Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

15. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
172
Reaction score
50
Points
28
Location
India
காந்திமதிக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது பேல் இருந்தது. வடிவுக்கரசி வந்த பிறகு அந்த வீட்டு நிர்வாகத்தை கொஞ்சம் கொஞ்சமாக காந்திமதி அவளிடம் ஒப்படைத்து விட்டாள். அதன் பிறகும் காந்திமதியிடம் கேட்டுத்தான் எதையும் செய்வாள். இத்தனை ஆண்டுகளாக எந்த குறையும் இல்லாமல் வீட்டை நிர்வகித்தாள். ஆனால் இனி?

மருமகளின் உடலநலம் குன்றியதை முதலில் அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. முன்னிரவில் மகன் வந்து வடிவுக்கரிக்கு மாரடைப்பு என்றபோது கொஞ்சம் கவலை உண்டானது. காலையில் மருத்துவர் நல்ல செய்தி சொல்லுவார் என்று எண்ணினாள். ஆனால் மகன் சமையலுக்கு ஆள் வைக்க வேண்டும் என்று வயிற்றுபாட்டிற்கு தீர்வு சொல்லி விட்டுப் போகிறான். ஆனால் வருகிறவள் எப்படி என்ன மாதிரி இருப்பாளோ? அத்துடன் முடிகிற விஷயமா? வீட்டின் நிர்வாகம், இன்னும் தினப்படி வேலைகள் எல்லாம் பொறுப்பாக கவனித்தாக வேண்டும். அதை எல்லாம் யார் கவனிப்பது?

மகன் வீட்டு சமையலுக்கு மட்டுமாக ஆள் வைக்கச் சொல்லவில்லை. இனி அவன் பெண்டாட்டி மனசு நோக ஒரு வார்த்தை சொன்னாலும் பொறுத்துக்கொள்ள மாட்டானாம். இத்தனை வருசமா இல்லாத இப்ப அவனுக்கு பொண்டாட்டி மேல அக்கறை வந்திருச்சு. அதுவும் சரிதானே? 42 வயசு பொண்டாட்டிக்கு நோவு வந்திருச்சே, இனி வயசான அம்மா எத்தனை காலத்துக்கு உயிரோடு இருப்பாளோ? என்று கலங்கியிருப்பான்.

வடிவுக்கரசி வந்ததில் இருந்து அவள் பிள்ளை பேறுக்காக கூட தாய் வீட்டிற்கு போகவில்லை. காரணம் பெற்றோர் இல்லை. தம்பியும் அப்போது சின்னவன் ராணுவத்தில் சேர்ந்திருந்தான். நினைத்த மாத்திரத்தில் வர இயலாத சூழல். அதனால் காந்திமதி தான் பார்த்துக் கொண்டாள். அப்போது வயசுப் பெண்ணாக இருந்த சந்திரமதி, இப்போது போலத்தான் கூடமாட ஒத்தாசை செய்யவில்லை. அப்போது உடலில் தெம்பு இருந்தது. இப்போது நடமாடுவதே பெரிய பிரயத்தனம் தான். இந்த நிலையில் அவள் என்ன செய்யப்போகிறாள்? பேத்தியாவது விவரமானவளாக இருந்திருந்தால் இங்கே தங்க வைத்துக் கொண்டு, அதையே சாக்காக வைத்து பேரனுக்கே கட்டிக் கொடுக்கலாம்.

இந்த வயசுல அவள்(காந்திமதி ) சத்யமூர்த்தியை பெற்றுவிட்டாள். என்னமோ மருமகனுக்கு மகளை படிக்க வைத்து பட்டதாரி ஆக்கவேண்டும் என்று தீராத ஆசை. பட்டதாரி ஆகிட்டா மட்டும் அவள் அடுத்த வீட்டுக்கு சோறாக்கத்தானே போகனும்? அதை இப்பவே ஆக்கிப்போடட்டும்னு அந்த மனுசனுக்கு தோனலையே. நிச்சயமே பண்ணினாலும் படிப்பு முடிஞ்சா தான் கல்யாணம் என்கிறார். இதெல்லாம் ஒரு பக்கம் என்றால் இப்போது பேரன் ஒரு மேனாமினுக்கியை கூட்டிக்கொண்டு வந்து அவளைத்தான் கட்டுவேன் என்கிறான். அட அவளாவது நம்ம குலமாக இருந்திருந்தால் போகிறது என்று விட்டுவிடலாம். ஆனால் கும்பிடற சாமியில் இருந்து, உடுத்தற உடுப்பு வரை எல்லாத்திலும் வித்தியாசம். இப்படி பட்ட சூழ்நிலையில் அவள் மேற்கொண்டு என்ன செய்வது என்று ஒரே திகைப்பாக இருந்தது.

☆☆☆

மலர் வதனி குளித்து விட்டு மஞ்சள் நிற பூக்கள் சிதறியிருந்த கத்திரி பூ நிறச்சேலையில் அழகாய் தெரிந்தாள். கூந்தலை ஆற்றியபடியே உடனடியாக அவள் வெளியே கிளம்பிவிட வேண்டும் என்று மனதுக்குள் எண்ணினாள். இல்லாது போனால் மறுபடியும் யாரேனும் வரக்கூடும். ஆனால் நீளமான கூந்தல் சீக்கிரம் ஈரம் போகாமல் படுத்தியது. அதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தால் அவள் பாடு தான் ஒரே திண்டாட்டம் ஆகிப் போகும் என்று நினைத்தவள் முடியை நன்றாக உதறிவிட்டு, முன்பக்கம் வகிடு எடுத்து கேரள பெண்களை போல இருபக்கமும் முடி எடுத்து கிளிப் ஒன்றை மாட்டிவிட்டு, மீதியுள்ள கூந்தலை அப்படியே விட்டாள். படிக்க கொண்டு வந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த நூலகத்திற்கு கிளம்பினாள். நல்ல வேளையாக அப்போது அங்கே யாரும் இல்லை. பின் வாசல் வழியாக ஓட்டமும் நடையுமாக நூலகத்தை அடைந்தவள் உள்ளே சென்று கோடியில் இருந்த இருக்கையில் அமர்ந்த பிறகே சுவாசம் சீராயிற்று.

வழக்கமாக அவள் அங்கே வருபவள் என்பதால் நூலகத்தை நடத்துகிற பெரியவர் அவள் ஒடி வந்ததைப் பெரிதாக எண்ணவில்லை. காரணம் இது சில சமயங்களில் அவளது வழக்கம் தான். வீட்டில் வேலை இருந்ததால் படிக்க முடியவில்லை இங்கே படிக்க வந்தேன் என்பாள். பொதுவாக பெண்கள் பிற்பகலில் தான் வருவார்கள். அதனால் வேறு யாரும் அந்த நேரத்திற்கு வந்திருக்கவில்லை.

புத்தகத்தை பிரித்தாளே தவிர ஒரு வரிகூட அவளால் வாசிக்க முடியவில்லை. அவளுக்கு ஒன்று என்றால் பதறி துடித்து சேவை செய்கிறவள் அத்தை. காந்திமதியின் வசவுகளையும் கூட பொருட்படுத்தமாட்டாள். மலர் கூட வளர்ந்து விட்டேன் என்னை பார்த்துக் கொள்ள எனக்கு தெனியாதா?என்று கேட்பாள். அதற்கு, நல்லா பார்த்தாய்? இன்னும் சின்னப் பிள்ளை போல தட்டில் வைக்கிற சாப்பாட்டை பாதிகூட சாப்பிடுவதில்லை நீ. அதையும் நான் தான் ஊட்டனும். இந்த லட்சணத்தில் இவளே பார்த்துக் கொள்வாளாம் என்று அவள் செய்ய வேண்டியதை செய்துவிட்டே நகருவாள். அப்படிப்பட்ட உடல்நலம் சரியில்லாத அத்தையை உடன் இருந்து அவளால் கவனித்துக் கொள்ள முடியவில்லை என்று வருத்தமாக இருந்தது. அது விழிகளில் கண்ணீராக தேங்கியது. முன்புறம் யாரோ வந்திருப்பதை தெளிவற்ற பேச்சுக் குரல்கள் உணர்த்தியது. யாரேனும் வாடிக்கேயாளராக இருக்கலாம், என்று நினைத்து அவசரமாக கண்களை துடைத்து கொண்டு படிப்பது போல பாவனை செய்தாள். உள்ளபடியே அவளுக்கு இருந்த மனநிலையில் படுத்து தூங்க வேண்டும் போல் இருந்தது. மனதுக்கு பெரும் கஷ்டம் என்றால் அவளால் எதையும் சிந்திக்க முடியாது. அதனால் அந்த விஷயத்தில் இருந்து வெளிவர பேசாமல் படுத்து உறங்கிவிடுவது தான் வழக்கம். இன்றைக்கு அதற்கும் வழியில்லாததால் இப்போது தலையை வலித்தது.

முன்தினம் இரவு கேண்டீனில் பெயருக்கு இரண்டு இட்லி சாப்பிட வாங்கினாள். ஆனால் அவளால் ஒரு வாய் சாப்பிடுவதே பெரும் பிரயத்தனமாக இருக்க கஷ்டப்பட்டு ஒரு இட்லியை தின்று விட்டு மற்றதை அங்கேயே சுற்றும் நாய்க்கு போட்டாள். ஒரு டீயை வாங்கி குடித்துவிட்டு அத்தையின் அறை வாசலில் தவம் கிடந்தாள். இன்றைக்கு காலையில் கூட அத்தையும் மாமாவும் கட்டாயப்படுத்தி காபி குடிக்க வைத்தனர். அத்தோடு சரி. இப்போது குளித்து விட்டதால் காலி வயிறு வேறு கூப்பாடு போட்டது.

நிரஞ்சன் மதியம் அவனோடு வந்தவளை அழைத்துக்கொண்டு வெளியே கிளம்ப வேண்டும் என்றான். அதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகலாம். அதுவரை அவள் இங்கே தான் இருந்தாக வேண்டும்," அவள் யோசனையில் ஆழ்ந்து இருக்க,

"க்கும்" என்று கணைக்கும் குரல் கேட்டு சுயநினைவிற்கு வந்தவள், பார்வை வட்டத்திற்குள் யாரோ ஆண் நிற்பதை உணர்ந்தாள். இளம் பெண் தனியாக இருந்தால் பேச்சு கொடுத்து வலை போட வந்து விடுவான்களே, என்று உள்ளூர கடுத்தவள், புத்தகத்தில் கவனத்தை செலுத்த முயன்றாள். அதற்குள்ளாக,"நீ உன் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உன்னால் கண்டவர்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய நிலைமை. எனக்கு தேவையா? போன் என்று ஒன்று எதற்காக வைத்திருக்கிறாய்? உன்னிடம் பேசவேண்டும் என்று அழைத்தால் ரிங் போயிக் கொண்டே இருக்கிறது. என்னதான் தூக்கத்தில் இருந்தாலும் அத்தனை ஒலிக்கு எழுந்து இருக்க வேண்டும். பதிலே வராது போகவும், அம்மாவிடம் போய் கேட்டேன். அவர்கள் தான் நீ இங்கே இருப்பாய் என்று தெரிவித்து அழைத்து வரச் சொன்னார்கள். உன் அத்தை உன்னை பார்க்க வேண்டும் என்று அங்கே தவிக்கிறார்கள். நீயானால் இங்கே வந்து உட்கார்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கிறாய்"

நிரஞ்சன் பேசத் தொடங்கியதுமே திடுக்கிட்டு எழுந்துவிட்ட மலர்வதனிக்கு, தொடர்ந்து ஒலித்த அவனது குரல் தாழ்ந்தே இருந்தபோதும் அதில் இருந்த அழுத்தமும் கடுமையும் தெளிவாக உணரமுடிந்தது. சற்று முன் கேட்ட பேச்சுக் குரல் இவனுடையது தான் போலும். அவனது கடுமைக்கு முக்கிய காரணம், அவன் போன் செய்து அவள் எடுக்காததால் வந்த கோபம் ஒரு புறம், இங்கே பதில் சொல்ல நேர்ந்ததால் உண்டான கோபம் ஒருபுறம். அவளுக்கு உள்ளூர மனம் நடுங்கிற்று. ஏதோ குற்றம் செய்துவிட்டாற்போல, தலையை குனிந்து நின்றவளுக்கு, அத்தை அவளை அழைத்தது நிஜம் தானேமே, பாட்டியை மீறி எப்படி அழைத்திருப்பாள்? அவளது மகனே சொல்லும்போது அதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவள் மனம் அவளது அத்தையிடம் தாவியது. அவளைப் போலவே அத்தையும் ஒருமாதிரி பிடிவாதக்காரி, என்று எண்ணம் ஓட, அவள் அவனை ஏறிட்டும் பார்க்கவில்லை.

"நீங்கள் சொல்வதை என்னால் நம்பமுடியவில்லை, என்றாள் சின்ன குரலில்.

"எதைச் சொல்கிறாய், நான் இங்கே வந்து அந்த ஆளிடம் விளக்கம் கொடுத்தேனே அதையா? அவனது குரல் ஏளனமாக ஒலித்தது.

உதட்டை கடித்துவிட்டு, "I'm very sorry for that inconvenience ,

என்றவள்" அத்தை என்னை கூப்பிட்டதாக நீங்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை"

"ஏனோ ??என்று சந்தேகமாக கேட்டவன்," உன் அத்தை, உன்னை அழைக்கிறார்கள். இதில் நம்புவதற்கும் நம்பாமல் இருப்பதற்கும் என்ன இருக்கிறது? " அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே அவனது கைப்பேசி ஒலித்தது. அதை எடுத்துப் பார்த்தவன் விழிகள் பளபளக்க, மலர்வதனியை நோக்கினான்.

அழைத்தது யார்?
 

Attachments

  • 462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    462566647_1086014556322036_2741966618559233700_n.jpg
    49.7 KB · Views: 0
Back
Top