னவென்றே கவனிக்காமல், விலையை பாராமல் வாங்கிக் கொண்டான். அவளுக்கு கொஞ்சம் பிரமிப்பு தான்! ஆனாலும் காட்டிக்கொள்ளவில்லை.

அவனோ இறுதியில் "நான் நண்பன் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். அதனால இதை எல்லாம் அங்கே கொண்டு செல்ல முடியாது, உன்னிடமே வைத்துக் கொள். நான் ஊருக்கு செல்லுமுன்னதாக வாங்கிக்கொள்கிறேன்,"என்று சித்ரஞ்சன் சொல்ல,

அவள் ஒருகணம் திகைத்துவிட்டு, உடனேயே சினம் துளிர்க்க,"என்ன விளையாடுகிறீர்களா? நான் மட்டும் இதை எல்லாம் விடுதிக்கு எப்படி எடுத்துப் போவது? அறையில் என்னோடு இருப்பவர்கள்

இதெல்லாம் ஏது என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? நான் இப்படி யாரிடமும் வாங்கிப் பழக்கம் இல்லாதவள்" என்று படபடவென்று பொரியத் தொடங்கிவிட்டாள்.

அத்தனை நேரம் நிதானமாக இருந்த பெண் அவன் சொன்னதற்காக சினம் கொண்டது சித்ரஞ்சனுக்கு பிடித்திருந்தது. உள்ளுர ஏதோ ஒரு நிம்மதி பரவிற்று.

"கூல் கூல் பேபி, எதுக்கு இவ்வளவு படபடப்பு? அதை உன்னை வாங்கிக் கொள்ள சொல்லவில்லையே?? என்றவன், "ஓகே, ஓகே, இப்போது என்ன இதை எல்லாம் நம் இருவராலும் கொண்டு செல்ல இயலாத சூழல். அவ்வளவுதானே? வாங்கிய இடத்திலேயே திருப்பிக் கொடுத்து விட்டால் போயிற்று. நான் ஊருக்கு செல்லும்முன் மறுபடி வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்றான் சர்வசாதாரணமாக.

பெரும்பாலும் அந்த மாதிரி மால் கடைகளில்,வாங்கிய பொருட்களை திரும்பப் பெறமாட்டார்கள். அதே விலைக்கு வேறு வேண்டுமாலும் மாற்றிக் கொள்ளலாம் என்பது அவனுக்கு தெரியும்.

அவள் அவனை வினோதமாக.. அதாவது லூசாப்பா எனும்படியாக ஒரு பார்வை பார்த்தாள். அவன் வேண்டும் என்றே புரியாதவன் போல,"என்னாயிற்று இந்த யோசனைக்கும் தடா வா?? ஏன்?? என்றதும்.

"உங்களுக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல நடிக்கிறீங்களா?" என்றவளின் குரல் சந்தேகமாய் ஓலித்தது.

போடுகிற வேசத்தை ஒழுங்கா போடுடா சித்ரஞ்சா என்று தன்னுள்ளே சொல்லிக் கொண்டு, "ஐயோ நிஜமாய் என்ன காரணம் என்று தெரியவில்லையம்மா, உனக்கு தெரிந்தால் நீதான் சொல்லேன்" என்றான். உள்ளுர அவனுக்கே வியப்புதான்! பெயர் கூட தெரியாத ஒரு பெண்ணிடம் அவனா இப்படி நடந்து கொள்கிறான்?? பொதுவாய் தம்பியின் அனுபவங்களால் அவன் பெண் என்றால் சற்று விலகித்தான் பழக்கம். உள்ளுக்குள் ஏதோ ஒரு குதூகலம். பறக்கிறார் போல உல்லாசமாய் உணர்ந்தான்.

அவள் காரணத்தை விளக்கிச் சொல்லவும் ,"ஓ! அப்படியா? நான் இதுவரை எந்தப் பொருளையும் வாங்கி திரும்பக் கொடுத்ததும் இல்லை, மாற்றாக வேறு பொருளை வாங்கிக் கொண்டதும் இல்லை. செலக்ட் செய்தால் செய்ததுதான்" என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல

அவள் குழப்பத்துடன் மேலே யோசிக்குமுன்பாக தொடர்ந்து, "இப்போ இதை எல்லாம் நான் என்ன செய்வேன்? நீ ஒரு யோசனை சொல்லேன்மா!" இன்னமும் அவள் தன் பெயரை சொல்லாவில்லை என்பதைத்தான் அவன் "மா"விகுதி சேர்த்து பேசியதே. அவளோ சரியான கல்லுளி மங்குனியாக பெயரைச் சொல்வேனா என்று சாதித்தாள். சிலகணங்கள் யோசித்தவள் அவனது பரிதாபமான முகத்தை (அப்படித்தான் வைத்திருந்தான் அந்த போக்கிரி) பார்த்து மனம் இறங்கியவளாய், "சரி, சரி, நானே எடுத்துப் போகிறேன். என்றைக்கு தேவை என்று சொல்லுங்கள் கொணர்ந்து தருகிறேன்" என்றாள்.

ரொம்ப அழுத்தக்காரிதான் என்று எண்ணியவன், “சரிம்மா அடுத்த ஞாயிறு இதேநேரம் இதே இடத்துக்கு வந்துவிடு. நான் வாங்கிக் கொள்கிறேன்" என்றான்.

அடுத்த வாரம் என்ன நடந்தது....!
 
Back
Top