Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

காந்தவிழிப் பார்வையிலேகன்னி மனம் கொய்தவனே.!

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
அபரஞ்சி பள்ளிக்கும், அவளது தங்கை அஞ்சனா கல்லூரிக்கும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த தாய் மஞ்சரி, பெரிய மகளிடம்.

"அபி, இன்னிக்கு லீவு போடலையா? நைட்டே உன்கிட்ட சொன்னேன்ல? என்றாள்.

"அட என்னம்மா நீங்க? அரைமணி நேர கூத்துக்கு எதுக்கு ஒரு நாளை வீணாக்கணும்..? என்றாள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில்..

"ப்ச், அபி ஏன் இப்படி பேசுற? பெண்ணா பிறந்தா இதை எல்லாம் கடந்து தான் ஆகணும். இந்த இடம் நிச்சயமாக அமையும்னு என் மனசு சொல்லுது. நீ அரை நாள் விடுப்பு எடுத்துட்டு வந்துடு அபி.. எனக்கும் கொஞ்சம் ஒத்தாசையாக இருக்கும்" என்றதும்

"சரிம்மா, வர்றேன். நேரமாச்சு டிபன் கட்டலையா? சரி சரி நான் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக்கிறேன்.. பை அஞ்சு, என்று அவள் கிளம்பிச் செல்ல..

"அம்மா, இந்த மாதிரி பொண்ணு பார்க்கிறது, எல்லாம் அக்காவோட நிறுத்திக்கோங்க. நான் எல்லாம் இப்படி அலங்கார பொம்மையா எவன் முன்னாலும் நிற்க மாட்டேன்.." என்று படபடத்தாள்

"ஏய், முளைத்து மூனு இலை விடலை அதுக்குள்ள என்ன வாய் உனக்கு. முதல்ல படிப்பை ஒழுங்கா முடிச்சுட்டு, ஒரு நல்ல வேலையை தேடிக்கிற வழியை பாரு. அப்புறமா நீ எனக்கு கன்டிஷன் எல்லாம் போடலாம்.. கிளம்புடி பஸ் வந்துடும்" என்று சின்ன மகளை விரட்டினாள் மஞ்சரி..

"நாங்க அதெல்லாம் பண்ணுவோம். கேம்பஸ்ல செலக்ட் ஆகிட்டு வந்து உங்ககிட்ட பேசிக்கிறேன்"என்று வெளியேறினாள் அஞ்சனா.

அபரஞ்சி சாது. அன்னையை எதிர்த்து பேச மாட்டாள். அவளது சொல்லுக்கு பணிந்து போய் விடுவாள்.

சஞ்சனா சரவெடி. நியாயம் என்று மனதில் பட்டுவிட்டால் அதை சொல்லாமல் இருக்க மாட்டாள். எதார்த்தவாதி. சில சமயங்களில் அவளது பேச்சு அறிவுபூர்வமாக இருக்கும். ஏற்றுக்கொள்ளும்படியும்!

மஞ்சரி சீக்கிரமாக மூத்த மகளை திருமணம் செய்து அனுப்பி விடவேண்டும் என்று நினைத்துக் கொணடிருக்கிறாள். அவளது உடல் நிலை அவ்வப்போது சரியில்லாமல் போகிறது.. இருவருக்கும் ஒரு நல்ல வழியை ஏற்படுத்திவிட்டால் நிம்மதியாக போய் சேரலாம் என்ற எண்ணம்.. !

அபரஞ்சி மாநிறத்தில், களையான முகத்துடன் அழகானவள். பள்ளி ஒன்றின் அலுவலகத்தில் பணிபுரிகிறாள். வேலையில் கருத்தாக இருப்பாள், அனாவசியமாக யாரிடமும் பேச்சு வைக்க மாட்டாள்.

அந்த பள்ளியின் முதல்வர் அசோகன், வீட்டில் தான் அவளுடைய தாய் மஞ்சரி, சமையல் வேலை செய்து வந்தாள். அபரஞ்சி படிப்பை முடித்ததும் அவள்தான் முதல்வரிடம் கேட்டு அந்த வேலைக்கு விண்ணப்பிக்க வைத்தாள். நல்ல வேளையாக அவளுக்கு அந்த வேலை கிடைத்துவிட்டது. அவர்கள் குடும்பத்திற்கு அந்த வேலை மிகவும் அவசியமாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், மஞ்சரிக்கு இப்போது முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. தன் உடல் உபாதைகளை மகள்கள் அறியாமல் மறைத்து வந்தாள். அதே சமயம்
குடும்பம் நடக்க வேண்டும் என்றால் யாரேனும் வேலைக்கு போயாக வேண்டிய கட்டாயம். அது மட்டுமல்ல, தனக்கு ஏதும் ஆகுமுன் பிள்ளைகள் ஒரு வேலையில் நினைத்துவிட வேண்டும் என்று மஞ்சரி நினைத்தாள்.

மஞ்சரியின் கணவன் சந்தானம், நல்ல உழைப்பாளி. ஆனால் அவன் திடீரென ஒரு சாலை விபத்தில் காலமாகிவிட, இரண்டு பெண் குழந்தைகளுடன், மஞ்சரி திண்டாடிப் போய்விட்டாள். அந்த ஒற்றை அறை கொண்ட வீடு மட்டும் தான் அவர்களது சொத்து.
இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து படிக்க வைத்து ஆளாக்க வேண்டும். ஒற்றை பெண்ணாக எப்படி செய்யப் போகிறோம் என்று அவள் மலைத்து நின்றபோது,கணவன் விட்டுச் சென்ற தையல் தொழில் தான் அவளுக்கு ஆரம்பத்தில் கை கொடுத்தது. அக்கம் பக்கம் இருந்தவர்களுக்கு தைத்து கொடுக்க ஆரம்பித்தாள். ஆனால் மூன்று வயிறு நிரம்புவதோடு, உடை, படிப்பு, என்று இதர விஷயங்களுக்கு அந்த வருமானம் போதாதே..

அப்போதுதான், அந்த பள்ளியின் முதல்வர் வீட்டில் சமையல் வேலை கிடைத்தது. சாப்பாடும், கணிசமான சம்பளமும் வந்தது. அவளது அயராத உழைப்பில் இரண்டு பெண்களும் நன்றாக படித்தனர். அபரஞ்சி படிப்பை முடித்துவிட்டு இதோ பள்ளியில் இளநிலை பிள்ளைகளுக்கு டீச்சராக இருக்கிறாள். இன்றைக்கு வரும் வரன் அமைந்து விட்டால் போதும்..
அடுத்தவளுக்கு இரண்டு நாட்களில் கல்லூரியில் வேலைக்கான நேர்முக தேர்வு நடக்க இருக்கிறது. அவள் தேர்வாகிவிட வேண்டும் என்று தாயின் மனம் மானசீகமாக வேண்டுதலை வைத்தது.

ஆனால் நினைக்கிறது நடந்துடுமா?

🤎♥️🤎

ஆனந்தகண்ணன் அன்று காலையில் அரை நாள் விடுப்பு எடுத்திருந்தான். மதியம் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்தில் தான் அவன் வந்தான். ஆனாலும் அவனுடைய விழிகள் அபரஞ்சியை தேடியவண்ணம் இருந்தது. தினமும் அவளை பார்க்காவிட்டால் அவனுக்கு அன்றைய நாளே களையிழந்து விடும். விடுமுறைகளில் கூட அவள் வீட்டுப்பக்கம் போய் அவளை தூரத்தில் இருந்து பார்த்து விடுவான்.

ஆனந்தகண்ணன் அந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர். கட்டிளம் காளை. கம்பீரமான தோற்றம். சிவந்த நிறம்.. இளம் பெண்கள் அவனது கடைக்கண் பார்வைக்கு ஏங்குவார்கள். அவனோ ஒரே ஒருத்தியின் கடைக்கண் பார்வைக்காக தவம் இருக்கிறான்.
ஏழு ஆண்டுகளாக அவன் இந்தப் பள்ளியில் வேலை செய்து கொண்டிருக்கிறான். எத்தனையோ இளம் ஆசிரியைகள் தற்காலிக வேலைக்காக வந்துவிட்டு போயிருக்கிறார்கள். அவர்களிடம் எல்லாம் சலனப்படாத மனம், அபரஞ்சியை பார்த்த அன்றே பறிபோயிற்று. அவளும் வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. தன் மனதை அவளிடம் சொல்ல முடியாமல் தவித்தான். அவள் யாரையும் நிமிர்ந்து பார்ப்பதே இல்லை..! அவன் ஒருவன் அந்த பள்ளியில் இருக்கிறான் என்பது கூட அவளுக்கு தெரியுமோ என்னவோ? ஆனால் இப்போது அவன் வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அவன்தான் யாரையும் பிடிக்கவில்லை என்று ஓடிக் கொண்டிருக்கிறான்.

அவனது பெற்றோர் மகனின் விருப்பததிற்கு என்றும் தடை சொல்ல மாட்டார்கள். ஆனால் இவன் இன்னும் அபியிடம் காதலை சொல்லவில்லை. முதலில் அதற்கு வழியை பார்க்க வேண்டும். ஆனால் அவள் நிமிர்ந்து அவனை பார்த்தால் தானே, அடுத்த கட்டத்திற்கு போக இயலும்?

அன்று மாலை பள்ளி முடியும் நேரம் வரையிலும் கண்ணனால் அபரஞ்சியை பார்க்க முடியவில்லை. அவள் தான் மதியமே வீட்டிற்கு சென்று விட்டாளே..! அந்த விவரம் அவனுக்கு யார் சொல்வார்கள்?

வீடு வந்தபிறகும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. இதற்கு ஒரே தீர்வு அவளிடம் முதல் வேளையாக பேசிவிடுவதுதான் என்று தீர்மானித்த பின்னரே அவன் மனது சற்று அடங்கியது.

🤎♥️🤎

அபரஞ்சியின் வீட்டில்..!

"அம்மா சாப்பிட வாங்க, அஞ்சு நீயும் வாடி" என்று அபரஞ்சி அழைத்தாள்.

"இதோ வர்றேன் அக்கா"

" எனக்கு, பசிக்கலை அபி, சாப்பாடு வேண்டாம். நீங்க இரண்டு பேரும் சாப்பிடுங்க "

"அட என்னம்மா நீங்க? அவங்களுக்கு கொடுத்து வைக்கலை .. அபி அக்காவுக்கு இதை விட நல்ல வரன் அமையணும்னு இருக்கு. அதான் இப்படி நடந்துட்டுது. அதுக்காக நீங்க வருத்தப்பட்டு,ஏன் பட்னி கிடக்கணும்?" என்று படபடத்தாள் அஞ்சனா.

"நல்லா சொல்லுடி, நானும் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன். புரிஞ்சுக்காம புலம்பிட்டே இருக்காங்க" என்று அலுத்தபடி சாப்பாட்டு தட்டை கொணர்ந்து வைத்தாள் அபரஞ்சி.

"உன்னை பார்க்க வரும் போது அவங்க கார் ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு. இத்தனைக்கும் நல்ல வேளையாக யாருக்கும் ஒன்னும் ஆகலை. ஆனால் மாப்பிள்ளை வீட்டில இதை சாக்காக வச்சு பொண்ணு ராசி சரியில்லைன்னு பார்க்க வராமல் அப்படியே திரும்பிட்டாங்களே.. அதைத்தான் என்னால தாங்க முடியலை"

"அம்மா, விடுங்க.. அக்கா இருக்கிறது உங்களுக்கு பாரமாக இருக்கா என்ன?"என்றாள் அஞ்சனா

"அஞ்சு" என்று அதட்டினாள் அபரஞ்சி.

"அடியேய்.. என்ன வார்த்தை சொல்லிட்டே? என் பிள்ளைக என்கூட இருக்கிறது பாரமாக நினைக்கிறவளா, இரண்டு பேரையும் அரும்பாடுபட்டு வளர்த்தேன்"

"அப்புறமென்ன அம்மா, சும்மா புலம்பாம ஒரு வாய் சாப்பிட்டு படு.. காலையில அக்கா வேலைக்கு கிளம்ப வேண்டாமா?"

அதற்கு மேல் மஞ்சரி மாப்பிள்ளை பற்றி பேசவில்லை.

மூவரும் பொதுவான பேச்சுகளுடன் சாப்பிட்டு படுத்தனர்

🖤🤎🖤

மறுநாள்

ஆனந்தகண்ணன் எப்படி அபரஞ்சியிடம் தன் மனதை வெளிப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டே பள்ளிக்கு வந்தான்.

பள்ளி துவங்க இன்னும் நேரமிருந்தது. தன் வாகனத்தை நிறுத்திவிட்டு, கைப்பேசியில் ஒரு கண்ணும் பிரதான வாயிலில் ஒரு கண்ணுமாக கண்ணன்
காத்திருந்தான்.

அடர் நீல நிறத்தில் வெள்ளை புள்ளிகளிட்ட சேலையில் உள்ளே வந்தாள் அபரஞ்சி..! அவளுடன் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆறாம் வகுப்பு ஆசிரியை தங்கத்துடன் பேசிக் கொண்டே சென்றாள்.

தங்கத்தின் பார்வை கண்ணனிடம் சென்று, சென்று மீள்வதை கவனித்த அபரஞ்சி திரும்பி பார்த்தாள். அதே நேரம் கண்ணனும் அவளை பார்த்தான்.

யார் இவன்? இங்கே என்ன செய்கிறான் ? என்று யோசித்தவள், சட்டென்று தங்கத்திடம் பார்வையை செலுத்தினாள். அவளோ கண்ணனிடம் பார்வையை பதித்தபடியே உடன் நடந்தாள். ஓ! கதை அப்படி போகிறதா? என்று நினைத்தவள்,

"தங்கம், முன்னாடி பள்ளம் பார்த்து வாங்க" என்றாள் நமட்டு சிரிப்புடன்..!

தங்கம் திடுக்கிட்டு நிகழ்வுக்கு திரும்பியவள், அபரஞ்சி தன்னை கேலி செய்வதை புரிந்து கொண்டவளாக, முகத்தில் அசடு வழிய," ஏய், என்னையே கலாய்க்கிறியா? " என்றாள்.

"பின்னே என்ன? நான் கூட வர்றதுகூட கவனமில்லாமல் அவரை அப்படி சைட் அடிச்சுட்டு வர்றீங்க.. ஆமா எந்த லெவல்ல இருக்கு?"

தங்கம் ஒரு பெருமூச்சுடன், "அட நீ நினைக்கிற மாதிரி ஏதும் இல்லை அபி. நான் தான் அவரை பார்க்கிறேன். ஆனால் மனுஷன் எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டார். கல்யாணமாகாத பொண்ணுங்களுக்கு எல்லாம் அவர்தான் கனவுக் கண்ணன்" என்றாள்.

அபரஞ்சி களுக்கென்று சிரித்தாள். " சாரி டீச்சர். அதென்ன கனவு கண்ணன்? என்றாள் பொங்கிய சிரிப்பை அடக்கியவாறு..

"ஆண்களுக்கு கனவுக் கன்னி மாதிரி எங்களுக்கு இது.. உண்மையில் அவர் பெயரே ஆனந்தகண்ணன் தான்"

"ஓ! அதான் கோபியர் எல்லாம் வட்டம் போடுறீங்க"

"ஏய் உனக்கு வரவர வாய் அதிகமாயிட்டுது" என்று பொய் கோபத்துடன் சொன்னவள், அலுவலக கட்டிடம் வரவும், "பை அபி" என்று ஆசிரியர்களுக்கான அறையை நோக்கி சென்றாள் தங்கம்.

அபரஞ்சிக்கு சற்று முன் ஆனந்தகண்ணன் அவளை பார்த்த பார்வை மனதில் ஓட ஒருகணம் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது. என்ன பார்வை அது? ஆளையே முழுங்கிவிடுவது போல .. என்று எண்ணியவள், "அவர் எந்த பெண்ணையும் நிமிர்ந்து பார்க்க மாட்டார் " என்ற தங்கத்தின் பேச்சு அசந்தர்ப்பமாக நினைவுக்கு வந்தது..! அப்படி என்றால் ஆனந்தகண்ணனின் நிஜமான குணம் எது? ச்சு.. அதெல்லாம் உனக்கு எதுக்குடி? வந்தமா வேலையை பார்த்தமா போனமானு இருக்கணும், இத்தனை நாள் அப்படித்தானே இருந்தாய் என்று தனக்கு தானே அறிவுறுத்திக் கொண்டு தன் இருக்கைக்கு சென்றாள்.

அதே சமயம் ஆனந்தகண்ணன் மனம் உற்சாகத்தில் துள்ளிக் கொண்டிருந்தது. அவனுடைய தேவதை ஒரு வழியாக அவனை நேராக பார்த்துவிட்டாள். இனி அவன் அவளிடம் மெல்ல பழகத் தொடங்க வேண்டும் என்று நினைத்தவன்.. "ம்ஹும், அது சரி வராது.. இதற்கு வேறு வழிதான் பார்க்க வேண்டும் என்று அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

🖤🤎🖤

அடுத்து வந்த தினங்களில் தொடர்ந்து ஆனந்தகண்ணன், அபரஞ்சியின் கண்ணில் விழுந்தான். இல்லை, அபரஞ்சியின் பார்வை தான் அவனை தேடியது. அன்று வரை அவள் மனது அலை பாய்ந்தது இல்லை. அவள் உண்டு அவளது வேலை உண்டு என்று இருந்தவள். ஆனால் அன்று கண்ணனின் பார்வையை சந்தித்ததில் இருந்து அவளது விழிகள் அவளையும் அறியாமல் அவனை தேடுவதை அவளால் தவிர்க்க முடியவில்லை. நேருக்கு நேர் அவன் பார்வையை சந்தித்துவிட்டாலோ, முகம் சிவந்து போகிறாள். அவனும் வெகு அபூர்வமான சமயங்களில் ஒற்றை புருவம் உயர்த்தி, என்னவென்று கேட்பான்.. அவள்தான் தடுமாறிப் போவாள்!

அபரஞ்சியின் உடைகள் எப்போதும் திருத்தமாக கண்ணியமாக இருக்கும். அலங்காரம் என்று அவள் எப்போதும் பெரிதாக செய்தது இல்லை. இப்போது கண்ணுக்கு மை எழுதுகிறாள். உடைகள் மேட்சிங்காக உடுத்துவது தான் வழக்கம். இப்போது உடைக்கு ஏற்றார் போல வளையல் பொட்டு கழுத்தணி என்று எல்லாம் பார்த்து அணிகிறாள்.

மஞ்சரிக்கு மகளின் மாற்றம் கருத்தில் படவில்லை. ஆனால் அஞ்சனாவின் கவனத்தில் விழுந்தது..! அவளை விட இரண்டு வயதுதானே அக்கா பெரியவள். அவளுக்கு புரியாதா என்ன? ஆனால் அக்காவாக சொல்லட்டும் என்று அவள் காத்திருந்தாள். தப்பான ஒருவனை தேர்வு செய்ய மாட்டாள் என்று அவளுக்கு அக்காவின் மீது முழு நம்பிக்கை இருந்தது..! ஆனாலும் அக்காவின் வாழ்க்கை ஒரு நல்லவனின் கைகளில் சேர வேண்டும் என்று உள்ளூர தவிப்பும் உண்டாயிற்று. அக்காவின் மனம் கவர்ந்தவன் யார் என்று தெரிந்து கொள்ள நினைத்தாள்

ஒரு மாதம் சென்ற நிலையில் அன்று வீடு வந்ததும் வராததுமாக, மஞ்சரி பரபரப்புடன், "அபி ஒரு நல்ல இடம் வந்திருக்கு.. ! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை உன்னை பெண் பார்க்க வர்றாங்க..! எப்படியும் இந்த இடம் அமையும்னு எனக்கு மனசுக்கு படுது..! என்றாள்.

"அம்மா, திரும்பவும் இந்த பெண் பார்க்கிற சடங்கு எல்லாம் எதுக்குமா? எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவங்களை வரவேண்டாம்னு சொல்லிடுங்க" என்றாள் அழுத்தமாக.

"என்ன பேசுற நீ? பெண்ணாக பிறந்துட்டா இதெல்லாம் கடந்து தான் ஆகணும். எப்பவும் உன் தங்கச்சி தான் கொடி பிடிப்பா..! இப்ப நீயும் ஆரம்பிச்சுட்டியா? இதோ பார் அபி, இந்த வரன் ரொம்ப நல்ல இடம். எனக்கு நம்பிக்கை இருக்கு.. இது நிச்சயமாக அமைஞ்சிடும்னு.. பையன் சும்மா சினிமா கதாநாயகன் மாதிரி அவ்வளவு அம்சமா இருக்கிறான். போட்டோவைப் பார்.. உனக்கே பிடிச்சுப் போகும்.. என்று புகைப்பட கவரை அவளிடம் தந்துவிட்டு நகர்ந்தாள்.

ஆனால் அதை பிரித்துக்கூட பார்க்க அபரஞ்சிக்கு பிடிக்கவில்லை..! அவள் மனதில் ஏற்கனவே ஒருவன் இடம் பிடித்துவிட்டான். இனி வேறு யாரையும் அவள் பார்ப்பதாக இல்லை.. வரட்டும் அந்த மாப்பிள்ளை.. அவனிடமே சொல்லிவிடுகிறேன்.. ! அப்புறமாக அந்த கள்வனிடமும் "சும்மா , லுக் விட்டுட்டு இருந்தா போதுமா?" என்று நன்றாக நாலு வார்த்தை கேட்டு விட வேண்டும்... என்று தீர்மானித்த பிறகே சற்று மனம் அமைதியாயிற்று..!

🖤🤎🖤

என்னதான் கண்ணனிடம் பேச வேண்டும் என்று தைரியமாக நினைத்துக் கொண்டாலும், அபரஞ்சிக்கு அவனிடம் சென்று பேசும் துணிவு மட்டும் வரவில்லை. அதிலும் அடுத்து வந்த நாட்களில், வழக்கத்திற்கு மாறாக, கண்ணன் அவளை பார்க்கும் போது எல்லாம், புன்னகைத்து வைத்தான்.

"ஆமா இவரு பெரிய புன்னகை மன்னன்.. இவர் சிரிப்பில் அப்படியே மயங்கி பின்னாடியே போய்விடுவோமாக்கும்? தன் மனம் அப்படித்தான் மாறிவிட்டது என்பதை அறிந்தும், அதை ஒத்துக்கொள்ளாமல் மனதுக்குள் நொடித்துக் கொண்டாள் அபரஞ்சி.

🤎🤎🤎

ஞாயிறு அன்று, காலையில் சற்று தாமதமாக எழுந்தாள் அபரஞ்சி. வீடு பரபரப்பாக இருந்தது, மஞ்சரி வீட்டு வேலையில் ஈடுபட்டிருக்க, அஞ்சனா வீட்டை அலங்கரிப்பதில் மும்முரமாக இருந்தாள். எப்படியும் வருகிறவன் நல்லா மொக்கிட்டு, ஊருக்கு போய் தகவல் சொல்றோம்னு போகப் போறானுங்க.. ஓசியில டிபன் சாப்பிட இப்படி ஒரு கூட்டம் கிளம்பியிருக்குதுக போல.. இன்னிக்கு அந்த மாப்பிள்ளை வரட்டும், அவன் என்ன, என்னை பிடிக்கலைன்னு சொல்றது? நானே சொல்றேன். அடுத்து எவனும் பொண்ணு பார்க்க என்று இந்த பக்கம் வரக்கூடாதுன்னு அம்மாவிடம் கட் & ரைட்டா சொல்லிவிடணும்... மனதுக்குள் தீர்மானித்தபடியே தன் பணிகளை முடித்துவிட்டு அபரஞ்சி, ஏதோ தனக்கும் அங்கே நடக்கும் விஷயத்துக்கு சம்பந்தமே இல்லை என்பது போல டிபனை சாப்பிட்டு விட்டு, டிவியில் பாட்டு வைத்து பார்க்க உட்கார்ந்து கொண்டாள்.
அது என்னமோ வரிசையாக காதல் பாட்டாக ஓடிக் கொண்டிருந்தது.

"கண்ணனே நீ வர காத்திருந்தேன் என்று முதல் பாடல் கண்ணன் வரும் வேளை அந்தி மாலை என்று அடுத்த பாடல் ஒளிபரப்பாக, அபரஞ்சிக்கு பிடித்த பாடல்கள் தான் என்றாலும் ஏதோ சூழ்நிலைக்கேற்ப ஒலிப்பது போன்ற பிரம்மை உண்டாயிற்று.

"கண்ணன் வந்து பாடுகிறான் காலமெல்லாம்" அடுத்த பாடல் ஒலிக்க, அவளுக்கு கண்ணனின் நினைவு வந்தது.. சும்மா பார்த்துக் கொண்டே இருக்கிறானே.. எப்பத்தான் வந்து மனதில் இருப்பதை சொல்வான்? ஹூம் சொல்வானா ? இல்லை ச்சு.. என்று சலித்தவாறு டிவியை அணைத்துவிட்டு, எழுந்தபோது,
மஞ்சரி மதிய சமையலை முடித்துவிட்டு அப்போதுதான் கூடத்திற்கு வந்தாள்.

"அம்மா" என்று வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்டது. சஞ்சனா யாருன்னு பாரும்மா என்றாள் அன்னை.

"அம்மா தரகர் வந்திருக்கார்மா.." என்று சின்ன மகள் சொல்ல பதற்றமாக வெராண்டாவுக்கு சென்றாள் மஞ்சரி.

"என்னாச்சு தரகரே, சாயந்திரம் தானே அவங்க வர்றதா சொன்னீங்க.. ? என்றாள் தன் படபடப்பை மறைக்க முயன்றபடி.

"அது வந்துமா, மாப்பிள்ளை யாரோ ஒரு பெண்ணை காதலிக்கிறாராம். அதனால அந்த பெண்ணையே அவருக்கு கட்டி வைக்கிறதா முடிவு பண்ணிட்டாங்களாம்.. நீங்க எதிர்பார்த்துட்டு இருப்பீங்களேனு சொல்லிட்டுப் போக வந்தேன்" என்றவர் மேற்கொண்டு பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட, கண்கள் கலங்க உள்ளே வந்த மஞ்சரி, வாயைப் பொத்திக் கொண்டு அழுகையில் குழுங்கினாள்.

இரண்டு மகள்களும் பதறிப் போய், "என்னாச்சுமா? என்று ஒரே குரலாக கேட்க.. அவளது அழுகை அதிகரித்தது.

சஞ்சனா தண்ணீரை கொணர்ந்து தாயிடம் கொடுத்து, "முதல்ல இந்த தண்ணியை குடிம்மா.. என்று பருக வைத்தாள். இப்போது அழுகை கேவலாக மாறியிருந்தது.

தாயின் முதுகை தடவி விட்டபடி," ஏன் அம்மா இப்ப அழுகிறே? வந்து பார்த்துட்டு பிடிக்கலைன்னு சொல்றவனை விட இவன் எவ்வளவோ நல்லவன்மா. என்னம்மா அப்படி பார்க்கிற? வீட்டுல கூப்பிட்டதுக்காக வந்துட்டு, அவங்க கட்டாயத்துக்காக கல்யாணமும் பண்ணிட்டுப் பிறகு இந்த விசயம் தெரிய வந்தால் அக்கா வாழ்க்கை என்னவாகியிருக்கும்மா? அக்காவுக்கான துணை இனிமேலா பிறந்து வரப் போறான்? அவன் எங்கேயோ ஏற்கனவே பிறந்துட்டான். என்ன நமக்கு தான் இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிட்டு இருக்கான்.. நீ முதல்ல வந்து சாப்பிடுமா.. நீ சாப்பிடலைன்னா எங்களுக்கும் வேண்டாம்" என்றாள் சஞ்சனா.

சின்ன மகளின் வயதுக்கு மீறிய பக்குவமான பேச்சு எப்போதும் போல அந்த தாயின் மனதுக்கு ஆறுதலாக இருந்தது.. அவள் சொல்வதும் சரிதானே? எப்போது கல்யாண யோகம் வர வேண்டும் என்று இருக்கிறதோ அப்போது தானே எல்லாம் கூடி வரட்டும்.. என்று நினைத்தவள் முகத்தை கழுவிவிட்டு சாப்பாட்டை எடுத்து வைத்தாள்.

அபரஞ்சிக்கு, பெண் பார்க்க வரமாட்டார்கள் என்றதும் நிம்மதியாக விட்டது. அவள் தாய் அழைக்காமலே வந்து சாப்பிட அமர்ந்து கொண்டாள்.. சகோதரியின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி அருகே அமர்ந்தாள் சஞ்சனா.

"என்னக்கா, கிரேட் எஸ்கேப் போலிருக்கு? என்று அக்காவின் காதோரம் கிசுகிசுக்க.. ஒரு கணம் திடுக்கிட்ட அபரஞ்சி உடனடியாக சுதாரித்துக் கொண்டாள்.

"ஏய் என்னடி, உளறிட்டு இருக்கிறே. . பேசாமல் தட்டை பார்த்து சாப்பிடு" என்று அதட்டிவிட்டு சாப்பிடுவதில் முனைந்தாள்...
🤎🤎🤎
அன்று மாலையில் கோவிலுக்கு கொண்டிருந்தாள் மஞ்சரி. சஞ்சனா, அபரஞ்சியிடம், டிவியில் ஏதோ பழைய படத்தை பார்த்து கலாய்த்துக் கொண்டிருந்தாள்.

"அபி, நான் கோவிலுக்கு போயிட்டு அப்படியே நம்ப ஜோசியர் வீடு வரைக்கும் போயிட்டு வர்றேன். வந்து கதவை தாழ் போட்டுக்கோ" என்று மஞ்சரி சொல்லிக் கொண்டிருக்கையில் , அழைப்பு மணி ஒலிக்க, வாசலுக்கு சென்றாள்.

அங்கே நடுத்தர வயதில் ஒரு தம்பதியர் நின்றிருந்தனர்.

"யார் நீங்க? என்ன வேண்டும்? என்றாள் கலவரமான குரலில்.

"நாங்க உங்க மூத்த மகளை எங்க மகனுக்கு பெண் கேட்டு வந்திருக்கிறோம்" என்றார் கணபதி.

மஞ்சரிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒருங்கே உண்டாக," தரகர் நீங்க வரலைன்னு சொன்னாரே? என்றாள் குழப்பத்துடன்.

"அது, ஒரு கதைங்க, நாங்க விளக்கமா சொல்றோம். உள்ளே போய் பேசலாமா? என்றார் கணபதி.

அவரை தொடர்ந்து,"நீங்க எந்த ஏற்பாடும் செய்யலைனு கவலைப்பட வேண்டாம்மா.. நாங்க பெண்ணை பார்க்கத்தான் வந்திருக்கிறோம்" என்றாள் முல்லை.

அதற்குள்ளாக பேச்சு குரல் கேட்டு, சஞ்சனா வந்திருந்தாள். அபரஞ்சியும் தங்கையின் பின் நின்றிருக்க,

மஞ்சரி, சட்டென்று கதவை விரிய திறந்து, "உள்ளே வாங்க, என்ற மஞ்சரி, சஞ்சு, முதல்ல குடிக்க தண்ணீர் கொண்டு வா, அபி நீ காபி போட்டு எடுத்துட்டு வா", என்று மகள்களுக்கு வேலை சொல்லி அனுப்பிவிட்டு, வந்தவர்களை சேர்களில் அமருமாறு பணித்தாள் மஞ்சரி.

அபரஞ்சிக்கு இதென்னடா புது பூதம் என்று கடுப்பாகத்தான் இருந்தது. கூடவே அந்த கண்ணன் மீதும் கோபம் வந்தது. வீணாக அவளை பார்வையால் அவளை தொடர்கிறவனை நம்பி எப்படி, என்னவென்று தாயிடம் சொல்வது? ஒருப்றம் மனம் தவிக்க, காபியை குப்பைகளில் ஊற்றி ட்ரேயில் எடுத்துக் கொண்டு கூடத்திற்கு சென்றாள்.

"அதுல வேடிக்கை என்னன்னா, நாங்க பார்க்க வர்றதா இருந்த உங்க பெண்ணைத் தான் எங்க பையன் ஏற்கனவே விருப்பிட்டு இருந்திருக்கிறான். தரகர்கிட்ட விபரம் சொன்னப் பிறகு, மகன்கிட்ட யாரை விரும்புகிறான் என்ற விவரத்தை கேட்டோம். அப்பத்தான் எங்களுக்கு விசயமே தெரிஞ்சது. நாங்க பார்க்க வர்றதா இருந்ததும், அவன் விரும்பறதும் ஒரே பொண்ணு தான் என்று. அதனால தான் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கட்டும்னு சொல்லாம கொள்ளாம பெண் பார்க்க வந்துட்டோம்" முல்லை சொன்னதை கேட்டவாறு அபரஞ்சி கூடத்துக்கு சென்று காபியை கொடுத்தாள்.

"இப்படி உட்காரும்மா அபரஞ்சி" என்று அவளை அருகில் அமர வைத்தார் முல்லை. சாதாரண புடவையில் அவள் அழகோவியமாக தெரிந்தாள். பார்த்ததும் இருவருக்கும் பிடித்துப் போயிற்று.

அபரஞ்சிக்கு அவர்கள் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன ? அவளை யாரோ விரும்புறானாமே? யாரவன்? நல்லவனா கெட்டவனா? அவனுக்கு பிடித்தால் போதுமா? அவனை அவளுக்கு பிடிக்க வேண்டாமா? மனதுக்குள் அவள் கடுப்புடன் கொண்டிருந்தபோது,

மகளின் மனதை உணர்ந்தார் போல,
"மாப்பிள்ளையும் வந்திருந்தால் நாங்களும் பார்த்திருப்போம்" என்றாள் மஞ்சரி.

"எங்களுக்கு அபரஞ்சியை பார்க்கணும்னு ஆசை. வர்ற அவசரத்துல எதுவும் வாங்காமல் வந்துட்டோம். அதனால அவனை வாங்கிட்டு வரச் சொல்லிட்டு முன்னதாக வந்துட்டோம், கூட அவனோட படிச்ச பிரண்ட்டும் வர்றதா சொன்னான், அவனைக்கூட்டிட்டு வருவான்" என்ற முல்லை, "எங்க பையனுக்கு அபரஞ்சியை பிடிச்சதால தான் நாங்க பெண் பார்க்க வந்தோம். பெண்ணை பார்த்ததும் எங்களுக்கும் பரிபூரண சம்மதம். எங்க மகனை போட்டோவில் பார்த்திருப்பீங்க, எதுக்கும் நேரில் ஒரு தடவை பார்த்துட்டு உங்க அபிப்பிராயத்தை சொல்லுங்க, அப்புறமா மேற்கொண்டு பேசிக்கலாம்" என்றாள்.

எந்த பெண்ணுக்கும் புகுந்த வீட்டில், நாள் முழுவதும் உடனிருக்கும் மாமியார் சரியாக அமையாவிட்டால் அவள் வாழ்க்கை நகரம்தான். முல்லை அப்படி இல்லை என்பதே மஞ்சரிக்கு பாதி கவலை போய்விட்டது. அவள் மகளின் வாழ்க்கைக்கு ஒரு விடிவு காலம் வந்து விட்டது. இப்படிப்பட்ட ஒரு இடம் தேடினாலும் கிடைக்காது. இனி பையனை மகளுக்கு பிடிக்க வேண்டும். அது ஒன்றுதான் லேசாக உள்ளுர கவலை அளித்தது.

அபரஞ்சிக்கும், மனதுக்குள் இப்போது என்ன முடிவு சொல்வது என்று ஒர குழப்பம். யாரோ ஒருவன் அவளை விரும்பியதோடு பெண் பார்க்கவும் பெற்றோரை அனுப்பிவிட்டான். இப்போது அவள் மனதில் வேறு ஒருவன் இருப்பதாக சொன்னால், வந்தவர்களாவது புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் மகளுக்கு ஒர் நல்ல வாழ்க்கை அமைந்துவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கும் தாய் இதை எப்படி தாங்கிக்கொள்வாள்? அபரஞ்சியின் மனக்கண்ணில் ஒருகணம் கண்ணனின் முகத்தோற்றம் வந்து போயிற்று. ஒரு பெருமூச்சுடன், எதிர்காலமே இல்லாத அந்த காதலுக்காக பெற்றவளை வருந்த செய்ய வேண்டுமா என்று நினைத்தவள், மனதுக்குள் ஒரு முடிவுக்கு வந்தாள்.

அதே நேரம் கணபதியின் கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவர் பேச ஆரம்பித்ததும் முகம் மாறி," "என்னப்பா சொல்றே? எந்த ஆஸ்பிடல் ? இதோ உடனே கிளம்பி வர்றோம்", என்றவர், "முல்லை, ஆனந்துக்கு அடிபட்டிருச்சாம், அவன் பிரண்ட் ரகு, தான் கூட இருக்கானாம்" என்று அவர் வாசல் நோக்கி நடக்க,அவர் பின்னோடு விரைந்தாள் முல்லை.

"கடவுளே இதென்ன சோதனை? நீ விளையாட என் பொண்ணோட வாழ்க்கை தான் கிடைச்சதா? என்று கதறியவாறு, மஞ்சரி அப்படியே மயங்கி சரிந்தாள்.

"அம்மா, அம்மா என்று இரு பெண்களும் பதற, கணவனின் பின்னே சென்ற முல்லை, அவர்களின் குரலில் திரும்பி பார்த்தவள்," என்னங்க, அந்தம்மா மயங்கி விழுந்துட்டாங்க " என்று கணவனிடம் கூறிவிட்டு உள்ளே விரைந்து வந்தாள்.

அதற்குள்ளாக தண்ணீரை கொணர்ந்து தாயின் முகத்தில் தெளித்தாள் அபரஞ்சி. ஆனாலும் மஞ்சரி கண் விழிக்காது போகவும், இரு பெண்களும் முகம் வெளுக்க திகைத்து நிற்க, முல்லை மஞ்சரியின் நாடியைப் பிடித்து பார்த்துவிட்டு, " பல்ஸ் இருக்குதுமா, சீக்கிரமாக தூக்குங்க, ஆஸ்பிட்டலுக்கு தானே போறோம், அங்கேயே காட்டிடலாம்" என்று அவளும் ஒரு கை கொடுக்க காரில் பின்புறம் ஏற்றி இரு பெண்களும் ஏறிக் கொள்ள, முன்புறம் கணவன் அருகே முல்லையும் ஏறவும், காரை முடிந்தவரை வேகமாக செலுத்தினார் கணபதி.

போகும் போதே முல்லை, கைப்பேசியில்," ரகு, ஆனந்த் எப்படி இருக்கிறான்? பயப்படும்படி ஒன்றும் இல்லையே " என்று கேட்க, எதிர் முனையில்

"அம்மா, போனை ஸ்பீக்கரில் போடுங்க, அப்பாவும் கேட்கட்டும், என்றவன், நல்லா கேட்டுக்கோங்க, எனக்கு லேசாக சிராய்ப்பு தான். பயப்பட ஒன்றுமில்லை, நான்தான் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துட்டேன். இந்த ரகு தடியன்தான் தேவையில்லாமல் உங்களை கலவரப்படுத்திட்டான்.. பாவம் பொண்ணு வீட்டுல எல்லாரும், என்னவோ ஏதோனு கவலையா இருப்பாங்க.. நீங்க கிளம்பியிருந்தாலும், அவங்க வீட்டுக்கு போய் இருங்க, நாங்க கொஞ்சம் நேரத்துல வந்துடுறோம்" என்றவனின் குரலில் எல்லோரும் ஆசுவாசமாக,

முல்லை அவசரமாக மகனிடம் பேசினாள்,"ஆனந்த், நீங்க இங்கே வரவேண்டாம், அபி அம்மா மயக்கமாகிட்டாங்க, அவங்களை அழைச்சிட்டு நாங்க வந்துட்டு இருக்கிறோம், நீ ஸ்ட்ரெச்சருக்கு ஏற்பாடு பண்ணு, கொஞ்சம் நேரத்துல வந்துடுவோம் " என்று பேச்சை முடித்துக் கொண்டாள்.

அபரஞ்சிக்கு, அந்த குடும்பத்தினரின் நடவடிக்கை எல்லாம் அதிசயமாக இருந்தது, யாருமே தனக்கு ஏதும் பாதகம் என்றால், அடுத்தவரை குற்றம் சொல்லத்தான் முனைவார்கள். ஆனால் இவன்? பெண் வீட்டாரையும் கருத்தில் கொண்டு, அவர்களுக்காக யோசிக்கிறானே? இப்படியும் ஒருவனா என்று வியாக்காமல் இருக்க முடியவில்லை. ஆனந்தின் அந்த குணம் அவளை ஈர்த்தது. கூடவே அவள் விரும்புகிற கண்ணன் இப்படி இருந்திருக்கலாம் என்ற சிறு ஏக்கமும் உண்டாயிற்று..
🤎🤎🤎

மருத்துவமனையில்..

மஞ்சரி தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் அங்கு சென்ற போது ஆனந்த் அங்கே இல்லை. தாயின் உடல்நிலையில் கவலை கொண்டிருந்த அபரஞ்சிக்கு சுற்றுப்புறம் கருத்தில் படவில்லை.

மஞ்சரியை வெகு நேரம் பரிசோதித்து விட்டு வந்த மருத்துவர், "உயிருக்கு ஆபத்து இல்லை. ஹார்ட் அட்டாக். சரியான நேரத்துல கொண்டு வந்துட்டீங்க இல்லைன்னா, அவங்க பிழைச்சிருக்க வாய்ப்புகள் குறைவு. இன்று ஒரு நைட் இங்கே இருக்கட்டும் காலையில் திரும்ப ஒரு தடவை பரிசோதனை செய்துட்டு மேற்கொண்டு என்ன சிகிச்சை செய்யலாம்னு பார்க்கலாம்" என்றுவிட்டு மருத்துவர் போய்விட,

"கடவுள் புண்ணியத்தில் அம்மா பிழைச்சுட்டாங்களே, நீங்க இரண்டு பேரும் இங்கே இருக்க வேண்டாம். நம்ப வீட்டுக்கு வாங்க, ஆனந்த் இங்கே இருந்து பார்த்துக்குவான்" என்று முல்லை சொல்ல,

"அம்மா கண் முழிச்சு எங்களை கேட்டால்? அதனால நீங்க அக்காவை மட்டும் அழைச்சிட்டு போங்க ஆன்ட்டி, நான் இங்கேயே இருக்கிறேன்" என்றாள் சஞ்சனா.

"சஞ்சனா, அதான் அம்மா சொல்றாங்களே, நீயும் கிளம்பு. நான் அத்தையை பார்த்துக்கிறேன். அவங்களுக்கு ஒன்றும் ஆகாது. எப்படியும் அப்சர்வேஷன்ல தான் இருப்பாங்க, சோ, இப்ப ஒவ்வொருத்தரா போய் பார்த்துட்டு கிளம்புங்க" என்றான் ஆனந்த் அழுத்தமாக..

இவன்தான் அக்காவின் வருங்கால கணவனா? அக்காவிற்கு வெகு பொருத்தம் தான்" அவனை ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தாள் சஞ்சனா.

"என்ன உன் பெயர் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறாயா? என்றான்.

"ஆ.. ஆ இல்லை, நான் .. என்று தடுமாறிய தங்கையை வியப்புடன் பார்த்தாள் அபரஞ்சி, எப்போதும் தெளிவாக பேசும் தங்கை ஏன் இப்படி தடுமாறுகிறாள் என்று நினைத்தவாறே அருகில் நின்றவனை நிமிர்ந்து பார்க்க, சட்டென்று அவன் கண்ணடிக்க, எதிர்பாராத அந்த செய்கையில் அவளது முகம் வெட்கத்தில் சிவந்து போயிற்று.. அவசரமாக தலையை கவிழ்ந்து கொண்டாள். மனம் இனிய படபடப்பில் திளைக்க, அதுவரை இருந்த பதற்றம் குறைந்து ஒரு வகை அமைதி குடிகொண்டது.

சஞ்சனா, அவனது அந்த செய்கையையும் தமக்கையின் முகத்தையும் அதிசயமாக பார்த்திருந்தாள்.

"பொண்ணுங்களா முதலில், போய் உங்க அம்மாவை பார்த்துவிட்டு வாங்க,நாம கிளம்பலாம் " என்ற முல்லையின் குரலில்.. இரண்டு பெண்களும் இயல்புக்கு திரும்பினர். ஒருவர் பின் ஒருவராக சென்று தாயை கண்டு வந்ததும் முல்லையின் வீட்டுக்கு கிளம்பினர்.

சொல்லும்போது அபரஞ்சி ஓரவிழியால் ஆனந்தகண்ணனிடம், விடைபெற்றாள்.

ஆனந்தகண்ணனின் மனம் சந்தோஷத்தில் திளைத்தது. காதல் சொல்லாமல் அவள் மனதை உணர்த்திவிட்டு போகிறாளே அவனுடைய அபி.. இதற்கு மேல் என்ன வேண்டும்!

🤎🤎🤎

அபரஞ்சிக்கு தன் உள்ளம் கவர்ந்தவனே தன் மணவாளனாகப் போகிறான் என்று மிகுந்த சந்தோஷம்.

மஞ்சரிக்கு, பெரிய மகளுக்கு நல்லதொரு குடும்பத்தில் வாழ்க்கை அமைந்ததும்,சின்ன மகளுக்கு நல்ல வேலை கிடைத்து விட்டதிலுமாக, மனம் குளிர்ந்து போனாள்.

ஆனந்தகண்ணனின் நிலையை சொல்லவும் வேண்டுமா? ஆனால் அவனுக்கு சிறு வருத்தம். கல்யாணம் வரை இருவரும் தனியாக சந்திக்கவோ, கைப்பேசியில் பேசிக் கொள்ளவோ கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டாள் அபரஞ்சி. தன் காதலியின் முதல் நிபந்தனையை மீற முடியாது கடைபிடித்தான்.

அடுத்து வந்த மாதத்தில், ஒரு சுபயோக தினத்தில், வெகு விமரிசையாக ஆனந்தகண்ணன் - அபரஞ்சி திருமணம் நடந்தேறியது.

அன்றைய இரவின் தனிமையில்," அபி, இப்படி உட்கார் என்று மனைவியை அருகில் அமர்த்தியவன்,"கல்யாணம் வரை தனியாக சந்திக்க கூடாது, போனில் பேசக் கூடாது என்று நிபந்தனை விதித்துவிட்டாயே ஏன்? என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

"காரணமாகத்தான் கண்ணன், போனில் தினமும் பேசிக் கொண்டால் திருமணம் முடிந்த பிறகு நாம் பேசுவதற்கு புதிதாக எதுவும் இருக்காது.. அத்தோடு இப்போது போல் ஆர்வமும் இருக்காது.. கணவன் மனைவியாக பேசும் போது இருக்கும் சுதந்திரம், காதலர்களாக இருக்கும்போது இருக்காது. இருவருக்கும் பருவ வயது, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனம் தடுமாறிவிடலாம். திருமணம் தான் ஆகப்போகிறதே என்று எல்லை மீறவும் துணியலாம்.. இருவருக்கும் தான் சொல்கிறேன்பா.. அதெல்லாம் தேவையில்லாத மன உளைச்சலைத்தான் கொடுக்கும் கண்ணா...! உங்களை வருத்தப்படுத்தணும்னு நான் எதையும் செய்யவில்லை.. குரல் கமற அபரஞ்சி சொல்ல,

"நீ இப்போது சொல்லும் போதுதான் அபி, இதற்கெல்லாம் சாத்தியக்கூறுகள் இருப்பது புரிகிறது. உன்னைப் போல ஒவ்வொரு பெண்ணும் உறுதியாக இருந்தால், அவர்களது வாழ்க்கையில், சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது" என்றவாறு மனைவியை வாரி அணைத்து முத்தமிட்டான் ஆனந்தகண்ணன்.

சுபம்
 

Attachments

  • FB_IMG_1726837412906.jpg
    FB_IMG_1726837412906.jpg
    55.9 KB · Views: 0
Back
Top