Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

03. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
167
Reaction score
50
Points
28
Location
India
மகதி உருவானதே ஒரு விசித்திரமான சூழலில்தான். மனோரமா - மதனகோபாலின் முதல் மனைவி. திருமணம் ஆகி நாலைந்து ஆண்டுகள் குழந்தை பிறக்கவில்லை. அதற்காக கோயில்களை சுற்றுவதும், விரதங்கள் வைப்பதுமாக, இருந்தாள். அதை விட மருத்துவரை பார்ப்பது நலம் என்று தெரிந்தவர்கள் அறிவுரை கூறினார்கள், ஆனால் மதனகோபால் அப்போது தான் தனது ரெஸ்டாரென்ட்டை தொடங்கி, அது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டு இருந்தது. நிறைய போட்டிகளை சமாளிக்க வேண்டிய சவாலான தொழில் அது. ஆகவே அதிலேயே கவனமாக இருந்தாரே தவிர மனைவி, மருத்துவரை காண அழைத்தபோது அதற்கெல்லாம் தனக்கு நேரமில்லை என்று ஓடிக்கொண்டு இருந்தார். ஒருவழியாக அவரை சம்மதிக்க வைத்து அழைத்து போனாள். நிறைய பரிசோதனைகள் செய்யப்பட்டது. இரண்டு தினங்கள் கழித்து பரிசோதனை விடைகளை தெரிந்து கொள்ள மனோரமா மட்டும் சென்றாள். மருத்துவ பெண்மணி, "அவளுக்கு உடம்பு பலவீனமாக இருப்பதால் உறுப்புகளும் சற்று பலவீமடைந்து உள்ளது . கரு தரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றுவிட, கணவர் அலட்டிக் கொள்ளாமல் ஒரு குழந்தையை தத்து எடுத்து கொண்டால் போயிற்று என்றதோடு அவர் வேலையை பார்க்க போய்விட்டார்.

ஆனால் அவளால் அப்படி எளிதாக நினைக்க முடியவில்லை. தீவிரமாக யோசித்த பின் அந்த முடிவை எடுத்தாள் மனோரமா. கணவனுக்கு இரண்டாவது திருமணம் அது. ஆனால் மதன் அதற்கு ஒப்பவில்லை. எதை எதையோ சொல்லி அவரை இளக்கவைக்க முயன்றவள் கடைசியில் எல்லா பெண்களை போல உயிரை விட்டுவிடுவேன் என்று விஷபாட்டிலோடு வந்து மிரட்ட, அது குறி தப்பாமல் இலக்கில் தாக்கியது.

மதனகோபால் அரை மனதோடு சம்மதித்தார். மாலதி மனோரமாவுக்கு தூரத்து உறவு முறையில் சகோதரி. அவளுக்கு சரியான வரன் அமையாமல் திருமணம் தள்ளி போய்க்கொண்டு இருந்தது. திருமணமே வேண்டாம் என்று வெறுத்துப்போன நிலையில் இருந்தவளிடம் பேசி சம்மதிக்க வைத்து திருமணம் முடித்து வைத்தாள்.

அவர்கள் திருமணம் முடிந்து ஒருவாரம் கழிந்த நிலையில்... மனோரமாவுக்கு தான் தாய்மையடைந்து இருப்பது தெரியவந்தது. சந்தோஷமும் துக்கமுமாக தவித்துப் போனாள். கூடவே அந்த விஷயத்தை வீட்டில் சொல்லாமல் மறைத்தாள். கர்ப்பிணி பெண்ணால் எத்தனை நாள் அப்படி மறைக்க இயலும்??

புதிதாக வந்த மனைவி மாலதியிடம் முகம் கொடுத்துகூட பேசாமல் மதனகோபால் சதா வேலை வேலை என்று ஓடிக்கொண்டு இருந்தார். அவள் குழந்தை விஷயத்தை சொன்னால் மாலதியின் வாழ்க்கை நிச்சயம் வீணாகிவிடும். அந்த பாவம் அவளுக்குத்தான். அதுதவிர தான் இங்கே இருக்கும் வரை அவள் வாழமாட்டாள் என்று உணர்ந்த மனோரமா ஒரு முடிவிற்கு வந்தாள்.

"தன்னை தேட வேண்டாம் என்றும் மீறினால் உலகத்தை விட்டே போய்விடுவேன் " என்று மிரட்டலாய் கடிதம் எழுதி வைத்துவிட்டு, கொடைக்கானல் பக்கத்தில் உள்ள ஒரு எஸ்டேட்டில் இருந்த அவளது அக்கா மிருதுளாவிடம் தஞ்சம் புகுந்தாள். மூத்த சகோதரியான மிருதுளா கலப்பு திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தினர் விலக்கி வைத்துவிட்டனர். ஆயினும் மனோரமா மட்டும் தொடர்பில் இருந்தாள். அதுவே இப்போது அவளுக்கு வசதியாயிற்று.

மிருதுளாவிற்கு தங்கை வந்ததில் மகிழ்ச்சி தான். ஆனால் அவள் செய்துவிட்டு வந்த காரியம் தான் சிறிதும் உடன்பாடில்லை. இருப்பினும் தஞ்சமென்று வந்துவிட்டவளை நோகடிக்க மனமின்றி அரவணைத்துக் கொண்டாள்.

கணவனைப் பிரிந்து வந்த வேதனையும் பிள்ளை பேறு உண்டானதில் மகிழ்ச்சியுமாக இருவித உணர்வுகளுக்கு உள்ளானாள் மனோரமா. அதிகமாக கணவனின் அருகாமைக்கு ஏங்கினாள். ஏற்கனவே பிள்ளை வரம் பெற விரதங்கள் இருந்ததினால் அவளது உடல் பலவீனமாக இருந்தது. அதில் இந்த மனப் போராட்டமும் சேர அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. அதிலும் அதை தமக்கை அறிந்துவிடாமல் இருக்க பாடுபட்டாள்.

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்பார்கள். அதனால் அந்த சமயத்தில் கணவன் அருகில் இருந்தால் தைரியமாக உணர்வாள் என்பதை உணர்வு பூர்வமாக அறிந்திருந்த மிருதுளா, மனோரமாவை மருத்துவமனையில் சேர்த்த கையோடு மதனகோபாலுக்கு தங்கை அறியாமல் தகவல் தெரிவித்துவிட்டாள்.

ஆனால் அவர் வந்து சேருவதற்கு முன்பாகவே பிரசவத்தில் சிக்கல் உண்டாக, மகதியை பெற்றதோடு மனோரமா கண்ணை மூடிவிட்டாள். மாலதியும் உடன் வந்திருந்தாள். கைக்குழந்தையை அவளிடம் ஒப்படைக்க மிருதுளா தயங்கினாள். அவள் எண்ணியது வேறு, தங்கை பெற்று பிழைத்துவிட்டால் அவளை கணவனோடு அனுப்பி வைக்கலாம் என்று நினைத்திருந்தாள். ஆனால் தங்கையே போனபின் அந்த குழந்தையை மாற்றாந்தாயிடம் ஒப்படைக்க அவளுக்கு மனமில்லை.

உண்மையில் மாலதிக்கு அந்த குழந்தையின் வரவு மிகுந்த ஆறுதலை அளித்தது. அவள் வாழ்வுக்கு ஆதாரமாக எண்ணினாள். கடந்த ஏழு மாதங்களாக அவள் மதனகோபாலுக்கு மனைவியாக வாழவில்லை. மனோரமாவின் நினைவில் அவர் வேலையில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார். மாலதியும் கணவன் என்று உரிமை கொண்டாட முயற்சிக்கவில்லை. காரணம் மனோரமாவின் பேச்சை கேட்டு திருமணம் செய்திருக்க கூடாது என்று காலம் கடந்த பின் தான் உணர்ந்திருந்தாள் மாலதி. அனாவசியமாக மூன்று பேர் வாழ்வும் பாழாயிற்றே என்று வருந்தவும் செய்தாள்.

அந்த நிலையில் மனோரமாவுக்கு குழந்தை பிறந்த செய்தி கேட்டபோது அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அன்று வரை முகம் கொடுத்து பேசாத கணவனிடம் அவளும் வருவதாக பிடிவாதமாக கிளம்பிவிட்டாள்.

கணவனுடைய அன்பில்லாவிட்டாலும் அவள் செலுத்தும் அன்பை திருப்பி செலுத்த ஒரு ஜீவன் உண்டு என்றால் அது ஒன்றும் அறியாத குழந்தை தான் என்று நினைத்தாள் மாலதி.

உறவு முறையில் மிருதுளாவுக்கு மாலதியும் சகோதரி தான் என்றபோதிலும் நாளை அவளுக்கு என்று ஒரு குழந்தை பிறக்கையில் இந்த குழந்தையின் நிலை என்னவாகும் என்று மிருதுளா தயங்கியதோடு சொல்லவும் செய்தாள்... அதை கேட்டதும் உடைந்து போய் அழுதாள் மாலதி.

"மனோ அக்கா என் வாழ்க்கை மலர வைக்க எண்ணித்தான் அவள் கர்ப்பமான விஷயத்தை மறைத்து விலகிப் போயிருக்கிறாள் என்று எனக்கு புரிகிறது. ஆனால் அவள் நினைத்தது போல் நடக்கவில்லை. ஒரு குழந்தைக்காகத் தான் என்னை அவருக்கு கட்டி வைத்தாள். அதுவும் நடக்கவில்லை. இனி அக்காவின் இந்த மகள் தான் என்னோட எதிர்காலம். இவளை என் மகளாகவே வளர்ப்பேன்" என்று அழுதபடியே மாலதி சொல்ல,

மிருதுளா, அப்போதும் விடாது, " மாலதி நீ உணர்ச்சிவசப்பட்டு பேசுறே. காலம் இப்படியே இருந்து விடாது. மதன், மனோரமா வருவாள் என்ற நம்பிக்கையில் உன்னை தள்ளி வைத்திருக்கலாம். இனி அவள் வர வாய்ப்பில்லை என்பதால் உனக்கு முறைப்படி அவர் தான் கணவர். ஆகவே உன்னை நிராதரவாக விட்டுவிட மாட்டார். அப்போது உங்கள் உறவில் ஒரு குழந்தை வருமானால் இவள் கதி என்னவாகும்? ? நீயும் மனுஷிதானே? தன் ரத்தம் என்று வரும்போது மற்றது அடிபட்டு போகும். அதனால் ... என்று மேலே பேச முயன்றவளிடம், குறுக்கிட்டு,

"அக்கா நீங்கள் சொல்வது போல நடக்க வாய்ப்பில்லை. அப்படியே எனக்கு ஒரு குழந்தை பிறந்தாலும் இவளே என் மூத்த மகள். இந்த ரகசியம் நம் மூவர் தவிர வேறே யாரும் அறியாமல் பார்த்து கொள்ளலாம். தயவுசெய்து இவளை வளர்க்கும் பாக்கியத்தை எனக்கு கொடுங்கள் அக்கா" என்று கெஞ்சவும், இரக்கத்துடன் நோக்கி அவளை அரவணைத்துக் கொண்டாள் பெரியவள். மிருதுளாவுக்கு இப்போதும் அவளது பேச்சில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை தான். ஆனால் பின்னாளில் நடக்க போவதை யாரால் கணிக்க இயலும்? அத்தோடு அவளும் அவ்வப்போது போய் வர இருந்தால் மாலதி நிச்சயம் குழந்தையை நன்கு பார்த்துக்கொள்ள எண்ணுவாள். இப்படி

எண்ணித்தான் குழந்தையை ஒப்படைத்தாள். கூடவே மதனகோபாலை தனியே அழைத்து சில அறிவுரை கூறி இருவரையும் அனுப்பி வைத்தாள்.

மாலதி அப்போது ஒரு விஷயத்தை சுத்தமாக மறந்து போனாள். அதுவே அவளது குழந்தைகளுக்குள் பிரிவினையை உண்டு பண்ணிவிடும் என்று அவள் எண்ணி பார்க்கவில்லை.

மகதியை தான் பெற்ற மகளாகவே மாலதி வளர்த்தாள். மிருதுளாவின் ஆலோசனைக்கு இணங்கி மதனகோபால் மாலதியை மனைவியாக ஏற்றுக்கொண்டார். அதன் விளைவாக மகதியின் 2வது பிறந்தநாள் அன்று சின்னவள் மதுமதி பிறந்தநாள்.

அதுவரை எல்லாம் சீராக போய்க்கொண்டு இருந்த மாலதியின் வாழ்வில் முத்தரசி வந்து நுழைந்தாள்.
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top