Hello Guest! Welcome to my website.

You can benefit from our privileges as a member of our site.

or Register

19. அத்தியாயம்

Aieshakhaleel

Author/Admin
Staff member
Joined
Aug 25, 2024
Messages
128
Reaction score
23
Points
18
Location
India
ரவீந்தரன் வீட்டிற்கு அவசியமான பொருட்களை வாங்கி வைத்துவிட்டான். மதுவந்தி மறந்தும் அவன் முன் செல்லவில்லை. சந்திரமௌலியின் பங்களாவின் பின்னால் இருந்த அவுட் ஹவுஸ். அந்தப் பக்கமாகவும் சாலை இருந்தது. ஆகவே அவர்கள் இந்தப்பக்கம் வர வேண்டிய அவசியமில்லை. ஒற்றை படுக்கையறை, அளவான கூடம், சாப்பாட்டு அறையுடன்கூடிய சமையல் அறை. சமையல் அறையின் பக்கவாட்டில் வாசலை ஒட்டி துணி துவைக்கும் கல் என்று நடுத்தர குடும்பத்திற்கு ஏற்றபடி இருந்தது வீடு .அந்த வீட்டின் பின்னால் இந்தப் பக்கம் பெரிய பங்களா ஊடாக தோட்டம், நிறைய மரங்களும் செடி,கொடிகளுமாக இரண்டு வீட்டிற்கும் பொதுவாய் இருந்தது. ஆனால் இரண்டு வீட்டிற்கு தேவைப்பட்டால் போக வர மதில் சுவரை ஒட்டி சிமெண்ட் பாதை போடப்பட்டிருந்தது.

அடுத்த நாள் மாலை..

பிறைசூடன் மனோகரியை அழைத்து வந்தார். தூரத்திலிருந்து கூட அவளது ஆன்ட்டியை காண மதுவந்தி முயலவில்லை. மனம் முழுதும் ஆவலாகத்தான் இருந்தது. உள்ளூர வருந்தினாள். அவள் இப்போது அவர்கள் முன் செல்வது உசிதமாக தெரியவில்லை. அதைவிடவும் அவளது ஆன்ட்டியை அந்த நிலையில் பாரக்க சக்தியுமில்லை. ரவீந்தரனுக்கு அவளைப் பற்றி வீட்டுப் பெரியவர்கள் சொன்னார்களோ என்னவோ? திடீரென்று இவள் உதவுகிறாளே யார் எவர் என்று கேள்வி வரக்கூடும். அது தர்ம சங்கடமாகிவிடக் கூடாது. இப்படி பலவற்றை யோசித்து தான் மதுவந்தி இந்த முடிவிற்கு வந்தாள்.

மனோகரி மனநோயாளி என்றாலும் அவளிடம் வன்முறையோ கோவமோ இல்லை அமைதியாய் காணப்பட்டாள். நடக்கும் எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருந்தாள். திடீரென்று அழுவாள். ஏன் என்று கேட்டால் பதிலே சொல்லமாட்டாள். பிறைசூடன் தான் மனைவியை ஒரு குழந்தை போல பார்த்துக் கொண்டார். துடிப்பாய் பேச்சும் சிரிப்புமாய் வலம் வந்தவள் இப்படி இருப்பது அவருக்கு பெரும் வேதனையாக இருந்தது. அதை மகனுக்கு காட்டாமல் தனக்குள்ளாக வைத்துக் கொண்டு நடமாடினார்.

வந்த மறுநாளே மனோகரியை அழைத்துக் கொண்டு தந்தையும் மகனும் சிகிச்சைக்காக கிளம்பிச் சென்றனர். வைத்திய சாலையில் இரண்டு நாட்கள் மனோகரியை தங்க வைக்கும்படி மருத்துவர் கூறவும், ஆண்கள் இருவரும் இரவு பகல் என்று பிரித்து உடன் தங்கியிருந்து பார்த்துக்கொண்டனர். பௌர்ணமி வந்து விவரம் சொன்னாள்.

மூன்றாம் நாள் மனோகரியை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட பிறகு, ரவீந்தரன் மதுரைக்கு ஏதோ வேலையாய் கிளம்பிச் சென்றான். அன்று மதியம் சந்திரமௌலி அவுட் ஹவுஸிற்கு சென்றார்.

மனோகரி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். பிறைசூடன் பத்திரிக்கை ஒன்றை விரித்து வைத்துக்கொண்டு எங்கோ வெறித்திருந்தார். அரவம் கேட்டு திரும்பியவர் சட்டென்று எழுந்து வந்து வரவேற்றார்.

“வாங்க! சார் வாங்க! உட்காருங்க சார், ஏதும் முக்கியமான விஷயமா சார்? என்றார்.

பிறைசூடனிடம், ரவீந்தரன் சந்திரமௌலி பற்றி உயர்வாய் கூறியிருந்தான். அதனால் அவர் மீது நிறைய மரியாதை கொண்டிருந்தார். இப்போது அவரே தேடி வரவும் என்னவோ என்று பதறிப்போனார்.

“சும்மாதான் சார் பார்த்துவிட்டுப் போகலாம்னு வந்தேன். நானும் வீட்டுல தனியா எவ்வளவு நேரம்தான் டிவி பார்க்கிறது புத்தகம் படிக்கிறது? இப்போ நீங்க வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோசம் சார். ஆனால் இந்த மாதிரி சூழலில்லாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்று சந்திரமௌலி மற்றவரை ஆசுவாசப்படுத்தினார்.

“உண்மைதான் சார். என்று ஆமோதித்தவர் மனைவி படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்துவிட்டு ஒரு பெருமூச்சுடன் அறைக் கதவை மெல்ல சாத்திவிட்டு வந்து அமர்ந்தார் பிறைசூடன்.

“எப்படி சார் ஆச்சு? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா சொல்லுங்க சார். கஷ்டமா இருந்தா வேணாம் சார்’’என்று தயக்கமாய் வினவினார் சந்திரமௌலி.

சிலகணங்கள் அங்கே மௌனம் நிலவியது. கண்களை இறுக மூடித் திறந்தவர்,” சொல்றேன் சார், என் மனோகரி இப்படி படுத்தே இருக்க மாட்டாள் சார் அதுவும் இப்படி வீட்டுக்கு ஆட்கள் வந்திருக்கிறப்போ, ம்ஹூம்...

முன்று வருடங்களுக்கு முன்பு, எங்க மகளுக்கு நிறை மாசம் அவளுக்கு பிரசவம் பார்க்க நாங்கள் சென்னையில் இருந்து கிளம்பி மும்பைக்கு போனோம். மாப்பிள்ளைக்கு சொந்தம்னு சொல்லிக்க யாருமில்லை. நாங்க அங்கே போய் ஒருவாரம் இருக்கும் நல்ல மழை, யாரும் வீட்டை விட்டுக் கிளம்ப முடியாத நிலமை திடீர்னு என் பொண்ணுக்கு வலி எடுத்திருச்சு

ஊரெல்லாம் வெள்ளக்காடு, ஆஸ்பத்திரி சாதாரண நாள் என்றால் வண்டில பத்து நிமிஷத்துல போற தூரம்தான். அன்னிக்குன்னு பார்த்து எந்த கால் டாக்ஸியும் வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. மாப்பிள்ளை ரொம்ப பதற்றமாயிட்டார். பொண்ணு வலில துடிக்கிறா கடைசியில் ஒரு டாக்ஸிக்காரர் மனமிறங்கி வந்தார் எல்லாருமா ஹாஸ்பிட்டல் போனோம். போய்ச் சேர அரைமணி நேரமாகிட்டுது. பொண்ணுக்கு பனிக்குடம் உடைஞ்சு போச்சு. அவசரமா உள்ளே கூட்டிப்போனாங்க. ஆனால் குழந்தை... என்றவரின் தொண்டை துக்கத்தில் அடைக்க, அவர் பேச்சு நிற்கவும், அவசரமாக டீபாயில் இருந்த தண்ணீரை பருக கொடுத்துத்தார் சந்திரமௌலி.

பிறைசூடன் சற்று ஆசுவாசமாகி தொடர்ந்தார். 4வது மாடியில்தான் பிரசவ அறை. நாங்கள் லிப்ட்டிற்காக காத்திருந்து பார்த்துவிட்டு படிகளில் ஏறிச் சென்றோம் மாப்பிளை வேகமாய் ஏறிப்போய்விட்டார். நான் முன்னால் ஏற, மனோகரி பின்னால் வந்து கொண்டிருந்தாள். நாலாவது தளத்தை நெருங்கறப்போ மாப்பிளையோட குரல் கேட்டுச்சு,

"என்ன சொல்றீங்க டாக்டர்?"

“சாரி மிஸ்டர் நிகிலன், நாங்க எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் தாயை மட்டும் தான் காப்பாற்ற முடிஞ்சது. நீங்கதான் அவங்களுக்கு தைரியம் சொல்லனும் டாக்டர் சொல்ல, சொல்ல நான் அவசரமா படியில் ஏறப்போனேன். ஆனால் அதற்குள் பின்னால் “ஐயோன்னு” அலறலோட மனோகரி படியிலிருந்து அப்படியே உருள நான் ஒரகணம் ஸ்தம்பிச்சு நின்னுட்டேன்! அதுக்குள்ள அங்கங்கே நின்னவங்க வந்து மனோகரியை தூக்கிட்டும் போய் அட்மிட் பண்ணுனாங்க. டாக்டர் சிகிச்சை செய்தப்பிறகு தனி அறைக்கு மாத்தினாங்க. அதுக்கிடையில மாப்பிள்ளையைப் பார்த்து ஆறுதல் சொல்லி விஷயத்தை சொன்னேன். அவர் தன் துக்கத்தை மறந்து விட்டு ஓடிவந்தார்.

தனி அறையில் மனோகரியை தலைல கட்டுப் போட்டு படுக்க வச்சிருந்தாங்க. ட்ரிப்ஸ் வேற ஏறிட்டு இருந்துச்சு. கொஞ்ச நேரத்துல எழுந்த மனோகரி மலங்க மலங்க முழிச்சா. அப்புறம் விம்மி அழுதா. என்ன என்னவோ சொல்லியும் அவள் கேட்காம அழுதுட்டே இருந்தா.

அன்னிக்கோட அவ பேசறது சிரிக்கிறது எல்லாம் நின்னுடுச்சு. சாப்பாடு கொடுத்தா சாப்பிடுவா. அப்பப்போ அழுவா. டிவில குழந்தையை பார்த்தா வெளியே போறப்ப குழந்தை படங்கள் பார்த்தா ரொம்ப நேரம் அழுவா யாராலயும் கட்டுப்படுத்த முடியாது. மனசுல ஏற்பட்ட பலத்த அதிர்ச்சியினால தான் இப்படி ஆகியிருக்கு. பட் மருந்து மாத்திரையால இதை குணப்படுத்த முடியாது. தானா சரியாப் போக சான்ஸ் இருக்கு. எங்கேயாவது அமைதியான சூழலில் மனசு லேசாகும்னு டாக்டர் சொன்னார். பட் அப்படி எத்தனை நாள் போய் தங்கியிருக்கிறது? சொல்லுங்க! பையனுக்கு வேலை இருக்கு. அதைவிட்டு வரமுடியாது. தனியா நான் இவளை வச்சுட்டு என்ன செய்ய முடியும்? கடைசியா ஒருத்தர் இங்கே குணப்படுத்திருவாங்கன்னு அட்ரஸ் கொடுத்தார். ரவி வேலை எல்லாம் ஒதுக்கிட்டு கிளம்பி வந்தான். நேற்றுப் போயிட்டு வந்தப்புறம் எனக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு சார்" பிறைசூடன் நிம்மதிப் பெருமூச்சுடன் முடித்தார்.

அவளது ஆன்ட்டியை காண வருவாளா மதுவந்தி? மனோகரியை மீட்டெடுப்பாளா??
 

Attachments

  • 462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    462557880_2036493573470172_6381136494321070639_n.jpg
    106.5 KB · Views: 0
Back
Top