Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

01. மதிமுகம் கண்டேனடி

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
அந்த முன் மாலைப் பொழுதில். ..

அந்த பெரிய பங்களாவின் சமையல் அறையில் பரபரப்பாக காணப்பட்டாள் மாலதி. அன்று அவளது சின்ன மகளை பெண் பார்க்க மாப்பிள்ளை விட்டார் வருகிறார்கள். வீட்டை ஓழுங்கு படுத்தி சுத்தம் செய்து எல்லா வேலையும் முடிந்துவிட்டது. பலகாரத்தை அவர்களது உணவகமான “மனோரமா”வில் தருவித்துக் கொள்ளலாம் என்று கணவர் மதனகோபால் கூறினார். ஆனால் அதில் மாலதிக்கு உடன்பாடு இல்லை. வருபவர்கள் நாலுபேர்தான். அதிகமாக வந்தாலுமே உதவிக்கு வேலையாட்கள் இருக்கிறார்கள். சிற்றுண்டிகளை அவளே செய்து கொண்டிருந்தாள். இதோ அதுவும் முடிந்துவிட்டது.

அடுத்து அருமை மகளை போய் தயார் செய்ய வேண்டும். மதுமதி கொஞ்சம் மாடர்ன் பொண்ணு. சீக்கிரமாய் கல்யாண பந்தத்தில் எல்லாம் சிக்கிக் கொண்டு அல்லல்பட முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தவள். இந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கு உடனே சம்மதித்ததை இன்னும் நம்பமுடியவில்லை. மகளின் அறைக் கதவைத் தட்டி, "மது, குளித்துவிட்டாய் என்றால் கட்டில் மேல் இருக்கிற புடவையை கட்டிக் கொள்" என்று குரல் கொடுத்துவிட்டு, கசகசப்பு நீங்க ஒரு குளியல் போட்டுவிடலாம் என்று தனது குளியலறைக்குள் நுழைந்தாள் மாலதி

💜💜💜

மாலதி குளித்து முடித்து மதுமதியின் அறையை நெருங்க...

அதற்குள்ளாக எதிர்புறம் இருந்த அறைக்குள் இருந்து கதவை பலமாக தட்டும் சத்தம் கேட்டு விரைந்து தாழை நீக்கி கதவைத் திறந்தாள். அங்கே கோபத்தில் முகம் சிவக்க நின்றவளை கண்டு ஒருகணம் குழப்பமும் ஆச்சர்யமும் உண்டாயிற்று. ஆனாலும் முகம் மலர,’’ நீ எப்போடா வந்தே மகி?"என்று வினவும்போதே, பதிலும் விளங்கிவிட்டது.

"அம்மா கொஞ்சம் முன்னாடி தான், இந்த மது சொன்னாள் என்று கொஞ்சமும் யோசியாமல் பின் பக்கமாக வந்தேன். அவள் தான் போன் பண்ணி உடனே வரச் சொன்னாள். உங்களுக்கு ஏதோ சர்ப்ரைஸ் தரணும்னு சொல்லி... நான் வர்ற விஷயத்தை உங்ககிட்ட சொல்ல வேணாம்னு கேட்டுக்கிட்டாள். அதனால் தான் போன் கூட பண்ணாமல் வந்தேன் அம்மா. என்னை போய் பிரஷாகி வரச் சொன்னாள். நான் என் அறைக்குள் வந்தேன். உடையை மாற்றிவிட்டு கதவை திறந்தால் திறக்க முடியவில்லை. அவளுக்கு போன் பண்ணினேன். அவள் எடுக்காமல் வாட்ஸப் மெஸேஜில் பெண் பார்க்க வருகிறார்கள் என்ஜாய்னு அனுப்பினாள். படிச்சுட்டு இருக்கிறப்போவே அதை டெலிட் பண்ணிட்டாள்..ஆமா, இன்னிக்கு அவளைப் பெண் பார்க்க வர்றதா நீங்ககூட என்கிட்ட ஏன் சொல்லவில்லை? சொல்லியிருந்தால் நான் இந்தப் பக்கம் வந்திருக்கவே மாட்டேன்" அழுகையும் கோபமுமாக படபடத்தாள் மதுமதியின் அக்கா மகதி.

மாலதி, சட்டென்று அறைக்குள் நுழைந்து கதவை உள்புறமாக தாழிட்டுவிட்டு, "கல்யாணம் நிச்சயமானதுக்கு அப்புறமா சொல்லிக்கலாம்னு அப்பா சொல்லிட்டார்மா. அதுவும் சரிதானே? சும்மா பெண் பார்க்கிற நிகழ்ச்சி தானேன்னு சொல்லலைம்மா. அது தப்பு என்று இப்போது மது புரியவைத்து விட்டாள். சரி நீ இப்போது ஒரு வேலை செய், என்றவள் எதிர் அறைக்கு சென்று சேலையை எடுத்து வந்து கொடுத்து, இதை முதலில் கட்டு. நான் நகைகளை எடுத்துட்டு வர்றேன் என்றவள், அவளை மேலே பேசவிடாமல் தடுத்துவிட்டு கீழே இருந்த அவளது அறைக்கு சென்று நகைகளுடன் திரும்பினாள்.

அப்போதும் மகதி அசையாமல் அமரந்திருப்பதை பார்த்த மாலதி, ஒரு முடிவுக்கு வந்தவளாய், "நீ இப்போதைக்கு கல்யாணமே வேணாம்னு சொல்லிவிட்டாய். மது பண்ணிக்கிறேனு ஒத்துக்கிட்டதால தான் நாங்க அவங்களை வரச்சொன்னோம். இன்னிக்குத்தான் அவள் சுற்றுலாவிற்குப் போய்விட்டு திரும்பினாள். நேற்றே நான் போன் பண்ணி விசயத்தை அவள்கிட்ட சொன்னதுதான் தப்பா போச்சு. வேணாம்னு சொல்லித் தொலைச்சிருந்தால் இந்த சங்கடமே வந்திருக்காது. மது இப்படிச் செய்வாள் என்று நான் எதிர் பார்க்கவில்லை. என் தப்புத்தான் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவளைப் பற்றி அறிந்திருந்தும்.... நான் யோசிக்கத்தான் செய்தேன். இவள் சட்டென்று எப்படி ஒத்துக் கொண்டாள் என்று.... இப்போது அதை எல்லாம் எண்ணி பார்த்து ஒன்றும் ஆகப்போவதில்லை", என்றவள் ஒருகணம் மகளை ஆழமாய் நோக்கி விட்டு தொடர்ந்து, "இதோ பார் மகிம்மா இன்னும் அரைமணியில் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிடுவார்கள். யாருக்கு யார்னு ஆண்டவன் முடிவு பண்றதை நம்மால தடுக்க முடியாது. கடவுள் உங்க ரெண்டு பேரையும் ஒரே மாதிரி உருவத்தில் படைச்சதுக்காக முன்னே வருத்தப்பட்டிருக்கிறேன்டா. ஆனால் இப்போது அதுதான் நமக்கு கைகொடுக்கப் போகுது, என்றவள், தொடர்ந்து, "அப்பாவிடம் போய் மது இப்படி செய்துவிட்டாள் என்று சொன்னால் அவரால் தாங்க முடியாதும்மா. இப்பத்தான் ஹார்ட் அட்டாக் வந்து பிழைச்சிருக்கிறார். அதனால் நீ இப்போது தயாராகிடும்மா, இல்லைன்னா மானமே போய்விடும்... மாலதி பேசப்பேச மகதிக்கு நிலைமையின் தீவிரம் புரிந்தது. வேறு வழியின்றி இயந்திரமாய் தயாராகி முடித்தபோது...

கீழே கூடத்தில் மதனகோபாலின் குரல் கேட்க, அங்கே விரைந்தாள் மாலதி.

💜💜💜

கூடத்தில்....

மதனகோபாலும், மாலதியும் வந்தவர்களை வரவேற்று அமரச் செய்தபின் பரஸ்பரம் அறிமுகங்கள் முடித்ததும், பெண்ணை அழைத்து வரச்சொன்னார் மங்களம்.

மகதி எளிமையான அலங்காரத்திலும் அழகு தேவதையாய் ஜொலித்தாள். மகேந்திரன் ஆறடி உயரத்தில் அழகும் கம்பீரமுமாக மாநிறத்தில் களையாக தோன்றினான். மாப்பிள்ளையை பார்த்ததும் மகளுக்கு ஏற்ற இணை என்று மனம் குளிர்ந்தாள் மாலதி. கூடவே தன் தலையில் தானே மண்ணள்ளி போட்டு கொண்ட சின்ன மகளை எண்ணி சிறு வருத்தம் உண்டாயிற்று. ஆயினும் இந்த வரன் அமைய வேண்டும் என்று மிகுந்த ஆவலாக இருந்தது. பெரிய மகள் மகதி திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாய் மறுத்து வந்தவள். இன்று சின்ன மகளின் கைங்காரியத்தில் பெண் பார்க்கும் படலத்தில் சிக்கிக் கொண்டாள். கடவுளின் சித்தம் அதுதான் என்றால் யார் மாற்ற இயலும்!

மகதி விழிகளை உயர்த்தக்கூட இல்லை. பதுமையாய் வந்து நின்று வணக்கம் என்று கைகூப்பிய போது அவளது கரங்கள் லேசாய் நடுங்கிற்று.

மகேந்திரன் அவளையே சில கணங்கள் கவனித்தான். பிறகு தாயாரிடம் குனிந்து தனிந்த குரலில் ஏதோ சொன்னான். அவரும் முகம் மலர,"எங்களுக்கு பெண் பிடித்திருக்கிறது. உங்க பெண்ணையும் ஒரு வார்த்தை கேட்டு சொல்லுங்க, உடனே சொல்லனும்னு கட்டாயம் இல்லை. உங்க முடிவு எதுவானாலும் பரவாயில்லை, நாளைக்கு போனில் சொன்னால்கூட போதும்,"என்றார் மாப்பிள்ளயின் தாயார் மங்களம்.

கூடத்தில் அமர்ந்திருந்த மகதி அதை கேட்டு உள்ளூர அதிர்ந்து போனாள். உண்மையில் அவர்கள் பார்க்க வந்த பெண் அவளில்லையே ...குப்பென்று வியர்த்தது. அவள் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவள் நினைத்திருந்தது, மாப்பிள்ளை வீட்டார் போய் தகவல் சொல்கிறோம் என்பார்கள். அப்போது இங்கே இருக்கும் மதுமதியிடம் சம்மதம் கேட்பார்கள். சங்கடம் நேராமல் அவளும் கிளம்பிவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தாள். ஆனால் இப்போது தந்தை நேரடியாக கேட்டால் என்னவென்று சொல்வது? மறுத்தால் காரணம் சொல்ல வேண்டும் சம்மதித்தால் உடனே திருமணத்தை நிச்சயித்துவிடுவார். அம்மா எப்படியும் உண்மையை அவரிடம் சொல்லிவிடுவார்கள். அப்புறம் இந்தக் கல்யாணத்திலிருந்து அவள் விலகமுடியாது. இந்த வரன் அவளுக்காக வரவில்லை ஆள்மாறாட்டம் நடப்பது அறிந்தால் மாப்பிள்ளை முதல் அனைவரும் என்ன எண்ணுவார்கள் என்று கவலையாக இருந்தது. கூடவே மதுமதி மீது ஆத்திரம் வந்தது. அடுத்தவளுக்காக வந்தவனை அவள் எப்படி மணந்து கொள்வாள்?

மகதி, பெற்றோரின் ஒரு செயலால் திருமணத்தையே வெறுத்தாள். இன்னொரு விதமாக இப்போதைக்கு அவளுக்கு மேலே படிக்க வேண்டும். அதற்காக கல்லூரிகளிலும் விண்ணப்பித்திருக்கிறாள். இப்போதே கூட அவள் எஸ்டேட் பள்ளி ஒன்றில் பகுதி நேர கிராப்ட் டீச்சராக பணியாற்றுகிறாள். விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் எஸ்டேட்டில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் பெண்களுக்கும் பாடம் சொல்லி தருகிறாள். இப்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி விழுந்துவிடும் என்று தோன்றியது.

மகளின் எண்ணவோட்டத்தை அறியாமல் மாலதி, அவளை உள்ளறைக்கு அழைத்து சென்று அமரவைத்த பின் சொன்னாள், "மகிம்மா, நாளைக்கு வரை அவங்க நேரம் கொடுக்கிறது அவங்களோட பெருந்தன்மை. கூடவே அவர்களுக்கு உன்னை ரொம்ப பிடித்திருக்கிறது என்று அத்தனை பேர் முகத்திலும் தெரியுது. அப்பாவுக்கும் எனக்கும் அவர்களை பார்த்ததும் பிடிச்சு போச்சு. அந்த அம்மா நல்ல மாதிரி தெரியறாங்க, மழுப்பாமல் நேரடியாக பேசுறாங்க. நாமளும் அப்படியே இருக்கனும்னு உன் அப்பா உடனே கேட்டு சொல்லச் சொல்கிறார். நான் என்ன சொல்லட்டும் ? இது நல்ல சம்பந்தம், பையனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. பார்க்க லட்சணமா இருக்கான். இப்படி ஒரு நல்ல வரன் கிடைக்கிறது கஷ்டம் மகி...அதனால்..மாலதி பேச பேச பேச்சற்றுப் போனாள் மகதி.

மகதிக்கு அன்னை பேச பேச சுழலுக்குள் சிக்குவது போன்ற பிரம்மை. பதில் சொல்லவேண்டிய அவசியமும் புரிந்தது. அவள் மனதில் கனவே இல்லை என்று சொல்ல இயலாது. அந்த பருவத்தில் இயல்பாய் உண்டாகும் ஆசைகள்,சலனங்கள் எட்டி பார்க்கத்தான் செய்தது, ஆனால் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று தீர்மானித்திருந்தாள்.

"சொல்லுமா,எல்லாரும் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் பார்" என்றாள் மாலதி அழுத்தமாக..

பெருமூச்சை ஓசையின்றி வெளியேற்றிவிட்டு, தலை அசைத்து வைத்தாள். மாலதிக்கு மகளின் சங்கடம் புரிந்தது, திருமணம் நடந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று எண்ணினாள் மாலதி.

மகதியின் சம்மதம் கிடைத்ததும், மாப்பிள்ளை வீட்டார், உடனேயே தட்டை மாற்றிவிட்டு, கையோடு கொணர்ந்திருந்த வைர அட்டிகையை அவளுக்கு பூட்டி அழகு பார்த்துவிட்டு திருமண தேதியை குறித்துவிட்டு மறுபடியும் வருவதாக விடைபெற்றுக் கொண்டார்கள்.

நினைப்பது போல எல்லாமும் நடந்துவிடுமா என்ன??
 

Attachments

  • WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    WhatsApp Image 2024-08-30 at 4.24.52 PM.jpeg
    20.7 KB · Views: 0
Back
Top