Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

01. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
160
Reaction score
25
Points
28
Location
India
சென்னையின் புறநகர்ப் பகுதியில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்த வீட்டில்...

சாருமதி தன் 4வயது செல்ல மகளுக்கு சீருடையை அணிவித்து பள்ளிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள். மழலை மொழியில் மகள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டே காலை உணவையும் கையோடு ஊட்டிவிட்டு தானும் இரண்டு கவளத்தை வாயில் போட்டுக் கொண்டாள்.

சின்ன மகளை பாதுகாப்பாய் தன் பின்புறமாய் ஸ்கூட்டியில் அமரவைத்துக் கொண்டு வண்டியை கிளப்பினாள்.

சாருமதி அழகும் அறிவுமான பெண். தன் சின்ன மகளுடன் சென்னைக்கு வந்து 3வருடம் ஆகிறது. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் நல்ல வேலை. மகளை பள்ளியில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு விரைந்தாள்.

அன்று அவர்களின் அலுவலகத்தை வேறு ஒரு நிறைவனத்தார் பொறுப்பேற்றுக் கொள்ளப் போவதால் எல்லாரையும் சற்று முன்னதாக வரச் சொல்லிருந்தார் தற்போதைய உரிமையாளர் தாமோதரன். அவளது தந்தையின் வயதில் இருப்பவர். அவளைப் பற்றி எல்லாம் அறிந்தவரும்கூட. சொல்லப் போனால் இந்த வேலையில் அமர்த்தி, அவள் கௌரவமாக வாழ வழி செய்தவரே அவர்தான்.

இப்போது வரப்போவது யாரோ? எப்படியோ? என்று உள்ளூர ஒரே உதைப்புதான். ஆனாலும் வருபவர் நல்ல மாதிரிதான் என்றும் அவளது வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் தைரியம் சொல்லியிருக்கிறார் தாமோதரன்.

தாமோதரனுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக ஹார்ட் அட்டாக் வந்ததால் வெளிநாட்டில் இருக்கும் ஒரே மகன் இனி தனியாய் இருக்க வேண்டாம் என்று கம்பெனியை தன் நண்பனுக்கு தந்துவிட எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டான். அவரது உடல்நிலையின் காரணத்தால் பெரியவரால் மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த இயலும் என்று தோன்றவில்லை. அத்தோடு மகனை மீறமுடியவில்லை. சாருவிற்குதான் கொஞ்சம் அசௌகர்யமாக இருந்தது. ஏதோ பாதுகாப்பை இழப்பதைப் போலிருந்தது.

வாழ்வில் எல்லாமும் எதிர்கொள்ளத்தானே வேண்டும்! வருவது யார்?

🧡🧡🧡

சாருமதி அலுவலகத்தினுள் நுழைந்தபோது நல்லவேளையாக அந்த புதிய முதலாளி வந்திருக்கவில்லை. அவளது இருக்கையில் ஆசுவாசமாய் சாய்ந்து அமர்ந்து பணியை கவனிக்கலானாள்.

சில கணங்கள் சென்றதும்.. முன்னறையில் சிறு பரபரப்புத் தெரிய வாசலை பார்த்தவளுக்கு ஆத்திரமும் அதிர்ச்சியும் ஒருசேர உண்டாக மரியாதை நிமித்தம் எழுந்து நின்றாள். அதுகூட தாமோதரன் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காகத்தான். மற்றபடி இவனுக்கெல்லாம் யார் மரியாதை தருவார்கள்? மற்றவர்களும் எழுந்து நிற்க அப்போதுதான் சூழ்நிலையை உணர்ந்தவளாக, உள்ளே குமுறியதை அடக்க முயன்றபடி முகத்தோற்றத்தை சீர் செய்தவள் அவசரமாக விழிகளை தழைத்துக்கொண்டு கொண்டாள் சாரு.

அவனைக் கண்டதில் ஆத்திரம் ஒருபுறம், அவனது ஊனமுற்ற கால்களைப் பார்த்ததில் அதிர்ச்சி மறுபுறம். கோல் ஊன்றிய நிலையிலும் கூட அவனது கம்பீரமும் அழகும் குறையவில்லை. அதுகூட சாருமதிக்கு பணத்திமிர் என்று தான் தோன்றியது. இவன் கீழே வேலை செய்வதா? எப்படி முடியும்? அவள் மனதோடு போராடிக் கொண்டிருக்கையில் தாமோதரனோடு அவன் அவளை சமீபித்துவிட சுதாரித்தாள் சாரு.

அவன் விழிகள் அவள் முகத்திலேயே கூர்மையுடன் பதிந்து இருக்க, தாமோதரன், அவளை அவனுக்கு அறிமுகப்படுத்தினார். "இவள் சாருமதி, என் காரியதரிசி, நல்ல சுறுசுறுப்பு வேலையில் கெட்டிக்காரி" என்றதும் அவன் புருவங்கள் யோசனையுடன் நெளிந்தது. சாரு, வலுவில் வரவழைத்த புன்னகையுடன் வணக்கம் தெரிவித்தாள்.

அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள். அவளுக்கு பதில் வணக்கம் சொல்லாமல், சட்டென்று தாமோதரன் புறமாக திரும்பி " மன்னிக்கனும் சார் நான் கொஞ்சம் அவசர வேலையாய் போக வேண்டியிருக்கிறது" என்று விடைபெற்றுக் கொண்டு வேக நடையுடன் வெளியேறினான். ஆம் ஊனமான கால்களால் முடிந்த அளவு வேகமாகத்தான் சென்றான்.

சாருவிற்கு ஆத்திரம் வந்தது அத்தனை அலட்சியமா? போகட்டுமே என்று அலட்சியமாக எண்ணி விட்டுவிட முடியாதே இந்த வேலை இல்லாவிட்டால் வேறு வேலை இதே சம்பளத்துடன் கிடைக்காதே! ஆனாலும் அவனது உதாசீனம் அவளை வெகுவாக பாதித்தது. அவளுக்கும் அவளின் சின்ன மகளுக்கும் வாழ்வாதாரமே இந்த வேலைதானே? எல்லாமும் சகித்துத்தான் ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. அவள் மனதோடு போராடினாள்.

தாமோதரன் அவள் தப்பாக எண்ணுவதாக நினைத்து, "நீ எதுவும் அவரை தப்பா நினைக்காதேம்மா சாரு, மிஸ்டர் சித்ரஞ்சன் நல்ல பையன்தான். நல்ல திறமைசாலியும்,ஏதோ அவசரம் கிளம்பிவிட்டார்"என்று சொல்லவும்

"பரவாயில்லை அங்கிள், இனி இங்கே தானே பொறுப்பில் வரப்போகிறார். மெல்லத் தெரிந்து கொள்ளட்டுமே!" என்று வலியை மறைத்து புன்னகைத்தாள் சாரு.

****

மதிய உணவு இடைவேளை வரை மனதை சமனப்படுத்த மிகுந்த சிரமப்பட்டாள் சாரு. சாப்பிட முடியாமல் கொணர்ந்த சாப்பாட்டை கூட்டிப் பெருக்கும் ஆயாவிடம் தந்துவிட்டாள். மனது நடந்து போனவற்றிலேயே நிலைத்திருந்தது. லீவ் போட்டுவிட்டு வீட்டிற்கு போகவும் மனம் வரவில்லை. அதனால் தன் கவனத்தை வேலையில் செலுத்தினாள். முனைந்து மனதை ஈடுபடுத்தி வெற்றியும் கண்டாள்.

மாலையில் வீடு திரும்பும் வழியில் மகளை சிற்றுண்டி சாப்பிட வைத்து சற்று நேரம் அருகிலிருந்த பூங்காவில் விளையாட வைத்து விட்டு வீட்டிற்கு அழைத்து வந்தாள். வழக்கமான பணிகளை இயந்திரமாய் முடித்து இரவு மகளை உண்ண வைத்து, கதை சொல்லி தூங்க செய்தபின் தானும் பெயருக்கு சாப்பிட்டு படுத்தாள். ஆனால் மனது மட்டும் தூங்கவிடாமல் அலைபாய்ந்தது. கண்ணில் பெருகிய நீரை தட்டிவிட்டு, தூக்கத்தில் சிரித்த குழந்தையின் முகத்தை பார்த்தவளுக்கு.... துக்கத்தில் தொண்டை அடைத்தது..! மறக்கத்தான் இத்தனை தூரம் வந்ததே ! ஆனால் விதி?
 
Back
Top