Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

02. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India


சத்யமூர்த்தி - வடிவுக்கரசி தம்பதியரின் ஓரே தவப்புதல்வன், நிரஞ்சன்.

வெளிநாட்டில் புதிதாக தொழிலை தொடங்கி அங்கேயே தங்கியிருந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறான். தொழிலில் முன்னேற்றம் காணத் தொடங்கி விட்டதால் பொறுப்பை அங்கே இருக்கும் இன்னொரு பங்குதாரரிடம் கொடுத்துவிட்டான். அதற்காக மூன்று வருடங்களாக பெற்றவர்களை, பாசமான பாட்டியை, இன்னும் உள்ள உறவுகளை பிரிந்து இருந்து விட்டான். இனி, இதுபோல் நீண்ட பிரிவுகளுக்கு அவசியம் இல்லை. அவ்வப்போது இடையில் போய் மேற்பார்வை பார்த்துக்கொண்டால் போதும். அத்துடன் வீட்டில் அவனை திருமணம் செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தி வருகிறார்கள். இப்போது அதற்கான ஏற்பாட்டுடன் தான் போய் இறங்கப் போகிறான். அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளுக்கு தயாராக இருக்கிறான்.

பேரன் வருகிறான் என்று தடபுடல் விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. சமையல் அறையை மேற்பார்வை செய்து கொண்டிருந்த பாட்டி காந்திமதி, மலர்வதனிக்கு காபியை கொடுத்துவிட்டு அங்கே வந்த மருமகள் வடிவுக்கரசியிடம், "உன் தம்பி மகள் எங்கே காணோம்?வேலை முடிஞ்சு எப்பவோ வந்திருப்பாளே?? மகாராணிக்கு தனியா அழைப்பு வைக்கனுமா? என்றவாறு பக்கவாட்டில் இருந்த சாப்பாட்டு அறைக்கு சென்று ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

வடிவுக்கரசி மாமியார் பின்னோடு வந்து,"அவளுக்கு நைட் ஷிஃப்ட் அத்தை. காலையில் நல்ல மழை வேற நனைஞ்சுட்டே, கொஞ்சம் லேட்டாகத்தான் வந்தாள். அதான் கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறேன்."

"ஓஹோ! அப்புறமாக கொட்டிக்கொள்ள வருவாளாக்கும், அந்த நேரம் என் பேரன் வந்து சேர்ந்திருவான். அதனால் அவள் இங்கன வரவேண்டாம். சொக்கிக்கிட்டே வழக்கம்போல சோத்தை அனுப்பி வச்சிடு" என்றவளின் குரல் சற்று தணிந்து,"இங்கே பாருடி, உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கிறேனு எனக்கு நல்லா தெரியும். அவளை என் பேரனுக்கு கட்டி வைக்கலாம்னு கனவு காணாதே, அவன் என் பேத்தி நிகிதாவுக்குனு நானும் சந்திராவும் எப்பவோ முடிவு பண்ணியாச்சு. அதனால உன் தம்பி மகளை அடக்க ஒடுக்கமா இருக்கச் சொல்லு, இதை ஏன் சொல்லுறேன்னா, முன்னப்போல அவள் வீட்டில் முடங்கிக் கிடக்கிறது இல்லையே. என்னம்மோ அவ உத்தியோகம் பார்த்துதான் இங்க உலை கொதிக்கிறாப்ல, அவளை நீயும் உன் புருஷனும் சேர்ந்து வேலைக்கு அனுப்பிட்டு இருக்கீங்க. அந்த துணிச்சலில் அவள் ஏதாவது பண்ணி வைத்தாள் என்றால் நான் பொல்லாதவளாகி விடுவேன்"என்று கடுமையாக கூறி முடித்தாள்.

வடிவுக்கரசி பதிலே சொல்லாமல் நகர்ந்து சமையல் அறைக்குள் தஞ்சமானாள். நாத்தனார் பெண் நிகிதா கல்லூரியில் இப்போது தான் முதல் வருஷம் சேர்ந்திருக்கிறாள். மகனுக்கும் அவளுக்கும் 11வயது வித்தியாசம். இவர்களாக முடிவு செய்துவிட்டால் போதுமா? அவளுடைய மகன் முதலில் ஒத்துக்கொள்ள வேண்டும். அதுபோலத்தான் மலர் விஷயமும், அவள் இன்று வரை நிரஞ்சன் முன்பு வந்ததே கிடையாது. அவனுக்கும் மாமன் மகள் ஒருத்தி வீட்டோடு இருப்பது தெரிந்தாலும் அவளை பற்றி அவன் பெரிதாக அக்கறை காட்டியதே இல்லை. அத்துடன் அவளை அந்த வீட்டில் நடத்தப்படும் விதம் பற்றியும் அவனுக்கு தெரியாது. தம்பி மகள் அழகும் அறிவுமாக பார்க்க ரதி போல இருக்கிறாள். அவளை பார்க்கும்போது வடிவுக்கரசிக்கு உள்ளூர அப்படி ஒரு ஆசை இருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் இரண்டு கைகள் சேர்ந்தால் தானே ஓசை எழுப்பமுடியும்?

மகனிடம் மருமகளைப் பற்றி என்றுமே அவள் பேச முயன்றதில்லை. அவன் பாட்டி செல்லம் என்பதால், அப்படியே பாட்டியிடம் அந்த விஷயம் போய்விடும் என்று அவள் அறிவாள். அவன் படித்துக்கொண்டு இருந்த காலத்திலும் விடுமுறையில் வீட்டிற்கு வந்தால் மலருக்கு சிறைவாசம் தான். அப்படி இருக்கையில் இப்படி அபாண்டமாக பேசுகிறாளே இந்த மாமியார், என்று ஆத்திரம் உண்டாயிற்று. ஆனால் மாமியாரை எதிர்த்து பேசிவிட்டு அந்த வீட்டில் அவளால் இருக்க முடியுமா? அத்தோடு தம்பி மகளை கரை சேர்க்கும் பொறுப்பும் இருக்கிறதே. அதனால் கோபத்தை முழுங்கிவிட்டு சமையலில் கவனமானாள்.

சற்று நேரத்தில் நாத்தனார் சந்திரமதி தன் ஒரே மகளோடு வந்து இறங்கினாள். எப்போதும் போல அவள் கணவர் இப்போதும் உடன் வரவில்லை. வந்தவர்களை முறையாக வரவேற்று குடிப்பதற்கும் கொறிப்பதற்கும் கொடுத்து உபசரித்தாள்.

"என்னம்மா இன்னும் என் மருமகன் வரவில்லையா?? ஏர்போர்ட்க்கு கார் அனுப்பியிருக்கிறீங்கதானே? ஆமாம் அண்ணன் எங்கே காணோம்? இன்னைக்குமா தொழிற்சாலைக்கு போயிருக்கிறார்??

"அதெல்லாம் வெள்ளனையே கார் அனுப்பியாச்சு. பிளேன் இரண்டு மணிநேரம் தாமசமா வருதாம். உன் அண்ணன், மகன் வர்றானு புதுசா அவனுக்காக கார் வாங்கனும்னு பதிவு பண்ணி வச்சிருந்தான். காலையில் வரவேண்டியது, வரலைன்னு விசாரிக்கப் போயிருக்கிறான். நீயும் பாப்பாவும் போய் உடுப்பு மாத்திப்போட்டு வாங்க. அதுக்குள்ளாற இரண்டு பேரும் வந்துருவாங்க"என்று காந்திமதி மகளை அனுப்பிவிட்டு மருமகளை விளித்தாள்.

"சாப்பாடு எல்லாம் மேசையில் அடுக்கியாச்சுதா? பாயாசம் இப்ப வைக்க வேண்டாம்"

"எல்லாம் தயாராக இருக்குது அத்தை. பாயாசம் இப்பத்தான் அடுப்பில் இருந்து இறக்கினேன். நான் போய் உடுப்பை மாத்திட்டு வந்திடுறேன்".

"சரி சரி சீக்கிரம் மாத்திட்டு வா", என்று காந்திமதி உள்ளூர,"ஆமாம் அலங்காரம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணலைன்னா என்ன? இவள் எப்படி நின்னாலும் என் பேரனுக்கு ஒன்னுதான்" என்று ஏளனமாக எண்ணிக்கொண்டாள்.

ஒருவாறு எல்லோரும் தயாராகி ஆவலாக கூடத்தில் அமர்ந்திருந்தனர். நிகிதா கைப்பேசியில் கவனமாக இருந்தாள். அவளது அம்மா சந்திரா கணவனிடம் போனில் வளவளத்துக் கொண்டிருந்தாள். பாட்டி வாசலில் பார்வையை பதித்தபடி அமர்ந்திருந்தாள். வடிவுக்கரசி வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது அந்த புது கார் போர்டிகோவில் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி வந்த சத்யமூர்த்தி,"ரஞ்சி இன்னும் வரவில்லையா? அப்பவே வந்துக்கிட்டு இருக்கிறேன்னு சொன்னானே?" என்றவாறு படிகட்டிலேயே நின்று அவனது கைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்ற போது அடுத்து ஒரு வாகனம் வந்து நின்றது. சாமான்களை இறக்குவதற்காக வேலையாட்கள் விரைந்து சென்றனர்.

நிரஞ்சன் ஆறடி உயரத்தில் சினிமா கதாநாயகன் போல அழகும் கம்பீரமுமாக இறங்க, அவன் பின்னோடு அழகிய இளம்பெண் நாகரீக உடையில் இறங்கவும்..

சத்யமூர்த்தி, சந்திரமதி வடிவுக்கரசி ஒருவர் பின் ஒருவர் எதிர்கொண்டு அழைக்க சென்ற,எல்லோரும் ஒருகணம் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்க, அத்தனை முகங்களையும் பார்த்தவன் புன்னகையுடன் "என்னாச்சு? ஏன் இவ்வளவு ஷாக்? என்றான்.

முதலில் சுதாரித்த வடிவுக்கரசி, மகனுக்கு ஆரத்தி சுற்றிவிட்டு, அதை பணிப்பெண்ணிடம் கொடுத்து விட்டு மகனிடம்,"தம்பி யார் இந்தப் பொண்ணு?" என்று படபடத்த மனதை அடக்க முயன்றபடி வினவ

"இங்கேயே நிறுத்தி எல்லாத்தையும் விசாரிப்பீங்களா அம்மா? முதலில் வீட்டுக்குள் போகலாம். இவளுக்கு நல்ல பசி. எனக்கும் தான்" என்றவன் மேற்கொண்டு பேசாமல் உள்ளே விரைய, அவனை தொடர்ந்து அந்தப் பெண்ணும் சென்றாள்.

காந்திமதி உள்ளே வந்த பேரனை ஆவலுடன் எதிர்கொள்ளப் போனவள், அவன் பின்னோடு வந்த பெண்ணை கண்டு அதிர்ந்து நின்றாள்

"ஹாய் பாட்டி, எப்படி இருக்கீங்க? மூன்று வருஷம் கழிச்சு வந்திருக்கிறேன். உங்க முகத்தில் சந்தோஷத்தையே காணோமே? என்றான்.

"எப்போது வருவாய் என்று காத்தாலே இருந்து வாசலை பார்த்து காத்துக்கிட்டு இருக்கிறேன் கண்ணா" காந்திமதி குரல் தழுதழுக்க பேரனை அரவணைத்துக் கொண்டாள்.

"ஐயா பெட்டிகளை எந்த அறையில் வைக்கட்டும்? பணியாள் விவரம் கேட்க,

அதற்குள்ளாக மற்றவர்களோடு உள்ளே வந்திருந்திருந்த வடிவுக்கரசி," தம்பி சாமான்களை அவனோட அறையில் வச்சிடு சித்தையா, அந்த பெண்ணோட சாமான்களை மாடியில் விருந்தினர் அறையில் வச்சிடு, என்றவள், "அத்தை, சந்திரா எல்லோரும் சாப்பிட வாங்க, அவங்க இரண்டு பேரும் போய் உடை மாத்திட்டு வரட்டும்"என்று சூழ்நிலையை சுமூகமாக்க முயன்றாள்.

அப்படி எளிதில் விடுகிறவளா காந்திமதி? அதுவும் மருமகள் பேச்சை கேட்டுக்கொண்டு அடங்கிப்போனால் அப்புறம் அவளது மதிப்பு என்னாவது?

"ஏய்.. என்னடி? நீ என்ன பெருசா நாட்டாமை பண்ணிட்டு இருக்கிறே? கண்டவளெல்லாம் நுழைய இந்த வீடு என்ன சத்திரமா? முதலில் அவ யார்னு சொல்லு ராஜா, அப்புறமாக அவள் இங்கே தங்கலாமா வேண்டாமானு நான் முடிவு செய்யறேன்"என்று விசாரணையில் இறங்கிங்கினாள்.

பேரன் சொன்ன பதிலில் காந்திமதி வாயடைத்து நின்றது ஒருகணமே, உடனேயே கத்தத் தொடங்கிவிட்டாள்.

அந்த சத்தத்தால் தான் அயர்ந்து கண்ணுறங்கிய மலர்வதனி திடுக்கிட்டு எழுந்தாள்.
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top